நல்லதொரு குடும்பம்


குடும்பம் என்பது, அதுவும் நல்லதொரு குடும்பம் என்பது குடும்பத் தலைவனது வெற்றி, புகழ் இவற்றோடு நின்று விடுவதில்லை. மனைவி, குழந்தைகள் எல்லாரது ஒத்துழைப்பிலும்தான் நிறைவு பெற்றதாகும். ஒருவரது குடும்ப வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ளாமல் அவரது வாழ்க்கையைச் சரியாக மதிப்பிடுவது எளிதல்ல. இந்த சூழ்நிலையில், டி.வி.ஆரது மனைவியான, திருமதி கிருஷ்ணம்மாளை அணுகிய போது, மனமுவந்து சில தகவல்களை தந்தார்கள். அவை ஒரு பேட்டி வடிவத்தில் அமைந்துள்ளதால் அதை அப்படியே தருகிறோம் . . .

திருமதி டி.வி.ஆர்.,

கேள்வி: உங்கள் தந்தையார் டி.வி.கிருஷ்ணய்யர் அன்றைக்கு மிகப்பெரும் பணக்காரர். தனது ஒரே மகளான உங்களைத் தனது பொருளாதாரத்திற்குச் சமமாக இல்லாத டி.வி.ஆருக்குத் திருமணம் செய்து வைக்க ஏதாவது காரணம் இருந்ததா?

திருமதி டி.வி.ஆர்.,: டி.விஆரைக் குழந்தைப் பருவ முதல், பள்ளிப் பருவம் வரை நன்கு கவனித்தே வந்திருக்கிறார் என் அப்பா. அன்றைக்கு அந்த வட்டாரத்திலேயே மகா புத்திசாலி டி.வி.ஆர்., தான். விளையாட்டுக்களிலும், நீச்சலிலும் அவர்தான் முதல். யாருடனும் சண்டைக்கு போகமாட்டார். மிகவும் நேர்மையானவர். கணக்குப் பாடத்தில் அவரே மிகச் சிறப்பாகப் பேசப்பட்டார். நாங்கள் எல்லாம் ஒரே ஊர். நெருங்கிய சொந்தம். அவர் சிறு குழந்தையாக இருக்கும் போதே என் கூடப் பிறந்த தம்பியைக் கூட தூக்கி மடியில் வைத்துக் கொள்ளாத என் அப்பா, இந்தக் குழந்தையை எப்போதும் மடியில் வைத்துக் கொஞ்சுவாராம். பின்னர் அவருடைய அறிவு வளர்ச்சியைக் கண்டு என்னை அவருக்கே மணம் முடிப்பது என்ற முடிவுக்கு வந்தார். அவருக்கு 11 வயது, எனக்கு 7 வயது. மிகவும் பிரமாதமான முறையில் ஐந்து நாள் கல்யாணம் நடந்தது.

என் தந்தையாருக்கு உப்பளங்கள் ஏராளம் உண்டு. வரவு செலவு ஏராளம். அவருக்கு உடல் நலம் குன்றியது. எல்லாப் பொறுப்புக்களும் இவருக்குத் தான்.

உடல் நலம் தேறி இனி நிர்வாகத்தை நடத்த முடியும் என்று கூட என் அப்பாவுக்குத் தோன்றவில்லை. எல்லாவற்றையுமே மாப்பிள்ளையிடம் ஒப்படைத்தார். டி.வி.ஆர்., மிகச் சிறந்த நிர்வாகி. உப்பளத் தொழில், அதன் விற்பனை, ஏற்றுமதி, எல்லாம் மிகச் சீராக நடத்தினார். இவர் செய்ததை, "ஏன்? என்று என் அப்பா ஒரு நாளும் கேட்டதில்லை. இவரது திறமையில் அத்தனை நம்பிக்கை. அதைவிட டி.வி.ஆரிடம் இருந்த தனிக்குணம் அப்பழுக்கே பார்க்க முடியாது. அவரை ஊரே நம்பும் போது, என் அப்பா நம்பி எல்லாவற்றையும் ஒப்படைத்ததில் அதிசயப்பட ஒன்றுமில்லை. நான் ஒரே பெண். நான் அப்பா வீட்டிலும், டி.வி.ஆர்., வீட்டிலுமாக மாறி மாறி இருந்து வந்தேன். பின்னர் எங்களுக்குத் தனி வீடு வாங்கி அதில் அப்பா எங்களைக் குடியேற வைத்தார். என் ஆண், பெண் குழந்தைகள் பிரசவத்திற்கு எல்லாம் அப்பாதான் செலவு செய்வார். நாளாக நாளாக டி.வி.ஆர்., மீது அவருக்கு ரொம்ப இஷ்டம். ரொம்பப் பிரமாதமாக வருவார் என்று முழுக்க நம்பினார். அவருக்கு 35 வயது வரை அப்படித் தான் இருந்தது. அப்புறம் என் அப்பா மீது ஏதோ மன வருத்தத்தால் என் அப்பாவின் போக்கு சில பிடிக்காமல் அவரை விட்டு விலகினார். டி.வி.ஆருடன் நானும் அப்பாவின் தொடர்பை விட்டு விட்டு வந்துவிட்டேன். என் அப்பாவைப் பற்றி நான் பின்னர் நினைத்ததே இல்லை.

என்னுடைய ஐந்து பையன்களும் நாகர்கோவில் எஸ்.எல்.பி.,யில் தான் படித்தனர். பின்னர் காரைக்குடி அழகப்பா, சென்னை இங்கெல்லாம் கல்வி பயின்றனர்.

குழந்தைகள் என் படிக்கிறார்கள்? எப்படிப் படிக்கிறார்கள்? என்று அவர் (டி.வி.ஆர்.,) கேட்டதே இல்லை. அதைச் செய், இதைச் செய் என்றும் கூறியதில்லை. ஒரு நாள் கோபித்தது இல்லை. குழந்தைகளும் கடுமையாகப் படித்துக் கல்லூரியில் முதல் மாணவர்களாக வந்தனர். அதெல்லாம் அவருக்குத் தெரியும். இதற்காக என்னிடம் கூடப் பெருமையாக எதுவும் சொன்னதில்லை. அவருக்கு ஏகப்பட்ட பொது வேலைகள். என்னென்ன பொதுக் காரியங்களில் ஈடுபட்டுள்ளேன், எவ்வளவு பணம் செலவு செய்தேன் என்பதைப் பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடமோ, வேறு யாரிடமோ அவர் சொன்னதே இல்லை. நாங்களும் யாரும் அவரைக் கேட்டதும் இல்லை. யார் விஷயத்திலும் அவர் தலையிட்டதும் இல்லை. அவர் விஷயத்திலும் யாரும் தலையிட்டது இல்லை.

குழந்தைப் பருவம், பள்ளிப் பருவ காலங்களிலிலேயே அவர் அப்பழுக்கில்லாதவர், மகா புத்திசாலி என்று எல்லாருக்கும் தெரியும். ஆகவே, அவர் எது செய்தாலும் ரொம்ப யோசித்து சரியானதைத்தான் செய்வார் என்ற காரணத்தால் நிம்மதியாக இருந்தோம்.

அரிஜனங்கள் மீது ரொம்பப் பிரியமும், அனுதாபமும் அவருக்குண்டு. அவர்கள் படித்து முன்னுக்கு வர வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அன்றைக்கு கல்வி இலாகா டைரக்டர் ஏ.என்.தம்பியும், இவருமாகச் சேர்ந்து ஊர் ஊருக்குப் பள்ளிக்கூடம் உருவாக்கி வந்தார்கள். ஏ.என்.தம்பி ராஜ குடும்பம். அவர் தனது மனைவியுடன் பலமுறை எங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டுள்ளார். படித்த அநேக அரிஜனப் பையன்களுக்கு ஏ.என்.தம்பியிடம் கூறி, வேலை வாங்கித் தந்துள்ளார். இதுகூட ஏ.என்.தம்பியின் மனைவி மூலம் எனக்குத் தெரிந்தது தான்.

கேள்வி: திருவனந்தபுரத்தில் "தினமலர்'ப் பத்திரிக்கை தொடங்கப்பட்ட போதாவது அதுபற்றி உங்களிடம் ஏதாவது கூறியது உண்டா?

திருமதி டி.வி.ஆர்.,: தெரியும். ஆனால் அதைப் பற்றியும் அவர் எதுவும் என்னிடம் சொன்னதில்லை.

கேள்வி: திருவனந்தபுரம் "தினமலர்' பத்திரிக்கை மூலம் ஏராளமான நஷ்டம்தானே வந்தது?

திருமதி டி.வி.ஆர்.,: நஷ்டம் என்று அவர் ஒரு நாளும் சொன்னதே இல்லை. கவலைப்பட்டதும் இல்லை. அவர் தன்னால் இதைச் சரி செய்து கொள்ள முடியும் என்று மனத்திற்கும் ஒரு முடிவுக்கு வந்து விட்டால் நஷ்டம் என்று முதலில் எதையும் கருத மாட்டார்.

கேள்வி: திருவனந்தபுரத்தில் அன்றைய முதன் மந்திரி பட்டம் தாணுப்பிள்ளையின் மூலம் பெரிய நெருக்கடிகள் வந்ததே? கோர்ட்டுக்கூட டி.வி.ஆரை இழுத்தடித்தார்கள். அவரை ஜெயிலில் தள்ளக்கூட முயற்சிகள் நடைபெற்றுள்ளன. இவை பற்றியாவது என்றாவது கவலைப்பட்டுக் கூறி உள்ளார்களா?

திருமதி டி.வி.ஆர்.,: இல்லை. தனக்கு யாராலும் எந்த விதமான ஆபத்தும் விளைவிக்க முடியாது என்ற நம்பிக்கை எப்போதும் அவருக்குண்டு. "வரட்டுமே, பார்த்துக் கொள்ளலாம்' என்று இருப்பாரே தவிர அதுபற்றியெல்லாம் கொஞ்சம் கூட வீட்டில் காட்டிக்கொள்ள மாட்டார். ஆனால், ஒன்றைப் பற்றி மட்டும் என்னிடம் அவர சொல்லி இருக்கிறார். பட்டம் தாணுப்பிள்ளை ஆட்சியில் நாஞ்சில் நாட்டுத் தமிழ் மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். தாங்க முடியாத துன்பம் கொடுக்கிறார். அவர்கள் தமிழ்நாட்டுடன் சேர்ந்தால்தான் அவர்களுக்கு நிம்மதி என்று நாஞ்சில் நாட்டு மக்கள்படும் கஷ்டங்கள் பற்றி மட்டும் சொல்லி இருக்கிறார். இதைச் சொல்லும்போது கூட தனக்கு எதுவும் கஷ்டம் என்று அவர் சொல்லி நான் கேட்டதில்லை.

கேள்வி: உங்களுடைய குமாரர்கள் கல்லூரிப் படிப்பில் முன்னணியில் வந்துள்ளார்கள். அன்றைக்கு டி.வி.ஆருக்கு இருந்த செல்வாக்கில் அவர் நினைத்திருந்தால், தனது குமாரர்களுக்குப் பெரிய அரசாங்க உத்தியோகங்கள் வாங்கிக் கொடுத்திருக்க முடியும். அவர்களையும் இந்தப் பேப்பர் தொழிலில் ஈடுபட வைத்தது அன்றைக்கு உங்களுக்கு சரியென்று தோன்றியதா? நீங்கள் அப்போது என்ன கருதினீர்கள்?

திருமதி டி.வி.ஆர்.,: நான் பிள்ளைகளின் வேலை விஷயமாக அவரிடம் பேசியதில்லை. கிருஷ்ணமூர்த்தி (இன்றைய "தினமலர்' ஆசிரியர்) இரண்டு ஸ்டேட் பஸ்ட் பெற்றான். எங்கப்பா திருவனந்தபுரம் மெடிக்கல் காலேஜிற்கு அன்றைக்கே நிறைய நன்கொடை கொடுத்திருந்தார். இவருக்கு (டி.வி.ஆருக்கு) இருந்த செல்வாக்கில் நினைத்திருந்தால் மெடிக்கல் காலேஜில் சேர்த்திருக்கலாம். ஆனால், இதை நான் இப்போது கூறுகிறேனே தவிர இதுபோல ஓர் எண்ணம் எனக்கு இருந்தது என்று அவரிடம் கூறியதில்லை.

கேள்வி: உங்கள் கருத்தை அவரிடம் கூற உங்களுக்குப் பயமா?

திருதி டி.வி.ஆர்.,: பயமா! அவரைக் கண்டு நான் என்றைக்குமே பயந்ததில்லை. 60 ஆண்டுகள் கூடவே இருத்திருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாகவே இருந்தோம். கவலைப்படும் எந்த ஒரு தகவலையும் அவர் வீட்டிற்கு வந்து சொன்னதே இல்லை. அதை அவர் வெளியில் யாரிடமாவது சொல்லி இருந்தால் என் காதுக்கு வந்திருக்கும். அப்படி சொல்லும் பழக்கமும் இருந்ததில்லை. எதுவானாலும் அவர் மனதுக்குள் தான் போட்டு வைத்திருப்பார். ஒருநாள் கூட என்னைக் கடிந்து எதுவும் சொன்னதில்லை. அப்புறம் பயம் எப்படி வரும்? நான் இந்தப் பேச்சை எடுக்காமல் போனதற்குக் காரணம் உண்டு!.

கேள்வி: பிள்ளைகள் திருமண விஷயம் பற்றியாவது உங்களுடன் நிச்சயம் கலந்து பேசித்தானே ஒரு முடிவு எடுத்திருப்பார்?

திருமதி டி.வி.ஆர்.,: அதுவும் கிடையாது.

கேள்வி: என்ன இது நீங்கள் சொல்வது நம்பும்படியாக இல்லையே?

திருதி டி.வி.ஆர்.,: கல்யாண விஷயத்தில் அவர் போக்கே தனி. அவருக்கு ஜாதகங்களில் நம்பிக்கை கிடையாது. ஒரு கல்யாணத்திற்கும் ஜாதகம் பார்த்ததே இல்லை. வரதட்சணை கேட்டதும் இல்லை. வீட்டுக்கு வரும் மருமகள், அவளது குடும்பம் மனத்திற்குப் பிடித்திருந்தால் போதும். கல்யாணம் நிச்சயமாகிவிடும். ஜாதகம், வரதட்சணை, மருமகள் அதைக் கொண்டு வரவேண்டும், இதைச் செய்ய வேண்டும் என்று சொன்னதே இல்லை. என் பிள்ளைகளின் கல்யாணமெல்லாம் இப்படித்தான் நடந்தது.

கேள்வி: பிராமணக் குடும்பங்களில் இப்படியும் நடக்குமா?

திருமதி டி.வி.ஆர்.,: எங்கு எப்படி நடக்கும் என்பது பற்றி என்னால் கூற முடியாது. எங்கள் வீட்டில் அப்படித் தான். அது மட்டுமல்ல. ஜாதகங்களை வைத்து கொண்டு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடி வருஷங்களை ஓட்டுவது, வரதட்சணை கொடுக்க வழியில்லாமல் கஷ்டப்படுவது இந்த மாதிரி நடக்கிறதே என இவர் வேதனைப்படுவார். இவர்களுக்கு எப்போதுதான் நல்ல புத்தி வருமோ? என்று பல சந்தர்ப்பங்களில் இவர் கூறி நான் கேட்டிருக்கிறேன்.

கேள்வி: பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டை விட்டு, வீடு, வாசல் எல்லாவற்றையும் விட்டு விட்டு பேப்பர் நடத்தத் திருநெல்வேலிக்குப் புறப்பட்டாரே! அப்போது என்ன நினைத்தீர்கள்?

திருமதி டி.வி.ஆர்.,: தான் எடுத்த காரியங்களில் மிகவும் நம்பிக்கை அவருக்கு உண்டு. சோர்வே கிடையாது. எப்போதும் பேப்பர் பற்றியும், ஊர் முன்னேற்றம் பற்றியும் தான் சிந்தனை. நாங்கள் திருநெல்வேலிக்குப் பேப்பர் நடத்தக் குழந்தைகளுடன் புறப்படும் போது "குழந்தைகளுடன் இவர் திருநெல்வேலிக்குப் புறப்படுகிறார். பேப்பர் தொழிலும் ஒரு தொழிலா? திண்டாப் போகிறார்,' என்றெல்லாம் சொன்னவர்கள் உண்டு. அதுபற்றி அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அவருடைய மனோதைரியம் யாருக்கும் வராது. அவர் என்ன செய்தாலும் சரியாகத்தான் செய்வார் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உண்டு. அவர் மனம் எதற்கும் அசைந்து கொடுத்து நான் பார்த்ததில்லை.

கேள்வி: அவர் மிகவும் சந்தோஷப்பட்டது, கவலைப்பட்டது ஏதாவது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?

திருமதி டி.வி.ஆர்.,: அவர் மிகவும் சந்தோஷப்பட்டது ஒன்றுண்டு. அதாவது தனது பேப்பர் ஒரு லட்சம் பிரதி விற்பனையைத் தாண்டியபோது அவர் மிகவும் சந்தோஷப்பட்டார். கவலைப்பட்டதுதான் இல்லையே! ஏதாவது கவலை என்று சொல்ல வேண்டுமென்றால் தமிழ்நாடு இன்னும் போதுமான அளவு முன்னேறவில்லையே என்றுதான் வருத்தப்படுவார். குடும்பக் கவலை அவருக்கிருந்ததாக என்னால் சொல்ல முடியாது. ஆபீஸ் விஷயமாக வீட்டில் எதுவும் பேச மாட்டார். கடைசியில் கொஞ்ச நாள் உடம்பு முடியாமல் இருந்தாரே அப்போது கூட எங்களிடம் "அப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும்,' என்று கூறியதில்லை. கடுமையான, நேர்மையான உழைப்பாளி, எவ்வளவோ பெரிய மனிதர்கள் இவரிடம் ஆலோசனை கேட்க வருவதுண்டு. அதற்காகக் கொஞ்சம் கூட கவுரவம் அடைந்ததில்லை. ஜாதி, மதம், உயர்ந்தவன், பணக்காரன், ஏழை, இந்தப் பாகுபாடு அவருக்குக் கிடையாது. நம்மால் முடிந்ததை வஞ்சகமில்லாமல் செய்து கொண்டே இருக்க வேண்டுமென்பது அவரது கொள்கை. யார் கூப்பிட்டாலும் அவர்கள் வீட்டுக்குப் போவார். யார் வீட்டிலும் சாப்பிடுவார். சமாளிக்க முடியாதது ஒன்று இல்லை என்பதே அவரது கொள்கை.

கடந்த 60 ஆண்டுக் கால இணைபிரியா வாழ்க்கைச் சம்பவங்களை நினைவு படுத்துவதில் நமது அனுபவத்தில் எதிர்பார்த்த அந்த ஒன்று திருமதி டி.வி.ஆரிடமும் நிகழத்தான் செய்தது. 60 ஆண்டுகள்; எத்தனை சோதனைகள்; பொது வாழ்க்கையில் எத்தனை சாதனைகள்; அது ஒரு நீண்ட பயணம்.

இது போல பல பெண்களைப் பேட்டி கண்ட அனுபவங்கள் நினைவுக்கு வந்தன. அநேகமாகப் பலர் முதல் கேள்வி கேட்ட உடனேயே அழத்தொடங்கி விடுவார்கள். ஒரு மணி நேரமாக திருமதி டி.வி.ஆர்., மனோதிடத்துடன், அழாமல் பேட்டியளித்தார் என்பதில் இருந்து இது அவருக்கு டி.வி.ஆர்., தந்த பலமாக இருக்கலாம், அல்லது டி.வி.ஆர்., போலவே இவரது இதயமும் மிகவும் பலமானதுதானோ என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி ஒத்த இதயங்கள் அமைவதை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.


Advertisement