எல்லாருக்கும் கல்வி: கன்னியாகுமரியில் ஒரு புரட்சி!


டி.வி.ஆரின் வாழ்க்கையை உற்று நோக்கும் போது, அவருக்கு எப்போதுமே தான் பிறந்து வளர்ந்த நாட்டு மக்களின், நல்வாழ்விற்குப் பாடுபட வேண்டும் என்ற ஒரு சமுதாயப் பார்வை இருந்து வந்திருப்பது தெளிவாகவே புலனாகிறது.சமுதாய முன்னேற்றம் என்ற கண்ணோட்டத்தில் சுதந்திரத்திற் காகப் பாடுபட்ட நம் நாட்டின் தலைவர்கள், கல்வியின் அவசியத்தை மிக அதிகமாக உணர்ந்து, அதற்காகப் பாடுபட்டு வந்தனர். அதற்காகப் பெரும் தியாக வாழ்க்கை வாழ்ந்திருக்கின்றனர்.


அடிமைப்பட்ட மக்கள், தாங்கள் அடிமைப்பட்டிருக்கிறோம், சுதந்திரம் பெற்ற மக்களாக வாழ வேண்டும், உலகத்தின் முன்னேற்றங் களை எல்லாம் நாம் எய்த வேண்டும் என்ற நினைப்பிற்கு வருவதற்கும், நல்ல தரமான கல்வி தேவைப்பட்டது. ஜாதி, மதம் போன்ற குறுகிய நோக்கில் இருந்து சமுதாயம் விடுபட வேண்டும் என்றாலும், அதற்குக் கூட கல்விதான் துணை செய்ய முடியும். வசதியானவர் களுக்கு மட்டுமே கல்வி கிட்டும் என்ற நிலையை முதலில் தகர்த்து, எல்லாருக்கும் கல்வி, அதுவும் எளிமையாகக் கிட்டுமாறு மாற்றப்பட வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பே கல்வித் தொண்டில் தன்னை முழுக்க முழுக்க டி.வி.ஆர்., ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
மகாலிங்கம் முதலியார்


‘தேவி’ ஆசிரியர் மகாலிங்கம் முதலியார், தான் கண்ட காட்சி ஒன்றை சிறப்பாக கூறுகிறார்:

மகாலிங்கம் முதலியார்

மகாலிங்கம் முதலியார்

குமரி மாவட்ட முதுபெரும் எழுத்தாளர் மகாலிங்கம் முதலியார். கவிமணி தேசிய வினாயகம் பிள்ளையின் மேல் கொண்ட மதிப்பின் காரணமாக,"தேவி' என்ற பத்திரிகையைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வந்தார்.தேசிய வினாயகம் பிள்ளை பெயரில் உள்ள தே.வி. எழுத்துக்களைக் கொண்டு தேவி என்று தனது பத்திரிக்கைக்குப் பெயர் சூட்டினார். குமரி மாவட்டத்தில் இன்றைய எழுத்தாளர்கள் பலருக்கு மகாலிங்கம் முதலியார் ஒரு வழிகாட்டி.

நான் தினமும் டி.வி.ஆரை அவரது வீட்டில் சந்திப்பேன். அதை ஒரு கடமையாகக் கொண்டிருந்தேன். வீட்டில் காலை 10 மணி முதல் 2 மணி வரை ஒரு கூட்டம் டி.வி.ஆரைச் சந்திக்கக் காத்திருக்கும். இவர் களெல்லாம் அவரிடம் ஏதாவது உதவி பெற வந்தவர்கள்தான்; அவரவர் தேவைக்கேற்றபடி பொருளாதார உதவி நடை பெற்றுக்கொண்டிருக்கும். இதில், பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளே அதிகமாக இருப்பர். பணம் கொடுத்து விட்டு அவர்கள் ஒவ்வொருவரிடமும் டி.வி.ஆர்., மறக்காமல் கூறுவது, ‘நான் உதவி செய்தேன் என்று யாரிடமும் சொல்ல வேண்டாம்’ என்ற மந்திரம்தான் என்கிறார்.


பள்ளியில் படிக்கும் குழந்தைகள் உரிமையுடன் நாள் தவறாமல் டி.வி.ஆர்., வீட்டுக்குப் போய்ப் படிப்புச் செலவிற்கு பணம் பெறும் நிகழ்ச்சி சர்வ சாதாரணம். இதில் மற்றொரு விசேடம் இருக்கிறது . . . தங்கள் குழந்தைகளை டி.வி.ஆர்., வீட்டிற்கு பெற்றோர் அழைத்துச்சென்று உதவி பெறுவ தில்லை. பள்ளிக் குழந்தைகளிடத்தில், தங்கள் சொந்த வீட்டில் பணம் கேட்டு வாங்கிக்கொள்வது போல, அங்கே போனால் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவர் வளர்த்திருக்கிறார்.


தானே மிகவும் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுவது கொஞ்சம் கஷ்டமானது. தாம் உதவுவது அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்களாகவே பிற்காலத்து வள்ளல்களும் இருந்துள்ளனர். ஆனால், தான் உதவி செய்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்ற மந்திரத்தை ஒவ்வொரு சமயமும் டி.வி.ஆர்., தவறாது பயன்படுத்தி உள்ளார். மீண்டும் நாம் கல்விச் சிந்தனைக்கு வருவோம். கன்னியாகுமரி மாவட்ட கல்வி வளர்ச்சி குறித்து படேல் சுந்தரம் பிள்ளை கூறுவதை கவனிப்போம்: கல்வியில் மிகவும் முன்னணியில் இன்று கன்னியாகுமரி மாவட்டம் திகழ்கிறது. இதற்கு முக்கியக் காரணம் கட்டாயக் கல்வித் திட்டத்தை 1946ல் திவான் சர்.சி.பி.ராமசாமி ஐயர் கொண்டு வந்ததுதான். இந்தக் கட்டாயக் கல்வியினால் ஏற்படப் போகும் நன்மைகளை டி.வி.ஆர்., நன்கு உணர்ந்திருந்தார். அந்தத் திட்டத்தின் கீழ் நாஞ்சில் நாட்டில் வெள்ளமடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தக் கட்டாயக் கல்வித் திட்டத்தை ஆரம்பித்து வைக்க சர்.சி.பி.,யை அழைக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் முக்கியமான பங்கு டி.வி.ஆருக்குத்தான். வெள்ளமடம் விழாவில் சர்.சி.பி., கலந்துகொண்டு தனக்கே உரிய சிறப்பான ஆங்கிலத்தில் பிரமாதமாகப் பேசினார்.


இந்துக்களும், கிறிஸ்தவர்களும இணைந்து கட்டாயக் கல்வித் திட்டத்தை ஏற்கும்ஒரு பகுதியிலேயே இதை முதலில் அறிமுகமாக்க வேண்டும் என்று சர்.சி.பி., காத்திருந்தார். அந்த பொறுப்பை டி.வி.ஆர்., ஏற்று, மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார்களைத் தொடர்ந்து சந்தித்து பேசி, அவர்களுடைய சம்மதமும் பெற்று, குமரி மாவட்டத்தில் இதைத் தொடங்க வைத்தார் என்றால், எவ்வளவு தன்னம்பிக்கை, விடாமுயற்சி என்பதைக் கவனிக்க வேண்டும் என்றார்.


* இந்தக் கட்டாயக் கல்வி திட்டம் பற்றி டி.வி.ஆர்., கூறி உள்ள தகவல்களை அப்படியே தருகிறோம் . . .

உமைதாணு

கவிமணியின் தேரூரில் பிறந்தவர் உமைதாணு. சென்னை சென்று வயர்லஸ் பிரிவில் படித்துக் கொண்டிருக்கும்போதே (1939-40) பத்திரிக்கைகளில் எழுதி வந்தார். பின்னர் முழுநேரப் பத்திரிக்கையாளரானார். "தினமலர்' 1952ல் திருவனந்தபுரத்தில் தொடங்கிய கால முதல் செய்திப் பிரிவில் உதவி ஆசிரியராக இருந்து, இப்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரது பல நாடகங்கள், வானொலியில் ஒலிபரப்பாகி உள்ளன. பல புத்தகங்கள் எழுதிய இவர் நல்ல ஹாஸ்யப் பேச்சாளர். நாஞ்சில் நாடு தமிழகத்துடன் இணைய நடந்த போராட்டத்தில், தீவீர பங்கு பெற்றவர்.

===========================

* வாசகர்கள் இனி சில இடங்களில் டி.வி.ஆர்., கூறியதையும் படிக்க இருக்கிறீர்கள். டி.வி.ஆருக்கு டைரி எழுதும் பழக்கம் கிடையாது. வாழ்க்கைச் சம்பவங்கள் பற்றி அவர் எதுவும் குறிப்பும் எழுதி வைக்கவில்லை. டி.வி.ஆரிடம் அவரது வாழ்க்கைச் சம்பவங்களைக் கேட்டு வைத்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் உதவி ஆசிரியர் உமைதாணுவுக்கு இருந்தது. அவர் "தினமலர்' இதழில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இதற்காகப் பலதடவை நெல்லை வந்து பல தகவல்களை வற்புறுத்தி டி.வி.ஆரிடம் கேட்டு, அவற்றை நிருபர் தர்மலிங்கத்தின் மூலமாக அவ்வப்போது எழுதியும் வைத்திருந்தார். ஒரு சில பிரச்னைகளுக்கு டி.வி.ஆர்., தனது அனுபவங்களைக் கூறி உள்ளார். அவற்றை "டி.வி.ஆர்., கூறுகிறார்' என்று இனி சில இடங்களில் எடுத்தாள்கிறோம். இப்பேட்டிகள் பிப்.,12,'76 முதல் மார்ச் 24, '76 வரை வழங்கப்பட்டவையாகும்.


‘திவான் சர்.சி.பி.இராமசாமி ஐயர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் கட்டாய இலவச ஆரம்பக் கல்வியைக் கொண்டு வரவேண்டுமென்று விரும்பினார். சமஸ்தானம் முழுவதும் ஐந்தாவது வகுப்பு வரை சிறுவர்களுக்கு அரசாங்கத்தால் இலவசமாக கல்வி போதிக்கப்பட வேண்டும் என்று அதற்குரிய ஆரம்பப் பணிகளைச் செய்யத் தொடங்கினார். இந்த திட்டத்திற்கு, கிறிஸ்தவர்களிடமிருந்து, முக்கிய மாக, வடதிருவிதாங்கூரில் உள்ள கிறிஸ்தவர்களிடமிருந்து பெரிய எதிர்ப்புக் கிளம்பியது. ‘ஆரம்பக் கல்வியை அரசாங்கம் கட்டாயப் படுத்தக்கூடாது. மத போதனை யுடன் கூடிய கல்வியே கிறிஸ்தவக் குழந்தைகளுக்கு நாங்கள் பள்ளிக் கூடத்தில் சொல்லிக் கொடுப்போம். அதற்குரிய ஆசிரியர்களுக்கு அரசு மானியமும் கொடுக்க வேண்டும்’ என்று அவர்கள் கேட்டனர். அதற் காகப் பெரிய கிளர்ச்சியும் செய்த னர். சர்.சி.பி.,க்கு இக்கட் டான நிலை ஏற்பட்டது.

ஏன் என்றால் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையின ராக இருந்தாலும், ஒற்றுமையும், மனோபலமும் கொண்டவர்கள். டில்லியில் வைசிராய் வரை செல் வாக்குடையவர்கள். ஆகவே, ஒரே யடியாக சமஸ்தானம் முழுவதும் கட்டாயக் கல்வித் திட்டத்தை ஆரம்பிப்பது என்ற நிலையை மாற்றி, எந்தெந்தப் பகுதியில் உள்ள வர்கள் ஏற்றுக் கொள்கின்றனரோ அங்கிருந்து தொடங்குவது என்று ஒரு சாதுர்யமான வழியை, அவர் மேற்கொண்டார். எந்த இடத்தில் எதிர்ப்பில்லாமல் மக்களின் ஒத் துழைப்பு இருக்கும் என்று அறிய, அப்பொழுது பள்ளிக்கூட டைரக்ட ராக இருந்த ஏ.என்.தம்பியை பணித்தார்.

ஏ.என்.தம்பி

மிகச் சிறந்த கல்வியாளர்கள் சிலரில் ஏ.என்.தம்பியும் ஒருவர். திருவனந்தபுரம் விசாகம் திருநாள்மகாராஜாவின் மகளின் குமாரரான இவர், பி.ஏ., இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், அதைத் தொடர்ந்து அங்கேயே பார்-அட்-லாவும் படித்துப் பட்டங்கள் பெற்றவர்.

திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் கல்வி இலாக்கா டைரக்டராகப் பணியாற்றிய போது, குமரி மாவட்டத்தில் ஆரம்பப் பள்ளிகள் பல தொடங்கியதோடு, கட்டாயக் கல்வி, மதிய உணவு போன்றவற்றை முதன்முதலில் நடைமுறைக்கு கொண்டு வந்த பெருமை இவரையே சாரும்.

வள்ளல் அழகப்பச் செட்டியார் காரைக்குடியில் முதல்முதலில் ஒருகல்லூரியை நிறுவியபோது, பேராசிரியர் டி.சூர்ய நாராயணா என்பவர், அக் கல்லூரியின் முதல்வராக இருந்தார். அழகப்பா கல்லூரி 1947ல் ஆரம்பிக்கப்பட்டது. சூர்ய நாராயணா ஓய்வுபெற்ற பின் , அழகப்பா கல்லூரிக்கு சிறப்பான ஒரு முதல்வரைத் தேடினார்.

அன்றைய சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஏ.எல்.முதலியார் அந்தப் பொறுப்புக்கு, ஏ.என்.தம்பி பெயரை சிபாரிசு செய்த தோடு, அப்பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஏ.என்.தம்பிக்குத் தனிப்பட்ட முறையில் கடிதம் எழுதினார். ஏ.எல்.முதலியாரின் கடிதத்தைக் கட்டளையாகக் கொண்டு, ஏ.என்.தம்பி 1950ல் அழகப்பா கல்லூரி முதல்வராக பொறுப்பேற்றார். 1957 வரை முதல்வராக இருந்தார். வள்ளல் அழகப்பாவின் கனவு காரைக்குடியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்பதுதான். அதற்கான அடிப்படைகளை செய்து முடித்த பெருமை ஏ.என்.தம்பிக்கு உண்டு.


ஏ.என். தம்பி, அப்போது ஆரம் பப் பள்ளிக்கூட இன்ஸ்பெக்டராக இருந்த ஏ.இலட்சுமி நாராயண ஐயரிடம் ஆலோசனை நடத்தி னார். அவர் எனது நண்பர். அவர் என்னை, ஏ.என்.தம்பியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார். அன்றிலிருந்து 38 ஆண்டுக் காலம் தம்பியும், நானும் குடும்ப நண்பர்களாகவே இருந்து வருகிறோம். நாங்கள் இன்னும் சில பிரமுகர் களுடன் ஆலோசித்து, திட்டத்தை நாஞ்சில் நாட்டில் வெற்றிகரமாக நடத்த முடியும் என்ற தீர்மானத் திற்கு வந்தோம். மக்களின் ஒத் துழைப்பு பூர்ணமாக இருந்தது. அரசாங்கத்தாரால், ‘கட்டாய இல வசக் கல்வி உபதேசக் கமிட்டி’ என்று ஒரு கமிட்டி ஏற்படுத்தப் பட்டது. அந்தக் கமிட்டியில் டி.எம்.சிதம்பரதாணுப் பிள்ளை எம்.எல்.சி., முன்னாள் மந்திரி பி.எஸ்.நடராஜபிள்ளை, முன்னாள் எம்.எல்.,ஏ., ஆர்.எஸ்.நாடார், எஸ்.திரவிய நாடார், நான் (டி.வி. இராமசுப்பையர்) ஆகிய ஐந்து பேரை நியமித்து, அரசாங்கக் கெஜட்டிலும் வெளியிட்டனர்.


நாங்கள் ஊர் ஊராக ஏ.என். தம்பியுடன் சென்று, கட்டாயக் கல்வியின் நன்மையையும், அவசி யத்தையும் எடுத்துக் கூறி, மூன்று மாதத்திற்குள் 50 கட்டடங்கள் வரை கட்டிவிட்டோம். அவ்வள விற்கும் இடத்தை மக்கள் இலவச மாகக் கொடுத்தனர். கட்டடம் கட்டத் தேவையான பணத்தை மட்டும் ஊர்ப் பிரமுகர்களிடம் அரசு கொடுத்தது. அவர்களும் அரசாங்கம் கொடுத்த பணத்திற்கு மேலாக, ஒவ்வொரு ஊரிலும் அவரவர் சமுதாய டிரஸ்டில் இருந்தும் அல்லது மக்களிடமிருந்தும் நிதி திரட்டி, கொடுத்த பணத்தை விட கூடுதல் செலவு செய்து, தங்கள் ஊர்ப் பள்ளிக்கூடம் என்ற அபிமானத்தில் அழகு அழகாய்க் கட்டிவிட்டனர்.

திருநெல்வேலி, நாகர்கோவில் சாலையில் உள்ள வெள்ளமடம் என்ற ஊரில் முதல் கட்டடத்திற்கு ஆடம்பரத்தோடு சி.பி.இராமசாமி ஐயர் அடிக்கல் நாட்டு நடத்திய மூன்று மாதத்திற்குள் அப்பள்ளி செயல்படத் தொடங்கியது.இந்தப் பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு இல்லாததோடு, அவர்களே ஒத்துழைப்பும் தந்த காட்சியைக் கண்டவர் வியந்தனர். அதற்கும் ஒரு காரணம் இருந்தது; கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த ஆசிரியர்கள், அரசாங்க ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று சமஸ்தானம் அறிவித்தது. உடனே, ஆசிரியர்களாகவும், உபதேசிகளாகவும், குறைந்த ஊதியத்திற்கு இருந்தவர்கள், மிஷனரிகளின் கீழ் இருக்க முடியாது என்று சத்தியா கிரகம் செய்யத் தொடங்கினர். கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு இது ஒரு இக்கட்டான நிலையை உண்டாக்கியது. சர்.சி.பி.,யின் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துத்தான் தீர வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.முதல் வருடத்தில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டு தாலுக்காக்களில் அமல் செய்யப்பட்ட இத்திட்டம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்களுக்கு அடுத்தாண்டு விஸ்தரிக்கப்பட்டது. ஆக, கன்னியாகுமரி மாவட்டம் என்று இப்போது அழைக்கப்படும் பகுதி பூராவும், இக்கல்வித் திட்டம் நன்கு செயல்படத் தொடங்கியது.


மிகவும் ஏழைக் குழந்தைகள் உணவுக்கு வழியின்றி பள்ளி வராமல் இருந்தனர். உடனே எல்லா ஏழைக் குழந்தைகளுக்கும் இலவச மதிய உணவுத் திட்டத்தை அரசாங்கம் புகுத்தியது. அன்று செய்த இத்திட்டத்தை நண்பர்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். ஏறத்தாழ 670 சதுரமைல் உள்ள ஒரு பிரதேசம், கோவில்பட்டி அல்லது நாங்குநேரி தாலுகா போன்ற பரப்பிலுள்ள ஒரு பகுதி இன்று மாவட்டமாகத் திகழ்கிறது. அங்குத் தொடக்கப் பள்ளிகள் ஏறத்தாழ ஆயிரம் வரை இருக்கலாம். உயர் நிலைப் பள்ளிகள் நூற்றுக்குக் குறைவில்லை. கல்லுபரிகளும் இருக் கின்றன. படித்தவர்கள் நூற்றுக்கு நூறு என்று கூடச் சொல்லிவிடலாம்.


கன்னியாகுமரி மாவட்ட மக்களை இன்று, இமாச்சலப் பிரதேசம் முதல் குமரி வரை, உத்தியோகத்திலும் வேறுபல அலுவல்களிலும் காணலாம். டாக்டர்களோ மிக அதிகம். இந்த நன்மைக்கு மூலகர்த்தா சர்.சி.பி. இராமசாமி ஐயர் தொடங்கிய கட்டாய இலவசக் கல்வித் திட்டம், முதல் முதலாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கப் பட்டதுதான். இதை வெற்றிகரமாக அமலாக்க ஏ.என். தம்பியுடைய உழைப்பு அதிகம். இந்தப் பெரிய தேரை வடம் பிடித்து இழுத்தவர் களில் நானும் ஒருவன் என்று கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
 


இந்த மாவட்டத்து மக்களின் நன்றி உணர்வைக் காட்ட, ஏ.என். தம்பிக்கு பெரிய பாராட்டுக் கூட்டம் நடத்தி, அதில் தங்க முலாம் பூசிய ஒரு பேழையை அவரது தொண்டிற்குப் பாராட்டாகத் தருவதாக தீர்மானித்தோம். இதற்கு முழுப் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொண்டேன். இதைக் கண்டு சகிக்காத சிலர், குலைக்க முன்வந்தது உண்டு; அது இப்போது தேவையில்லாத கதை. இதில் பெரிய ஆச்சர்யம், ஆசிரியர்கள் மொத்தமாக இதற்கு மனமுவந்து சிறுசிறு தொகையைத் தாங்களாகவே கொடுக்க முன்வந்ததுதான்.


நானுபறு ஆசிரியர்களிடமிருந்து இதற்காக வந்த பணம் இரண்டாயிரம் ரூபாய் என்பது என் ஞாபகம். பல பிரமுகர்கள் இதே அளவு தொகையைக் கொடுத்தும் உதவினர். (இந்த 4,000 ரூபாயின் மதிப்பு இன்று எவ்வளவு என்று கணக்குப் பார்த்துக் கொள்ளவும்) பேழை மட்டும் ஆயிரம் ரூபாய்க்குச் செய்யப்பட்டது. விழா அழகாகச் சிறப்பாக நடந்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர் களுக்குத் தேநீர் விருந்தும் அளிக்கப்பட்டது. கல்வி அமைச்சர் டி.எம்.வர்கீஸ் விழாவிற்குத் தலைமை வகித்தார். பாராட்டுப் பத்திரத் தைக் கவிமணி தேசிய வினாயகம் பிள்ளை வாசித்தளித்தார். நன்றி கூறியவன் நான். பதவியில் இருப்பவரை மகிழ்வித்து பின்னர் அவரிடம் ஏதாவது சலுகை பெறலாம் என இதைச் செய்யவில்லை. அவரும் அதை அடியோடு வெறுப்பவர். இந்த விழா நடக்கும்போது ஏ.என்.தம்பி ஓய்வு பெற்று ஒரு மாதம் இருக்கும் என்பது என் ஞாபகம்.


ஏ.என்.தம்பி உயர்ந்த பண்பு டையவர். விசாகம் திருநாள் மகா ராஜா மகளின் மகன். திருவனந்த புரத்தில் அவர் வீட்டுக்கு யார் போனாலும் அந்தப் பாராட்டுப் பேழையை காட்டி, ‘எனக்கு நாஞ் சில் மக்கள் அன்பால் அளித்த பெருமையைப் பாருங்கள்’ என்று சொல்லி மிகவும் சந்தோஷப்படு வார். அவருக்கு இப்போது கிட்டத்தட்ட 85 வயதாகிறது. ஏழெட்டு வருடத்திற்கு முன் ஒரு முறை அவரைப் பார்க்கச் சென்றிருக்கும்போது, ‘இராம சுப்பையர், எனக்கு ஒரு பெரிய ஆசை உள்ளது. நாம் இருவரும் நாஞ்சில் நாட்டுக்குப் போய், மூலை முடுக்குகளிலும் சுற்றிப் பார்த்து, நாம் அந்தக் காலத்தில் கட்டிய பள்ளிக்கூடங்களையும் அதற்கு ஒத்துழைப்பு தந்தவர் களையும் சந்தித்து அளவளாவ வேண்டும்’ என்று சொன்னார்.

பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியன்

நாகர்கோவில் வடசேரியில் பிப்., 18, 1926ல் பிறந்த பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், உலகப்புகழ் பெற்ற தமிழ் அறிஞர். நெல்லை, திருவனந்தபுரம், கேரளப் பல்கலைக் கழகங்களில் தமிழ்ப் பணியாற்றியவர். 1981ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர்.


ஆரம்பக் கல்வி இயக்கத்தில் டி.வி.ஆரின் பங்கு பற்றி வி.ஐ. சுப்பிரமணியம் விளக்குகையில்:


ஆரம்பக் கல்வி இயக்கத்தை அன்றைக்கு ராஜ குடும்பத்தைச் சார்ந்தவரும், கல்வி இலாகா டைரக்டராக இருந்தவருமான ஏ.என்.தம்பியின் உதவியுடன் டி.வி.ஆர்., நாஞ்சில் நாட்டில் பிரபலப் படுத்தினார். தம்பி வெளிநாடுகளில் படித்தவர். தீவிரமாக ஆங்கிலம் பேசுவார். டாக்டர் அழகப்ப செட்டியாருடன் பயின்றவர். இதன் காரணமாகவே செட்டியார், காரைக்குடியில் கல்லுபரி ஆரம்பித்த போது அதன் பிரின்சிபாலாக தம்பியை நியமித்தார். டி.வி.ஆர்., மீது தம்பிக்கு மிகவும் பிரியம். தரமான நல்ல கல்வி வளருவது பிற்காலத்தில் அப்பகுதியில் ஜாதிமதச் சண்டைகள் வராமல் தடுக்கும் என்று டி.வி.ஆர்., கருதினார் என்று விளக்கினார்.

முதல் கல்லுபரி முயற்சி

நாகர்கோவிலில் முதன்முதலாக ஒரு கல்லுபரியை அமைத்து விட வேண்டும் என்ற ஆசை டி.வி.ஆருக்கு இருந்தது. இதற்காகப் பெருஞ் செல்வந்தரான தன் மாமனாரிடம் இருந்து ஐந்து லட்சம் ரூபாய் நன்கொடை வாங்கிவிடலாம் என்ற முடிவும் இருந்தது. மாமனாரோ நன்கொடை தரத் தயங்கவில்லை. ஆனாலும், அப்படி உருவாகும் கல்லுபரிக்குத் தன் பெயர் வைக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டார். எப்படியாவது ஒரு கல்லுபரி வரவேண்டுமே என்ற நோக்கத்தில் சர்.சி.பி.,யை கண்டு பேசினார் டி.வி.ஆர்., கல்லுபரி போன்ற கல்வி ஸ்தாபனத்திற்குத் தனி மனிதர் பெயர் சூட்டுவது சரியல்ல என்ற கருத்தை சர்.சி.பி., வெளியிட்டார். அதனால் அம்முயற்சி கைவிடப்பட்டது.


கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம்


கன்னியாகுமரி மாவட்டம் பல்வேறு துறைகளில் முன்னேற வேண்டும் என்று தான் கொண்டிருந்த பெரும் ஆவலின் காரணமாக எழுந்ததுதான், ‘கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம்!’ இது வெறும் ஆசையின் உந்துதல் மட்டுமன்று. நியாயத்தின் அடிப்படையி லும் மிகச் சரியான கோரிக்கையே என்பதைப் பல்வேறு காரணங் களுடன் சிந்தித்தார் டி.வி.ஆர்., ஒரு பணியை பற்றிச் சிந்தனை வருமானால், அதைச் செயலாக்க, அத்துறையில் உள்ள நிபுணர்களை இணைத்து ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் மூலமே பணிகளை முடுக்கி விடுவது டி.வி.ஆரிடம் காணப்படும் தனிச் சிறப்பு. அவரின் ஆலோசனையில் இவ்வாறு பல குழுக்கள் கன்னியாகுமரி மாவட்ட நலனுக்கான இயங்கி வந்தன.
 

பபல்கலைக்கழகம் உருவாக வேண்டுமென்ற எண்ணம் வந்ததும், இதற்கான ஆதாரங்களைத் திரட்டி பணிகளைத் தொடங்க அன்றைய திருவனந்தபுரம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியத்துடன் இணைந்து இது பற்றிய திட்டங்களை வகுத்தார். பேராசிரியர் சுப்பிரமணியத்துடன் இணைந்து டி.வி.ஆர்., தயாரித்த அறிக்கை மிக முக்கியமானது. அந்த அறிக்கை மூலம் தனது கோரிக்கையை அரசின் முன் வைத்தார். கோரிக்கையை வைக்கும்போதே அதற்கான முழுத் திட்டத்தையும் டி.வி.ஆர்., தயாரித்தார். அவரது திட்டமிடும் மனப்பான்மைக்கு இந்த அறிக்கை ஒரு சரியான எடுத்துக்காட்டு என்பதால், டி.வி.ஆர்., அளித்த அறிக்கையின் ஒரு பகுதியை தந்துவிடுகிறோம்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு பல்கலைக்கழகம்: கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. பரந்த வயல்வெளி அதன் சிறப்பிற்குக் காரணமா? இல்லை. தஞ்சையிலும், திருநெல்வேலி யிலும் அத்தகைய செந்நெல் வயல்வரப்புகள் உண்டு. வானைத் தொடும் மலைத்தொடர்கள் அதன் சிறப்பிற்குக் கார ணமா? இல்லை. உதக மண்டலத்திலும் இக்காட்சியைக் காணலாம். கடல்வளம் காரணமாக இருக்குமா என்றால் கடலைக் கரையாக உடைய பல மாவட்டங்கள் உள்ளன. பல புலவர்களையும், தலைவர்களையும் தோற்றுவித்தது காரணமா? அக்காரணமெனில் பல தமிழ் அறிஞர்களைத் தோற்றுவித்த பெருமை திருநெல்வேலிக்கும் உண்டு.


இந்திய நாட்டின் தென் எல்லையான கன்னியாகுமரி இம் மாவட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத பெருமை இது. தென் எல்லை மட்டுமன்று, புனிதத்தலமாக மிகப் பழங்காலம் முதல் கருதப்பட்டு வந்திருக்கிறது. வியாச பாரதத் திலும், வால்மீகி இராமாயணத்திலும், இந்நகரம் குறிக்கப்படுகிறது. கி.பி., இரண்டாம் நுபற்றாண்டில் தமிழகம் வந்த கிரேக்கப் பயணிகள் இந்நகரை, குமோரி எனக் குறிக்கின்றனர். சங்க இலக்கியங்களில் சேரனும், சோழனும், பாண்டிய அரசர்களும் தத்தம் நாட்டின் தென் எல்லையாக குமரியைக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கின்ற னர். இடைக்காலக் கல்வெட்டுக்கள் பலவும், ‘கங்கையிற் செய்த பாவத்திற்கும் குமரியில் செய்த பாவத்திற்கும் கழுவாய் இல்லை’ என்று கூறி, இந்நகரத்தின் புனிதத் தன்மையை வற்புறுத்துகின்றன. ‘குமரியாடிப் போந்தேன் சோறு தாருங்கள்’ என்று கேட்டு உணவு பெறும் பல சந்நியாசிகளைப் பற்றிக் குறிப்பாக சேனைவரையர் கூறுகிறார்.


துவைத தத்துவத்தைப் பரப்பிய மாத்துவாச்சாரியார், குமரி சென்று தமது தத்துவத்தை விளக்கிப் பல சீடர்களைப் பெற்றதாக அவரது வரலாறு கூறுகிறது. விவேகானந்தர் அமெரிக்கா செல்லும்முன் குமரியில் வந்து நீராடி, சிந்தனைத் தெளிவு பெற்ற நிகழ்ச்சி நாம் எல்லாரும் அறிந்தது. காந்தியடிகளும், நேருவும் கன்னியாகுமரியின் எழிலால் பிணைப்புண்ட செய்தியை அவர்கள் வாக்கினால் தெளிய முடியும். மதத் தலைவர்களும், புலவர்களும், அரசர்களும் அரசியல் மேதைகளும் புண்ணிய தலமாக மதித்த நகரம் கன்னியாகுமரி.


கங்கைக் கரையில் இருக்கும் காசியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவி, அதன் பெருமையை உலகறியச் செய்தார் மாளவியா. மகா பாரதப் போர் நடத்த குருஷேத்திரத்தின் பெருமையை நினைவுறுத்த ஒரு பல்கலைக்கழகம் அங்குச் செயல்பட்டு வருகிறது. புனித சங்கமக் கரையிலுள்ள அலகாபாத்திலும், பாடலி என்று வழங்கப்பட்ட பாட்னாவிலும் பல்கலைக் கழகங்கள் அவ்வூர்களின் பெருமையை விளக்கமுறச் செய்கின்றன. வட மாநிலத்திலுள்ள புண்ணிய தலங்களி லெல்லாம் பல்கலைக் கழகங்கள் செயல்படும்போது, தென்கோடி யிலுள்ள புண்ணிய பூமியான கன்னியாகுமரியில் இதுவரை பல்கலைக் கழகம் ஒன்றை நிறுவாமல் இருப்பது வருந்தத்தக்கது. பல பல்கலைக்கழகங்கள் இருக்குமானால் பல ஆயிரம் மாணவர்கள் உயர்தரக் கல்வி பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும். கல்வியின் தரம் உயர்வதற்கும் வழி செய்யும். இதை உலகில் வளர்ச்சியுற்ற நாடுகளில் பார்க்கிறோம். எனவே, தமிழ் நாட்டில் பல பல்கலைக்கழகங்கள் தோன்ற வேண்டும்.


கன்னியாகுமரி மாவட்டத்திற்கெனத் தனி இயல்புகள் சில உண்டு; தனிப் பிரச்னைகள் சில உண்டு. பாரதத்தின் விடுதலைப் போர் 1857ல் நடந்த சிப்பாய்க் கலகத்துடன் ஆரம்பமாயிற்று என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவது வழக்கம். ஆனால், அதற்கு வெகு காலத்திற்கு முன்னரே ஆங்கிலேயருக்கு எதிராக மக்களைப் புரட்சி செய்யத் தூண்டி, குண்டறை என்ற ஊரில் 1809ல் உரிமைச் சாசனம் ஒன்றை பறைசாற்றிய வேலுத்தம்பித் தளவாய், இம்மாவட்டத்தில் தலைக்குளம் எனும் ஊரில் பிறந்தவர். மாவட்டத்தில் ஏனைய இடங்களை விடக் கன்னியாகுமரியில் கூடுதலாகவே ஆரம்பப் பள்ளிகளும், உயர்தர பாடசாலைகளும் இருக்கின்றன. ஆனால், கல்லுபரிப் படிப்புக்கு உள்ள வாய்ப்புகள் மிகக் குறைவு. வெளி மாவட்டங்களுக்கு ஒரு மாணவனை அனுப்பிப் படிக்க வைப்பதற்கு ஏராளமான பணம் தேவைப்படும்.தொழில் கல்விக்கும், மருத்துவக் கல்விக்கும், இம்மாவட்ட மாணவர் களுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. மாவட்டத்தின் தேவைக் கேற்ப இடம் ஒதுக்கப்படுவதில்லை. இப்பிரச்னைகள் அனைத்தையும் கன்னியாகுமரிப் பல்கலைக்கழகம் தீர்க்க முடியும். ஏழை மாணவர் களுக்கு வாய்ப்பளிக்க முடியும்.


இம்மாவட்டத்தில் திறமையுடைய பல அரசியல் அறிஞர்கள் உண்டு. பல அரசியல் காரியங்களை அவர்கள் சாதித்து இருக்கின்றனர். இதை இம்மாவட்ட வரலாறு விளக்கும். கல்லுபரிகளைச் சிறப்புற நிர்வகிக்கும் முதல்வர்கள் பலர் உண்டு. பள்ளிகளைச் சிறப்புற நடத்தும் தலைமை ஆசிரியர்கள் உண்டு. பொருளாதார அறிஞர்கள் உள்ளனர். வரலாற்றுப் பேராசிரியர்களும், தமிழ் அறிஞர்களும் உள்ளனர். பொதுக் காரியங்களை நியாயம் தவறாமல் நடத்திப் பெயர் பெற்ற பல பெரியோரும் உண்டு. இவர்கள் அனைவரும் கல்விப்பணியையே கடவுள் பணியாகக் கருதுபவர்கள்.நாட்டின் நலனை மனத்தில் கொண்டு, ஜாதி மதம் பாராது, தியாக உணர்ச்சியுடன் இப் பல்கலைக்கழகம் நிறுவும் வேலையில் ஈடுபடுவார்களானால், நம் நாட்டு இளைஞர்களும், அயல்நாட்டினரும் கன்னியாகுமரிக்கு கல்வி பயில வரும் காலம் நெடுந்தொலைவில் இல்லை. நம் நாட்டுப் பண்பாட்டின் சிறப்பை உலகறியச் செய்வதற்குக் கன்னியாகுமரிப் பல்லைக்கழகம் பயன்படும் காலம் நெடுந்துபரமில்லை. நாடு வாழ்ந்தால் தானே நாம் வாழ முடியும்.


- இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.


பல்கலைக்கழக அமைப்புக் கூட்டம்


கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்கலைக்கழகம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்ட பிரமுகர்கள், பத்திரிகை நிருபர்கள் கூட்டம் ஒன்றை ஜூன் 11, 1965ல் கூட்டினார் டி.வி.ஆர்., ‘தினமலர்’ நிர்வாக ஆசிரியர் டி.வி.ஆர்., கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசினார். கேரளப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம், ‘கன்னியாகுமரியில் பல்கலைக்கழகம் அமைப்பதற்குத் தகுந்த வாய்ப்பு இருக்கிறது. இங்கு கல்விச் செல்வம் இருக்கிறது. பல்கலைக்கழகம் வேண்டும். அதற்கு நிதியும் தேவை. பல்கலைக்கழகம் பல பிரிவுகள் கொண்டது. கலை, விஞ்ஞானம் முதலிய பிரிவும் அமைக்க 4 கோடி ரூபாய் செலவாகும். பொறியியல் கல்லுபரிக்கு கூடுதல் ஒரு கோடி, மருத்துவப் படிப்புக்கு இன்னும் ஒரு கோடியாகும். பல்கலைக் கழகத்திற்கு பெருவாரியான நிதியை மத்திய அரசு கொடுக்கிறது. அதற்கு அடுத்து பல்கலைக்கழகக் கமிஷன், பின் இராஜ்ய சர்க்கார், கல்லுபரிகள் முதலியவை உதவும். எனவே, இரண்டு கோடியில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்க முடியும். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் டிரஸ்டுகள் உண்டு. கோயில் டிரஸ்டுகள், மக்களின் அறிவு வளர்ச்சிக்குச் செலவிட வேண்டும். சமுதாய சொத்தைக் கல்விப் பணிக்கு ஒதுக்குவது நல்லது. சொத்தை விற்பனை செய்ய வேண்டாம். அதன் வருமானத்தின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட காலம் வரை பல்கலைக்கழகத்திற்குக் கொடுத்தால் போதும்’ என்றார்.பல்கலைக்கழகம் இன்று வரை உருவாகவில்லையானாலும், இன்றும் அதற்கான வாய்ப்புகள் மறைந்து விடவில்லை என்கிறார் பேராசிரியர் வி.ஐ.சுப்பிரமணியம்.


திருநெல்வேலி மாவட்டத்தில் கல்விப் பணி


சுதந்திரம் வந்த நேரத்தில் தமிழ்நாட்டில் கல்வித் தாகம் மிக அதிகமாக இருந்தது. அன்று சட்டமன்றம் முடிந்ததும் மந்திரிகள், தாலுகா சுற்றுப்பயணம் என்று, ஒரு தாலுகாவிற்கு மூன்று நாட்கள் ஒதுக்கி, கிராமம் கிராமமாகச் செல்வர். கிராம மக்களின் கோரிக்கையில் முக்கிய இடம் வகிப்பது பள்ளிகளாகத் தான் இருக்கும். பள்ளிக்கூடம் கட்டுவதற்கான இடம், ஊர்ப் பொதுவில் இருந்து நிதி எல்லாம் தருவதாக ஊரார் கூறுவர். கிராமத்துக்குக் கிராமம் இதற்காகச் சிலர் அலைந்த வண்ணம் இருப்பர். இந்தச் சமயத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும், நகரத்திற்கும், பள்ளிகளுக்காகத் தொடர்ந்து செய்திகள், கட்டுரைகள், ‘தினமலர்’ வெளியிட்டு வந்தது. இதில், மிகவும் பிற்பட்ட கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் போன்ற தாலுகாக்களில் கல்விக் கூடங்களுக்காக எழுதியது கொஞ்சமல்ல. இதன் காரணமாக பல ஊர்களுக்கும் பள்ளிகள் வந்தன.


காமராஜர் முதல்மந்திரியாக இருந்தபோது, மதிய உணவுத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அன்றைய கல்வி இலாகா டைரக்டர் என்.டி.சுந்தரவடிவேலு இத்திட்டத்தை எட்டயபுரத்தில் முதலில் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்குப் பெரும் ஆதரவு தந்தது திருநெல்வேலி மாவட்டம்தான். இவை மட்டுமல்லாது, திருநெல்வேலியில் சித்த வைத்தியக் கல்லுபரி, பொறியியல் கல்லூரி, வைத்தியக் கல்லுபரி, விவசாயக் கல்லுபரி இவையும் வேண்டுமென்று கடந்த 20 ஆண்டுகளில் ஏராளமாக, ‘தினமலர்’ எழுதி வந்துள்ளது. இன்று அவை திருநெல்வேலியில் செயல்படுகின்றன என்றால் அதில், ‘தினமலர்’ இதழின் பங்கும் பெரிய அளவில் உண்டு. கன்னியாகுமரியில் ஒரு பல்கலைக்கழகம் உருவாக்க முயன்றது போல, திருநெல்வேலியிலும் ஒரு பல்கலைக் கழகத்திற்கான முயற்சிக்கும், ‘தினமலர்’ ஊக்கம் தந்தது.துபத்துக்குடிக்கு ’60ம் ஆண்டு ஜனவரியில் வந்த மத்திய தபால்தந்தித் துறை அமைச்சர் டாக்டர் பி.சுப்பாராயன், வ.உ.சி. கல்லுபரியில் பேசுகையில், றிதுபத்துக்குடியில், கப்பல்துறை பொறியியல் கல்லுபரி’ ஒன்று அமைப்பது அவசியம் என்று குறிப்பிட்டார். இதன் அவசியத்தை வலியுறுத்திப் பல தலையங்கங்களைத் ‘தினமலர்’ எழுதியும் உள்ளது.எஸ்.எஸ்.எல்.சி., பரீட்சையில் மாணவர்கள் அதிக மார்க்குகள் பெறுவதற்காக, அதற்கான பாடங்களை பத்திரிகையில் தொடங்கிய முதல் பெருமை, ‘தினமலர்’ இதழுக்குத்தான் உண்டு. அனுபவம் கொண்ட பல ஆசிரியர்கள் இதற்காக நியமிக்கப்பட்டுப் பாடங்களை மிகவும் பயன்உள்ளதாக எழுதி, மாணவர்களுக்கு உதவி வருகிறது. பள்ளிகள் உருவாக்குவது மட்டுமல்ல, ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் நிலை அன்று மிகவும் பரிதாபமாக இருந்தது. இந்த ஆசிரியர்களை ஒற்றுமையாக்கி, ஓர் அமைப்பில் கொண்டு வரத் தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்க முயற்சிகள் நடைபெற்றன. அக்காலங்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நடத்திய பல மாநாடுகளில் டி.வி.ஆர்., கலந்து கொண்டு, ஆசிரியர்களை உற்சாகமூட்டி இருக்கிறார்.


Advertisement