World Latest News Update, Latest Financial, Economic & Business News
இதை எனது முதல் பக்கமாக்கு
Get Font | Sitemap |   RSS Feed
Dinamalar Latest News
Latest Breaking News

  • இலங்கை கிரிக்கெட் அணி இந்தியா வருகை
    நவம்பர் 08,2009,07:11   IST
    மும்பை : டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக குமார் சங்ககரா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியினர் மும்பை வந்துள்ளனர். இவர்கள் முதற்கட்டமாக போர்டு பிரசிடெண்ட் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபடுகின்றனர். நவம்பர் 16ம் தேதி ஆமதாபாத்தில் நடைபெறும் முதல் டெஸ்டிலும், 2வது டெஸ்ட் கான்பூரிலும், மூன்றாம் டெஸ்ட் மும்பையிலும் நடைபெறுகிறது.நாக்பூர் மற்றும் மொகாலியில் நடைபெறும் 2 டுவென்டி 20 போட்டிகளிலும் பங்கேற்கிறது. இதன் பின்னர் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 29 முறை மோதி உள்ளதாகவும், இதில் இந்திய அணி 11 முறை தொடரை வென்றுள்ளதாகவும், இலங்கை 5 முறை வென்றுள்ளதாகவும், 13 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், இலஙகை வென்றுள்ள 5 வெற்றிகளும் அவர்கள் நாட்டில் நடைபெற்றன. எனவே இந்திய மண்ணில் முதல் வெற்றி பெற இலங்கை அணி மும்முரமாக இருப்பதாக சங்ககரா தெரிவித்தார்.
  • சேலம் - சென்னை விமான கட்டணம் ரூ.350 குறைப்பு : "கிங் பிஷர்' அறிவிப்பு
    நவம்பர் 08,2009,07:04   IST
    சேலம்: 'கிங் பிஷர்' நிறுவனம், சேலத்திலிருந்து சென்னை செல்லும் விமான டிக்கெட் கட்டணத்தை 2,879 ரூபாயிலிருந்து 2,529 ரூபாயாக குறைத்துள்ளது. வரும் 15ம் தேதி முதல் சேலம் - சென்னை விமான சேவையை இயக்க கிங் பிஷர் நிறுவனம் முன்வந்துள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவு அக்டோபர் 20ம் தேதி முதல் நடந்து வருகிறது. துவக்கத்தில் சென்னையிலிருந்து சேலத்துக்கு வரவும், சேலத்திலிருந்து சென்னை செல்லவும் ஒரே கட்டணமாக 2,879 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இக்கட்டணத்தை குறைந்தது மூன்று மாதங்களுக்காவது குறைக்க வேண்டும் என வர்த்தகர் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். கடந்த வாரம் சென்னையிலிருந்து சேலம் வருவதற்கான கட்டணத்தில் 679 ரூபாய் குறைத்து, 2,200 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் கிங் பிஷர் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அலுவலர்கள் சேலத்தில் ஆய்வு செய்தனர். சேலம் உருக்காலை, தென்னிந்திய நூற்பாலை உரிமையாளர் சங்க தலைவர் தினகரன், ஏற்றுமதியாளர் ஜார்ஜ், சோனா கல்லூரி செயலர் தீரஜ்லால், ரோட்டரி கவர்னர் டேவூ உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து பேசினர். இந்நிலையில், நேற்று சேலத்திலிருந்து சென்னை செல்லும் விமான டிக்கெட் கட்டணத்திலிருந்து 350 ரூபாய் குறைக்கப்பட்டு, 2,529 ரூபாயாக மாற்றி நிர்ணயித்துள்ளனர்.
  • இன்று கோவையில் மினி மாரத்தான்
    நவம்பர் 08,2009,06:54   IST
    கோவை: ஏழை பெண் குழந்தைகள் கல்வி வளர்ச்சிக்காக மினி மாரத்தான் ஓட்டம், கோவையில் இன்று நடக்கிறது. டி.வி.எச். நிறுவனம், கோயம்புத்தூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் சி.ஆர்.பி.எப். சார்பில் 10 கி.மீ.,தூர மினி மாரத்தான் ஓட்டம், கோவையில் இன்று காலை 6.30 மணிக்கு துவங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பிரிவுக்கான 10 கி.மீ.,தூர மாரத்தான், கோவை அரசு கல்லூரியில் இருந்தும், 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 12 வயதுக்கு மேற்பட்ட இரு பாலர் மற்றும் அனைத்து வயதினருக்குமான மாரத்தான் ரேஸ்கோர்ஸ் காஸ்மோபாலிடன் கிளப்பில் இருந்தும் துவங்குகிறது. ஆண்கள், பெண்கள் பிரிவினருக்கு 30 ஆயிரம் ரூபாய், 20 ஆயிரம், 10 ஆயிரம், ஐந்தாயிரம், இரண்டாயிரத்து 500 ரூபாய் முறையே முதல் ஐந்து இடங்களில் வெல்பவர்களுக்கு பரிசு தொகையாக அளிக்கப்படுகிறது. சிறுவர், சிறுமியர் 14 வயதுக்கு மேல் பிரிவுகளில் 20 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம், ஐந்தாயிரம், இரண்டாயிரத்து 500, ஆயிரம் ரூபாய் முறையே முதல் இடங்களுக்கு பரிசு தொகையாக அளிக்கப்படுகிறது. இந்த ஓட்டத்துக்கு மீடியா ஸ்பான்சராக 'தினமலர்' நாளிதழும் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், 'ஸ்பான்சர்'களாகவும் கை கோர்த்துள்ளன.
  • விஸ்வநாதர் கோவில் திருவிழா : இன்று முதல் இசை விழா துவக்கம்
    நவம்பர் 08,2009,06:35   IST
    பாலக்காடு: பாலக்காடு கல்பாத்தியில் அமைந்துள்ள விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் தேர் திருவிழா வரும் 14ம் தேதி துவங்குகிறது. இவ்விழாவையொட்டி பாலக்காடு மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் சார்பில் இன்று (8ம்தேதி) முதல் 13 ம் தேதி வரையில் கர்னாடகா இசை கச்சேரி மணி அய்யர் தெருவில் நடக்கிறது. காலை 7.30 க்கு ரகுநாதன் குழுவினரின் மங்கள வாத்தயத்துடன் இசை விழா துவங்குகிறது. ஊஞ்சவிருத்தி கல்பாத்தி அக்ரஹாரத்தில் காலை 8.30க்கு தியாகராஜா கீர்த்தனை நடக்கிறது. 9ம்தேதி மாலை 5.00 மணிக்கு ரமேஷன், திருச்சி கணேஷன் குழுவினரின் இசை கச்சேரி, 10 ம் தேதி மாலை 5.00 மணிக்கு நந்தினி - ரஞ்சித், அபிஷேக் ரகுராம் ஆகியோரின் இசை கச்சேரி, 11ம்தேதி மாலை 5.00 மணிக்கு முரளீதரன் உன்னி, விஜயலட்சுமி சுப்ரமணியம் ஆகியோரின் இசை கச்சேரி, 12 ம்தேதி மாலை 5.00 மணிக்கு பிர÷ஷாபின் இசை கச்சேரி, மைசூர் நாகராஜ், மஞ்சுநாத் குழுவினரின் வயலின் கச்சேரி நடக்கிறது. 13 ம் தேதி நடைபெறும் இசை கச்சேரி நிறைவு விழாவை கேரள சட்டசபை துணை சபாநாயகர் ஜோஸ் பேபி துவக்கி வைக்கிறார். இரவு 7.00 மணிக்கு கர்னாடிக் சகோதரர்களான சசிகிரண், கணேஷ் குழுவினரின் இசை கச்சேரி நடக்கிறது.
  • சபரிமலைக்கு யாத்திரை முன்னேற்பாடுகள் முடிந்தது
    நவம்பர் 08,2009,06:21   IST
    திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல மகர விளக்கு சீசன் துவங்குவதற்கு முன்பே அங்கு பக்தர்களின் பல்வேறு வசதிகளுக்கான முன்னேற்பாடுகள் முடிவடைந்து விட்டதாக தேவஸ்வம் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார். சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வசதிகளை மேற்கொள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டும், மாநில அரசும் சில மாதங்களாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில், முக்கியமாக பக்தர்களுக்கு இக்காலக் கட்டங்களில் பிரசாதம் கிடைப்பதில்லை என்ற புகார்களை அடுத்து பிரசாதம் தாராளமாகவும், எளிதாகவும் கிடைக்க வசதி ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரசாதங்களை வழங்க தனலட்சுமி வங்கியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் அப்பம், அரவணை போன்ற வழிபாடு டிக்கெட்டுக்கள் வங்கியே நேரிடையாக பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்
    நவம்பர் 08,2009,06:00   IST
    சென்னை: மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவை ஒட்டி, விரைவு சிறப்பு ரயில்கள் வரும் 28ம் தேதி முதல் ஜனவரி மாதம் 29ம் தேதி வரை கன்னியாகுமரி, மதுரை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 26 பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு மேல்மருவத்தூர் இருமுடி திருவிழாவை ஒட்டி, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் ஏறக்குறைய ஆறு கோடியே எட்டு லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு திருவிழாவிற்கு விரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. கோவை, திருப்பூர், சோமனூர், ஈரோடு, பாலக்காடு சங்கரிதுர்க், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருமங்கலம், ராமேஸ்வரம், ராமநாதரபுரம், பரமக்குடி, மானாமதுரை, தேவக்கோட்டை, காரைக்குடி, புதுக்கோட்டை பகுதியிலிருந்து மேல்மருவத்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேலும் செங்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட 26 இடங்களிலிருந்து மேல்மருவத்தூருக்கு வரும் 28ம் தேதி முதல் ஜனவரி மாதம் 29ம் தேதி வரை விரைவு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் மேற்கண்ட இடங்களுக்கும் மேல்மருவத்தூரிலிருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • மதுரையில் நள்ளிரவு கனமழை
    நவம்பர் 08,2009,05:13   IST
    மதுரை: மதுரையில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது.பகலில் நகர் பகுதியில் மேகமூட்டத்துடன் சாரல் விழுந்தது. இரவு 7 மணிக்கு மழை துவங்கியது. இரவு 10 மணி முதல் கனமழை பெய்ததது. இதனால் நகர்பகுதி ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர். திருமங்கலம், சோழவந்தான், மேலூர், உசிலம்பட்டி பகுதிகளிலும் விடிய விடிய மழை நீடித்தது. இரண்டு நாளாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • திருவள்ளுவர் சிலைக்கு படகு சேவை ரத்து
    நவம்பர் 08,2009,04:17   IST
    கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக, நேற்று முழுவதும் திருவள்ளுவர் சிலைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், கடல் பாறையில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை அருகில் சென்று பார்த்துச் செல்ல தவறுவதில்லை. இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகுசேவை நடத்தி வருகிறது. நேற்று கன்னியாகுமரியில் பெய்த கனமழை காரணமாக, பயணிகளின் பாதுகாப்பு கருதி, படகுச் சேவை ரத்து செய்யப்பட்டது. விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு நேற்று காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணிவரை ஒரு மணிநேரம் படகுச் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், கடலில் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர்சிலைக்கு நேற்று முழுவதுமாக படகுச் சேவை ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் இருந்தே திருவள்ளுவர் சிலையைப் பார்த்து திருப்தியடைந்தனர்.
  • 50 கோடி தொலைபேசி பயன்பாடு
    நவம்பர் 08,2009,04:07   IST
    புதுடில்லி: தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' கூறியுள்ளதாவது: நம் நாட்டில் தொலைபேசி பயன்படுத்துவோர் எண்ணிக்கை கடந்த ஆகஸ்டில், 49.4 கோடியாக இருந்தது. செப்டம்பரில் இது 50.9 கோடியாக அதிகரித்துள்ளது. வரும் 2010க்குள் இந்த அளவை எட்ட வேண்டும் என, தொலைத் தொடர்புத் துறை இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதற்கு 15 மாதங்களுக்கு முன்னதாகவே 50 கோடியை தாண்டி விட்டது. தற்போது தொலைபேசிகளின் எண்ணிக்கை 43.50 சதவீதம். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் மொபைல் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 15 லட்சம் அதிகரித்துள்ளது.
  • ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி
    நவம்பர் 08,2009,02:39   IST
    கடலூர்: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி முகாம் நடந்தது.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சி முகாம் கடலூர் பெரியகங்கணாங்குப்பத் தில் நடந்தது. பயிற்சியாளர் ஆண்டனிதாஸ் வரவேற்றார். பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி துவக்கி வைத்து, ஆரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.மாவட்ட <உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல் வம், கடலூர் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆஷா கிறிஸ்டி எமரால்டு ஆகியோர் பங்கேற்று ஆசிரியர்கள் குழுக்களாக பிரிந்து நுண்ணிலை கற் பித்தல் முறையில் மாதிரி வகுப்புகள் நடத்திக்காட்டினர். விஜயலட்சுமி நன்றி கூறினார்.
  • குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு
    நவம்பர் 08,2009,01:55   IST
    குன்னூர்: குன்னூரில் பெய்து வரும் தொடர்மழையால் ஊட்டி மழை ரயில் பாதையில், ஆடர்லி அருகே மண்சரிவு ஏற்பட்டதால், ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை 7.10 மணிக்கு புறப்பட்ட ஊட்டி மலை ரயில், குன்னூர் நோக்கி வந்தபோது, ஆடர்லி அருகே மழையின் காரணமாக லேசான மண்சரிவு ஏற்பட்டிருந்தது. சிறிய பாறைகளும் ரயில் பாதையில் விழுந்திருந்தன. இதனால், ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மண்ணை அகற்றும் பணியில் விரைவாக ஈடுபட்டனர். 2 மணி நேர முயற்சிக்கு பின்பு ரயில் இயக்கப்பட்டது. இதனால், காலை 10.30 மணிக்கு குன்னூருக்கு வர வேண்டிய மலை ரயில் பகல் 12.20 மணிக்கு வந்தது.
  • சிறுத்தையால் கிராம மக்கள் பீதி
    நவம்பர் 08,2009,01:32   IST
    காலடி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காலடி அடுத்து மலையோரங்களில் ரப்பர் பயரிடப்பட்டுள்ளது. இங்குள்ள சில கிராமங்களில், சில தினங்களாக, புலிகள் நடமாடுவதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த மாதம் 21ம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ரப்பர் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த புலி, அவரைத் தாக்கியது. நேற்று முன்தினம், அங்குள்ள ரப்பர் பிளான்டேஷன் அருகே, சிறுத்தை நடமாடுவதைப் பார்த்த ஒருவர், அங்கிருந்து தலைதெறிக்க ஓடி, ரப்பர் தோட்டத்திற்குள் இருந்தவர்களிடம் கூறினார். இதனால் மக்கள் மேலும் பீதியில் உள்ளனர்.
  • தொடர்மழை: தேர்வு ஒத்திவைப்பு
    நவம்பர் 08,2009,01:16   IST
    சென்னை : தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.இதுபற்றிய செய்திக்குறிப்பு:இன்று நடைபெறுவதாக இருந்த தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி படிப்புத் தேர்வுகள், தொடர்மழை காரணமாக ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • முட்டை விலை 265 காசு
    நவம்பர் 08,2009,00:57   IST
    நாமக்கல்: தேசிய முட்டை விலை நிர்ணயக்குழு கூட்டம் நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, ஏற்றுமதி குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். 260 காசுக்கு விற்பனை செய்து வந்த முட்டை 5 காசு உயர்த்தி 265 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பிற மண்டலங்களில் முட்டை விலை விபரம்:ஹைதராபாத் 262 காசு, விஜயவாடா, தனுகு 262 காசு, நெல்லூர், சித்தூர் 261 காசு, சென்னை 268 காசு, மைசூர் 260 காசு, பெங்களூரு 267 காசு, மும்பை 286 காசு, டில்லி 290 காசு, கோல்கத்தா 295 காசு.
  • தந்தம் போல் பற்கள் கொண்ட அதிசய எலி
    நவம்பர் 08,2009,00:29   IST
    ஈரோடு: யானைக்கு தந்தம் உள்ளது போல் அதிசய பற்கள் கொண்ட எலி ஒன்று நேற்று ஈரோட்டில் பிடிபட்டது.ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் சபீ (34). ஹோட்டல் தொழிலாளர்கள் சங்கத் தலைவராக உள்ளார். இவர்களின் சங்க அலுவலகம் ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் அருகில் உள்ளது. நேற்று அதிகாலை தனது தம்பி அலாவுதீனுடன் அவ்வழியே சபீ நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது குறுக்கே ஓடிய ஒரு எலிக்கு வித்தியாசமாக பற்கள் இருந்ததை பார்த்தனர். வீட்டில் வளர்க்கலாம் என்ற எண்ணத்தில் சிரமப்பட்டு அதை பிடித்தனர். எலியின் மேல் மற்றும் கீழ் தாடையில் வளர்ந்துள்ள தலா இரண்டு முன் பற்கள் வாய்க்கு வெளியே தந்தம் போல் நீட்டிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு பல்லும் இரண்டு இஞ்ச் நீளத்துக்கு நீண்டிருந்தது.பார்க்க அதிசயமாக இருந்தாலும், அசாதாரணமாக வளர்ந்துள்ள இப்பற்கள் அந்த எலிக்கு தொந்தரவாகவே இருக்கின்றன. அந்த எலி உணவு உண்ணவும், சிறிய இடைவெளிக்குள் உடலை குறுக்கி புகுந்து தப்பிக்கவும் இந்தப்பற்கள் இடையூறு தான்.
  • பாக்.,கில் அதிரடி: தலிபான்கள் 18 பேர் பலி
    நவம்பர் 08,2009,00:15   IST
    இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில், தலிபான்கள் 18 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்தினர் தரப்பில் மூன்று வீரர்கள் பலியாயினர்.தலிபான்கள் வசமிருக்கும் பகுதிகளை மீட்க நடவடிக்கை எடுத்து வரும் ராணுவத்தினர், சரரோகா மற்றும் லாதா என்ற பகுதிகளை அவர்களிடம் இருந்து நேற்று மீட்டனர். பாக்., தலிபான்களின் முக்கிய மையமாக கருதப்படும், மாகீன் என்ற பகுதியையும் கைப்பற்ற தீவிரமாகப் போராடி வருகின்றனர். நேற்று இரண்டு நகரங்களை கைப்பற்றியதன் தெற்கு வாசிரிஸ்தானில், தலிபான்களின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் பெரும்பாலானவற்றை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். அடுத்த கட்டமாக வடக்கு வாசிரிஸ்தானில் அதிரடி நடவடிக்கையை துவக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
  • கூர்நோக்கு இல்லத்தில் இரு சிறுவர்கள் எஸ்கேப்
    நவம்பர் 07,2009,23:29   IST
    கடலூர் : கடலூர் அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து இரண்டு சிறுவர்கள் தப்பியோடினர்.கடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் மழைநீர் தேங்கி நின்றது. மாலை 5 மணிக்கு அங்கிருந்த ஊழியர்கள் கேட்டை திறந்து வைத்து, தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த ஆவினங்குடி ராஜேந்திரன்(15) கள்ளக்குறிச்சி மூர்த்தி(15) இருவரும் தப்பியோடிவிட்டனர்.இது குறித்து புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
  • ஆர்.ஆர்.பி., தலைவர்கள் நீக்கம் : அமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடி
    நவம்பர் 07,2009,23:04   IST
    புதுடில்லி : நாடு முழுவதும் செயல்படும் ரயில்வே ஆட்கள் தேர்வு வாரியத்தின் (ஆர்.ஆர்.பி.,) தலைவர்கள் அனைவரையும் பதவி நீக்கம் செய்து, ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் எல்லாம், ரயில்வே அமைச்சராக லாலு இருந்த போது நியமிக்கப்பட்டவர்கள்.இது தொடர்பாக ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரயில்வே ஆட்கள் தேர்வு வாரியம், நாடு முழுவதும் 20 நகரங்களில் செயல்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்த வாரியங்கள் மீது, அதிக அளவில் புகார்கள் வந்தன. பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகவும், ரயில்வே வாரிய தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.அதனால், ரயில்வே ஆட்கள் தேர்வு வாரியங்களை மாற்றி அமைக்கும் நடவடிக்கையில் அமைச்சர் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, 20 வாரியங்களின் தலைவர்களை நீக்கியுள்ளார். அவர்களுக்குப் பதிலாக, புதிய தலைவர்களை இரண்டு நாட்களுக்கு முன் நியமித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மூன்றாண்டு காலத்திற்கு இந்தப் பதவியில் இருப்பர்.இவ்வாறு உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
  • தேக்கடியில் படகு சவாரியை துவக்க வனத்துறை மும்முரம்
    நவம்பர் 07,2009,22:41   IST
    கூடலூர் :தேக்கடியில் படகு சவாரியை விரைவில் துவக்க, பாதுகாப்பு உறுதிச் சோதனை நடத்துவதில் கேரள வனத்துறை மும்முரமாக உள்ளது.தேக்கடியில் செப்டம்பர் 30 ல் சுற்றுலா பயணிகளின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்திற்கு பின் படகு சவாரி நிறுத்திவைக்கப்பட்டது. அதன்பின் விபத்து குறித்து பல்வேறு துறையினர் பல்வேறு கோணங்களில் ஆய்வு நடத்தி வந்தனர். படகு சவாரி நிறுத்தப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால், விரைவில் படகு சவாரியை துவக்க வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மீண்டும் படகு சவாரியை துவக்க வேண்டுமானால் பாதுகாப்பு உறுதிச் சோதனை நடத்த வேண்டும். இதற்காக கொச்சி பல்கலைக்கழக கப்பல்கட்டும் தொழில்நுட்ப துறைக்கு, கேரள வனத்துறை கடிதம் எழுதியுள்ளது. இவர்கள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்ட பின் படகு சவாரி வழக்கம்போல துவங்கும். இக்குழு விரைவில் தேக்கடிக்கு ஆய்வு செய்ய வர உள்ளது.
  • ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல் : விற்பனையாளர் உட்பட இருவர் கைது
    நவம்பர் 07,2009,21:47   IST
    ஏர்வாடி : ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ரேஷன் அரிசி கடத்திய விற்பனையாளர் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். ஏர்வாடி தர்கா உயர்நிலை பள்ளி அருகே உள்ள ராம்கோ(ராமநாதபுரம் கூட்டுறவு கடை) 2ம் எண் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி கடத்துவதாக ராமநாதபுரம் பறக்கும்படை தாசில்தார் குணசேகரனுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார், அலுவலர்கள் தசரதன்,ராஜாமணி ஆகியோர் ரேஷன் கடையில் திடீர் ஆய்வுக்கு சென்றனர். அப்போது ரேஷன் கடையிலிருந்து ஒரு ஆட்டோவில் ஐந்து மூடை பச்சரிசியும் மேலும் ஒரு மூடை ஏற்ற தயார் நிலையிலும் இருந்தனர். விற்பனையாளர் தமிழ்செல்வன் மற்றும் ஏர்வாடியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் இளையராஜா ஆகியோரை பிடித்த பறக்கும் படையினர் ,விருதுநகர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி இருவரையும் போலீசார் கைது செய்தனர். அரிசியை பறிமுதல் செய்து பண்டகசாலை குடவுனில் ஒப்படைத்தனர்.
  • அமெரிக்காவில் கைதான பயங்கரவாதி மும்பையில் தங்கியதாக தகவல்
    நவம்பர் 07,2009,21:28   IST
    வாஷிங்டன் : இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஹெட்லி 4 முறை மும்பை வந்துள்ளதாகவும், கடந்த 2007 மற்றும் 2009 இடைப்பட்ட ஆண்டுகளில் ஜூலை மாதம் மும்பையில் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஹெட்லி, லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ராணா என்பவரை மும்பையில் சந்தித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் ஆறு பேர் கைது
    நவம்பர் 07,2009,21:16   IST
    ஜம்மு : காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய பயங்கரவாதிகளை, போலீசார் கைது செய்துள்ளனர்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் பற்றி கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், தோடா மாவட்டத்தில் பாதர்வா பகுதியில் போலீசார் கடந்த ஒரு மாதமாக நடத்திய தேடுதல் வேட்டையில், மன்சூர் அகமது, முகம்மது ஹனீப், மாலிக், பிலால் அகமது, முதாசிர் அகமது, ஜாகீர் உசேன் என்ற பயங்கரவாதிகளை கைது செய்துள்ளனர்.விசாரணையில், அவர்கள் பெரும் சதி வேலைகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கைதான ஆறு பேரில், பிலால் அகமது, முதாசிர் அகமது இருவரும் சேர்ந்து கையெறி குண்டுகள் பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்றுள்ளனர். ஜாகீர் உசேன் சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டு போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி.மற்ற மூவரும் பாதுகாப்பு படை வீரர்களின் தேடுதல் பணி குறித்து, சக பயங்கரவாதிகளுக்கு தகவல் சொல்வதோடு, நிதி திரட்டும் வேலையிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
  • நெல்லையில் மழைக்கு கல்லூரி மாணவர் பலி
    நவம்பர் 07,2009,20:53   IST
    திருநெல்வேலி : நெல்லையில் தொடர்மழையினால் அணைகள் நிரம்பிவருகின்றன. மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலியானார்.நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்துவருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் பலத்த மழையினால் அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துவருகிறது. கடந்த 5ம் தேதி 65 அடியாக இருந்த நீர்மட்டம் மாலையில் 100 அடியை நெருங்கியது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் மாலையில் 86 அடியை நெருங்கியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 125 அடியை எட்டியது. மணிமுத்தாறு, பாபநாசம் பகுதியில் 100 மி.மீ,மழை பெய்தது. அம்பையில் 95 மி.மீ.,மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்துவரும் மழையினால் குளங்கள் நிரம்பிவருகின்றன. குண்டாறு, ராமநதி, கடனாநதி அணைகள் நிரம்பிவழிகின்றன. 2வது பலி:சங்கரன்கோவிலை அடுத்துள்ள புளியம்பட்டியை சேர்ந்த முருகன் என்பவரது மகன் முத்துக்குமார்(19), ராஜபாளையத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம்ஆண்டு பயிலும் மாணவரான இவர் காலையில் புல் அறுக்கச்சென்றபோது அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். விவசாயி மாயாண்டி(40) மின்சாரம் தாக்கி பலியானார்.
  • பெரியாறு அணை நீர்மட்டம் இரண்டு நாளில் 2.5 அடி உயர்வு
    நவம்பர் 07,2009,20:36   IST
    கூடலூர் : பெரியாறு அணை பகுதியில் கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து வெகுவாக உயர்ந்து 7ம் தேதி காலை நிலவரப்படி 4345 கன அடியாக இருந்தது. இதனால் அணையில் நீர்மட்டம் இரண்டு தினங்களில் 2.5 அடி உயர்ந்து 121.20 அடியை எட்டியது. அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு 1200 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 2866 மில்லியன் கன அடியாகும். தொடர்ந்து நீர் வரத்து இருப்பதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் வாய்ப்புள்ளது. *வைகை அணையின் நீர்மட்டம் 58.99 அடியாக இருந்தது. நீர்வரத்து 1706 கன அடியாகவும், நீர்திறப்பு 1660 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 3419 மில்லியன் கன அடியாகும்.
  • காஸ் அடுப்பு வழங்கும் விழாவில் அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்
    நவம்பர் 07,2009,20:21   IST
    திருநெல்வேலி : காஸ் அடுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 13வது வார்டில் சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.,மைதீன்கான் தலைமையில் இலவச காஸ் அடுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடப்பதாக இருந்தது. விழாவிற்கு அமைச்சர் வந்தார். அப்போது 10வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் சிலர் அங்கு குழுமினர். எங்கள் பகுதிக்கு இன்னமும் காஸ் அடுப்பு வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க.,கவுன்சிலரின் வார்டு என்பதால் அரசின் திட்டங்களை முதலில் வழங்குகிறீர்கள் என கேட்டு அமைச்சரை முற்றுகையிட்டனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் மைதீன்கான், காஸ் அடுப்புகள் மொத்தமாக சப்ளையாவதில்லை. எவ்வளவு வருகிறதோ அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக வழங்குகிறோம். எனக்கு எல்லா வார்டு பொதுமக்களும் ஒன்றுதான். எனவே இந்த பகுதிக்கும் காஸ் அடுப்புகள் வந்தபிறகு வழங்குகிறேன் என கூறிவிட்டு யாருக்கும் காஸ் அடுப்புகளை வழங்காமல் சென்றுவிட்டார். அமைச்சர் தலைமையில் காஸ் அடுப்பு வழங்க முடியாமல் போன சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
  • ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கி 11 பேர் பலி
    நவம்பர் 07,2009,19:53   IST
    மாஸ்கோ : ரஷ்ய ராணுவ விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இது தொடர்பாக ரஷ்ய ராணுவ அமைச்சகம் கூறியுள்ளதாவது: நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்ட இந்த டியு-142 ரக விமானம், பசிபிக் பெருங்கடலில் தாதர் ஜலசந்தியை ஒட்டிய பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென ரேடாரிலிருந்து காணாமல் போனது. விமானம் விழுந்த இடம், ரஷ்யாவின் பிரதான பகுதியை சகாலின் தீவிலிருந்து பிரிக்கும் இடம். விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் பலியாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாகவே விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம். விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது.இவ்வாறு ரஷ்ய அமைச்சகம் கூறியுள்ளது.
  • அத்வானி அரசியலில் இருந்து ஓய்வு எப்போது? ஆர்.எஸ்.எஸ்., புதிய தகவல்
    நவம்பர் 07,2009,19:35   IST
    புதுடில்லி : பாரதிய ஜனதாவுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் பதவியேற்றவுடன் அத்வானி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று ஆர்.எஸ்.எஸ்., கூறியுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ராம் மாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் பதவிக்காயம் டிசம்பர் மாதம் வரை உள்ளதாகவும், அதன் பின் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் பதவியேற்க ஜனவரி மாதம் இறுதியாகிவிடும். அதன் பின்னர் அத்வானி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார் என்று கூறினார்.
  • முதல்வராக பதவியேற்றார் அசோக் சவான்
    நவம்பர் 07,2009,19:29   IST
    மும்பை : 15 நாள் இழுப்பறிக்கு பின் மகராஷ்டிராவின் முதல்வராக அசோக் சவான் இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். தேசியவாத காங்கிரசின் சகன் புஜ்பால் துணை முதல்வராக பதவியேற்று கொண்டார். மேலும் சவானுடன் 26 பேர் அமைச்சர்களாக பதவியேற்று ‌கொண்டனர்.
  • வெள்ள மீட்பில் தாமதம் கூடாது : கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
    நவம்பர் 07,2009,19:10   IST
    சென்னை :தமிழகத்தில் மழை நீடிப்பதால் வெள்ள மீட்பு பணியில் தாமதம் ஏற்பட கூடாது என மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையடுத்து வெள்ள மீட்பு நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.சுகாதாரத்துறை: மழையால் வெள்ளம் ஏற்படும் பகுதிக்கு மருத்துவ பொருட்களை கொண்டு செல்லும் வகையில் தயார் நிலையில் இருக்க மருத்துவ, சுகாதாரத்துறை இணை, துணை இயக்குனர்களுக்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது.கலெக்டர்களுக்கு உத்தரவு: வி.ஏ.ஓ.,க்கள் தங்கள் கிராமத்தில் 24 மணி நேரமும் முகாமிட்டிருக்க வேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை கிராம வெள்ள நிலவரம் குறித்து வருவாய் ஆய்வாளர் மூலம் தாசில்தாருக்கு தெரிவிக்க வேண்டும். அவர், உடனுக்குடன் மாவட்ட கலெக்டருக்கு தகவல் தர வேண்டும். மீட்பு பணியில் தாமதம் ஏற்பட கூடாது என அரசு மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
» தினமலர் முதல் பக்கம்
  இ-பேப்பர்