சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மறக்க
முடியாத தருணங்களில் ஒன்று கார்கில் வெற்றி. 1971ல்
இந்தியாவுடன் நடந்த போரில் பாடம் கற்ற பின்னர் பாகிஸ்தான்
இந்தியாவுடனான நேரடியான மோதல்களை தவிர்த்து வந்தது.
தொடக்கத்தில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தது.
பின்னர் காஷ்மீரில் ஐ.எஸ்.ஐ., மூலமாக பயங்கரவாதத்தை
தூண்டிவிட்டது. இதன் தொடர்ச்சியாக 1999ல் அசட்டு
துணிச்சலுடன் பாகிஸ்தான் ஈடுபட்ட ஒரு காரியம், கார்கில்
ஊடுருவல். குளிர்காலத்தில் உயரமான சிகரங்களில் பாதுகாப்பு
பணிகளில் ஈடுபடுவதில் இருந்து இருநாட்டு வீரர்களும்
பின்வாங்குவார்கள். பின்னர் கோடை காலத்தின் தொடக்கத்தில்
மீண்டும் தங்களது வழக்கமான நிலைகளில் பாதுகாப்பு பணியை
தொடர்வார்கள்.
1999 ஏப்ரலில் முன்பே திட்டமிட்டபடி தங்களது படைவீரர்கள்
ஏறத்தாழ 5 ஆயிரம் பேரை இந்தியாவின் கார்கில் பகுதியில்
ஊடுருவச் செய்திருந்தது பாகிஸ்தான். இதற்கு பதிலடி தரும்
வகையில் மே மாதம் இந்தியா "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில்
ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. வெகுவேகமாக முன்னேறியது.
இரண்டு நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றிருந்ததால்
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கவலையுடன் இந்த போரை
கவனித்தன. பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு கண்டனமும் வலுத்தது.
வேறு வழியே இல்லை என்ற நிலையில் பாகிஸ்தான் பின்வாங்கியது.
ஜூலை 26ல் இந்த போர் நிறைவடைந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு,
கார்கில் பிரதேசத்தில் அகற்றப்பட்டது. இந்த போரின் விளைவாக
சர்வதேச அரங்கில் பாகிஸ்தானின் நம்பகத்தன்மை குறைந்தது.
நவாஸ் ஷெரீபின் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது.
கார்கில் ஊடுருவல் காரணமாக விழுந்த அடியில் இருந்து
பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை. இதனால் பாகிஸ்தான் தரப்பில்
4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என
கருதப்படுகிறது. இருப்பினும் இதுவரை உயிர்ப்பலி எண்ணிக்கையை
அந்நாடு ரகசியமாகவே வைத்துள்ளது. இந்த போரை தொடர்ந்து
அரசியல் குழப்பங்கள், பொருளாதார சீரழிவு, பயங்கரவாத
தாக்குதல்கள் என பாகிஸ்தானுக்கு அடிமேல் அடி. மீண்டும்
ஜனநாயகத்தை இழந்து ராணுவ ஆட்சியின் பிடியில் சிக்கியது.
கார்கில் அத்துமீறலால் சர்வதேச அரங்கில் தனிமைப்பட்டு
நின்றது பாகிஸ்தான். இந்தியாவின் ராணுவ வல்லமையை உலகுக்கு
பறைசாற்றியதன் அடையாளமாக ஜூலை 26ம் தேதி
கார்கில் போர் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.