2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி, கும்பகோணம்,
ஸ்ரீகிருஷ்ணா தொடக்கப்பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து அங்கு
படித்த 92 குழந்தைகளை பலிவாங்கியது. அடுத்த சில மாதங்களில்
பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து பல விதிமுறைகள்
நடைமுறைப்படுத்தப்பட்டன. இதேபோலவே ஒரு சம்பவம் 1944ல்
நடந்தது. மும்பை துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த
கப்பலில் தீப்பிடித்தது. அதை அணைக்க முயற்சி செய்த 66
தீயணைப்பு படை வீரர்கள் உட்பட ஏறத்தாழ 150 பேர் இந்த கோர
சம்பவத்தில் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
செலுத்தும் விதமாகவும், தீ விபத்து குறித்த விழிப்புணர்வு
ஏற்படுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 முதல் 21ம்
தேதி வரை தேசிய தீ விபத்து பாதுகாப்பு வாரம்
கடைபிடிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டவுடன் முதலில் செய்ய வேண்டியவை
1. மரம், காகிதத்தில் தீப்பற்றி இருந்தால் நீரை ஊற்றிவிட்டு,
கம்பளம் போன்ற கனமான துணியினால் மூட வேண்டும்.
2. அடுப்பில் உள்ள பாத்திரத்தில் தீப்பற்றினால், நெருப்பை
அணைத்தபின் பாத்திரத்தை பெரிய மூடியால் மூட வேண்டும்.
3. மின்சாதன பொருட்களில் தீப்பற்றினால், மெயினை, "ஆப்'
செய்து விட்டு, மணலை கொண்டு தீயை அணைக்க முயற்சி செய்ய
வேண்டும்.
4. தியேட்டரில் தீப்பற்றினால் அவசர வழிகளை பயன்படுத்தி உடனே
தப்பிக்க முயற்சி செய்யலாம்.
5. சமையல் காஸ் வெளியேறினால் தீப்பெட்டியை கொளுத்தவோ,
மின்சார சுவிட்சுகளை இயக்கவோ முயற்சிக்க கூடாது. ஜன்னல்
கதவுகளை திறந்து காற்றோட்டம் ஏற்படுத்த வேண்டும்.
6. பெரிய தீவிபத்து என்றால் பொருட்களை மீட்க முயற்சிக்காமல்
வீட்டை விட்டு உடனே வெளியேற வேண்டும். லிப்டை
உபயோகப்படுத்த கூடாது. உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
தெரிவிக்க வேண்டும்.
சமையல் அறையில் தீ விபத்தை தடுக்க சில வழிகள்
1. உடல் அருகே வைத்து தீக்குச்சியை கொளுத்தக்கூடாது.
2. அடுப்பு எப்போதும் மேடையில் தான் இருக்க வேண்டும்.
3. காஸ் சிலிண்டரை எப்போதும் செங்குத்தாகவே வைக்க வேண்டும்.
4. உபயோகப்படுத்தாத போது சிலிண்டர் ரெகுலேட்டரை மூடிவிடவும்.
5. சிலிண்டர் டியூபை அவ்வப்போது சோதித்து, மாற்றிவிடவும்.
பெரும்பாலும் தீவிபத்து ஏற்பட காரணம் மனிதனின் கவனக்குறைவே.
கவனமாக செயல்படும்பட்சத்தில் பொருட்சேதத்துடன்,
உயிர்சேதத்தையும் தவிர்க்கலாம்.