Dinamalar

பைனலில் பிரான்ஸ்: வெளியேறியது பெல்ஜியம் ,  
 

பைனலில் பிரான்ஸ்: வெளியேறியது பெல்ஜியம்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு முதல் அணியாக பிரான்ஸ் முன்னேறியது. அரையிறுதியில் சாமுவேல் உம்டிடி கோல் அடிக்க, 1-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. பைனலில் அசத்தினால், 20 ஆண்டுகளுக்கு பின் கோப்பை வெல்லும் அரிய வாய்ப்பு(சான்ஸ்) பிரான்ஸ் அணிக்கு உள்ளது.

ரஷ்யாவில், 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த அரையிறுதியில் உலகின் 'நம்பர்-7' பிரான்ஸ் அணி, 3வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தை எதிர்கொண்டது.

ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் மடுய்டி அடித்த பந்தை பெல்ஜியம் கோல்கீப்பர் திபட் கோர்டாய்ஸ் தடுத்தார். 21வது நிமிடத்தில் பெல்ஜியம் அணிக்கு கிடைத்த 'கார்னர்' வாய்ப்பில் நசிர் சாட்லி துாக்கி அடித்த பந்தை டாபி ஆல்டர்வைரல்டு கோலாக்க முயற்சித்தார். ஆனால் பிரான்ஸ் கோல்கீப்பர் ஹுகோ லாரிஸ், பந்தை வெளியே அனுப்பினார். முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

சபாஷ் உம்டிடி

இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட பிரான்ஸ் அணிக்கு 51வது நிமிடத்தில் 'கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்தை சாமுவேல் உம்டிடி தலையால் முட்டி முதல் கோல் அடித்தார். ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ஆக்சல் விட்செல் 'கோல் போஸ்ட்டை' நோக்கி அடித்த பந்தை பிரான்ஸ் கோல்கீப்பர் லாரிஸ் தடுத்தார். 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் பிரான்சின் டோலிசோ அடித்த பந்தை பெல்ஜியம் கோல்கீப்பர் கோர்டாய்ஸ் வெளியே அனுப்பினார். கடைசி வரை போராடிய பெல்ஜியம் அணியினரால் பதிலடி தர முடியவில்லை. ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 3வது முறையாக பைனலுக்கு தகுதி பெற்றது.

3

பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 3வது முறையாக பைனலுக்கு முன்னேறியது. இதற்கு முன் 1998, 2006ல் பைனலுக்கு தகுதி பெற்றது. இதில் 1998ல் நடந்த பைனலில் பிரேசிலை வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணி, 2006ல் விளையாடிய பைனலில் இத்தாலியிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தது.

* தவிர ஜெர்மனி (8), இத்தாலிக்கு (6) பின் அதிக முறை பைனலுக்கு முன்னேறிய ஐரோப்பிய அணியானது பிரான்ஸ். இங்கிலாந்து, ஸ்பெயின் அணிகள் தலா ஒரு முறை பைனலுக்கு தகுதி பெற்றன.

12

பெல்ஜியத்தை தோற்கடித்த பிரான்ஸ் அணி, 12 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பை கால்பந்து தொடரின் பைனலுக்கு தகுதி பெற்றது. கடைசியாக 2006ல் ஜெர்மனியில் நடந்த உலக கோப்பை தொடரில் பைனலுக்கு முன்னேறியது.

32

பெல்ஜியத்துக்கு எதிரான அரையிறுதியில் பிரான்சின் சாமுவேல் உம்டிடி தலையால் முட்டி ஒரு கோலடித்தார். இது, இம்முறை தலையால் முட்டி அடிக்கப்பட்ட 32வது கோல். கடந்த 2002ல் ஜப்பான், தென் கொரியாவில் நடந்த உலக கோப்பையில் அதிகபட்சமாக 35 கோல் தலையால் முட்டி பதிவானது.

69

இந்த சீசனில் இதுவரை (பிரான்ஸ்-பெல்ஜியம், அரையிறுதி) 158 கோல் அடிக்கப்பட்டுள்ளன. இதில் 'பிரீ கிக்', 'கார்னர்' மற்றும் 'பெனால்டி' மூலம் 69 கோல் அடிக்கப்பட்டது.

'ஹாட்ரிக்' வெற்றி

உலக கோப்பை அரங்கில் பெல்ஜியத்துக்கு எதிராக 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது பிரான்ஸ். இதற்கு முன், 1938 (முதல் சுற்று), 1986ல் (3வது இடம்) பெல்ஜியத்தை வீழ்த்தி இருந்தது.

* இது, சர்வதேச கால்பந்து அரங்கில் பெல்ஜியத்துக்கு எதிராக பிரான்ஸ் அணி பெற்ற 25வது வெற்றி. இதுவரை இவ்விரு அணிகள் 74 முறை மோதின. இதில் பிரான்ஸ் 25, பெல்ஜியம் 30ல் வென்றன. 19 போட்டிகள் 'டிரா' ஆனது.

முற்றுப்புள்ளி

கடந்த 2016ல் ஸ்பெயினுக்கு எதிரான நட்பு போட்டியில் பெல்ஜியம் அணி தோல்வியடைந்தது. அதன்பின் விளையாடிய 24 போட்டிகளில் (19 வெற்றி, 5 'டிரா') தோல்வியை சந்திக்காமல் வலம் வந்த பெல்ஜியம் அணியின் சிறப்பான செயல்பாட்டிற்கு உலக கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ் அணி முற்றுப்புள்ளி வைத்தது.

20

'கார்னர்' வாய்ப்பில் கிரீஸ்மேன் துாக்கி அடித்த பந்தை சாமுவேல் உம்டிடி தலையால் முட்டி கோலாக்கினார். இதன்மூலம் கிரீஸ்மேன் கடைசியாக விளையாடிய 20 போட்டிகளில், பிரான்ஸ் அணிக்கு 20 கோல் கிடைக்க காரணமாக இருந்துள்ளார். இதில் 12 கோலடித்த இவர், சகவீரர்கள் 8 கோலடிக்க கைகொடுத்தார்.

சபாஷ் பயிற்சியாளர்

பிரான்ஸ் அணியின் பயிற்சியாளராக டிடியர் டிசாம்ப்ஸ், 49, உள்ளார். இவர், கடந்த 1998ல் உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியில் கேப்டனாக இருந்தார். இம்முறை பைனலில் பிரான்ஸ் வெல்லும் பட்சத்தில், உலக கோப்பை வென்ற அணியில் வீரராகவும், பயிற்சியாளராகவும் இருந்த 3வது வீரர் என்ற பெருமை பெறலாம். ஏற்கனவே பிரேசிலின் மரியோ ஜகாலோ (1958, 1962ல் வீரர், 1970ல் பயிற்சியாளர்), ஜெர்மனியின் பெக்கன்பேவர் (1974ல் வீரர், 1990ல் பயிற்சியாளர்) இப்பெருமை பெற்றனர்.

பெல்ஜியம் ரசிகர்கள் சோகம்

உலக கோப்பை கால்பந்து அரையிறுதியில் தோல்வியடைந்ததால் பெல்ஜியம் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து பெல்ஜியம் ரசிகை அலைஸ் கார்டியர் கூறுகையில், ''மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. அரையிறுதியில் எங்கள் பெல்ஜியம் அணிக்கு ராசி இல்லாமல் போனது. இருப்பினும் அரையிறுதிக்கு முன்னேறியதை பெருமையாக கருதுகிறேன்,'' என்றார்.

மற்றொரு ரசிகர் ஜீன் தாவ் கூறுகையில், ''கடைசி அரைமணி நேரம் பெல்ஜியம் வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. தோல்வியடைந்தது வேதனை அளிக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும்,'' என்றார்.

கால்பந்துக்கு அவமானம்

பெல்ஜியம் அணி கோல்கீப்பர் கோர்டாய்ஸ் கூறுகையில், ''இப்போட்டியில் பிரான்ஸ் அணியினரின் செயல்பாடு வெறுப்பாக இருந்தது. 'கோல் போஸ்ட்டில்' இருந்து 40 மீ., துாரம் வரை 11 வீரர்களையும் நிறுத்தி தற்காப்பில் மட்டுமே கவனம் செலுத்தினர். என்னைப் பொறுத்தவரை இவர்கள் விளையாடவே இல்லை. தவிர பிரான்ஸ், எங்களை விட சிறந்த அணியும் இல்லை. தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்திய அணியிடம் தோற்றதை நினைத்தால் கோபம் தான் வருகிறது. உருகுவே அணிக்கு எதிரான காலிறுதியில் பிரான்ஸ் அணி, 'பிரீ கிக்' மற்றும் கோல்கீப்பரின் தவறு காரணமாக வெற்றி பெற்றது. அரையிறுதியில் 'கார்னர்' மூலம் வென்றது. எனவே நாங்கள் வெற்றி பெறாதது கால்பந்துக்கு கிடைத்த அவமானம்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

ஜூலை 16,2018 பாரிஸ்: உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. நேற்றிரவு பாரிஸ் சென்ற வீரர்கள் திறந்த பஸ் மூலம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, ...
அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

ஜூலை 16,2018 மாஸ்கோ: அர்ஜென்டினா கால்பந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து சாம்பாவோலி விலகினார். அர்ஜென்டினா அணி 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் பெரிய ...
‘கோல்டன் பால்’ யாருக்கு

‘கோல்டன் பால்’ யாருக்கு

ஜூலை 16,2018 இந்த சீசனில் தொடர் நாயகன் விருதை குரோஷிய கேப்டன் மாட்ரிச் கைப்பற்றினார். இதனையடுத்து இவருக்கு சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது. ஹாரி கேன் ...