தினமலர்


காடுகளை காப்போம்
 


மார்ச்-21 சர்வதேச வன தினம்

நிலப்பரப்பில் ஏறத்தாழ 30 சதவீதத்தை காடுகள் சூழ்ந்துள்ளன. காடுகள் பரப்பு நாள்தோறும் குறைந்து கொண்டே வருகிறது. இதே வேகத்தில் காடுகள் அழிக்கப்பட்டால் இன்னும் 100 ஆண்டுகளில் உலகில் உள்ள காடுகள் முழுமையாக அழிந்துவிடும். காடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வழியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் 21 தேதி சர்வதேச வன தினமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப விவசாய நிலங்களை அதிகரிக்க, மரங்களுக்காக, காகிதம் தயாரிக்க என பல காரணங்களுக்காக காடுகள் அழிக்கப்படுகின்றன. இது தவிர காட்டுத்தீயினாலும் காடுகள் பெருமளவில் அழிகின்றன.

 

மரங்கள் அழிவதால் பூமியின் தட்பவெப்ப நிலை மாறுகிறது. வனவிலங்குகள் தங்களது வசிப்பிடத்தை இழப்பதால் மடிகின்றன. பல லட்சம் வகையான அரிய உயிரினங்களும், தாவர இனங்களும் காடுகள் அழிக்கப்பட்டதால் இன்று முழுமையாக அழிந்துவிட்டன. இது உணவுச்சங்கிலியை சிதைக்கிறது. பூமியில் பசுமைஇல்ல வாயுக்களை கட்டுப்படுத்துவதில் மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. காடுகளை இழப்பது சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது. மரங்கள் இல்லாததால் மழை குறைகிறது.

 

நிலஅரிப்பை மரங்கள் தடுக்கின்றன. இதனால் நிலத்தடி நீரை பாதுகாப்பதிலும் இவை முக்கிய பங்காற்றுகின்றன. இவ்வாறு காடுகள் அழிவது எல்லா விதத்திலும் மனிதனுக்கு பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இதை தடுக்க அழிக்கப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மரக்கன்றுகளை நடலாம் என்பது வல்லுனர்களின் பரிந்துரை. குறிப்பாக ஒவ்வொரு ஆரோக்கியமான குடிமகனும் ஆண்டுக்கு மூன்று மரங்களாவது நட வேண்டும் என சீன அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வலியுறுத்தியது.

 

எனினும் அதிகமான எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நடுவதும் இந்த பிரச்னைக்கு சரியான தீர்வாகாது. இதனால் இழந்து விட்ட வனச்செல்வங்களை முழுமையாக மீட்க முடியாது. காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, உலகநாடுகளும் பொருளாதார முன்னேற்றத்துக்காக காடுகளை அழிப்பது தவறு என்பதை உணர்வதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.

top

வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in