பொள்ளாச்சி:பல ஆண்டு கால இடைவெளிக்குப்பின்பு நெடுந்தூரம் இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கு, போக்குவரத்து துறை வழித்தட நீட்டிப்பு வழங்க தயாராகி வருகிறது.கடந்த 1972 மற்றும் 74 ம் ஆண்டுகளில் தமிழகத்தில் தனியார் பஸ்கள் இயங்குவதற்கு நேர நிர்ணயம் செய்யப்பட்டது. அதன் படி 30 கி.மீ தூரத்துக்குட்பட்டு உள்ளூரில் இயக்கப்படும் பஸ்களுக்கு டவுன் பஸ்கள் என்றும், 42 முதல் 75 கி.மீ தூரம் வரை இயக்கப்படும் தனியார் பஸ்களுக்கு மப்சல் பஸ்கள் (நெடுந்தூர பஸ்கள்) என்று அழைக்கப்பட்டது.அதற்கு தகுந்தாற்போல் பஸ் நிறுத்தங்களும், ஸ்டேஜ்களும் வரையறுக்கப்பட்டு, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 41 ஆண்டுகள் தமிழகத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அப்போது துவங்கிய வழித்தட மற்றும் பயண நேர நிர்ணயம், தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
41 ஆண்டுகளில் தமிழகம் பிரம்மாண்டமான வளர்ச்சியை அடைந்துள்ளது. பல்வேறு தொழில் நுட்ப வசதிகளையும் பெற்றுள்ளது. அதற்கேற்ப போக்குவரத்து உட்பட அனைத்து துறைகளும் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்த இன்ஜினுக்கு பதில் அதிக வேகத்தில் இயக்கும் இன்ஜின்கள், பவர் ஸ்டியரிங், பவர் பிரேக் உள்ளிட்ட ஏராளமான எளிமையான, வலுவான வசதிகளை தற்போதை டிரைவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் அதற்கேற்ப ரோடுகள், பாலங்கள் உள்ளிட்ட வசதிகளை நெடுஞ்சாலைத்துறை ஏற்படுத்திக்கொடுக்கவில்லை. அதனால் இனியும் பெரும்பாலான ரோடுகள் பழுதடைந்து, வாகனங்களை இயக்கமுடியாத நிலையில் உள்ளது.
இச் சூழலிலும் அன்றாடம் போக்குவரத்து துறை அலுவலகங்களில் பதிவாகும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. ஆனால் தமிழகம் முழுக்க இயக்கப்படும் தனியார் பஸ்களின் வழித்தடங்களை நீட்டிப்பு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக தனியார் பஸ் உரிமையாளர்களிடம் போக்குவரத்து துறை அலுவலர்கள், தற்போது இயக்கப்படும் வழித்தட விபரம், அவர்களுக்கு தேவையான வழித்தட நீட்டிப்பு ஆகிய விபரங்களை சேகரித்து வருகின்றனர்.பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இயங்கும் தனியார் பஸ்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் ( பீக்அவர்ஸ்) மட்டும் இயக்குவதற்கு வழித்தட நீட்டிப்பு கேட்டுள்ளனர். அதில் பெரும்பாலான பஸ் உரிமையாளர்கள் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கும், மேட்டுப்பாளையத்துக்கும் பஸ்களை இயக்குவதற்கு இசைவு தெரிவித்து விண்ணப்பத்தை வழங்கியுள்ளனர்.பெரும்பாலான டவுன் பஸ் உரிமையாளர்கள் எத்தனை நாட்களுக்குத்தான் நாம் இப்படியே டவுன் பஸ்சை ஓட்டிக்கொண்டிருப்பது, நாமும் புறநகர் பஸ்சை இயக்க வேண்டும் என்று நினைத்து, கோவை-பொள்ளாச்சி வழித்தடத்தை தேர்வு செய்துள்ளனர்.
இதனால் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு இயக்கப்படும் மப்சல் பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஏற்கனவே இருக்கும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுவதால், ஏராளமான விபத்துகள், உயிரிழப்புகள் என்று தொடர்ந்து வரும் சூழலில் இந்த வழித்தட நீட்டிப்பு நல்ல விஷயமாக இருந்தாலும், பொதுமக்களுக்கும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமாக உள்ளது.
அதனால் அதிகாரிகள் பணத்துக்கோ, அரசியல் பலத்துக்கோ சாய்ந்து கொடுக்காமல் சரியான முறையில் ஆய்வு செய்து வழித்தட நீட்டிப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சிறு வாகனங்களில் செல்வோர், பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் என்று அனைத்து தரப்பினரும் தனியார் மப்சல் பஸ்களால் அவதிப்படவேண்டிய நிலை ஏற்படும்.