தினமலர்


குடியரசு தினம்


குடியரசு தினம் நாட்டின் சமூகநீதி, உரிமை, சமத்துவம், சகோதரத்துவம், தனிமனிதர் மற்றும் சமூகத்தின் மேன்மை, தேச ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப் படுத்தும் விதத்தில் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றது.

குடியரசு தினத்தன்று நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகர்களிலும் அணி வகுப்புகள் நடைபெறுகின்றன. மாநிலத் தலைநகர்களில் கவர்னர்கள் தேசியக் கொடியை ஏற்றுகின்றனர். தலைநகர் டில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க ராஜ்பாத்தில் நடைபெறும் நமது முப்படையினரின் அணிவகுப்பினை டில்லியின் மிகக் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது, சிறுவர்கள், முதியவர்கள், ஏழை, பணக்காரர்கள் எனப் பல்வேறு மக்கள் கண்டுகளித்து நாட்டுப்பற்றை வெளிப்படுத்துகின்றனர்.

குடியரசு தினத்தன்று வெளிநாட்டு முக்கிய தலைவர்களை நம்முடைய நாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஜனாதிபதி மாளிகையில் தெற்கு மற்றும் வடக்கு பிளாக்குகள் ஒரு புறத்திலும், கம்பீரமிக்க இந்தியா கேட்டும், வீரத்தினை வெளிப்படுத்தும் அமர்ஜவான் ஜோதியும் மறுபுறத்திலும் உள்ளன. இந்தியா கேட்டும், அமர்ஜவான் ஜோதியும் குடியரசு தினத்தன்று முக்கியத்துவம் பெறுகின்றன. குடியரசு தினத்தன்று அமர்ஜவான் ஜோதியில் வீரவணக்க அஞ்சலி செலுத்தப்படுகின்றது. குடியரசு தின அணிவகுப்பில் முப்படைகளின் உயர் அலுவலர்களும், ஜவான்களும் ராணுவ இசை முழங்க கம்பீரமாக வீரநடை போடுகின்றனர். நம்முடைய நாட்டின் பாதுகாப்புத் துறையின் சாதனைகளை விளக்கும் அதிநவீன போர் தளவாடக் கருவிகள் அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.

நாட்டின் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளும் அணிவகுப்பில் காட்சிக்கென வைக்கப்பட்டு இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்வதை வெளிப்படுத்துகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் நாட்டுப்புற கலைஞர்கள் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். வீரமிக்க சிறுவர் சிறுமியர்கள் யானை மீதமர்ந்து அணிவகுப்பில் கலந்துகொள்கின்றனர். அவர்களது வீரதீரச் செயல்களை விளக்கும் வகையில் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. முப்படையினரோடு காவல்-படையினர், கடலோர பாதுகாப்புப் படையினர், எல்லைப்புற பாதுகாப்பு படையினர், மத்திய ரிசர்வ் காவல் படையினர், இந்திய - திபெத் எல்லை காவல் படையினர், அசாம் ஆயுதக்காவல் படையினர், டில்லி காவல் துறையினர் முதலியோரும் அணிவகுப்பில் கலந்துகொள்கின்றனர்.

குடியரசு தினத்தையொட்டி ஜனாதிபதி குடியரசுத் தினத்திற்கு முதல்நாள் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகின்றார். அவரது உரை ரேடியோ மற்றும் "டிவி' யில் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றது. குடியரசு தினத்தன்று ஜனாதிபதி தேசியக்கொடியை ஏற்றிவைத்து அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கின்றார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ராணுவத்தில் வீரதீரச் செயல்கள் புரிந்தோருக்கான அசோக சக்ரா உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. பொருளாதாரம், அணுசக்தி, நீதிமுறை, சமூகசேவை, கலை இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த சாதனைகளைப் படைத்தோருக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு தீயணைப்புத் துறை, காவல்துறை மற்றும் புலனாய்வுத் துறையில் சிறந்த சேவை செய்வோருக்கான விருதுகளும் மற்றும் வீர தீரச் செயல்கள் புரிந்த சிறுவர் சிறுமியர்களுக்கென விருதுகளும் வழங்கப்படுகின்றன. இவர்களுக்கு ராஷ்டிரபதி பவனில் சிறப்பான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

top

வாசகர் கடிதம் International Edition தேடுங்கள் ADVT. TARIFF
Dinamalar Publications
© 2007 www.dinamalarbiz.com. All rights reserved. Designed and Hosted by Web Designing Division,Dinamalar  Contact Us