தினமலர்

01.மே 10-11இடம்பெயரும் பறவைகளுக்கான தினங்கள்


உலகில் ஏறத்தாழ 10 ஆயிரம் வகை பறவைகள் உள்ளன. இவை இயற்கையின் பல்லுயிர் வளத்தின் அடையாளமாக திகழ்கின்றன. சுற்றுச்சூழல் மாறுதல்களை பறவைகள் தான் முதலில் உணர்கின்றன. உணவுக்காகவும், தட்பவெப்ப நிலை காரணமாகவும் பறவைகள் ஆண்டின் குறிப்பிட்ட நேரத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயர்கின்றன.
3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் ஆண்டுதோறும் இவ்வாறு இடம்பெயர்கின்றன. இடம்பெயரும் பறவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது வார இறுதி இடம்பெயரும் பறவைகளுக்கான தினங்களாக கொண்டாடப்படுகிறது. "இடம்பெயரும் பறவைகள்- பல்லுயிர் பெருக்கத்தின் தூதுவர்கள்' என்பது இந்த ஆண்டின் கோஷமாக உள்ளது.

 

சில பறவைகள் இடம் பெயர்வின் போது 22 ஆயிரம் கி.மீ., வரை பயணம் செய்கின்றன. இடையே பல நாடுகளை கடக்கின்றன. இந்த சமயங்களில் அவை வேட்டையாடப்படுவது வருந்தத்தக்கது. பறவைகளின் இடம்பெயர்வின் போது அவற்றை பாதுகாக்க சர்வதேச ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. எனினும் இடம்பெயர்வின் போது சந்திக்கும் ஆபத்து காரணமாக பல பறவை இனங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. குறிப்பாக ஆண்டுதோறும் சைபீரிய நாரைகள் ராஜஸ்தானில் உள்ள கொலடியோ தேசிய பூங்காவை தேடி வந்து முற்றுகை இடும். ஆனால் வரும் வழியில் மத்திய ஆசிய நாடுகளிலும், ஆப்கானிஸ்தானிலும் இவை வேட்டையாடப்பட்டதால் கடந்த 2002ம் ஆண்டுக்கு பிறகு இந்த பறவையை இந்தியாவில் முற்றிலுமாக காண முடிவதில்லை. உலகில் மிகவேகமாக அழிந்து வரும் உயரினமாக இது பட்டியலிடப்பட்டுள்ளது.


இடம்பெயரும் பறவைகள் பல அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன. அவை...


* சுற்றுச்சூழல் பாதிப்பால் புவிவெப்பம் உயர்வது பறவைகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்படுத்துகிறது.
* காடுகள் அழிக்கப்படுவதால் பறவைகள் தஞ்சமடைய இடம் கிடைப்பதில்லை.
* கப்பல்களும், கடலில் அமைந்திருக்கும் எண்ணெய் ஆலைகளும் கடலை மாசுபடுத்துவது பறவைகளை பாதிக்கிறது.
* காற்றாலைகளில் அடிபட்டு கழுகு போன்ற பெரிய பறவைகள் உயிரிழக்கின்றன.
* விளைநிலங்களில் உயிரி எரிபொருள் பயிரிட பயன்படுத்துவதும் பறவைகளை பாதிக்கிறது.
பறவைகள் சரணாலயங்களை முறையாக பராமரிப்பது, காற்று, நிலம், கடல் மாசுபடாமல் தடுப்பது, பறவைகள் வேட்டையாடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது போன்ற நடவடிக்கைகள் பறவைகள் இடம்பெயர்வதை ஊக்குவித்து, பறவைகளை அழிவில் இருந்தும் பாதுகாக்கும்.

top

வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in