Dinamalar

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான்: வெளியேறியது இங்கிலாந்து ,  
 

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தான்: வெளியேறியது இங்கிலாந்து

கார்டிப்: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. சொந்தமண்ணில் சரிந்த சோகத்துடன் இங்கிலாந்து அணி வெளியேறியது.

இங்கிலாந்து மற்றும் வேல்சில் சாம்பியன்ஸ் டிராபி ('மினி' உலக கோப்பை) கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று கார்டிப்பில் நடந்த முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

முதுகுவலி காரணமாக முகமது ஆமிருக்குப் பதில், பாகிஸ்தான் அணியில் ரம்மன் ரயீஸ் அறிமுக வாய்ப்பு பெற்றார்.

ரூட் ஆறுதல்: லீக் சுற்றில் நுாறு சதவீத வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, அரையிறுதியில் ஏமாற்றம் அளித்தது. பாகிஸ்தானின் அபார பந்துவீச்சு காரணமாக ரன் சேர்க்க முடியாமல் திணறியது. ஹேல்ஸ் (13), ரயீசிடம் சிக்கினார். 27, 42 என, இரு முறை தப்பிப்பிழைத்த பேர்ஸ்டோவ், 43 ரன்னுக்கு ஹசன் அலி 'வேகத்தில்' அவுட்டானார். ஒருகட்டத்தில் இங்கிலாந்து அணி 27 ஓவரில் 128/2 என நல்ல நிலையில் இருந்தது. இதன் பின், ஜோ ரூட் (46) அவுட்டாக, அணியின் சரிவும் துவங்கியது. மீண்டும் அசத்திய ஹசன் அலி, இம்முறை கேப்டன் மார்கனை (33) வெ ளியேற்றினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பட்லர் (4) ஏமாற்றினார்.

வீணான ஸ்டோக்ஸ்: மொயீன் அலி (11) வீணாக அவுட்டானார். ரஷித் (7) ரன் அவுட்டானார். பாகிஸ்தான் வீரர்களின் பீல்டிங்கும் துடிப்பாக அமைய, இங்கிலாந்து அணி ஒன்று, இரண்டு என, ரன்கள் சேர்க்கவே தடுமாறியது. 47.2 வது ஓவரில் தான், இங்கிலாந்து அணி 200 ரன்களை எட்டியது. பந்துகளை 'விழுங்கிய' ஸ்டோக்ஸ், 34 ரன்னுக்கு (64 பந்து) கிளம்பினார். 37.5வது ஓவருக்குப் பின், ஒருவழியாக 48.4 வது ஓவரில் பவுண்டரி அடித்த பிளங்கட் (9), அடுத்த பந்தில் அவுட்டானர். கடைசி 83 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து அணி. 49.5 ஓவரில், 211 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3, ஜுனைடு கான் 2, ரயீஸ் 2 விக்கெட் சாய்த்தனர்.

'சூப்பர்' ஜோடி: பவுலிங்கில் அசத்திய பாகிஸ்தான் அணி பேட்டிங்கிலும் பொங்கி எழுந்தது. அசார் அலி, பகர் ஜமான் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இவர்களது அசத்தலான ரன்குவிப்பு கைகொடுக்க, வெற்றி இலக்கை வேகமாக நெருங்கியது பாகிஸ்தான். ஜமான் 2வது, அசார் அலி 26வது அரைசதம் அடித்தனர். சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், இந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் இதுபோல அரைசதம் எட்டியது இது தான் முதன் முறை.

முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்த நிலையில், ரஷித் 'சுழலில்' ஜமான் (57) அவுட்டானார். அசார் அலி 76 ரன்னுக்கு போல்டானார். பாகிஸ்தான் அணி 37.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர்(38), ஹபீஸ்(31) அவுட்டாகாமல் இருந்தனர்.

முதன்முறை

சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு பாகிஸ்தான் அணி, முதன்முறையாக முன்னேறியது. இதற்கு முன், 2000, 2004, 2009ல் அரையிறுதியோடு திரும்பியது.

இரண்டாவது முறை

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இங்கிலாந்து அணி, இரண்டாவது முறையாக அரையிறுதியோடு திரும்பியது. இதற்கு முன், 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த தொடரில் அரையிறுதியில் தோல்வி அடைந்தது.

ஆசிய அணிகள் பலப்பரீட்சை

கடந்த 2002க்குப் (இலங்கை, இந்தியா) பின், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பைனலில், ஆசிய அணிகள் மோதவுள்ளன.

* தவிர, இங்கிலாந்து மண்ணில் நடந்த 8 ஐ.சி.சி., தொடர்களில் முதன் முறையாக இப்போது தான், ஆசிய அணிகள் பைனலில் மோதுகின்றன.

முதன்முறை மோதல்

சாம்பியன்ஸ் டிராபி அரங்கில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் முதன்முறையாக மோதின. ஐ.சி.சி., (50 ஓவர்) தொடரில் இவ்விரு அணிகள் கடைசியாக 2003ல் நடந்த உலக கோப்பையில் மோதின.

மூன்று அறிமுகம்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இம்முறை மூன்று பேர் ஒருநாள் போட்டிக்கு அறிமுகமாகினர். இவர்கள் மூவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். பகார் ஜமான் (எதிர்-தென் ஆப்ரிக்கா), பஹீம் அஷ்ரப் (எதிர்-இலங்கை), ருமான் ரயீஸ் (எதிர்-இங்கிலாந்து) என மூன்று பேர் அறிமுகமாகினர்.

5000 ரன்கள்

இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், தனது 5வது ரன் எடுத்த போது ஒருநாள் அரங்கில் 5000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இதுவரை 162 போட்டியில் 10 சதம், 29 அரைசதம் என 5028 ரன்கள் எடுத்துள்ளார். தவிர இவர், சர்வதேச ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணிக்காக 23 போட்டியில் ஒரு சதம், 5 அரைசதம் என 744 ரன்கள் எடுத்துள்ளார்.

ஹசன் அசத்தல்

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, 3 விக்கெட் வீழ்த்தினார். இத்தொடரில் இவர், இதுவரை 10 விக்கெட் கைப்பற்றி உள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலரானார்.

தவிர இவர், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், ஒரு சீசனில் அதிக விக்கெட் வீழ்த்திய பாகிஸ்தான் பவுலர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன், 2009ல் தென் ஆப்ரிக்காவில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் 8 விக்கெட் வீழ்த்தியது அதிகபட்சமாக இருந்தது.

19

ஐ.சி.சி., சார்பில் நடத்தப்பட்ட 11 உலக கோப்பை, 8 சாம்பியன்ஸ் டிராபி என, மொத்தம் 19 ஒருநாள் தொடர்களில், இங்கிலாந்து அணி ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. மற்றபடி 7 முன்னணி அணிகள் ஏதாவது ஒரு தொடரில் கோப்பை வென்றுள்ளன.

64

இங்கிலாந்து அணியின் 'ஆல் ரவுண்டர்' ஸ்டோக்ஸ். ஐ.பி.எல்., தொடரில் 'காஸ்ட்லி' வீரரான இவர், நேற்று அணியை அம்போ என விட்டு விட்டார். 64 பந்துகள் சந்தித்து 34 ரன் மட்டும் எடுத்தார். இதில் ஒரு பவுண்டரி, சிக்சர் கூட அடிக்கவில்லை.

இதையடுத்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில், அதிக பந்துகளை சந்தித்து, ஒரு பவுண்டரி கூட அடிக்காத வீரர்களில், முதலிடம் பிடித்தார்.

1992க்குப் பின்...

கடந்த 1992 உலக கோப்பை தொடர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடந்தது. இதன் அரையிறுதியில் நியூசிலாந்தை (262/7) அதன் சொந்தமண்ணில் வீழ்த்தி பாகிஸ்தான் (264/6) பைனலுக்கு முன்னேறியது.

இதுபோல, ஐ.சி.சி., தொடரின் (சாம்பியன்ஸ் டிராபி) அரையிறுதியில், இங்கிலாந்தை அதன் சொந்தமண்ணில் வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது பாகிஸ்தான்.

துரத்தும் துரதிருஷ்டம்

இங்கிலாந்து மண்ணில் 1975, 1979, 1983 மற்றும் 1999 உலக கோப்பை (50 ஓவர்), 2009 'டுவென்டி-20' உலக கோப்பை, 2004, 2013 மற்றும் 2017 சாம்பியன்ஸ் டிராபி என, மொத்தம் ஐ.சி.சி.,யின் 8 பெரிய தொடர்கள் நடந்தன. இருப்பினும், ஒருமுறை கூட இங்கிலாந்து கோப்பை வெல்ல முடியாமல் போனது துரதிருஷ்டம் தான்.

பைனலில் இந்தியா - பாக்., ?

இந்திய அணி இன்று வங்கதேசத்தை வென்றால், வரும் 18ம் தேதி நடக்கும் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதும் நிலை ஏற்படும்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

வெந்த புண்ணும் ஆறிடுமா வேதனை தான் தீர்ந்திடுமா...

ஜூன் 19,2017 லண்டன்: இப்படி ஒரு 'மெகா' தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல் மைதான காட்சிகள் படம் பிடித்து காட்டின. தோல்வி ...
எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

எட்டாக்கனியான ‘மினி’: ‘கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

ஜூன் 18,2017 ஓவல்: சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. 'டாஸ்' வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல் கடைசி வரை எதுவுமே சரியாக அமையவில்லை. ...
அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

ஜூன் 18,2017 பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் 'டாஸ்' வென்று 'பேட்' செய்வது தான் பாதுகாப்பானது. இதனை 2003ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த உலக கோப்பை பைனலில் அப்போதைய இந்திய கேப்டன் ...