புதுச்சத்திரம்:பள்ளி மாணவர்கள் பஸ் மேற்கூரையில் செய்யும் ஆபத்தான பயணத்தால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
புதுச்சத்திரம், சாமியார்பேட்டை, சிலம்பிமங்களம், வில்லியநல்லூர், அத்தியாநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். மேலும் பெரும்பாலான மக்கள் கூலி வேலைக்கு தினம் பஸ்சில் சென்று வருகின்றனர்.
காலை நேரங்களில் மாணவர்களுக்கு புதுச்சத்திரத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு பஸ் வசதி இல்லை.
புதுச்சத்திரம் வழியாக பரங்கிப்பேட்டைக்கு காலை 8:00 மணிக்குச் இயக்கப்பட்ட அரசு பஸ் தற்போது 8:45 மணிக்கு இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் சென்றால் பள்ளி நேரத்திற்குச் செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர்.
போதிய வசதிகளின்றி இயக்கப்படும் ஒரு சில தனியார் பஸ்களில் பள்ளி, அலுவலக நேரங்களில் கூட்டம் நிரம்பி வழிவதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இதனால் பஸ்சில் நெரிசல் ஏற்பட்டு இடமின்றி மாணவர்கள் பஸ்சின் மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
இதனால் ஒரு சில நேரங்களில் மாணவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடிப் பதால் பெற்றோர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
அதிகாரிகள் கண்காணித்து பள்ளி, அலுவலக நேரங்களில் போதிய பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.