| கோவில் கணக்கு தணிக்கை அவலட்சணங்கள் Dinamalar
கோவில் கணக்கு தணிக்கை அவலட்சணங்கள்
Advertisement
 
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஏப்
2014
21:20

கடந்த 1976ம் ஆண்டு, 'அறநிலைய துறை யால் நிர்வகிக்கப்படும் கோவில்களை, அந்த துறையே தணிக்கை செய்யலாம்' என்ற, அரசாணையை தி.மு.க., அரசு கொண்டு வர ஏற்பாடு செய்தது. இந்த அநியாய அரசாணையை கொண்டு வருவதற்கு முன்னால், தி.மு.க அரசை, மத்திய காங்கிரஸ் அரசு, 1976 ஜனவரி 31ம் தேதி கலைத்துவிட்டது.

அதன் பிறகு நடைபெற்ற கவர்னர் ஆட்சியின் போது, இந்த அரசாணை நிறைவேறும்படி, அறநிலைய துறையே பார்த்து கொண்டது. அன்றில் இருந்து தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிர்வாகத்தை, தானே தணிக்கை செய்து வருகிறது அறநிலைய துறை! எவ்வளவு 'வெளிப்படையான' ஏற்பாடு!


தங்களுடைய நிர்வாகத்தை தாங்களே தணிக்கை செய்யும் வசதி அனைத்து துறைகளுக்கும் இருந்தால், '2ஜி' ஊழலோ, நிலக்கரி ஊழலோ வெளியே தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. அது போலத்தான், அறநிலைய துறையின் மாபெரும் ஊழல்களும் வெளியே தெரிவதில்லை. அறநிலைய துறை சட்ட பிரிவு - 87ன் படி, ஐந்து லட்சம் ரூபாய்க்கும் மேல் வருமானம் உள்ள கோவில்களில், ஒருங்கியல் தணிக்கை கட்டாயம் நடைபெற வேண்டும். அதாவது, இத்தகைய கோவில்களில், செலவுகள் நடை பெற்ற உடனேயே, அந்த செலவுகள் தணிக்கைக்கு உட்பட வேண்டும். ஆனால், கோடி ரூபாய் வருமானம் உள்ள கோவில்களில் கூட, சட்டப்படி நடைபெற வேண்டிய உடனுக்குடனான தணிக்கை நடைபெறுவதில்லை. சரி, ஆண்டு முடிந்தவுடன் தணிக்கை நடைபெறுகிறதா என்றால், அதுவும் இல்லை. இரண்டு - மூன்று ஆண்டு களாக தணிக்கை நடைபெறாமல் நூற்றுக் கணக்கான கோவில்களின் கணக்குகள் கிடப்பில் உள்ளன. இது பெரும் குற்றம்.


சமயபுரம் மாரியம்மன் கோவிலின் 2004ம் ஆண்டு கணக்குகள், 2005ல் தணிக்கை செய்யப்பட்டு, 2007 பிப்ரவரி 19ம் தேதி, கோவில் நிர்வாகத்திற்கு அறிக்கையாக கொடுக்கப்பட்டது. அதில் உள்ள தணிக்கை குற்றச்சாட்டுக்களுக்கும், ஆட்சேபனைகளுக்கும் எந்த பதிலும் கொடுக்காத கோவில் நிர்வாகம், அவசர அவசரமாக, தணிக்கை அறிக்கைகளுக்கு 2013 பிப்ரவரி 18ம் தேதி அன்று, தணிக்கை அறிக்கை கொடுக்கப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பின், ஒரு பதில் அறிக்கையை கொடுத்தது. கொடுத்த மறுநிமிடம் மண்டல தணிக்கை யாளர், அதற்கு 'மேல்குறிப்புரை' வழங்கினார். மேலும் சில ஆண்டுகளுக்கான பதில் அறிக்கை களுக்கு, 2013 பிப்ரவரி 20ம் தேதியே 'மேல்குறிப்புரை' வழங்கினார். அடுத்த இரு நாட்களில், ஆணையர் கூட்ட அமர்வில் இவையெல்லாம், அவசரம் அவசரமாக ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. அறநிலைய துறையின் தணிக்கை லட்சணம் எப்படி உள்ளது என்பதற்கு, இந்த கோவில் ஒரு உதாரணம் தான்.


இந்த துறையில், 2010ம் ஆண்டு வரை, தீர்வை செய்யப்படாமல் இருந்த தணிக்கை தடைகளின் எண்ணிக்கை 7,46,586! அதாவது, ஏறத்தாழ 7.5 லட்சம் முறைகேடு சம்பவங்கள் நடந்திருக்கலாம். இவற்றை எல்லாம், இப்படித்தான் அவசரமாக, கூட்டமர்வில் தீர்வை செய்யப் போகின்றனர் போலிருக்கிறது. 'திருடன் புகுந்த ஆறாம் மாதம் நாய் குரைத்ததாம்' என்ற நிலையை விட இது மோசம். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், இன்றளவும் இந்த துறையில் சில நல்ல, நேர்மையான தணிக்கை அலுவலர்கள் உள்ளனர் என்பதுதான். அவர்களால் தான்,


* திருச்செந்தூரில் 5,389 கோவில் மாடுகள் காணாமல் போனது


* கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 3 லட்சம் கனஅடி கிரானைட் கொள்ளை அடிக்கப்பட்டது


* கோவில் கட்டண சீட்டுகளில் நடந்த ஊழலில் ஒரே ஆண்டில் 1.5 கோடி ரூபாய் ஊழல்


* அறநிலைய துறையின் கோவை இணை ஆணையர், அமைச்சர் உறவினருக்கு, கோவில் பணத்தில் விமான பயணச்சீட்டு வாங்கியது


* செம்மொழி மாநாட்டிற்கு, மருதமலை கோவிலில் இருந்து பெரும் தொகை கொடுத்தது


* கோவில் யானையை படப்பிடிப்புக்கு கொடுத்து, சினிமா கம்பெனியினர் அந்த யானையையும், பாகனையும் அம்போ என்று, நடுக்காட்டில் விட்டுச் சென்ற பிறகு, கோவில் பணத்தில் இருந்து, பெரும் செலவு செய்து அவர்களை மீட்டு வந்தது


* ஸ்ரீரங்கம் கோவிலில், ஒரே ஆண்டில் 105 மாடுகள் இறந்து போனது உள்ளிட்ட பகீர் சம்பவங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.


ஆனால், தணிக்கையாளர்கள் கடமை தவறாமல் பதிவு செய்துள்ள இத்தகைய கடுமை ஆன தவறுதல்கள் மீது, ஆணையரோ, அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்; எடுக்கவில்லை. இப்படி எந்த பிரயோஜனமும் இல்லாத தணிக்கைக்கு, இவர்கள் வசூலிக்கும் தொகை, மொத்த வருமானத்தில் 4 சதவீதம். இது மிகமிக அநியாயமான ஒரு கட்டணம். 1,23,000 கோடி ரூபாய் வைப்பு நிதி, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள், இந்தியா முழுவதும் பரவியுள்ள 1,882 கிளைகள், 12,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள ஆந்திரா வங்கியை ஆண்டுத் தணிக்கை செய்ய, ஆறு பட்டய கணக்கர் நிறுவனங்களுக்கு, அந்த வங்கி வழங்கும் தொகை 15 கோடி ரூபாய். அதாவது, மொத்த வருமானத்தில் 0.125 சதவீதம் மட்டுமே. ஆனால், 660 கோவில்களுக்கு ஒரு தணிக்கை கையேடு கூட இல்லாமல், மோசமாகவும், தாமதமாகவும், எந்த பலனும் அளிக்காத வகையில் செய்யப்படும் தணிக்கைக்கு, தணிக்கை கட்டணம் என்ற பெயரில் இந்த துறை அடிக்கும் கொள்ளையோ 25 கோடி ரூபாய். இந்த அநியாய தொகையையும், இவர்கள் தணிக்கையை துவக்கும் முன்பே எடுத்துக்கொண்டு விடுவர். இந்த துறையின் கட்டுப்பாட்டில் கோவில்கள் உள்ளவரை, தமிழக கோவில்களில் நல்ல நிர்வாகத்தை நாம் பார்க்கவே முடியாது!


 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :