பாலமேடு:மதுரையில் பருவமழை பொய்த்ததால் சாத்தையாறு அணை வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. அணை நீரில் பாசன வசதி பெறும் 11 கண்மாய்களும் வறண்டன. இதனால், மூவாயிரம் எக்டேர் நிலத்தில் விவசாயப் பணிகள் நடக்கவில்லை.இந்த அணையின் மொத்த கொள்ளளவு 29 அடி. நீர்ப்பிடிப்பு பகுதிகள் 150 எக்டேர். சிறுமலை, காட்டுநாயக்கன் ஓடை, மஞ்சமலை ஓடையில் இருந்து அணைக்கு நீர்வரத்து உள்ளது. அணை நீர் மூலம் எர்ரம்பட்டி, சின்னணம்பட்டி, கோவில்பட்டி, ஆதனூர் (கட்டிக்காரன் கண்மாய், குறவன்குளம்), கோணப்பட்டி உட்பட 11 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறது.குட்டை போலானது அணை: அணை நீர்ப்பிடிப்பு பகுதியில், 2011ல், பெய்த பருவமழையால் அணை நிரம்பியது. அதைத்தொடர்ந்து பாசன வசதி பெறும் 11 கண்மாய்கள் நிரம்பி, விவசாயப் பணிகள் நடந்தன. இந்தாண்டு போதுமான அளவு மழை பெய்யாததால் அணை நிரம்பவில்லை. விவசாயம் நடக்கவில்லை. நீர்ப்பிடிப்பு பகுதி வறண்டு குட்டை போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் நான்கு ஷட்டர்கள் துருப்பிடித்திருந்தன. ஷட்டர்களில் நீர்கசிவு இருந்தது. அணையில் தண்ணீர் இல்லாததால், ஷட்டர்கள் 40 லட்சம் ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.11 கண்மாய்கள் வறண்டன: குட்டை போல் காட்சியளிக்கும் அணையில் கால்நடைகள் குடிக்கும் அளவுக்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. அணை நீரில் பாசன வசதி பெறும் 11 கண்மாய்களும் வறண்டு விட்டன. இதனால், மூவாயிரம் எக்டேர் நிலத்தில் விவசாயப் பணிகள் நடக்கவில்லை. கோடை வெயில் கடுமையாக இருப்பதால் சில நாட்கள் மட்டுமே கால்நடைகளுக்கு தண்ணீர் இருக்கும். அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்தால் மட்டுமே அணை முழு கொள்ளளவை எட்டும். மழை பெய்யாத பட்சத்தில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் சிக்கல் தான்.