நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அங்கன்வாடியில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மேல்பாதி துவக்கப் பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 25 குழந்தைகள் படிக்கின்றனர். இந்த அங்கன்வாடியைச் சரியாக திறப்பதில்லை, சுகாதாரமாக சமையல் செய்து தருவதில்லை என புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து நேற்று அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், சேர்மன் சுதாகர், இன்ஜினியர் இளஞ்செழியன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஜோசப் ஜெயக்குமார், கவுன்சிலர் ஞானவேல், ராமு ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
மதியம் 12:30 வரை மையம் திறக்காததால் குழந்தைகள் ஒருவரும் வரவில்லை அதுவரை சமையலும் செய்யவில்லை. அங்கிருந்த ஆசிரியையிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்த அங்கன்வாடி ஊழியர் அவசரமாக வந்தார். அண்ணாகிராமத்தில் நடந்த கூட்டத்துக்குச் சென்றதால் வரமுடியவில்லை எனக் கூறினார்.
குழந்தைகளுக்கு, தரமாகவும், சுகாதாரமாகவும் சமையல் செய்து வழங்க வேண்டும். சரியான நேரத்திற்கு மையத்தைத் திறக்க வேண்டும். குழந்தைகளை அன்புடன் கவனிக்க வேண்டும். இனி தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் எச்சரித்தார்.