திருப்பூர்: "புதிய வர்த்தக சந்தை, ஆர்டர் அதிகரிப்பு, கைகொடுக்கும் டாலர் மதிப்புகளால், நடப்பு நிதியாண்டில், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 10 சதவீதம் உயரும்,' என, திருப்பூர் தொழில் துறையினர் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.
கொல்கத்தாவில் இருந்து "நிட்டிங்' தொழில் வருகையால், கடந்த 1929ல், திருப்பூரில் பின்னலாடை தொழில் கால்பதித்தது. ஆரம்பத்தில் உள்நாட்டுக்கான ஆடைகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1984ல் திருப்பூரை தேடி, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து, பின்னலாடை ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் வரத்துவங்கின. இதையடுத்து, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. ஏற்றுமதி ஆர்டர்களை நம்பி, பின்னலாடை துறை சார்ந்த "நிட்டிங்', "டையிங்', "பிளீச்சிங்', "எம்ப்ராய்டரி', "பிரின்டிங்' என, "ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் அதிகளவில் உருவாகின. தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களில் பணிபுரிந்தனர். தொழில்நுட்ப ரீதியாக முதலில் பின்தங்கியிருந்த தொழில் துறைக்கு, ஜெர்மன், இத்தாலி, சீனாவில் இருந்து இறக்குமதியான நவீன மெஷின்கள் கைகொடுத்தன. இதனால், ஆடைகள் உற்பத்தி அதிகரித்ததோடு, வெளி நாட்டு ஆர்டர்கள் வருகையால், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரிக்கத் துவங்கியது.
கடந்த 1984ல் ரூ.9.69 கோடியாக இருந்த திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், 1994ல் 1,318 கோடியாக அதிகரித்தது. இவ்வர்த்தகம் படிப்படியாக வளர்ச்சியடைந்து, கடந்த 2004-05ல் 6,500 கோடியாக அதிகரித்தது. தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்த தொழில் துறைக்கு, சாயப்பிரச்னை சவால் விடுவதாக அமைந்தது. கோர்ட் உத்தரவையடுத்து, கடந்த 2011, ஜனவரியில் சாய ஆலைகள் மூடப்பட்டன. அதனால், துணிகளுக்கு சாயமிடுவதில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து, 2010-11 மற்றும் 2011-12ம் நிதியாண்டு என தொடர்ந்து இரு நிதியாண்டுகள், பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சியின்றி 12,500 கோடியாக காணப்பட்டது. ஆனாலும், டாலர், யூரோ மதிப்பு அதிகரிப்பு, ஆடைகள் விலை ஏற்றம் காரணமாக, கடந்த 2012-13ம் நிதியாண்டில் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 13,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதுநாள் வரை அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு சந்தைகளை மட்டுமே சார்ந்திருந்த நிலையில், தற்போது லத்தின் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஜப்பான், குவைத், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் புதிய சந்தைகள் உருவாகியுள்ளன. இதனால், கடந்த ஆண்டை விட, இந்தாண்டு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு அதிகளவு ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், "கடந்த கால பிரச்னைகள் ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் இருந்து தற்போது ஆர்டர்கள் அதிகளவு வரத்துவங்கியுள்ளன. டாலர், யூரோ மதிப்பு தொடர்ந்து சாதகமாகவே உள்ளது. எப்.டி.ஏ., ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது, சீனா, பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளை எதிர்கொள்வதும் மிகவும் சுலபமாகி விடும். இதனால், நடப்பு நிதியாண்டில் திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 10 சதவீதம் அதிகரித்து, ரூ.14.30 ஆயிரம் கோடியை தொடும்,' என்றனர்.