திருவாரூர் ஆழித்தேர் 3 மாதத்தில் வெள்ளோட்டம் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருவாரூர் ஆழித்தேர் 3 மாதத்தில் வெள்ளோட்டம் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தகவல்

Added : ஜூன் 30, 2014

திருவாரூர்: ""திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணி, மூன்று மாதத்தில் முடிக்கப்படும்,'' என்று அறநிலையத் துறை ஆணையர் தனபால் தெரிவித்துள்ளார்.வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலின் ஆழித் தேர், ஆசியா கண்டத்திலேயே, இரண்டாவது மிகப் பெரிய தேர். தேரில் உள்ள சில பாகங்கள் சேதமடைந்ததால், இரண்டு கோடியே, 17 லட்சம் மதிப்பில், புதிதாக தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம், நான்கு ஆண்டுகளாக, பணி நடைபெற்று வருவதால், 2010ம் ஆண்டுக்கு பின், தேரோட்டம் நடைபெறவில்லை.கடந்த வாரம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் திருவாரூர் கலெக்டர் மதிவாணன் ஆகியோர் தேர் பணிகளை பார்வையிட்டு, பணியை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில், வலங்கைமான் அருகே ஆலங்குடியில் உள்ள ஆப்தசகாயேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், திருவாரூரில் ஆழித்தேர் கட்டுமான பணியை ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:ஆழித் தேர் கட்டுமான பணி, மூன்று மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெறும். மேலும், திருவாரூர் பகுதியில் அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில், அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.அப்போது, தஞ்சை இணை ஆணையர் குமரதுரை மற்றும் உதவி ஆணையர்கள் தஞ்சை ஞானசேகரன், திருவாரூர் சிவராம்குமார், நாகை ரெத்தினவேல், திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் செயல் அலுவலர் ஜெயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X