ஊழியர்களின் பார்வையில்

தனது கடைசிக் காலத்தில் தலைநகர் சென்னையில் சில வருடங்கள் தங்கி இருந்தார் டி.வி.ஆர்., வயது உடல் நிலை காரணமாக அவருக்குப் பல கட்டுத் திட்டங்களை டாக்டர்கள் விதித்திருந்தனர். ஆனாலும், அவரது லட்சியங்களுக்கு வயதாகவில்லை. அதனால், பல இடங்களுக்கு அவர் போய் வரத்தான் செய்தார். அவருடன் சென்று வந்த சில அனுபவங்களைச் சென்னை நிருபர் நுபருல்லா கூறுகிறார்:
 

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அவருக்கு மிக அதிமான அபிமானம் இளமைக்காலத்தில் இருந்தே உண்டு என்பதை நான் கேள்விப்பட்டிருக் கிறேன். அதே கண்ணோட்டத்தில் சென்னையில் இப்படிப்பட்ட ஒரு பகுதியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு மிகவும் இருந்தது.

இதுபற்றித் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மேம்பாட்டிற்காகச் சங்கம் வைத்துப் பாடுபட்டுக் கொண்டிருந்த லட்சுமி காந்தனிடம், டி.வி.ஆரின் விருப்பத்தைக் கூறினேன். அவர் அடுத்த வாரமே விசாலாட்சி தோட்டத்தில் (அபிராமபுரம்) விழா ஏற்பாடு செய்து, விழாவில் கலந்துகொள்ள நேரில் வந்து டி.வி.ஆரை அழைத்தார்.


விழாவிற்கு பெரிய மேடை போட்டிருந்தனர். மொத்தம் 14 படிக்கட்டுகள். ஆறு படிகள் ஏறுவது கூட தவிர்க்கப்பட வேண்டு மென்பது டாக்டர்களின் கடுமையான உத்தரவு. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் டி.வி.ஆர்., விழாவிற்கு வந்து ஒரு அருமையான சொற்பொழிவு நிகழ்த்தினார். அதோடு மட்டுமில்லாது, அங்கு கூடி இருந்த சேரிக் குழந்தைகள் பலரைத் தன் பக்கம் அழைத்து உட்காரவைத்து நீண்ட நேரம் அளவளாவியது, அப்பகுதி அரிஜன மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.


சென்னை எழும்பூரில் உள்ள ஆண்டுரூஸ் சர்ச்சில் உள்ள பாதிரி யார்கள் டி.வி.ஆரைத் தங்களது அனாதைக் குழந்தைகள் இல்லத்திற்கு அழைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். அவர்கள் விருப்பத்தை நான் பெரியவரிடம் கூறியபோது, அவர் மிக்க மகிழ்ச்சியுடன் அந்தக் குழந்தைகளைப் பார்க்க ஆசைப்பட்டார். ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்தச் சர்ச்சில் குழந்தைகள் விழா நடைபெற்றது. அந்த விழாவைக் காணப் பெரியவர் காலை 11 மணிக்கே சர்ச்சுக்குப் போய் அந்தக் குழந்தைகளோடு குழந்தையாக ஆடிப்பாடி விளையாடி உற்சாகமூட்டியது இன்னும் என் மனக் கண்முன் நிற்கிறது.


பெரியவர் அமரராவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு சுதந்திரதினம். சுதந்திர தினத்தில் சர்வ சமயத்தினரும், ஜாதியினரும் கூட்டாகத் திருக்கோயில்களில் கூடி சமபந்தி போஜனத்தில் கலந்து கொள்வது என்பது நடைமுறைப் படுத்தப்பட்ட காலம். இப்படிப்பட்ட சமபந்தி போஜனம் ஒன்று சென்னையில் மண்ணடி என்ற இடத்தில் உள்ள மல்லீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. கோயில் நிர்வாகிகள் இந்த சமபந்தி போஜனத்தைத் தலைமை தாங்கி நடத்தவும், உடனிருந்து பந்தியில் உணவருந்தவும் பெரியவரை அழைத்தனர். பெரியவருக்கோ, உணவுக் கட்டுப்பாடுகளும் டாக்டர்களால் கூறப்பட்டிருந்தது. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் பெரியவர் அந்தத் திருக்கோவிலுக்குச் சென்று அனைவருடனும் சமபந்தியில் அமர்ந்து உணவருந்தினார்.

மைக்கேல்

"தினமலர்' தொடங்கிய காலத்தொட்டே உதவி ஆசிரியராக 29 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மைக்கேல், தனது நினைவுகளைக் கூறுகையில்:

எனது 29 ஆண்டுக் காலப் பழக்கத்தில் "தினமலர்' நிறுவனர் டி.வி.ஆருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்தமிழ் பற்றும், தமிழ்ப் புலமையும் மிக்கவர். அதன் காரணமாகத்தான் திருவனந்தபுரத்திலிருந்த தமிழ்ப் பத்திரிக்கை ஒன்று வெளிவர வேண்டும் என்ற வேட்கைக் கொண்டார்,

தினமலர்’ தொடங்கிய காலத்தொட்டே உதவி ஆசிரியராக 29 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மைக்கேல், தனது நினைவுகளைக் கூறுகையில் . . .


திருவிதாங்கூர் அரசிலிருந்து, கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணைய வேண்டும் என்பதில், ‘தினமலர்’ முழு மூச்சுடன் செயல்பட்டது. திரு - தமிழகப் போராட்டத்தின் போது மார்த்தாண்டம், புதுக்கடை போன்ற பகுதிகளில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்துத் திருவிதாங்கூர் அரசு விசாரணை நடத்தியது. அந்த விசாரணக்கு டி.வி.ஆரும் அழைக்கப்பட்டார். தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடந்த விசாரணையில், அதே மொழிகளில் டி.வி.ஆர்., பதிலளித்தார். இச்சம்பவம் குறித்த தீர்ப்பில், ‘தினமலர்’ தமிழர்களின் குரல், என்று கூறப்பட்டது. அந்தப் பெருமையெல்லாம் டி.வி.ஆருக்கே உரித்தாகும்.


திருவனந்தபுரத்தில் நஷ்டத்தில்தான் பத்திரிகை இயங்கியது. இருந்தபோதிலும், நாஞ்சில் மக்களின் உரிமையைப் பெற்றுத்தர வேண்டும்; தாய்த் தமிழகத்துடன், அம்மக்களை இணைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
உள்ளூர்ச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துப் புதிய புரட்சியைத் தமிழ்ப் பத்திரிகை உலகில், ‘தினமலர்’ ஏற்படுத்தி யது. இதைப் பார்த்த பின்னரே பிறத் தமிழ், மலையாளப் பத்திரிகை கள் உள்ளூர்ச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தன. டி.வி.ஆர்., மிகவும் அன்பானவர். மத, இன, ஜாதிகளுக்கு அப்பாற் பட்டவர். ஊழியர்களுடன் நேசத்துடன் பழகக்கூடியவர். ஒருவரை ஒருமுறை பார்த்த நிலையிலேயே அவரைக் கணிக்கும் திறன் டி.வி.ஆருக்கு உண்டு. யார் எந்தச் சந்தேகத்தைக் கேட்டாலும் உடனடியாகத் தீர்த்து வைக்கும் திறமையும் அவருக்கு உண்டு.

சி.பி.இளங்கோ

திருவனந்தபுரத்தில் "தினமலர்' ஆரம்பித்த காலத்தில் நாகர்கோவில் பகுதிக்கு நிருபராகப் பணிபுரிந்தவர் சி.பி.இளங்கோ. இந்திய தேச விடுதலைப் போரட்ட வீரரான இவர், "தினமலர்' நிறுவனர் டி.வி.ஆருடன் தமக்கு ஏற்பட்ட பழக்கம், தன் மீது அவர் வைத்திருந்த அன்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்:

நான் நாகர்கோவில் நிருபராகத் ‘தினமலர்’ இதழில் சேர்ந்தபோது, இந்து பத்திரிகையில் இருந்த, டி.கே.ஐயர்., மற்றும் எம்.சி.பிள்ளை ஆகியோரும், ‘தினமலர்’ இதழில் எழுதிக் கொண்டு இருந்தனர். பட்டம் தாணுப் பிள்ளை அரசை எதிர்த்து, ‘தினமலர்’ கடுமையாக விமர்சித்தது. அது, திரு - தமிழர் போராட்டத்துக்கு உயிர் மூச்சாகத் திகழ்ந்தது. துப்பாக்கிச் சூடு பற்றிய வழக்கில் நிருபரான நானும் விசாரிக்கப்பட்டேன். பட்டம் தாணுப்பிள்ளை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தபோது, சாம்ராஜ் என்ற எம்.எல்.ஏ., திருவனந்தபுரம், ‘தினமலர்’ அலுவலகத்தில்தான் மறைந்து இருந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற,‘தினமலர்’முக்கிய காரணமாக இருந்தது.
 

கே.எஸ்.ஆறுமுகம் பிள்ளை

"தினமலர்' திருவனந்தபுரம் தொடக்கத்தில் இருந்து குழித்துறை நிருபராக இருந்து வரும் கே.எஸ்.ஆறுமுகம் பிள்ளை, தனது பழைய நினைவுகள் சிலவற்றைக் கூறுகையில்:

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் குழித்துறையில் நடைபெற்ற வாவுபலிப் பொருட்காட்சிக்கு நான் சாமியை (டி.வி.ஆர்.,) வடிவீஸ்வரம் கிராமத்தில் இருந்து அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது பொருட்காட்சியைத் திறந்து வைத்து, பொருட்காட்சி மைதானத்தைச் சுற்றிப் பார்த்தார். மைதானத்தை ஒட்டி ஓடும் தாமிர பரணி ஆற்றைப் பார்த்த அவர், இவ்வளவு தண்ணீர் வீணாகக் கடலில் சென்று கலப்பதா . . . இதை விவசாயத் துக்குப் பயன்படுத்தினால் என்ன என்று கேட்டார்.


பொருட்காட்சிக்கு வந்திருந்த விவசாயப் பிரமுகர் இராமானாதிச் சன் நாடாரை நிறுவனருக்கு அறிமுகப்படுத்தினேன். அப்போது இருவரும் கலந்துரையாடி, விளாத்துறை நீரேற்றும் திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் செய்தி வெளியிட்டார். தனது சொந்தச் செல்வாக்கிலும், நேசமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் இந்தத் திட்டத்தை ஆதரித்ததன் பேரிலும், அன்றைய திரு - கொச்சி முதல்வர் பனம்பள்ளி கோவிந்த மேனோன் இந்தக் கோரிக்கையை ஏற்றார். முதல்வரே இந்தத் திட்டத்துக்கு அடிக்கல்லும் நாட்டினார்.


மங்காடு கிராமத்தில் திரு - தமிழக விடுதலைப் போராட்டத்தின் போது, அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. மங்காடு செல்லையா என்பவர் இறந்தார். இதைத் திரு - கொச்சி சமஸ்தான அரசு மறைக்கப் பார்த்தது. இதுபற்றிய ரகசியத் தகவல் எனக்குக் கிடைத்ததும், நான் நிறுவனரிடம் இதுபற்றிச் சொன்னேன். இதைக் கேட்ட சாமி, உடனே அத்தச் செய்தியை வெளியிட வேண்டும் என்று எனக்கு உத்தரவிட்டார். திரு - கொச்சி அரசாங்கமும் அந்தச் செய்தியை மறுக்கவில்லை.  குழித்துறையில், திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கன்னியாகுமரியைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கப் போராட்டம் நடந்தது. அந்தப் போராட்டச் செய்தியை நான் சேகரித்தேன். ஒரு தமிழ்ப் பத்திரிகையில் இப்படி ஒரு சிறுவன் (எனக்கு அப்போது வயது 20 தான்) செய்தி எடுப்பதை அறிந்த போலீசார், எனது வீட்டையும், அலுவலகத்தையும் திடீர்ச் சோதனை நடத்தி, என்னைப் பயமுறுத்தினர். அதற்கு அஞ்சாமல், நேசமணி, குஞ்சன் நாடார், கம்யூனிஸ்ட் தலைவர் ஜி.எஸ்.மணி ஆகியோரது கடிதங்களை மறைந்து விட்டோம். ஒன்றும் கிடைக்காமல் திரும்பி விட்டனர்.


மார்த்தாண்டம், புதுக்கடை ஆகிய இடங்களில் ஆக., 11, ’54ல் துப்பாக்கிச் சூடு நடந்தது. நான் அந்தச் செய்தியை எடுத்ததை அறிந்த மலையாளப் போலீசார் என்னைக் கைது செய்ய வேனில் துரத்தினர். நான் என் வீட்டின் பின்பக்கமுள்ள தோப்பு வழியாகத் தப்பி, கல்பாலத்தடி கால்வாய் வழியாக திருத்துவபுரம் சென்றேன். அப்போது அந்த ஊரே மயான அமைதியில் இருந்தது. எங்கும் போலீஸ் தலை. அங்கு வந்த ஒரு லாரியில் ஏறி தப்பி, திருவனந்தபுரம் அலுவலகம் சென்றேன். அங்கு நிறுவனர் டி.வி.ஆர்., அவர்களும், செய்தி ஆசிரியர்களும் இந்தச் செய்திக்காகக் காத்திருந் தனர். அப்போது இரவு ஒரு மணி. செய்தியை எழுதிக் கொடுத்த என்னிடம், ‘இனிமேல், யார் தடுத்தாலும் செய்தி வந்தாக வேண்டும். டாக்சி எடுத்து வந்தாவது செய்திகளைத் தர வேண்டும்’ என்றார்.


அதன்பின் துப்பாக்கிச் சூடு தொடர்பாக நீதி விசாரணை நடந்தது. ஐகோர்ட் நீதிபதி சங்கரன், நமது நிறுவனருக்கும், எனக்கும் வாக்குமூலம் அளிக்க சம்மன் அனுப்பினார். அப்போது டி.எஸ்.பி., கோபாலன் அறிவுரையின் பேரில், ஒரு போலீஸ் அதிகாரி என்னிடம் தந்திரமாகப் பேசி, அரசுக்கு ஆதரவாக வாக்குமூலம் தந்தால், திரு - கொச்சி அரசாங்கத்தில் போலீஸ் வேலையில் சேரலாம் என ஆசை காட்டினார். நான் இதை நிறுவனரிடம் சொன்னேன், அப்போது நிறுவனர் அவர்கள், ‘உள்ளதை உள்ளபடி சொல்வதே நமது கடமை’ என்றார். அதன்படி அரசின் கருத்துக்கு எதிராகவே எனது வாக்குமூலம் இருந்தது.


அந்த வழக்கில் ஆஜரான அரசு வக்கீல் மள்ளுர் கோவிந்தப் பிள்ளை எப்படிப்பட்டவர் தெரியுமா? ஒரு வழக்கில் தன் கட்சிக் காரனைக் காப்பாற்றத் தன்கையிலிருந்த குண்டு ஒன்றை விழுங்கி விட்டு, வேறு குண்டை கோர்ட்டில் காட்டி, இந்தக் குண்டு இந்த துப்பாக்கியில் நுழையாதே. பின் இந்தத் துப்பாக்கியால் என் கட்சிக் காரன் எதிரியை எப்படிச் சுட்டிருக்க முடியும் என்று கூறிய அசகாய சூரர். இதனால், அவருக்குப் பெயரே குண்டு விழுங்கி கோவிந்தப் பிள்ளை என்பார்கள். அவர் எங்களிடம் வளைத்து வளைத்துக் கேள்வி கேட்டார். ஆனால், இறுதி வரை அரசுக்கு எதிராகவே சாட்சி சொன்னோம். எல்லாம் முடிந்த பின் அந்த வக்கீல் எனது முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்.
 

என். ராதாகிருஷ்ணன்

"தினமலர்' பத்திரிக்கையில் 1958ல் இருந்து பணியாற்றி ஒய்வு பெற்ற என். ராதா கிருஷ்ணன், தனது நினைவுகளைக் கூறுகிறார்.

திருநெல்வேலிக்கு வானொலி நிலையம், கன்னியாகுமரி - திருநெல்வேலி அகல ரயில் பாதை, சேர்வலாறு மின் திட்டம் ஆகியவை வர இருப்பதை முன்கூட்டியே முதன் முதலாகச் செய்தி வெளியிட் டதை அப்போது பலர் நம்பா விட்டாலும், இன்று அவையாவும் உண்மையாகிவிட்டன. நிறுவனர் டி.வி.ஆர்., தமிழக முன்னேற்றத்தைப் பற்றி, விவசாயத் திற்குத் தண்ணீரும், தொழில் முன்னேற்றத்திற்கு மின்சாரமும் கிடைக்க எடுக்கும் முயற்சிகளை உரிய முறையில் வெளியிட்டு ஊக்கம் அளித்தார்.


திருநெல்வேலியில் போக்குவரத்து நெரிசலைத் சமாளிக்க, வளைவு ரோடு அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்தது. டி.வி.ஆர்., அவர்கள் அந்த அலுவலகத்திற்குச் சென்று, மிக உன்னிப்பாக எப்படியெல்லாம் இந்த ரோடுகள் போட்டால், மேல்நாடுகளில் இருப்பது போல டவுன் விரிவாகவும், தொழில்கள் பெருகவும் வாய்ப்பு ஏற்படும் என்பதைக் குறிப்பிட்டு, நிறையச் செய்திகள் வெளியிடச் செய்தார். இந்தத் திட்டத்தை ஒட்டியதுதான், இப்போது நெல்லையில் உருவாகி உள்ள பைபாஸ் ரோடு. இந்தப் பைபாஸ் ரோடு பற்றி அவர் பெருமுயற்சி எடுத்துச் செய்திகள் வெளியிட்டார். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களின் முன்னேற்றத்திற்குத் ‘தினமலர்’ பாடு பட்டது.

ஆலங்குளம் நடராஜன்

ஆக., 8, ’67ல் ஆலங்குளம் நிரபராகப் பணியில் சேர்ந்தேன். ஒரு கொலைச் செய்தியுடன் ஓரிரு நாட்களுக்குப் பின் அலுவலகத்துக்கு ஓடோடிச் சென்றேன். ‘அவசரமாக வந்துள்ளாயே . . . என்ன செய்தி?’ என்று டி.வி.ஆர்., கேட்டார்.
 

மாராந்தையில் ஒரு கொலை. அந்தச் செய்தியுடன் வந்தேன்’ என்றேன். ‘இச்செய்தி வரவேண்டியதுதான் . . .        இதனால் மக்களுக்குப் பயன் ஏதாவது உண்டா? எதற்காக ஓடி வர வேண்டும். மக்களுக்கு உடனடியாகப் பயன் உள்ள செய்திகளுக்கு இந்த ஓட்டம் இருக்கட்டும் ’ என்றார்.


‘மக்களுக்காகத்தான், ‘தினமலர்’ இருக்கிறது. மக்கள் தேவையை நாம் சுட்டிக்காட்டணும். சாலை வசதி, குடிநீர் வசதி, உணவுப் பொருள் விநியோகம் உட்பட மக்களின் அவசியத்தை அறிந்து செய்தி எழுத வேண்டும்’ எனவும் பணித்தார்.
தி.மு.க., ஆட்சிக்காலம். எனக்குத் தி.மு.க., பிரமுகர் களிடம் நல்ல நட்பு இருந்தது. ஆகவே, தமிழ்நாட்டில் தி.மு.க.,வினரின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் எங்கு நடந்தாலும், அங்கே என்னை அனுப்பித் ‘தினமலர்’ கண்ணோட் டத்தில் அக்கட்சியினரின் செய்திகளை கேட்டு எழுதப் பணித்திருந்தார் சாமி (டி.வி.ஆர்.,). அவர்களே அதிசயிக்கத்தக்க சில அபூர்வமான செய்திகளைக் கேட்டு, ‘தினமலர்’ பத்திரிக்கையில் எழுதி உள்ளேன்.


அதே போல தமிழகம் தழுவிய ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் பற்றிய செய்திகள், அரசு உத்தரவுகள் இவற்றையும் சேகரித்துத் தர பெரியவர் கேட்டுக் கொண்டார். நானும் இதுபோன்ற செய்திகளை இன்று வரை எழுதி வருகிறேன்.எனது ஊர் சிவலார்குளம் என்ற சிற்றூர். அவ்வூருக்கு அருகே உள்ள நல்லுபர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டு விழாவுக்கு 1969ம் ஆண்டு தலைமை ஏற்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிப் பேசினார். அது சமயம் என் இல்லம் வந்து என் குடும்பத்தார், பெற்றோருடன் அமர்ந்து உணவு அருந்தி, உறவினர் போல் பாசத்தோடு பழகிய காட்சி இன்றும் பசுமையாக என் நெஞ்சில் பதிந்து காணப்படுகிறது.
 

ரிச்சர்ட் சாம்

நீண்ட காலம் நாகர்கோவில் நகரத்தின் நிருபராக இருந்த ரிச்சர்டு கூறுகையில் . . .


நான் இளமையில் நல்ல விளையாட்டு வீரன். அதன் காரணமாக வலது கையை இழந்துவிட்டேன். இடது கையால் எழுதப் பழகினேன். ஒருநாள் டி.வி.ஆர்., என்னை அழைத்து விபரம் விசாரித்துத் ‘தினமலர் இதழுக்கு வந்து விடேன்’ என்றார்.

அதைக் கேட்டு நான் உணர்ச்சிவசப் பட்டு, கண் கலங்கினேன். ‘நான் பார்த்துக் கொள்கிறேன்; ஆபீசுக்கு வா’ என்றார். அதன் பின் நீண்ட காலம் கவுரவமிக்க நிருபராகத் ‘தினமலர்’ இதழில் பணியாற்றி ஓய்வும் பெற்று விட்டேன். ‘ஊனமுற்றவர்களுக்கு வேலை’ என்கிறது இன்று அரசாங்கம். அதை அன்றே செய்தவர் டி.வி.ஆர்.,

எம். தர்மலிங்கம்

நீண்ட காலம், ‘தினமலர்’ நிருபராகப் பணியாற்றி வரும் எம்.தர்ம லிங்கம் தனது நினைவுகள் பலவற்றைக் கூறினார். அதில் ஒன்றை மட்டும் கீழே தருகிறோம் . . .

 

ஒருமுறை கோவில்பட்டியில் மின் கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய எம்.பி., முருகானந்தம் ஒரு அறிக்கை கொடுத்து, அது, ‘தினமலர்’ இதழில் வந்தது. ‘அப்பகுதி வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் நினைத்து இருந்தால், துப்பாக்கிச் சூட்டை தவிர்த்து இருக்கலாம்’ என்று எம்.பி., தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். காலையில் பேப்பர் வந்தவுடன் சம்பந்தப்பட்ட அதிகாரி கோவில்பட்டியிலிருந்து டிரங்கால் போட்டு, ‘எப்படி அந்த அறிக்கையை வெளியிடலாம்?’ என்று மிரட்டினார். அதிகாலை நேரத்தில் வாட்ச் மேன் மட்டும்தான் அலுவலகத்தில் இருந்திருக்கிறார். அவர் தான் அந்த மிரட்டலைக் கேட்டவர். காலை 9.30 மணிக்கு சாமி (டி.வி.ஆர்.,) அலுவலகம் வந்ததும், வாட்ச்மேன், தான் தொலைபேசியில் கேட்டதைச் சொன்னார்.


காலை 10.30 மணிக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி, தமது பிரதிநிதியாக மற்றொரு அதிகாரியை, ‘தினமலர்’ அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த அதிகாரியும் சாமியிடம் (டி.வி.ஆர்.,) எம்.பி., அறிக்கையை வெளியிட்டது பற்றி குறை சொன்னார். பொறுமையாகக் கேட்டுக்கொண்டே இருந்த சாமி, (டி.வி.ஆர்.,) அதிகாரிக்குப் பதிலளித்தார் . . . ‘எம்.பி., அறிக்கையை ஏன் வெளியிட்டீர்கள் என்று கேட்க உங்களுக்கு உரிமை கிடையாது. துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் தரப்புத் தகவலை நாங்கள் இருட்டடிக்க முடியாது. ஒரு பொறுப்பான எம்.பி.,யின் கருத்தை நாங்கள் உதா சீனப்படுத்த முடியாது. மக்களுக்காகத்தான் பத்திரிகை நடத்து கிறேன்’ என்று, சற்றுக் கடினமாகவும், உறுதியுடனும் கூறியவுடன், மேற்கொண்டு எதுவும் பேச முடியாமல் அதிகாரி வந்த பாதையில் திரும்பிச் சென்றார்.மக்கள் பிரச்னைகளை வெளியிட்டுக் குறைகளைப் போக்கப் பாடுபட்டவர். தவறுகளைச் சுட்டிக்காட்டியவர். அவரின் மன உறுதிக்கும், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்கும் பலப்பல உதாரணங்களை இதுபோல சொல்ல முடியும் என்றார்.
 

பீர்முகம்மது

தச்சநல்லுபரில், ‘தினமலர்’ தொடங்கப்பட்ட காலத்திலேயே என்னைக் களக்காட்டுப் பகுதிகளுக் குச் செய்தி எழுதப் பணித்தார் பெரியவர். ஆரம்ப காலத்தில், செய்தி எழுதும் முறை, அதிகாரி கள், அரசியல்வாதிகளிடம் அணுகுமுறை எனக்குச் சொல்லித் தந்தார். உண்மையான செய்திகள் எதுவாக இருந்தாலும், தகுந்த ஆதாரத்தோடு தாமதமின்றி எழுதவேண்டும் என்று பல விஷயங்களையும் கற்றுத் தந்தார்.
 

நாங்குனேரித் தாலுகா அனைத்தும், இராதாபுரம் தாலுகா உட்பட, ‘தினமலர்’ச் செய்திகளால் மிகவும் முன்னேறி இருக்கிறது என்றால், அதற்கு சாமி (டி.வி.ஆர்.,) காட்டிய வழிதான் காரணம்.
 

எஸ்.சரவணப் பெருமாள்

"நான் நாகர்கோவிலில் 27 ஆண்டுகளாக "தினமலர்' விற்பனையாளராக இருந்து வருகிறேன். என்னை விற்பனையாளராக நியமித்தவர் பெரியவர்தான்.

நான் ஏஜென்சி எடுத்தபோது, ‘தினமலர்’ பிரதி விலை 10 பைசா மட்டுமே.  நாஞ்சில் நாட்டு மக்களுக்கு இன்று, இன்றியமையாமல் போனது, ‘தினமலர்’ இதழ். அதிகாலையில், ‘தினமலர்’ படிக்காமல் அம்மக்களால் இருக்க முடியாது. இங்குள்ளவர்கள், ‘தினமலர்’ இதழைத் தங்கள் சொந்தப் பத்திரிகையாகவே கருதுகின்றனர்.  பெரியவர் நல்ல அறிவுரைகள் சொல்வார். அதனால், பெரும் பயனை, ஏஜென்டுகளான நாங்கள் பெற்றுள்ளோம்.
 

எஸ்.நடராஜன்

திருநெல்வேலி விற்பனையாளர் எஸ்.நடராஜன் தன் நினைவுகளைக் கூறுகிறார் :
‘சாமி (டி.வி.ஆர்.,) என்னை 1958ம் ஆண்டு விற்பனையாளராக நியமித்தார். நான் ஏஜென்சி எடுக்கும்போது, பத்திரிகை விலை ஏழு காசு. சாமி (டி.வி.ஆர்.,) தன்னை முதலாளி என்று காட்டிக் கொண்டதே இல்லை

அதன் குடும்பத்தில் ஒருவராகத் தான் பழகினார். அவரைப் பார்க்கிற நேரமெல்லாம், ‘குழந்தைகளை நன்கு படிக்கவை. நன்கு உழைத்து முன்னேற வேண்டும். உண்மையாகவும், நாட்டுப் பற்றுடனும் இருக்கவேண்டும்’ என்று கூறுவார்.
என்னைப் போல் ஏராளமானவர்கள் வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளார்.
 

ஆ.சங்கரன் பிள்ளை

திருநெல்வேலியின் முதல் ""தினமலர்' விற்பனையாளர் ஆ.சங்கரன் பிள்ளைக்கு இன்றைக்கு வயது 80 ஆகிறது. தனது அனுபவங்களைக் கூறுகையில் :
 

நான் நெல்லை டவுனில் சில கடைகளில் வேலை பார்த்து வந்தேன். அவர்கள் கொடுக்கும் சம்பளம் போதவில்லை. நானும், என் மனைவி குப்பம்மாளும் சிறு பெட்டிக்கடை வைத்தோம். அந்தக் கடையில் பத்திரிகைகள், புத்தகங்களை விற்று வந்தேன். அப்போது திருநெல்வேலிக்கு, ‘தினமலர்’ வந்தது. ‘தினமலர்’ ஏஜென்சி எடுக்க எனக்கு ஆர்வம் இருந்தது; ஆனால், டிபாசிட் கட்ட பணம் இல்லை. வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே கட்டி நான் விற்பனையாளரானேன்.
உள்ளூர்ச் செய்திகள் உடனுக்குடன் வந்தது. இதன் காரணமாக விற்பனை கூடிக்கொண்டே வந்தது. நான் பெரியவரைச் சந்திப்பேன். ‘விற்பனை நல்லபடியாகப் போகிறது’ என்பேன். ‘எல்லாம் உங்கள் உழைப்புதான்’ என்று பாராட்டுவார்.
 

எஸ்.கிருஷ்ணன்

வள்ளியூர், ‘தினமலர்’ விற்பனையாளர் எஸ்.கிருஷ்ணன் தமது நினைவுகளைக் கூறு கையில் . . .  நான் 1964ம் ஆண்டு, ‘தினமலர்’ விற்பனை யாளரானேன். அப்போது சாமி ( டி.வி.ஆர்.,) ஏஜென்சியும், ஆசியும் வழங்கியதுதான் என் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், வளத்தையும் ஏற்படுத்தியது.

குடும்பத்தில் பிரச்னை இருந்த நேரங்களில் அவரிடம் சொல்லி இருக்கிறேன். பிரச்னையைப் போக்க அவர்கள் நல்ல ஆலோ சனை கூறி இருக்கிறார். வள்ளியூரில் எங்கள் வீட்டுக்கு இரண்டு முறை வந்து இருக்கிறார். என் மகனுக்குச் சுப்பாராமன் என்று பெயர் சூட்டி இருக்கிறேன். அந்த அளவு அவர்கள் மீது மரியாதை உண்டு எங்கள் குடும்பத்துக்கு,

அப்துல் ரகீம்

‘தினமலர்’ தச்சநல்லுவரில் தொடங்கிய காலம் முதல் பாளையங் கோட்டை விற்பனையாளராக இருந்து வரும் அப்துல் ரகீம் கூறுகிறார் . . .
 


நிறுவனர் என்னிடம் அன்பாக இருந்தார். ஒரு சில நேரங்களில் நான் ஏஜென்சி பணம் கட்டத் தாமதப்பட்ட நேரத்தில், விற்பனைப் பிரிவு மேலாளர் பத்திரிகை அனுப்ப மாட்டார். அதிகாலை 3.30 மணி அளவில் கட்டை எடுக்கச் செல்லும் போதுதான் இது எனக்குத் தெரிய வரும். உடன் நான் நிறுவனர் அவர்கள் வீட்டுக்குப் போய், அதிகாலை 4 மணிக்கு அவர்களை எழுப்பி, எனது கஷ்டத்தைக் கூறி இருக்கிறேன். தூக்கத்திலிருந்து எழுப்பியதற்கு அவர்கள் கோபப்படாமல், எனது பேப்பர் கட்டைக் கொடுக்கச் சொல்லி அலுவலகத்திற்கு அனு மதிச் சீட்டு கொடுத்து இருக்கிறார். இப்படி பல உதவிகளைச் செய்து இருக்கிறார். எப்போது சந்தித்தாலும் நல்ல அறிவுரைகளைச் சொல்லு வார்.

இராமசாமிபிள்ளை

சிதம்பரனார் மாவட்டம் கோவில்பட்டி நகரின் நீண்ட கால விற்பனையாளர் இராமசாமி பிள்ளை. வாலிபராக இருந்த காலத்தில் இவர், சைக்கிளில் மெகபோன் வைத்து, இரவு 1.30 மணிக்கு அன்றைய, ‘தினமலர்’ இதழின் சுவையான தலைப்புகளைக் கூறிக்கொண்டே செல்வார். நகரில் உள்ள திரை அரங்குகளில், திரைப்படம் சில நாட்கள் இரவு 1.30 மணிக்கு முன் விட்டு விட்டாலும், ‘இராமசாமி பிள்ளை வரட்டும். பேப்பர் பார்த்து விட்டுப் போவோம்’ என்று பலர் காத்திருப்பர். ராமசாமிப் பிள்ளை கூறுகிறார் . . . ஆதியில் குடும்பப் பிரச்னைகள் காரணமாக, தாங்க முடியாத கடனில் சிக்கினேன். பிரச்னையைத் தீர்க்க முடியாமல் குடும்பத்திற்குத் தெரியாமல் தலைமறைவாக இருந்த என்னை, திருநெல்வேலிக்குக் கூட்டி வரச்செய்து, பிரச்னைகளைக்கேட்டு, அவை முழுவதையும் தீர்த்து வைத்து, எனக்கு மீண்டும் வாழ்வளித்தார். இன்று நான், பிரச்னைகள் இல்லாமல் நல்லபடியாக இருப்பதற்குக் காரணமே அவர்தான் என்று கூறினார்.
 

எம்.மீரான்பிள்ளை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1958 முதல் விற்பனையாளராக இருந்து வரும் திக்கணங் கோடு எம்.மீரான் பிள்ளை கூறுகிறார் . . .


பெரியவர் டி.வி.ஆர்., 1959ல் என்னை குளச்சல் பகுதியின் விற்பனையாளராக நிய மித்து, முதலாவதாக ஐம்பது பேப்பர் கொடுத் தார். முதல் இரண்டு மாதங்கள் அனுப்பிய பேப்பருக்குப் பணம் வேண்டாம் என்று கூறி, அதையே என் டிபாசிட் கணக்கில் வைத்துக் கொண்டார்.
 

திருநெல்வேலி செல்லும்போதெல்லாம் நான் அவர்களைச் சந்திப்பேன். அப்போது திருநெல்வேலி - நாகர்கோவிலுக்கு பஸ் கட்டணம் இரண்டு ரூபாய் பத்து காசுதான். ஆனால், நான் அவர்களைப் பார்க்கும் போதெல்லாம், ‘பஸ் சார்சுக்கு இதை வைத்துக் கொள்’ என, பத்து ரூபாய் கொடுப்பார். அன்றைக்குப் பத்து ரூபாய் ரொம்பப் பெரிய தொகை. அவரது அன்பான அரவணைப்பே எங்கள் வளர்ச்சிக்குக் காரணம்.

ஏ.நல்லசிவன்

அம்பாசமுத்திரத்தில் நீண்ட காலமாக விற்பனையாளராகப் பணியாற்றி வரும் ஏ.நல்லசிவன் கூறுகிறார்:

அம்பாசமுத்திரத்தில் நீண்ட காலமாக விற்பனையாளராகப் பணியாற்றி வரும் ஏ.நல்லசிவன் கூறுகிறார் . . .
நான் அந்தக் காலத்தில் அம்பையில் ஒரு சிறு புத்தகக் கடை நடத்தி வந்தேன். ‘தினமலர்’ இதழில் ஒரு விற்பனையாளரை அம்பாசமுத்திரத் திற்கு நியமிக்க எண்ணுகிறார்கள் என்பதைக் கேள்விப்பட்டு, நான் அந்த ஏஜென்சி எடுப்பதற் காக, திருநெல்வேலி சென்று பெரியவரைச் (டி.வி.ஆர்.,) சந்தித்தேன். விற்பனையாளராக மட்டுமல்லாது, நிருபராகவும் என்னை நியமித்தார்.


அம்பாசமுத்திரம், தாமிரபரணி ஆற்றின் அடிக்கால் ஆகும்; சிறந்த விவசாயப் பகுதி. ஆகவே, மழை பெய்து தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருகுவதைக் கவனித்து, அது பற்றியும், அணை களின் நீர்மட்டம், அணைகள் திறக்கப்படும் நேரம், வயல்களின் விளைச்சல், அவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு இவை பற்றியெல்லாம் விரிவாகச் செய்தி எழுதச் சொன்னார். வட்டாரக் கல்வி நிலைகள் பற்றியும் விசாரிப்பார். பெரியவருக்கு ஒவ்வொரு பகுதி பற்றியும் நன்கு தெரியும். அதுவே அவரது பத்திரிகையில் வளர்ச்சிக்குக் காரணமாயிற்று என நான் நினைக்கிறேன்.
 

தமிழரசன்

பெரியவர் டி.வி.ஆரின் கீழ் நீண்ட காலம் பயிற்சி பெற்று, கோவில்பட்டி நகரில் நிருபராக பணியாற்றிய பெருமை எனக்குண்டு. நிறையவே சம்பவங்களைக் கூற முடியும். தி.மு.க.,வில் இருந்து எம்.ஜி.ஆர்., விலகிய உடன், சென்னையில், அப்போது, ‘தினமலர்’ நிருபராகப் பணியாற்றிய, காலஞ்சென்ற ராஜாராமிற்கு உதவியாக நான் அனுப்பப் பட்டேன்.
 

சென்னைக்கு அனுப்ப முடிவு செய்த உடன், பெரியவர் என்னை நெல்லைக்கு அழைத்துக் கூறிய அறிவுரைகள் இன்றைக்கும் பசுமையாக என் நினைவில் உள்ளது. அவர்கள் கூறினார்கள்... ‘எம்.ஜி.ஆர்., புகழ் பெற்ற சினிமா நட்சத்திரம். லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அவர் மீது உயிரையே வைத்துள்ளனர். அவரது செய்திகளை நீ சேகரிக்க சென்னைக்குப் போகிறாய். சினிமா உலகம் பணம் மற்றும் பல வழிகளில் தாராளமாக உள்ள உலகம். மிக எளிதில் பலரை வசமாக்கப் பல வழிகள் அவர்களுக்குத் தெரியும். எம்.ஜி.ஆருக்கு இதுவெல்லாம் பிடிக்காமலிருக்கலாம். கூட இருப்பவர்கள் தம் வலைக்குள் உன்னை இழுத்துப் போட்டுக் கொள்ள நினைக்கலாம். எந்தவித ஆசைக்கும் அடிபணியாமல் மிக நேர்மையாக நடத்து கொள்ளவேண்டும். உன் மீது ஒரு புகார் வந்தாலும் அது, ‘தினமலர்’ மீது வந்த புகாராகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். மிக எச்சரிக்கையாக நடந்து கொள்’ என்று கூறி அனுப்பினார்கள்.
எம்.ஜி.ஆர்., என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் அளவில் மிக நெருக்கமாகப் பழகினேன்.


ஒரு நாள் அவருடன் வேனில் பேசிக்கொண்டு சுற்றுப் பயணம் செய்தபோது, உடனிருந்த நல்லதம்பி, ‘புரட்சித் தலைவர் செய்தி களைப்போட்டு ‘தினமலர்’ ஓகோ என உயர்ந்துவிட்டது’ என்று கூறினார். இதைக்கேட்ட எம்.ஜி.ஆர்., ‘அப்படிக் கூறுவது சரியில்லை. நமக்குத் தென் தமிழ்நாட்டில்தான் இப்போது மிகுந்த செல்வாக்கு. தென் தமிழ்நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த பத்திரிகை, ‘தினமலர்’ தான். மற்றப் பத்திரிகைகள், ‘நடிகன் கட்சி’ என்று எழுதும் போது, நம்மை முதலில் ஒரு அரசியல் கட்சியாக ஏற்று, ‘தினமலர்’ முழு மூச்சுடன் பிரசாரம் செய்து வருவதால்தான், தென் தமிழ்நாட்டில் நமக்கு பெரும் செல்வாக்கு பெருகி உள்ளது. நம்மாலும் அவர்களுக்கு செல்வாக்கு கூடி இருக்கலாம். நம்மால்தான், ‘தினமலர்’ புகழ் கூடியதாகக் கூறுவது ஒரு பத்திரிகையைப் பற்றி தெரியாமல் விமர்ச்சிப்பதாகும். இனி அப்படிக்கூற மாட்டீர்கள் என்று நினைக் கிறேன்’ என, நல்ல தம்பியிடம் கூறினார். எந்த சிறு பிரதி உதவிகளையும் ஏற்காமல் எம்.ஜி.ஆர்., பற்றி மிகச் சிறப்பாக, ‘தினமலர்’ செய்திகள் வெளியிட்டதில், எம்.ஜி.ஆருக்கு, ‘தினமலர்’ மீது, அளவு கடந்த மதிப்பை உருவாக்கி இருந்தது.


குலசேகரன்

தூத்துகுடியின் நீண்டகால விற்பனையாளர் குலசேகரன் கூறுகையில் . . .


தூத்துகுடியில் பேப்பர் போடும் சாதாரண பையனாக இருந்த நான் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு ஒரு காரணம் டி.வி.ஆரின் யோசனைகளை அப்படியே கேட்டு, அதன்படி நடந்து வந்ததுதான். ஏராளமான சம்பவங்கள் நினைவுக்கு வந்தாலும் ஒரு சிலவற்றைக் கூறலாம் என நினைக்கிறேன். என் பெயருக்கு ஏஜென்சி போடும்போது, என்னிடம் பண வசதி இல்லாததால் மிகச் சொற்பமான பணமே டெபாசிட்டாக கட்டி இருந்தேன். இது ஆபீஸ் நிர்வாகத்தில் பல பிரச்னைகளை உருவாக்கி இருந்தது. பலர் இந்த சலுகையை ஆட்சேபித்தனர். பிரச்னை பெரியவரிடம் சென்றபோது, ‘மாதா மாதம் அவன் கமிஷனின் ஒரு தொகையைப் பிடித்துக் கொள்; அவன் கடுமையான உழைப்பாளி’ என்று கூறி விட்டார். நான் ஆரம்பத்தில் கட்டிய டெபாசிட் 300 ரூபாய் தான். இது இன்று சில லட்சங்களாகி உள்ளது. ஒருவனைப் பார்த்ததும் எடை போடுவதில் அவருக்கு நிகர் அவரேதான்.
நான் என் உழைப்பில் பணம் சேர்த்து ஒரு சிறுவயல் வாங்கினேன். சொத்து வாங்கிய பத்திரத்தை பெரியவரிடம் கொடுத்து, அவரிடம் ஆசியும் பெற்றுக்கொள்வதற்காக நெல்லை சென்று பத்திரத்தை அவரிடம் கொடுத்தேன். சிக்கனமாக இருந்து நான் வயல் வாங்கியதில் அவருக்குப் பெருமகிழ்ச்சி. ஆசியுடன் பத்திரத்தை கொடுத்து என்னிடம் கூறினார் . . . ‘நீ இருப்பதோ தூத்துகுடியில்; வயலோ இருபது மைல் தள்ளி உள்ளது. இன்றைய நிலையில் தினம் இருபது மைல் போய்ப் பார்த்து விவசாயம் செய்ய முடியாது. நஷ்டமும், மனக் கஷ்டமும்தான் வரும். முதலில் இதை விற்றுவிட்டு, துவத்துக்குடியில் ஏதாவது வாங்கிக் கொள்’ என்றார்.


எனக்கு அதிர்ச்சி. கொஞ்சநாள் அவரது அறிவுரையை ஒத்திவைத்து, விவசாயம் செய்தேன். சரியாக கையைச் சுட்டுக் கொண்ட பின், நிலத்தை விற்று நிம்மதி பெற்றேன்.  ஒருவன் நிலம் வாங்கிய அன்றே அது சரியாக வராது என்று கூறுவதற்கு தனி தைரியம் வேண்டும். இதுதான் எங்கள் முதலாளி டி.வி.ஆரின் விசேஷ குணம். சிக்கன விஷயத்தில் சாமியின் கொள்கை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை நான் இன்றும் கடைப்பிடித்து வருகிறேன். மற்றொரு அபூர்வமான குணம் . . . சாதாரணமான எங்களிடமெல் லாம் கூட யோசனைகள் கேட்கத் தவற மாட்டார். அதில் நல்லது என்று தனக்குப் பிடித்ததை உடனே அமலுக்கும் கொண்டு வருவார். அவர் உருவாக்கியது, ‘தினமலர்‘ பத்திரிகையை மட்டுமல்ல . . . மிகச் சாதாரணமான, ஆங்கிலக் கல்வி பெரிதும் இல்லாத என்னையும், என்போன்ற பலரையும் தான்.


நாங்கள் அறிந்த டி.வி.ஆர்.,


டி.வி.ஆரின் தோற்றம், பழக்க வழக்கங்கள், அவரது தனித்தன்மைகள் இவற்றைப் பற்றி அவருடன் நெருக்கமாக இருந்த பலர், பல கோணங் களில் விமர்சித்துள்ளனர். தியாகி சிவதாணு: இரயில்வே இணைப்பின் தலைவராக டி.வி.ஆர்., இருந்தார். பொது மக்களிடமிருந்து நிதி வசூலிப்பதை அவர் விரும்ப வில்லை. இரயில் வரும் வரை ஆகும் செலவுகளைத் தனது சொந்த பணத்திலிருந்து ஏராளமாகச் செலவழித்துக் கொண்டிருந்தார். டி.வி.ஆரின் குடும்ப நலனில் அக்கறை கொண்டவன் என்ற முறை யில், பொறுக்காமல் அவரிடம் கேட்டே விட்டேன்.


அதற்கு டி.வி.ஆர்., சொன்னார் . . . ‘கடவுள், ஒவ்வொருவனுக்கும் மூளையும், செயலாற்றும் அறிவையும் கொடுத்துள்ளான். அதை நேர்மையாகச் செயல்படுத்தினால் பணம் வரும். அந்த பணத்தை நாம் மக்களிடமிருந்துதான் பெறுகிறோம். நம்மைச் சுற்றி உள்ள மக்கள் நன்றாகச் செழிப்பாக இருந்தால்தான் நாடும், நாமும் நிம்மதியாக இருக்க முடியும். ஒரு பொதுக் காரியத்தில் ஈடுபடும் பொழுது, அதில் ஏதாவது நல்ல பெயர் வருமானால் அதைக் கேட்டு என் குழந்தைகள் சந்தோஷப்படுவர். ஊரில் வசூலித்து அரசாங்கம் அந்தக் காரியத்தைச் செய்யாமல் விட்டு விடுமானால், ‘வசூல் பண்ணி வாயில் போட்டுக்கொண்டான்’ என்று ஊர் துபற்றும். அந்த அவச்சொல் பின்னர் என் குழந்தைகள் மனத்தைப் புண்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு தகப்பனாக இருக்க நான் விரும்ப வில்லை. நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறேன். இதை செலவு பண்ண எனக்கு உரிமையுண்டு. இதன் பலன் கெட்டதாக இருக்கு மானால், என் சந்ததியரின் பிற்கால வாழ்வைப் பாதித்துவிடும். அதை நான் விரும்பவில்லைறீ என்று சர்வ சாதாரணமாகக் கூறி விட்டார்.


வெ.நாராயணன்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் டி.வி.ஆர்., பற்றிக் குறிப்பிடுகையில், சாமி, மாப்பிள்ளை சாமி, என்று கூறுவதன் பொருள் பற்றி கேட்டபோது, வெ.நாரதயணன் கூறினார் . . .


இவரது முறையான பெயர் டி.வி.ராமசுப்பையர். ‘டி’ என்பது நாகர்கோவில் நகரத்தின் வடகோடியில் சுமார் இரண்டு மைல் துபரத்திலிருக்கும் தழியல் மகாதேவர் கோவில் கிராமத்தைக் குறிப்பிடுகிறது. ‘வி’ என்பது அவரது ஸ்வீகாரத் தந்தை வெங்கிடபதி ஐயரைக் குறிப்பிடுகிறது. ‘ராமசுப்பன்’ என்பது அந்த வெங்கிடபதி ஐயரின் அண்ணாவான இவரது தாயின் தகப்பனாரைக் குறிப்பிடுகிறது. இவர், தனது இளைய தாத்தா விற்கு சுவீகாரமாய் வந்தவர். இசையில் இவருக்கு நல்ல ஞானம் உண்டு. பாடுகிறவர்கள் பாட்டையெல்லாம் ஒத்துக் கொள்ளக் கூடியவரல்ல. இவர் பல சமயம் பாடிக் கேட்டிருக் கிறேன். தமிழும், இசையும் அள வோடு இணைந்து பாவ உணர்ச்சி யோடு இருக்கும். இன்னும் தெளி வாகச் சொல்வதென்றால் தண்ட பாணி தேசிகர், மாரியப்ப சுவாமி கள் பாணி என்று சொல்லலாம்.

ஆர்.வீரபத்திரன் செட்டியார்: கேரளப் பல்கலைக்கழக முன் னாள் தமிழ்த்துறைத் தலைவர் வீரபத்திரன் செட்டியார் கூறு கையில் . . .


அவருக்குக் கோபம் வந்து நான் பார்த்ததில்லை. மிகவும் எளிமை யாக இருப்பார். எதையும் செயல் படுத்தும் ஆற்றல் அவருக்கு உண்டு. தமிழ் மக்களின் நாடி ஓட்டத்தைப் புரிந்துகொண்டவர். நல்ல சிரித்த முகம். யார் மனமும் புண்படும்படி பேசவோ, எழு தவோ செய்யாத பெரிய பத்திரி கையாளர் அவர் என்றார்.

முன்னாள் நீதிபதி சங்கர நாராயண ஐயர்: டி.வி.ஆர்., உண்மை, நேர்மை, கடும் உழைப்பு இதற்கு இலக்கணமாக விளங்கிய வர். அவரது ஒவ்வொரு செயலுக்கும் தனி முத்திரை உண்டு.


குழந்தைசாமி: டி.வி.ஆர்., ஜாதி நோக்கிலிருந்து விடுபட்டுச் சம நோக்கில் மக்களைப் பார்த்தார். இன்னும் சொல்லப் போனால், அவரை, ‘அண்ணா’ என்றுதான் நான் அழைப்பேன். சந்தோஷமாக அதை அவர் ஏற்றார். சுடுசொல் என்பதே அவரிடம் வராது. பழி வாங்கும் உணர்வு அவரை அண்டியதே இல்லை.


பணத் தேவை உள்ளவர்களை அவருக்குத் தெரியும். இரகசியமாக தானே அதைப் பூர்த்தி செய்து வைப்பது அவரிடம் உள்ள விசேட குணம். குமரி மாவட்டத்தில் பல பொதுக் காரியங்களுக்கு அவரது பணம் தாராளமாகச் செலவாகி இருக்கிறது; அது வெளியில் தெரியாது. கன்னியாகுமரி மாவட்டம் தாய்த் தமிழகத்துடன் இணையும் போராட்டத்தில் இரண்டு பேரின் பணம் தாராளமாகச் செலவாகி உள்ளது. ஒருவர், டி.வி.ஆர்., மற்றொருவர், என்.எஸ். கிருஷ்ணன். நேரில் தெரிந்தவனாதலால் என்னால் இதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.


டி.எஸ்.ராமசாமி


நான் தொழிலாளர்கள் சார்பில் கோரிக்கைகள் வைத்துப் போராடும் தொழிற்சங்க அரசியல்வாதி. உண்மையில் என் போன்றுள்ளவர்களை ராமசுப்பையர் வெறுத்திருக்க வேண்டும்; அதுதான் இயல்பு. ஆனால், டி.வி.ஆர்., இதில் மாறுபட்டே இருந்தார். ‘ஒரு கொள்கையின் கீழ் நின்று நியாயமாகப் போராடுகிறவன் இவன்’ என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். தனிப்பட்ட முறையில் கருத்து வேற்றுமைகள் இருக்கலாம்; அது வேறு விஷயம். எதிரிகளுக்கு மதிப்புத் தந்து கவுரவித்த அவரது ஜனநாயக உணர்வு இன்றைக்கும் எனக்கு வியப்பைத் தருகிறது. அவர் ஒரு நல்ல நண்பர். குடும்பத்தில் ஒரு நல்ல தகப்பன். விவசாயி, தொழில் அதிபர், நல்ல வர்த்தகர். எல்லாவற்றையும் விட, அவர் சிறந்த பத்திரிகையாளர். எந்தச் சபலங்களும் அண்டாத பெரும் நெருப்பு. நல்ல கனவுகள் காணும் அபூர்வ மனிதர்.


மாரயக்குட்டிப் பிள்ளை


அவர் பெரும் பேச்சாளர் அல்ல. ஆனால், மிக அதிகமாக விஷயங்கள் அவருக்குத் தெரியும். தனக்கு நியாயம் என்று பட்டதைத் தைரியமாகச் சொல்ல அவர் தயங்கியதே இல்லை. தன்னிடம் உள்ள சக்தியால் ஒருவனை அட்ரஸ் இல்லாமல் ஆக்குதல் என்பதை அவர் செய்ததே இல்லை. தன்னைப் பகைத்துக் கொண்டவரும் கூட நேரில் பார்த்துப் பேசி விட்டால் உடனே மன்னித்து அவரைத் தன்வசமாக்கிக் கொள்ளும் மிகப் பெரிய மனது அவரிடம் இருந்தது.
பழமையான வைதீக மனப்பான்மை அவரிடம் கிடையாது. பெரும் பெரும் சீர்திருத்தவாதிகள் செய்யாததை எல்லாம் அவர் செய்து முடித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் ஜாதி, மதம் எதுவும் பாராமல் உடனே உதவ வேண்டுமென்பது அவரது கொள்கை.


சுந்தர ராமசாமி


வியாபாரி, தொழில் அதிபர், அரசியல்வாதி, பெரிய படிப்பாளி. யாருடனும் அவர் விவாதம் செய்வார். அப்போதெல்லாம் தன்னை விட தன்முன் உட்கார்ந்து பேசுகிறவனுக்கு ஏதோ சில புதிய விஷயங்கள் தெரியும் என்று முழு நம்பிக்கையுடன் காத்திருப்பார். தனது மேதாவிலாசங்களை மற்றவர்க்குக் காட்டுவதை விட, அவரிடம் இருந்து தனக்குத் தெரியாத ஒன்றைக் கற்றுக்கொள்ளவே ஆசைப் படுவார். கண்டிப்பதை விடத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது தான் சிறந்தது என்பது அவரது நடைமுறை. அவர் தனக்கும் தன் கொள்கைகளுக்கும் எதிரான ஆட்களைப் பற்றி விமர்சித்து நான் கேட்டதில்லை.


சங்கீதத்தில், அதுவும் கர்நாடக சங்கீதத்தில் நல்ல ஈடுபாடு டி.வி.ஆருக்கு உண்டு. அந்தக் காலத்தில் செம்பை வைத்தியநாத பாகவதர் பிரபலமானவர். அப்போது ஜி.என்.பி., (ஜி.என்.பாலசுப்பிர மணியம்) பாட வந்த நேரம். இவ்விருவரையும் தொடர்ந்து கேட்ட டி.வி.ஆர்., ‘பிரமாதமாக வரப்போகிறார் ஜி.என்.பாலசுப்ரமணியம்’ என்பார். டி.வி.ஆருக்கு மதுரை மணி, அரியக்குடி இருவரையும் பிடிக்கும். எந்தக் கச்சேரியிலும் முன் வரிசையில் அவர் உட்கார்ந் திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கதா காலட்சேபங்கள் தொடர்ச்சியாக பல நாட்கள் நடைபெற்றாலும் விடாமல் போய்க் கேட்பது அவரது வழக்கம். கிருபானந்த வாரியார், எம்பார் விஜய நாகவாச்சாரியர் என்றால் நிச்சயம் அவர்கள் நிகழ்ச்சிக்குப் போகத் தவற மாட்டார்.


துரைசாமி நாடார்


பெரியவர் கணக்கான ஆள்தான். பைசாவுக்குக் கூட கணக்குப் பார்ப்பார். ஆனால், தனக்கு ஒன்று சரி என்று பட்டாலும், அது மக்களுக்குப் பயன்படக்கூடியது என்று உணர்ந்து கொண்டாலும் அப்புறம் அவர் பணம் மடை திறந்து விடப்பட்டதாகவே இருக்கும். ஆனால், அது ஒரு கொள்கைக்காக இருக்கும். ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன் தீவிரமாக யோசிப்பார்; பலரிடம் அபிப்பிராயம் கேட்பார். காரியத்தில் இறங்கி விட்டால் கடவுளேயானாலும் அவரைத் தடுத்து நிறுத்த முடியாது.


டாக்டர் கேசவப்பிள்ளை


எந்த விஷயமானாலும் அதை நிதானமாகத் தெளிவாக அவரால் விளக்க முடியும். ஒரு விஷயம் அதுவும் அவருக்குத் தெரியாததைப் பற்றிக் கேட்டுவிட்டால் கூச்சப்படாமல், ‘இது விஷயமாக அதிகமாக எனக்கு எதுவும் தெரியாது; யாரிடமாவது கேட்டு முழு விபரமும் கூறுகிறேன்’ என்பார்; அதே போலச் செய்யவும் செய்வார். அவரால் பல பெரிய விவாதங்களில் கலந்து கொண்டு வாதாட முடியும். நிறையப் படிப்பார். அவசியமில்லாமல் பேச மாட்டார். உண்மையானவர்களிடம் மிகவும் வாஞ்சையுடன் பழகுவார்.


வி.ஐ.சுப்பிரமணியம்


தனக்கு வேண்டிய எவ்வளவு பெரிய மனிதரானாலும், அவரது செயல் தேசத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கருதினால், தயங்காமல் உடனே கண்டிக்கும் துணிவு அவரிடமிருந்தது. சிறந்த சிந்தனையுள்ள தேச பக்தர். அவர் ஒரு நல்ல நிர்வாகி. அவரை ஏமாற்றுவது நடக்காத காரியம். காலத்திற்குத் தக்கபடி மாறிக் கொண்டு போக அவர் தயங்கியதே இல்லை. பழமை என்பதற்காக எதையும் கட்டிக் காப்பது என்பதை அவர் ஏற்றுக் கொண்டதே இல்லை.


Advertisement