பெண்ணிடம் அத்துமீறிய அ.தி.மு.க., பிரமுகர் நீக்கம்: முதல்வர் உத்தரவுக்கு கட்சியினர் வரவேற்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண்ணிடம் அத்துமீறிய அ.தி.மு.க., பிரமுகர் நீக்கம்: முதல்வர் உத்தரவுக்கு கட்சியினர் வரவேற்பு

Added : ஜூன் 18, 2014 | கருத்துகள் (4)
Advertisement

பெண்ணிடம் அத்துமீறி நடந்த, அ.தி.மு.க., பிரமுகரை, உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி, முதல்வர் உத்தரவிட்டது, கட்சியினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கணேசமூர்த்தி, 34. தேவிபட்டினம் அ.தி.மு.க., ஜெ., பேரவை கிளை செயலராக உள்ளார். அங்குள்ள நவபாஷன கடற்கரை கோவிலுக்கு, தோஷம் கழிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலித்து வந்தார். இவரது உறவினர் கட்டணம் வசூலிக்க, டெண்டர் எடுத்துள்ளார்.


கோவிலுக்கு சென்று...:

கடந்த 14ம் தேதி, இரவு 8:00 மணிக்கு, நவபாஷன தலத்திற்கு, திருப்பத்தூரில் இருந்து ஒரு பெண், குழந்தைகளுடன், தோஷ பரிகாரம் செய்வதற்காக வந்தார். அவரை தோஷம் கழிப்பதாகச் சொல்லி, நவபாஷன கோவிலுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பூஜை நடத்துவது போல, கணேசமூர்த்தி குறிப்பிட்ட அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதாக புகார் கிளம்பியது. இது குறித்து, அந்த பெண், யாத்ரீக பணியாளர் கற்பூர சுந்தரத்திடம் முறையிட்டார். அவர் கணேசமூர்த்தியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, இரு தினங்களுக்கு முன், கற்பூர சுந்தரத்தை தாக்கினார். 'நான் அ.தி.மு.க.,வில் ஜெ., பேரவை கிளைச் செயலர் பொறுப்பில் இருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது' எனவும் சொல்லியிருக்கிறார் கணேச மூர்த்தி. இதைத் தொடர்ந்து கற்பூர சுந்தரம், தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். ஆரம்பத்தில் கணேசமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்கினர். பின், மேலிடத்தில் இருந்து நடவடிக்கை எடுக்க உத்தரவு வந்ததும், போலீசார் வழக்கு பதிவு செய்து, கணேசமூர்த்தியை கைது செய்தனர்.

இந்த விஷயம் முதல்வர் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட, கணேசமூர்த்தியை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, உத்தரவிட்டிருக்கிறார். அவருடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்றும் உத்தரவில் சொல்லப்பட்டிருக்கிறது.


ராஜினாமா:

இதற்கிடையில், திருச்சி சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி என்ற பெண், திருச்சி துணை மேயராக இருந்த ஆசிக் மீரா என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாகச் சொல்லி, ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுக்க, ஆசிக் மீரா மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. கூடவே, துணை மேயர் பொறுப்பில் இருந்து ஆசிக் மீராவை விலகிக் கொள்ளச் சொல்லி உத்தரவு வர, அதை ஏற்று, அவரும் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டார். அடுத்து, அவரையும் கட்சியில் இருந்து நீக்கி, முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.


எதிர்பார்ப்பு:

இதுகுறித்து, கட்சி வட்டாரங்களில் கூறியதாவது: பாலியல் ரீதியிலான குற்றச்சாட்டுகளில் சிக்கினால், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கட்சியில் இருந்தே நீக்கி விடுகிறார். இருந்தும், பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. இருந்தாலும், கணேசமூர்த்தி மீதான முதல்வரின் நடவடிக்கை, கட்சியினரிடம் வரவேற்பை பெற்றுள்ளது. அதே போலவே ஆசிக் மீரா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். இருந்தாலும், முதல்வரின் இப்படிப்பட்ட கடுமையான நடவடிக்கைகள், கட்சியினர் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதை பெரிய அளவில் தடுக்கும். இவ்வாறு, கட்சி வட்டாரங்களில் தெரிவித்தனர்.

Advertisement