சென்னையில் உள்ள கூவம் உள்ளிட்ட நீர்நிலைகளை சீரமைத்து பாதுகாப்பதற்காக, வெளிநாட்டு நிதியுதவியை நாட போவதாக தமிழக அரசு, நேற்று வெளியான பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது.
இந்த திட்டத்திற்கு, 1,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கப்படலாம் என, எதிர்பார்ப் பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, ஏற்கனவே பல பரிந்துரைகள், நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டு, ஒன்றுமே நடக்காத நிலையில் இந்த புதிய அறிவிப்பு என்ன சாதிக்க போகிறது என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சென்னையில், கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு உட்பட 214 கி.மீ., நீளமுள்ள நீர்வழித்தடங்களும், 42 நீர் நிலைகளும் உள்ளன. விரைவான நகர்மயமாதல், அரசின் புறக்கணிப்பு, மக்களின் அறியாமை போன்ற காரணங்களால்,
இவை தற்போது சுகாதார சீர்கேட்டின் மையங்களாக விளங்குகின்றன.
பட்ஜெட் அறிவிப்பு
தமிழக அரசு நேற்று வெளியிட்ட பட்ஜெட்டில், சென்னையின் நீர் வழித்தடங்கள் மற்றும் நீர் நிலைகளை சீரமைத்து, பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவித்துள்ளது. அதன்படி,
நீர் பிடிப்பு பகுதிகளை மேம்படுத்துதல்
தூர் வாருதல்
மாசுபடுத்தும் வடிகால்களை தடுத்தல்
கழிவுநீர் சுத்திகரிப்பு
அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை
கரைகளை சீரமைத்தல்
நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல்
ஆகிய பணிகள், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை என்ற அரசு அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த பணிகளுக்கு அதிகளவில் நிதி தேவைப்படுவதால், வெளிநாட்டு நிதியுதவி கோர உத்தேசிக்கப் பட்டு உள்ளது. ஆனால், எவ்வளவு நிதி தேவைப்படும் மற்றும் திட்டத்தின் விரிவான அம்சங்கள் குறித்து பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை. இவற்றை முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பார் என, கூறப்படுகிறது.
கிடப்பில் என்னென்ன?
இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றாலும், இதற்கு முன்பு எடுக்கப்பட்ட முயற்சிகளின் தோல்விகள், சென்னை மக்கள் மத்தியில் நம்பிக்கையை
உருவாக்குவதாக இல்லை.
கூவம் சுத்திகரிப்பு குறித்த ஆலோசனைகள், 1893ம் ஆண்டு துவங்கின
கூவம் ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு 1905 முதல் 2000ம் ஆண்டு வரை மொத்தம் 11 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று கூட இதுவரை
செயல்படுத்தப் படவில்லை
"கூவம் மேம்பாட்டு திட்டம்' என்ற பெயரில் முதல் சுத்திகரிப்பு திட்டத்தை, 1967ல் அப்போதைய முதல்வர் அண்ணாதுரை துவக்கி வைத்தார். 1968 முதல் 1973 வரை நடந்த இத்திட்டத்தால் ஒரு பலன் கூட விளையவில்லை.
கடந்த 2001ல், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதியுதவியுடன்,"சென்னை நதி பாதுகாப்பு திட்டம்' என்ற பெயரில் மீண்டும் கூவம்
சுத்திகரிப்பு திட்டம் துவக்கப் பட்டது
கடந்த 2008ல், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதன் அதிகாரிகள், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஓடும், சான் அன்டோனியா நதி சீரமைப்பை பார்வையிட சென்றனர்
2009ல், அப்போதைய துணை
முதல்வர் மு.க.ஸ்டாலின், கூவம் நதி மீட்டெடுப்பு குறித்து ஆலோசனை
பெற சிங்கப்பூர் சென்று வந்தார்
கடந்த 2012, ஜூலையில், சென்னை நதி பாதுகாப்பு திட்டம் கைவிடப்படுவதாக அ.தி.மு.க., அரசின் பொதுப்பணி துறை அமைச்சர் ராமலிங்கம் அறிவித்தார்
சமீபத்தில்...
கூவம் ஆற்றில் 105 இடங்கள், பக்கிங்ஹாம் கால்வாயில் 183 இடங்கள், அடையாற்றில் 49 இடங்கள் என, மொத்தம் 337 இடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய, 300 கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என, முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அறிவித்தார்.
இந்த பணிகளுக்காக, முதற்கட்டமாக, 150 கோடி ரூபாயை, சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு
விடுவித்தும், முதல்வர் உத்தரவிட்டார்.
கடந்த ஆண்டு, ஜூலை 26ம் தேதி இந்த அறிவிப்பு வெளியானது. ஆறு மாதத்திற்கு மேலாகியும், இதுவரை இவற்றில் எந்த பணியும் துவக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தைரியம் உள்ளதா?
கூவத்திற்கே இந்த நிலைமை என்றால், மற்ற நீர் ஆதாரங்கள் கைவிடப்பட்ட நிலையில் தான் உள்ளன என்பதை
குறிப்பிடுவதற்கான அவசியம் இல்லை.
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள
ஏரிகளில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சியினரின் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து கொண்டே போவதால், ஏரி பரப்பு குறைந்து வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகளை காக்க எந்த அரசும் தைரியமாக முன்வருவதில்லை. இதற்கு சிறந்த உதாரணங்கள், செம்பாக்கம் மற்றும் ராஜகீழ்ப்பாக்கம் ஏரிகள்.
இது தவிர, நீர் வழித்தடங்களை ஒட்டி உள்ள 52 ஆயிரம் ஆக்கிரமிப்பு குடிசைகள் அகற்றுவதற்கும் எந்த அரசுக்கும் தைரியம் இல்லை என்பது, சென்னையில்
நிரூபிக்கப்பட்டு உள்ளது.
கூவம் ஆற்றங்கரை ஓரம் மட்டும் 15 ஆயிரம் ஆக்கிரமிப்புகளும், 1,200 திருட்டுத்தனமான கழிவுநீர் இணைப்புகளும் உள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.
இந்த ‹ழலில் முதல்வர் ஜெயலலிதா உண்மையிலேயே சாதித்து காட்டுவார் என்றால், அவருக்கு சென்னை மக்கள் என்றென்றும் நன்றி தெரிவிப்பர்.
தவிர்த்திருக்கலாமே!
பொதுப்பணி துறை தன் அடிப்படை
கடமையை சரிவர செய்திருந்தால், வெளிநாட்டிலிருந்து பல கோடி ரூபாய் கடன் வாங்குவதை முற்றிலும் தவிர்த்திருக்க முடியும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
ஏனெனில், பொதுப்பணி துறை சார்பில், ஒவ்வொரு பருவ மழை காலத்திலும், குளம்,ஏரி போன்ற நீர் நிலைகளை
தூர்வாரி, அகலப்படுத்துவர்.
அதற்காக ஒவ்வொரு இரு முறை
பல கோடிகள் நிதி ஒதுக்கப்படும். பருவமழை துவங்குவதற்கு, 10 நாட்களுக்கு முன்பாக இந்த பணிகள் வெறும் கண் துடைப்புக்காக துவங்கும்.
இந்த பணிகளை திட்டமிட்டு சரியாக செய்திருந்தால், நீர் நிலைகளை ஓரளவாவது காத்திருக்க முடியும். கூவம்,
அடையாறு போன்ற ஆறுகளில்,
தினந்தோறும் பல ஆயிரம் டன் கழிவுநீர் கொட்டப்படுகிறது.
இந்த பிரச்னையை, பொதுப்பணி துறையோ, மாசு கட்டுப்பாட்டு வாரியமோ கண்டுகொண்டதே இல்லை. பொதுமக்கள், பல டன் குப்பையை, ஆற்றில் கொட்டி வரும் நிலையில், எந்த நடவடிக்கையையும் இந்த துறைகள் தீவிரமாக எடுத்ததில்லை.
இனியாவது, சம்பந்தப்பட்ட துறைகள், நீர் நிலைகளை காப்பதற்கு போதிய
நடவடிக்கைகளை உறுதியுடன் எடுக்க வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும், கூவத்தையும், பிற நீர் நிலைகளையும் சுத்தப்படுத்த, பல கோடிகள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீர்நிலைப் பகுதிகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் துளியும் ஆர்வம் காட்டாத பொதுப்பணி துறை, கூவத்தை தங்களின் அமுதசுரபியாக மட்டுமே பார்க்கும். இதனால், எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. இது, பல ஆண்டுகால படிப்பினை
குமரி நம்பி
தலைவர், சுதேசி மக்கள் இயக்கம்
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பொது மக்கள் ஒத்துழைப்பு தராத பட்சத்தில் கனவில் கூட அடையாறு ,கூவ சுத்திகரிப்பு சாத்தியமில்லை ... அறியாமையிலோ , சுயநலத்தின் காரணமாகவோ மக்கள் இந்த ஆறுகளை தொடர்ந்து மாசு படுத்துகின்றனர் .... இது தடுக்க பட வேண்டும்..அரசு சிறந்த வழிமுறைகளை பரிசீலனை செய்யலாம்..பொதுமக்கள் மாசு படுத்தாத வகையில் அவர்களுக்கு தகுந்த வழிமுறைகள் வழங்க பட வேண்டும்.. இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை