Dinamalar

குரோஷியா ‘சூப்பர்’: பைனலில் பிரான்சுடன் மோதல் ,  
 

குரோஷியா ‘சூப்பர்’: பைனலில் பிரான்சுடன்  மோதல்

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் முதன்முறையாக பைனலுக்கு நுழைந்த குஷியில் உள்ளது குரோஷியா. அரையிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

ரஷ்யாவில், 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது. இதன் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்து, குரோஷியா அணிகள் மோதின. போட்டியின் 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணிக்கு 'பிரீ கிக்' கிடைத்தது.

இதை கோலாக மாற்றினார் டிரிப்பியர். உலக கோப்பை தொடரின் 'நாக் அவுட்' போட்டிகளில் டேவிட் பெக்காமிற்கு (2006) பிறகு 'பிரீ கிக்கில்' கோல் அடித்த இங்கிலாந்து வீரர் ஆனார் டிரிப்பியர். 14வது நிமிடம் கார்னர் வாய்ப்பில் மாகுய்ரே தலையால் முட்டிய பந்து கோல் போஸ்ட்டுக்கு சற்று வெளியே சென்றது. 19, 32வது நிமிடங்களில் பெரிசிச், ரெபிச் எடுத்த கோல் முயற்சிகள் வீணாக, முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது.

பெரிசிச் கலக்கல்

இரண்டாவது பாதியில் குரோஷிய வீரர்கள் எழுச்சி பெற்றனர். எப்படியும் சமன் செய்ய வேண்டும் என்ற வேகத்தில் அடுத்தடுத்து கோல் ஏரியாவை முற்றுகையிட்டனர். போட்டியின் 63வது நிமிடம் பெரிசிச் அடித்த பந்தை இங்கிலாந்தின் வாக்கர், தலையால் முட்டி வெளியே தள்ளினார். 68வது நிமிடத்தில் வஜல்ஸ்கோ அடித்த பந்தை பெற்ற பெரிசிச், முன்னால் இருந்த இங்கிலாந்து வீரரின் தலைக்கு மேலாக இடது காலை நீட்டி பந்தை உதைத்து கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமன் ஆனது.

கூடுதல் நேரம்

72வது நிமிடம் பெரிசிச் அடித்த பந்து, கோல் போஸ்ட்டில் பட்டு திரும்ப, இங்கிலாந்து கண்டம் தப்பியது. இருப்பினும், மீண்டும் முன்னிலை பெற இங்கிலாந்து வீரர்கள் எடுத்த முயற்சிகள் பலன் தரவில்லை. இதனால் போட்டி 1-1 என சமனில் முடிந்தது.

சூப்பர் மாண்ட்ஜூகிச்

வெற்றியாளரை முடிவு செய்ய போட்டி கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடம்) சென்றது. இதன் முதல் பாதியின் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (105 2வது நிமிடம்) பெர்சிச் கொடுத்த 'பாசை' பெற்ற மாண்ட்ஜூகிச் கோல் அடிக்க முயன்றார். இங்கிலாந்து கோல்கீப்பர் பிக்போர்டு காலால் தடுக்க, மீண்டும் தப்பியது இங்கிலாந்து. கூடுதல் நேரத்தின் இரண்டாவது பாதியில் மீண்டும் மிரட்டியது பெரிசிச், மாண்ட்ஜூகிச் ஜோடி. இம்முறை 'ரிவர்ஸ் ஹெட்' முறையில் பெரிசிச் தலையால் முட்டிய பந்தை வாங்கிய மாண்ட்ஜூகிச் கோல் அடித்து மிரட்ட, இங்கிலாந்து மீள முடியாத சோகத்துக்கு சென்றது. முடிவில் குரோஷிய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் முதன்முறையாக பைனலுக்கு முன்னேறியது.

1

உலக கோப்பை கால்பந்தில் 'ரவுண்டு-16' (0-1), காலிறுதி (0-1), அரையிறுதி (0-1) என மூன்று 'நாக் அவுட்' போட்டிகளிலும் முதலில் பின் தங்கி இருந்து பிறகு மீண்டு வந்து வெற்றி பெற்ற முதல் அணியானது குரோஷியா.

* தவிர உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரேசில், ஜெர்மனி, ஸ்பெயின் உள்ளிட்ட அணிகளின் வரிசையில் 13வதாக இணைந்தது குரோஷியா.



2

உலக கோப்பை அரையிறுதி போட்டியில் 1-0 என முன்னிலையில் இருந்த 17 அணிகள், வெற்றி பெற்றன. இத்தாலி மட்டும் 1990ல் அர்ஜென்டினாவிடம் 'பெனால்டியில்' தோற்றது. தற்போது இங்கிலாந்து அணி இரண்டாவதாக இணைந்தது.



3

இங்கிலாந்து (1990), பெல்ஜியம் (1986) அணிகளுக்குப் பிறகு, ஒரே உலக கோப்பை தொடரில் 3 போட்டிகளில் கூடுதல் நேரத்தில் விளையாடிய அணியானது குரோஷியா.



4

உலக கோப்பை அரையிறுதியில் கூடுதல் நேரத்தில் வெற்றி பெற்ற நான்காவது அணியானது குரோஷியா. இதற்கு முன் ஹங்கேரி (1954, உருகுவே), இத்தாலி (1970-மேற்கு ஜெர்மனி, 2006-ஜெர்மனி) அணிகள் இப்படி வென்றன. தவிர அரையிறுதியில் பின் தங்கி இருந்து பிறகு வெற்றி பெற்ற 7வது அணி என்ற பெருமையும் பெற்றது.



5

இங்கிலாந்து அணி 1968, 1996 (யூரோ), 1966, 1990, 2018 (உலக கோப்பை) என முக்கிய தொடர்களில் 5 முறை அரையிறுதியில் பங்கேற்றது. இதில் 1966 தவிர மற்ற நான்கிலும் தோற்றது.



20

கடந்த 1998 உலக கோப்பை அரையிறுதியில் குரோஷிய அணி, பிரான்சிடம் 1--2 என வீழ்ந்தது. 20 ஆண்டுகள் கழித்து இம்முறை இரு அணிகளும் வரும் 15ம் தேதி பைனலில் மோதுகின்றன. இதில் பதிலடி கொடுத்து குரோஷியா சாதிக்கும் என நம்பப்படுகிறது.

41.7 லட்சம்

உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய குறைந்த மக்கள் தொகை கொண்ட அணி என்ற பெருமை பெற்றது குரோஷியா. இதற்கு முன் உருகுவே (1950) இந்த பெருமை பெற்றிருந்தது.



'முதல்' அணி வரிசையில்...

பிரான்ஸ் (1998), ஸ்பெயின் (2010) அணிகள் முதன் முறையாக பைனலுக்கு முன்னேறிய போது கோப்பை வென்று சாதித்தன. இந்த வரிசையில் குரோஷியாவும் (2018) சாதிக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.



ஜாக்ரெப்பில் 'ஜாலி'

குரோஷிய அணி அரையிறுதியில் விளையாடியதை காண பல்வேறு நிறுவனங்கள் முன்னதாக மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தலைநகர் ஜாக்ரெப்பில் உள்ள மெயின் ஸ்கொயர் பகுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். பைனலுக்கு முன்னேறியதை உற்சாகமாக கொண்டாடினர். 1991ல் சுதந்திரம் அடைந்த போது இருந்ததை விட, இம்முறை கொண்டாட்டங்கள் அதிகமாக இருந்தன.

இங்கிலாந்து வீழ்ந்தது ஏன்

அரையிறுதியில் முதல் கோல் அடித்தவுடன் இங்கிலாந்து அணி வீரர்கள் நேரம் கடத்துவதில் அதிக கவனம் செலுத்தினர். குரோஷிய அணி முதல் பாதியில் 'பினிஷிங்' இல்லாமல் தடுமாறியது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டாவது கோல் அடிக்க கிடைத்த வாய்ப்புகளை வீணடித்தது இங்கிலாந்து. மனம் தளராமல் போராடிய குரோஷிய அணி தொடர்ந்து கோல் முயற்சியில் (7) ஈடுபட்டது. மறுபக்கம் ஹாரி கேன் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்களின் தாக்குதல் கூட்டணி சொதப்பியது. இதனால் வெற்றி பெற வேண்டிய போட்டியை கடைசியில் கோட்டை விட்டது.





Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

விடிய விடிய கொண்டாடிய பிரான்ஸ்

ஜூலை 16,2018 பாரிஸ்: உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. நேற்றிரவு பாரிஸ் சென்ற வீரர்கள் திறந்த பஸ் மூலம் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, ...
அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

அர்ஜென்டினா பயிற்சியாளர் விலகல்

ஜூலை 16,2018 மாஸ்கோ: அர்ஜென்டினா கால்பந்து பயிற்சியாளர் பதவியில் இருந்து சாம்பாவோலி விலகினார். அர்ஜென்டினா அணி 1993ல் கோபா அமெரிக்க தொடரில் கோப்பை வென்றது. இதன் பின் பெரிய ...
‘கோல்டன் பால்’ யாருக்கு

‘கோல்டன் பால்’ யாருக்கு

ஜூலை 16,2018 இந்த சீசனில் தொடர் நாயகன் விருதை குரோஷிய கேப்டன் மாட்ரிச் கைப்பற்றினார். இதனையடுத்து இவருக்கு சிறந்த வீரருக்கான 'கோல்டன் பால்' விருது வழங்கப்பட்டது. ஹாரி கேன் ...