Dinamalar

‘சூப்பர்’ சுந்தர்! * பைனலில் புனே * மீண்டும் சரிந்தது மும்பை ,  
 

‘சூப்பர்’ சுந்தர்! * பைனலில் புனே * மீண்டும் சரிந்தது மும்பை

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் பைனலுக்கு முன்னேறியது புனே அணி. நேற்று நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில், மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. புனே சார்பில் 'சுழலில்' அசத்திய தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர், 3 விக்கெட் வீழ்த்தினார்

இந்தியாவில் பத்தாவது ஐ.பி.எல்., 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் 'டாப்-4' இடம் பிடித்த அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறின.

நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் 'டாப்-2' இடம் பெற்ற மும்பை, புனே அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

மும்பை அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்பஜன் சிங் நீக்கப்பட்டு, மலிங்கா, பார்த்திவ் படேல், மெக்லீனகன் மற்றும் பும்ரா மீண்டும் இடம் பிடித்தனர். புனே அணியில் ஸ்டோக்ஸ் நாடு திரும்பியதால், பெர்குசன் களமிறங்கினார்.

ரகானே அரைசதம்:

புனே அணிக்கு திரிபாதி, ரகானே ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது, மெக்லீனகன் வீசிய முதல் ஓவரில் திரிபாதி 'டக்' அவுட்டானார். கேப்டன் ஸ்மித் (1) ஏமாற்ற, ரகானே (56), இத்தொடரில் இரண்டாவது அரைசதம் எட்டினார்.

தோனி விளாசல்:

மனோஜ் திவாரி, 45வது பந்தில் அரைசதம் எட்டினார். மெக்லீனகன் வீசிய போட்டியின் 19வது ஓவரில், தோனியின் 2 சிக்சர் உட்பட 26 ரன்கள் கிடைத்தன. கடைசியில் மனோஜ் திவாரி (58) ரன் அவுட்டானார். கடைசி 12 பந்தில், 41 ரன்கள் எடுக்கப்பட்டன. புனே அணி 20 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. தோனி (40) அவுட்டாகாமல் இருந்தார்.

சுந்தர் அபாரம்:

அடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிம்மன்ஸ் (5) ரன் அவுட்டானார். வாஷிங்டன் சுந்தர் வீசிய போட்டியின் 6வது ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா (1), அம்பயரின் தவறான தீர்ப்பில் திரும்பினார்.

4வது பந்தில் அம்பதி ராயுடு 'டக்' அவுட்டானார். தொடர்ந்து அசத்திய சுந்தர், 'அபாய' போலார்டையும் (7) பெவிலியனுக்கு அனுப்பினார். ஹர்திக் பாண்ட்யா (14) நீடிக்கவில்லை.

பார்த்திவ் ஆறுதல்:

குர்னால் பாண்ட்யா (15) கைவிட்டார். போராடிய பார்த்திவ் (52) அரைசதம் எட்டி, அவுட்டாக, மும்பை அணியின் தோல்வி உறுதியானது.

பின் வந்த கரண் சர்மா (4), மெக்லீனகன் (12) ஏமாற்றினர். மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 142 ரன்கள் மட்டும் எடுத்து வீழ்ந்தது. மலிங்கா (7), பும்ரா (16) அவுட்டாகாமல் இருந்தனர். 20 ரன்னில் வெற்றி பெற்ற புனே அணி முதன் முறையாக ஐ.பி.எல்., பைனலுக்கு முன்னேறியது.



'இளம்' ஆட்ட நாயகன்:

நேற்று 16 ரன்கள் மட்டும் கொடுத்து, 3 விக்கெட் வீழ்த்திய புனே வீரர் வாஷிங்டன் சுந்தர், ஆட்ட நாயகன் ஆனார். தவிர, ஐ.பி.எல்., தொடரில் குறைந்த வயதில் (17 வயது, 223 நாட்கள்) ஆட்ட நாயகன் ஆன முதல் வீரர் என்ற பெருமையும் பெற்றார்.



இன்னொரு வாய்ப்பு

மும்பை அணிக்கு இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. இன்று நடக்கும் 'எலிமினேட்டர்' போட்டியில் வெல்லும் அணியுடன், வரும் மே 19ல் நடக்க உள்ள தகுதிச் சுற்று 2ல் விளையாட வேண்டும். இதில், மும்பை வென்றால் பைனலுக்கு முன்னேறலாம்.



104

ஐ.பி.எல்., தொடரில் குறைந்த இன்னிங்சில் 3000 ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் நான்காவது இடத்தை டிவிலியர்சுடன் பகிர்ந்து கொண்டார் ரகானே. இருவரும் 104வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டினர். இப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் கெய்ல் (75), வார்னர் (94), ரெய்னா (103) உள்ளனர்.



545

நேற்று 40 ரன்கள் எடுத்த தோனி, மும்பை அணிக்கு எதிராக ஐ.பி.எல்., தொடரில் அதிக ரன் (571 ரன், 27 போட்டி) எடுத்த வீரர்கள் வரிசையில் ஷிகர் தவானை (16ல், 536 ரன்) முந்தி, இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் ரெய்னா (26 போட்டி, 708 ரன்) உள்ளார்.



3000

மும்பைக்கு எதிராக புனே வீரர் ரகானே, 43 ரன்கள் எடுத்த போது, ஐ.பி.எல்., அரங்கில் 3000 ரன்களை எட்டினார். இவர், 110 போட்டிகளில் 1 சதம், 25 அரைசதம் உட்பட மொத்தம் 3013 ரன்கள் எடுத்துள்ளார். தவிர, 3000 ரன்னுக்கும் மேல் எடுத்த 11வது வீரர் ஆனார். முதல் மூன்று இடத்தில் ரெய்னா (161ல் 4540 ரன்), கோஹ்லி (149ல், 4418), ரோகித் சர்மா (157ல் 4156) உள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
சென்னை அசத்தல் தொடருமா

சென்னை அசத்தல் தொடருமா

ஏப்ரல் 21,2018 ஐதராபாத்: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில், சென்னை அணியின் வெற்றி நடை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ...
டிவிலியர்ஸ் விளாசல்: பெங்களூரு வெற்றி

டிவிலியர்ஸ் விளாசல்: பெங்களூரு வெற்றி

ஏப்ரல் 21,2018 பெங்களூரு: டில்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ் அரைசதம் கடந்து கைகொடுக்க பெங்களூரு அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி ...
பஞ்சாப் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி: ராகுல், கெய்ல் அரைசதம்

பஞ்சாப் அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி: ராகுல், கெய்ல் அரைசதம்

ஏப்ரல் 21,2018 கோல்கட்டா: மழையால் பாதிக்கப்பட்ட ஐ.பி.எல்., லீக் போட்டியில், பஞ்சாப் அணி 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் 11வது ...