'நகரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.புதுச்சேரி போலீஸ் துறையை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பில், 109 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கடற்கரை சாலை, நேரு வீதி, அண்ணா சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள், பஸ் ஸ்டாண்டு, ரயில் நிலையம் உள்ளிட்ட மையங்கள், முக்கிய சாலை சந்திப்புகள் உள்ளிட்ட 34 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது.
அதுபோல, புதுச்சேரியின் எல்லைகளான கோரிமேடு, காலாப்பட்டு, கன்னியக்கோவில், மதகடிப்பட்டு ஆகிய இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டு, கேமராக்கள் பொருத்தும் பணி தற்போது முழு வீச்சில் நடந்து
வருகிறது.
இந்தக்கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும், ஒயர்லெஸ் மூலம் இணைக்கப்பட்டு, இதற்கான கண்ட்ரோல் ரூம், கோரிமேட்டில் அமைக்கப்பட உள்ளது. இங்கிருந்து, அனைத்து கேமராக்களில் பதிவாகும் படங்களையும் கண்காணித்து, உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, "மக்கள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் குற்றவாளிகள் கைவரிசை காட்டுவதைக் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து தடுக்க முடியும். மேலும், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணவும், இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். போக்குவரத்து விதிகளை மீறுபவர்களையும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் எளிதில் கண்காணிக்க முடியும். வாகனங்களை அளவுக்கு அதிகமான வேகத்தில் விரட்டுவது, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்வது போன்ற வாகனங்களையும் எளிதாக கண்டறிந்து, பிடிக்க முடியும்' என்றார்.
-நமது சிறப்பு நிருபர்-