பயங்கரவாதிகளுக்கு சாதகமாக மாறிய இந்திய டி.வி., காட்சிகள்| Dinamalar

பயங்கரவாதிகளுக்கு சாதகமாக மாறிய இந்திய டி.வி., காட்சிகள்

Added : ஜூலை 04, 2014 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement
பயங்கரவாதிகளுக்கு சாதகமாக மாறிய இந்திய டி.வி., காட்சிகள்

மும்பைக்குள் நுழைந்து நாசவேலைகளில் ஈடுபட்ட பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாரிமன் ஹவுஸ், தாஜ் ஹோட்டல் மற்றும் ஹோட்டல் ஓபிராயில் சிக்கிக் கொண்டு விட்டனர். அங்கு பலரைக் கொன்றனர், வெடிகுண்டுகளைப் பதித்தனர், பலரைப் பணயக் கைதிகளாகச் சிறைப் பிடித்தனர். பணயக் கைதிகளை விடுவிக்க இந்திய அதிகாரிகளிடம் எவ்வாறு பேரம் பேச வேண்டும், தங்களை எவ்வாறு அறிவித்துக் கொள்ள வேண்டுமென்று, இந்தச் சதித்திட்டத்தை வகுத்தவர்கள், பாகிஸ்தானிலிருந்து இவர்களுக்க வழங்கிய ஆலோசனைகள் - மொபைல் உரையாடல் தொடர்ச்சி:
நரிமான் ஹவுஸ் பேச்சு பதிவு: மறுமுனை: நீ எங்கிருந்து வருகிறாய் என்று கேட்டால் ஹைதராபாத் டெக்கான் என்று கூற வேண்டும், புரிகிறதா ஹைதராபாத் டாக்கான் என்று அழுத்திச் சொல்லுகிறான் மறுமுனை ஆசாமி. அங்கு சௌகீ பகுதியிலிருந்து வருவதாகச் சொல். புரிகிறதா? மேலும் விசாரித்தால் ஹைதராபாத் டெக்கான முஜாகிதீன் குழுவைச் சேர்ந்தவன் என்று சொல்ல வேண்டும். நான் இந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவன். இந்தக் காரியத்தை ஏன் செய்தாய் என்று கேட்டால், இந்திய அரசின் இரட்டைக் கொள்கை - முதுகில் தட்டிக் கொடுப்பது, ஆனால் நிர்வாக தலையில் குட்டுகிறது என்று சொல்ல வேண்டும். சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளே இதற்கு உதாரணம். அரசாங்கம் அறிவிப்பது ஒன்று, ஆனால் நிர்வாகமோ முஸ்லீம் இளைஞர்களைத் தேடித் தேடி கைது செய்கிறது. முஸ்லீம் இளைஞர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், கைது செய்யப்படுகிறார்கள் என்பதை அழுத்திச் சொல்ல வேண்டும். அவர்களது எதிர்காலம் அழிக்கப்படுகிறது. எனவே இதில் இறங்கினோம்.


இது வெறும் டிரெயிலர் மட்டுமே:

இப்போது நடப்பது வெறும் ட்ரெய்லர் காட்சிகள் மட்டுமே. முழுத்திரைப்படம், உண்மையான திரைப்படம் காத்திருக்கிறது உங்களுக்குக் கொஞ்சம்தான் காட்டியிருக்கிறோம். முழுப்படம் வருகிறது. வருங்காலத்தில் உங்கள் அரசாங்கம் பார்க்க வேண்டியது நிறையவே உள்ளது, என்று சொல்ல வேண்டும்.
உனக்கு என்னதான் வேண்டுமென்று அவர்கள் கேட்பார்கள். முதலாவது நிபந்தனை சிறைகளில் வாடிக் கொண்டிருக்கும் முஸ்லீம் - முசல்மான் - விடுதலை செய்ய வேண்டும், இரண்டாவது முஸ்லீம் மாநிலம் முசல்மான்களிடமே தரப்படவேண்டும். மூன்றாவது காஷ்மீரிலிருந்து படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும். காஷ்மீரிகளுக்கு அவர்கள் உரிமைகளைத் தரவேண்டும்.
பாப்ரீ மசூதி இருந்த இடத்தில் - அதே இடத்தில் - புதிய மசூதி கட்டிட வேலைகளை உடனே தொடங்க வேண்டும். அந்த இடம் முஸ்லீம்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இஸ்ரேலுடன் எந்த உறவும் கூடாது. முஸ்லீம்களைத் துன்புறுத்தக் கூடாதென்று இஸ்ரேலுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கவேண்டும். பிலிப்பைனும் முஸ்லீம்களைத் துன்புறுத்தவதை நிறுத்த வேண்டும். முசல்மாகளின் ரத்தத்தோடு விளையாடுவதை இஸ்ரேல் நிறுத்த வேண்டும்.
(இடையில் ஒரு முணுமுணுப்புப் பேச்சு மறுமுனையில் - ஓபிராயில் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்கிறதே - ஆம் இம்முனையில்)


இஸ்ரேல் தலையிட கூடாது:

பாரத முஸ்லீம்கள் விஷயத்தில் இஸ்ரேல் தலையிடக்கூடாது தெரிகிறது. இவ்வாறு மறுமுனையிலிருந்து பயங்கரவாதிகளுக்கு மறுமுனை பாகிஸ்தான் வகுப்பு நடத்தியது. உரையாடலில் ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் அழுத்திச் சொன்னார்கள். இம்முனையில் இருந்த பயங்கரவாதியும் சரி, சரி, செய்கிறோம் என்று பதிலளித்தார்கள். சலாம் ஆலேகும், ஆலேகும் சலாம் மரியாதைகளுடன் இந்த நரிமான் ஹவுஸ் உரையாடல் முடிகிறது.
இந்தியா டிவியுடன் பேசும்போதும் நரிமான் ஹவுஸ் பயங்கரவாதிகள் இதே மாதிரியே பேசினார்கள் என்பது இந்த டிவி இண்டர்வியூ பதிவுகளிலும் தெரிகிறது.
தாங்கள் இந்திய முஸ்லீம்கள், ஹைதராபாத் டெக்கான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்ற போலித்தனமான, பொய்யான வேஷங்கள், கற்பனையான ஹைதராபாத் டெக்கான் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பயங்கரவாதிகளின் நடிப்புத்தான் இந்தச் சதியின் வேதனையான, அபாயகரமான அம்சங்கள். மனுதாரன் கசாப் உயிருடன் பிடிபடாமல் போயிருந்தால் விசாரணைக் குழுவினர் இந்தச் சதியின் மூலத்தைக் கண்டு பிடிக்க முடியாமலேயே போயிருக்கும். சுற்றிச் சுற்றி வளைந்து வளைந்து இந்த நாசவேலைகளைப் பயங்கரவாதிகள் நடத்திய விதத்தை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்திருப்பது சாத்தியமாகி இருக்காது. இவர்களும் இந்திய முஸ்லீம்களாகவே இருந்திருப்பார்கள். உடனடியான, நீண்டகால அபாயகரமான விளைவுகள் இதனால் ஏற்பட்டிருக்கும். நாட்டின் அமைதி குலைந்து இந்திய மக்களிடையே பரஸ்பர அவநம்பிக்கைகள் உருவாகி மதக்கலவரம் வெடித்து, இதைக் கட்டுப்படுத்த முடியாது அரசாங்கம் திணறியிருக்கும்.
சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை ஒரு தாக்குதல் இலக்காகப் பயங்கரவாதிகள் தேர்ந்தெடுத்தது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இடத்திலிருந்து ரயில்கள் நாட்டின் பல முனைகளுக்குப் புறப்படுகிறது. இங்கு நடக்கும் நாசவேலைகள் பற்றிய செய்திகள் பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் பரவும்போது, நாட்டின் பல பாகங்களிலிருந்து மக்கள் இங்கு வருவார்கள். அவர்களது நெருங்கிய உறவினர்கள் இறந்திருப்பார்கள், படுகாயமடைந்திருப்பார்கள். அவர்கள் கண்ணால் கண்டது, மீடியா மூலம் கேட்ட செய்திகள் எல்லம் மிகச் சுலபமாக மதக்கலவரங்களைத் தூண்டிவிட முடியும். அதைக் கட்டுக்குள் கொண்டு வருவது அரசுக்குப் பெரிய பிரச்சினையாக இருந்திருக்கும்.
இந்தப் போலித்தனம் அபாயகரமாக இருந்திருக்கும். இந்திய சமூகத்தையும், அரசுகளையும் நிலைகுலையச் செய்திருக்கும். இந்திய முஸ்லீம்களின் பிரச்சினைகள் பெரிய பட்டியலாக இருக்கலாம். அவைகளில் சில கற்பனையாக, சில அவர்களே வருவித்துக் கொண்டிருப்பதாக, சில உண்மையாகவும் இருக்கலாம். என்னாலும் ஒரு இந்திய முஸ்லீம் தனது பிரச்சினைகளுக்காக மக்களைக் கொல்வது, அங்கஹீனம் செய்வது, அப்பாவி மக்களைக் காயப்படுத்துவது போனற மிருகத்தனமான காரியங்களை தங்கள் சொந்த நாட்டு மக்கள் மீது காட்ட மாட்டார்கள். அவர்கள் தாய் நாட்டு மக்களைக் கொல்லமாட்டார்கள். மூத்த போலீஸ் அதிகாரிகளைக் கொன்று சந்தோஷப்பட மாட்டார்கள்.


பம்பாய் அழிகிறதாம்:

ஹோட்டல் தாஜ் பேச்சுப் பதிவுகள்: மறுமுனை: நண்பேனே, கவலை வேண்டாம், பிரச்சினையேதும் இல்லை. உன் வேலையைச் செய். இறைவன் அருளால் பம்பாய் அழிந்து கொண்டிருக்கிறது. 260 மக்கள் காயமடைந்திருக்கிறார்கள். பல போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். 50 தற்கொலைப் படையினர் பிரவேசித்துள்ளனர். 13 - 14 இடங்களில் சூடு நடந்து கொண்டிருக்கிறது. இறைவனருளால் நல்ல சூழ்நிலை அமைந்துள்ளது. கவலைப்பட எதுமில்லை.
இம்முனை: இப்போது ஒரே பிரச்சினை இரண்டு சகோதரர்கள் பிரிந்து போயிருக்கிறார்கள். சீக்கிரம் திரும்பி வருமாறு அவர்களிடம் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன்.
மறுமுனை தொடர்கிறது: உன்னுடைய இடத்துக்கு ஒரு ஹெலிகாப்டர் வரும். ஒரு மந்திரி ஹோட்டலில் சிக்கியிருக்கிறார். மீடியா செய்திகம் ஹோட்டலுக்குள் ஒரு மந்திரி சிக்கி விட்டார் என்று கூறுகிறது. பிரதம மந்திரியும் ஒரு ஹெலிகாப்டரை அனுப்பி அமைச்சரை மீட்குமாறு கூறியிருக்கிறார். உடனே ஹோட்டலுக்கும் தீ வைத்தவிடு. திரைச் சீலைகளுக்கு தீ வைத்து விடு. திரைச்சீலைகளுக்கு தீ வை. அறைகளுக்குத் தீ வை. அந்த மந்திரி எரிந்து போகட்டும்.


ஓட்டலுக்கு தீ வைக்க உத்தரவு:

ஒரு கமிஷனர் கொல்லப்பட்டு விட்டார். ஒரு சுத்தியல் அல்லது திறக்கும் கருவி தேடுமாறு கூறினேன் கிடைத்ததா. நண்பனே, எல்லா இடங்களிலும் தீயணைக்கும் சிலிண்டர்கள் பொறுத்தியிருப்பார்கள். அந்த இடத்தில் ஒரு சுத்தியல் தொங்கும். ஒவ்வொரு ஹோட்டலிலும், ஒவ்வொரு தளத்திலும் இவை இருக்கும். (முணுமுணுப்பு) நம்மை மிகவும் கஷ்டப்படத்திய கமிஷனர் கொல்லப்பட்டுவிட்டான் - இந்த முனையில் இருந்து)
ஹோட்டலுக்கு உடனே தீவைத்து விடு. அந்தத் தீயின் வேகம் வெளியிலிருப்போருக்குத் தெரிய வேண்டும். மக்கள் பீதியில் அலற வேண்டும். மும்பை அதிகாரி - பயங்கரவாத எதிர்ப்புக் குழு அதிகாரி கொல்லப்பட்டுவிட்டார்.
இந்த உரையாடலில் பெரிதும் வற்புறுத்தப்பட்டது தாஜ் ஹோட்டலுக்குத் தீ வைக்க வேண்டுமென்றது.
தான் பணயக் கைதிகளுக்குக் காவலாக இருப்பதாகவும், மேலே ஹோட்டல் மேல் தளத்துக்குச் சென்றவர்கள் திரும்பி வரவில்லை என்றும் அவர்களுக்காக காத்திருப்பவன் இந்த முனையில் இருந்தவன் கூறுகிறான்.
மீண்டும் நரிமான் ஹவுஸ்: பேச்சுப் பதிவுகள்: மும்பை முனையிலிருந்து பாகிஸ்தானியிடம் பேசியவன் "நமது சகோதரர்களில் இருவர் சரணடைந்து விட்டதாகச் சொல்கிறானே அவன்' என்று கேள்வியை எழுப்புகிறான். இல்லை, இது முட்டாள் தனமான பேச்சு என்கிறான் மற்றவன். நேற்று முதல் இன்றுவரை எந்த இடத்தையும் அவர்களால் (இந்திய அதிகாரிகளால்) பிடிக்க முடியவில்லையென்று மறுமுனை ஆசாமி மேலும் கூறுகிறான்.
அவர்கள், நமது சகோதரர்கள் எங்குதான் சென்றார்கள் என்று இங்கே இருந்தவன் கேட்க, "அவர்கள் எங்கே செல்ல வேண்டுமென்று விதிக்கப்பட்டதோ, அங்கே சென்று விட்டார்கள், அவர்கள் சிறப்பாகச் சண்டையிட்டார்கள், அல்லாவைப் போற்றுவோம், வேலை முன்னேறிக் கொண்டு வருகிறது, அவர்களால் (இந்திய அதிகாரிகளால்) இந்த இடத்தை மீட்க முடிய வில்லை' என்று பாகிஸ்தான் முனை ஆசாமி பதில் கூறுகிறான்.
"எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள், தியாகிகளின் மரணத்தை அல்லா ஏற்றுக் கொள்ளட்டும்' என்று இங்கிருந்தவன் பேசுகிறான்.
பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டு விட்டது என்று கூறி, அவர்களைச் சமாளிக்கும் ஆலோசனைகளை மறுமுனையாளன் பேசியது, இந்தப் பதிவில் உள்ளது.
மீண்டும் தாஜ் ஹோட்டல்: மூனறாவது பேச்சுப் பதிவு: தான் பேசுவதை நன்றாகக் கவனித்துக் கேட்குமாறு பாகிஸ்தானியன் கூற, சரி என்று சொல்லுகிறான் இங்கிருப்பவன்.
நீ எங்கிருந்து வந்தாயோ அந்த இடம் கடலை நோக்கியுள்ளது. ஏய், கேட்கிறாயா என்று அவன் கேட்க, இவன் கவனமாகக் கேட்பதாகக் கூறுகிறான்.
"நீ திரும்பிய வழியில் இருந்து பார்த்தால் நீ கடலை நோக்கி இருப்பாய். அந்தச் சாலையின் கோடியில் சிவிலியன்களுக்கான ஒரு கட்டிடம் உள்ளது. உண்மையில் அது கடற்படைக்குச் சொந்தமானது. சிவிலியன்களுக்குத் தரப்பட்டுள்ளது. அங்கு இரண்டு இடங்களில் போலீஸ் நின்று கொண்டிருக்கிறது. தக்க இடத்தில் நின்று கொண்டு உங்களைக் குறிவைத்து நிற்கிறார்கள். உங்களை நோக்கிச் சுட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீ சென்ற இடத்தில் இருந்து திரும்பி, அவர்களைப் பின்னாலிருந்து சுட வேண்டும், புரிகிறதா' என்று மறுமுனையாளர் கேட்கிறான்.
தாஜ் - பேச்சு : மறுமுனையிலிருப்பவன்: "நண்பனே, நீ கீழே வந்துவிட்டாயா, மேல்தளங்களில் தீ வைத்தாகி விட்டதா, கைக்குண்டு சப்தம் கேட்கிறது, இது நடந்து விட்டது, பலர் காயமடைந்துள்ளனர், தீ வைத்து விட்டாயா, விரைவில் செய்' என்று தாஜ் ஹோட்டலில் தீ வைப்பது பற்றியே இவனது பேச்சு அமைந்துள்ளது.
அறைகளிலே உள்ள திரைச்சீலை, குஷன்களைக் குவித்துத் தீ வைத்து ஒவ்வொரு அறையையும் நாசப்படுத்த இவன் அறிவுறுத்துகிறான். ஒருவன் மேலே பிடிபட்டிருக்கிறான். போலும், சரி, நீங்கள் எல்லோரும் (4 பேர்) ஒரே அரையில் இருக்க வேண்டாம், உங்களை யாராவது நெருங்கி விட்டால் சுட்டுத் தள்ளிவிடு, நீங்கள் நான்கு பேரும் இரண்டு அறைகளில் பிரிந்து இருக்க வேண்டும், என்று அவசர ஆலோசனைகளை மறுமுனையாளன் பேசுகிறான்.
இம்முனை - தாஜ் ஹோட்டல்: நாங்கள் ஒவ்வொரு அறையையும் சுத்தம் செய்து வருகிறோம். மேல் தளத்திலிருந்து கீழே வந்துள்ளோம். தீவைப்பதில் கவனமாக, மும்முரமாக இருக்கிறோம், படிக்கட்டுகளுக்கு அருகேயுள்ள அறையில் இருக்கிறோம். ஒருவன் பணயக் கைதிகளுக்குக் காவலாக இருக்கிறான். ஒருவன் உள்ளே உட்கார்ந்து கொண்டிருக்கிறான். இருவர் வெளியே கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கடைசித் தளத்துக்குக் கீழ் தளத்தில் இருக்கிறோம், என்று பதில் சொல்லிக் கொண்டு வந்தவன், திடீரென்று, ஒரு நிமிஷம் பொறு, ஸோஹப் - ஐச் சுட்டுவிட்டார்கள், போனை ஒருநிமிஷம் கட் செய், லயனைக் கட் செய், என்று கூறினான்.


குண்டுகளை வீசுங்கள்:

போனைக் கட் செய்கிறேன், உங்கள் நிலைகளை மாற்றுங்கள், அல்லா அருள்புரியட்டும், உடனே கைகுண்டை வீசு என்று அறிவுறுத்துகிறான். அவர்களை நோக்கி வீசும்படியும் எச்சரிக்கிறான் இங்கே தாஜ்-ல் இருப்பவன் பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று பேச்சை முடிக்கிறான்.
ஹோட்டல் ஓபிராய் உரையாடல்கள்:மறுமுனையாளன்: நீ இருக்கும் பட்டிடத்தின் உச்சியில் படை வீரர்கள் பலமான ஸ்தானங்களில் இருக்கிறார்கள். அங்கிருந்து சத்தம் வரும்போது ஒளிந்து கொண்டு விடுங்கள். அப்படி சத்தம் வராவிட்டால், வெளியே வந்து, நடமாட்டம் தெரியுமிடத்தை நோக்கி சுடவும், ஏதோ வெடிச்சத்தம் கேட்கிறதே, படைகள் சுடும் சத்தமா என்று அவன் கேட்க, ஆம் என்று இவன் கூற, எங்கெங்கே நிற்க வேண்டும், ஒவ்வொருவரிடமும் எத்தனை துப்பாக்கிக் குண்டுகள் இருக்கின்றன. அவர்கள் நெருங்கும்போது, எந்த ஸ்தானத்தில் நிற்க வேண்டும், கைக்குண்டுகளை எறிய வேண்டும், எறிந்து விட்டு வெளியே வந்து வலப்புறமும், இடப்புறமும் சுட வேண்டும். நின்று கொண்டிருந்தால் அவர்கள் பார்வையில் பட்டுவிடுவீர்கள். உட்கார்ந்து கொண்டே வேலை செய்யவும். அப்போது அவர்கள் சுற்றிப் சுற்றிப் பார்ப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு அறையாகப் பார்த்துச் சத்தம் செய்து வருகிறார்கள்.
உங்கள் அறையில் 3 படுக்கைகள் மற்றும் பிற பொருட்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள். வெளியில் கைகுண்டை எறியும்போது, ஒருவருக்கு பின்னால் ஒருவராக நிற்கவும், கைகுண்டுச் சத்தம் அடங்கியவுடன் வெளியே வந்து, இரண்டு புறத்திலும் சுடவும், எதிரிகளில் எத்தனை பேரைக் கொல்ல முடியுமோ கொன்று விடுங்கள். நீங்கள் இருக்கும் தளத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, அவர்களை விரட்டியடிக்க வேண்டும்.
தக்க இடங்களில் நிற்கவும். படுக்கை மெத்தைகள், சோபாக்கள் மறைந்து கொள்ள உதவும். தேவைப்பட்டால் கைகுண்டுகளை எறியவும். உங்கள் கையில் ஏகே 47 மேகசின் எவ்வளவு உள்ளது என்று அவன் கேட்க, இரண்டு மட்டுமேயென்று இவன் பதில் கூறுகிறான்.
சண்டை பலமாக இருக்கட்டும். அவர்கள் புகை குண்டை வீசி உன்னை மயக்கமடையச் செய்து, உன்னை உயிருடன் தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள். இது போன்ற நிலைமை ஏற்படாதவாறு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரண்டு பக்கமும் சுட்டுக் கொண்டே வெளியே வந்து தக்கபடி ஸ்தானங்களை மாற்றி நிற்கவும். 15 -20 புல்லட்டுகளைக் கொண்டு சரமாரியாகச் சுடவும். பின்னர் கையிலிருக்கும் குண்டுகளை லோடு செய்து வெளியே வந்து தூரமான இடத்துக்குச் சென்றுவிடு.
மறுமுனையாளன் தாஜ் ஹோட்டல் பயங்கரவாதிகளுடன் இவ்வாறு பேச, இவர்களும் சரி அப்படியே என்ற ரீதியில் பதில் கூறினார்கள். அல்லாவின் கருணை பற்றி இருவருமே பேச்சில் பறிமாறிக் கொண்டார்கள். கைகுண்டுகள் எறிந்தது, புல்லட், மாகசின்கள் இருப்பு பற்றியும் பேசியபின் இஸ்லாமிய சம்பிரதாய மரியாதைகளை இறுதியாகப் பரிமாறிக் கொண்டனர். அல்லா உங்களுக்காகக் காத்திருக்கிறார் என்று மறுமுனையாளன் கூற இந்த உரையாடல் முடிந்தது.
மீண்டும் நரிமான் ஹவுஸ் பேச்சுப் பதிவு -


பணயக் கைதிகள் கொலை:

மறுமுனையாளன்: பணயக் கைதிகள் உங்களுடன் இருக்கும்வரை உங்களை யாரும் சுட மாட்டார்கள். நான் சொல்வதைப் புரிந்து கொள். உன்னைப் பகைவர்கள் சுடாமல் இருப்பதற்கு இவர்கள் உதவியாக (அரனாக) இருப்பார்கள். "எங்களைச் சுட ஆரம்பித்து விட்டால்' என்று ஓபிராய் ஆசாமி கேட்க, உடனே அவர்களைத் தீர்த்துக் கட்டி விடுமாறு இவன் ஆலோசனை கூறுகிறான். இதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லுகிறான். ஒவ்வொரு படையும் யாருக்கும் அபாயமில்லாமல் தாக்குவதை ஒரு கடமையாகக் கொண்டவர்கள். இப்பொழுது அவரகளை (பணயக் கைதிகளை) காப்பாற்றுவதில் அவர்கள் கவனம் உள்ளது. அவர்கள் கொல்லப்பட்டால் அந்த நாடுகளுடனான உறவு (அன்னிய நாட்டவர்களும் பணயக் கைதிகளாகப் பிடிபட்டிருந்தனர் என்பது நினைவு கூறத்தக்கது) பாதிக்கப்படும். பெரிய குரல்கள் ஒலிக்கும். இது இறைவனின் விருப்பம். இந்த உரை இவ்வாறு முடிகிறது.
ஒவ்வொரு கோணத்திலும் இருந்து கிடைத்துள்ள பெரிய சாட்சியங்களை வைத்து ஆராயும் போது, மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல்களுக்கு பின்னால் பெரிய திட்டமிட்ட சதி உள்ளதென்று புலப்படும். இதில் இறந்துவிட்ட குற்றவாளிகள் மற்றும் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளோடு மனுதாரன் கசாப்புக்கும் ஒரு பங்கு உண்டு. எனவே மற்ற இடங்களில் பயங்கரவாதிகளில் 8 பேர் நடத்திய தாக்குதல்களுக்கும், சிஎஸ்டி ரயில் நிலையத்தில் மனுதாரன் கசாப் மற்றும் அவன் கூட்டாளி அபு இஸ்மாயில் நடத்திய தாக்குதலுக்கும் தொடர்பு கிடையாது என்று வாதாட முயற்சிப்பது வீண் வேலை பயனற்ற முயற்சி.
இந்தச் சதித்திட்டம், பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு மும்பை கடற்கரையில் வந்திறங்கிய, 10 பயங்கரவாதிகளோடு மட்டுமே முடியவில்லை, மேலும் தொடர்ந்தது, வளர்ந்தது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அந்த மூலத் திட்டம், தொடர்ச்சி, வளர்ச்சி இங்கு (மும்பையில்) நிறைவேற்றப்பட்டது. இந்தப் பெரிய சதித்திட்டத்தை நிறைவேற்றுகையில், அந்தந்த இடங்களில் ஏற்படும் நிலைமைகளைச் சமாளிப்பது பற்றி அவ்வப்போது இவர்களது வழிகாட்டுதலும் அறிவுரைகளும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், புதிய சதிகளும் இந்த நிறைவேற்றப் பணியில் புகுந்துள்ளன. 8 பயங்கரவாதிகளும் அவரவர்கள் பிடித்துக் கொண்டிருந்த மூன்று இடங்களிலும் கொல்லப்பட்ட பின்னரே இந்தச் சதி முடிவுக்கு வந்தது.


டி.வி., காட்சிகள்:

ஊடகங்களின் அவசரப்போக்கு: இந்த உரையாடல் பதிவுகளைத் தாண்டிச் செல்வதற்கு முன்னால், இந்திய பிரபல பத்திரிகைகள், எலக்ட்ரானிக் மீடியா எல்லாம் தாஜ் ஹோட்டல், ஹோட்டல் ஓபிராய் மற்றும் நரிமான் ஹவுஸ் நிகழ்ச்சிகளை வெளியிட்ட, மற்றும் நேரடி ஒளிபரப்பாகக் காட்டியது பற்றியச் சில வார்த்தைகள் கூறியே ஆக வேண்டும்.
எல்லைக்கு அப்பாலிருந்த பயங்கரவாதிகள் இந்திய டிவி நிகழ்ச்சிகளைக் கூர்ந்து கவனித்துள்ளனர் என்பதை இந்த உரையாடல் பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. இங்குள்வர் மூன்று இடங்களில் சிக்கிக் கொண்டிருந்தது, அவர்களை எதிர்த்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பில் அவர்கள் கண்டுள்ளனர். உயர் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவமும் இவற்றில் வெளியாகியுள்ளன. இதில் ஒரு காட்சியில், ஒரு பத்திரிகைச் செய்தி ஒரு யூகமாகக் குறிப்பிட்டிருந்த செய்தி - குபேர் படகில் காணப்பட்டது பயங்கரவாத கும்பலின் உடல் - பற்றி இவர்கள் கேலியாகப் பேசியதும் இந்த இருமுனை உரையாடல்களில் பதிவாகியுள்ளன.
இந்த உரையாடலில் மறுமுனைக் கூட்டாளிகள் பயங்கரவாதிகளிடம் தாஜ் ஹோட்டல் கோபுரக் கலசம் தீப்பிடித்துக் கொண்டு விட்டதாகப் பேசுவதும் பதிவாகியுள்ளது. ஹோட்டல் அறையில் சிக்கிக் கொண்டு விட்ட பயங்கரவாதிகளுக்கு இது தெரியாது. இந்தத் தீயை இன்னும் கொழுந்து விட்டெரியச் செய்தால், அவர்களுக்கு அது நன்மையாக இருக்குமென்று மறுமுனையாளர்கள் அறிவுறுத்துவது பேச்சு பதிவுகளில் உள்ளது. தாஜ் ஹோட்டலில் இருந்தவர்கள் கையெறி குண்டுகள் வீசியதும் பதிவாகியுள்ளது.
கையெறி குண்டு வீச்சு வெடித்த சத்தம், மக்கள் காயமடைந்தது, ஓட்டல் ஓபிராயில் படைகள் வந்திறங்கி பல ஸ்தானங்களில் நிற்பது, தாஜ் ஹோட்டல் அருகேயுள்ள கட்டிடத்தில் (அது கடற்படைக்குச் சொந்தமானது என்றாலும் சிவிலியன்களுக்குத் தரப்பட்டுள்ளது என்ற விவரத்துடன்) மறுமுனையாளர்கள் தீவிரவாதிகளுக்குத் தெரிவிப்பது, அங்கிருந்து கொண்டு தாக்கப் போகிறார்கள் என்று தெரிவித்தது, தாக்குவதற்குத் தயாராகுமாறு அறிவுரை கூறுவது ஆகிய பல நிகழ்ச்சிகளை அக்கரைச் சதிகாரர்கள் இந்திய டிவி நேரடி அலைவரிசைக் காட்சி மூலம் கண்டு, அவர்களது இந்திய சகாக்களுக்குத் தெரிவித்தது மட்டுமின்றி ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். இந்திய டிவி ஒளிபரப்பு இவர்களுக்கு உதவியாக அமைந்து விட்டது. இந்தியப் பாதுகாப்புப் படையின் ஒவ்வொரு அசைவையும் பயங்கரவாதிகளின் இடைவிடாத கையெறி குண்டு வீச்சு, துப்பாக்கித் தாக்குதலை அவர்கள் சமாளித்த காட்சிகள் இவர்கள் இந்திய டிவி மூலம் கூர்ந்து கவனித்துள்ளனர்.
உரையாடல் பதிவுகள் ஒருபுறமிருக்கட்டும். மிகவும் குரூரமான முறையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு இடத்திலும் பயங்கரங்களை நிகழ்த்தியுள்ளனர். இவையனைத்தும் இந்திய டிவிக்களில் ஆரம்ப முதல் இறுதிவரை, நிமிடத்துக்கு நிமிடம் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பாகியுள்ளன. பாதுகாப்புப் படைகள் பயங்கரவாதிகளை ஒழிக்க நகர்ந்து வந்த ஒவ்வொரு அடியும் இந்த சேனல்களில் ஒளிபரப்பானது. இதன் விளைவாக பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையிடமிருந்து முற்றிலும் மறைந்து கொண்டனர். அவர்கள் எங்கே உள்ளனர் என்று படையினரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. என்ன ஆயுதங்கள் வைத்துள்ளனர் என்று அறிந்து கொள்ள முடியவில்லை. எப்படி நகர்வார்கள் என்று தெரிந்து கொள்ளமுடியவில்லை. டிவி சேனல்கள் மூலமாக நிகழ்ச்சிகளைக் கண்ட மறுமுனைச் சதி கூட்டம் அவ்வப்போது தமது சகாக்களுக்கு ஆலோசனை கூற இந்தப் பொறுப்பற்ற செய்தி வெளியீடுகள் உதவியுள்ளது.
இந்த டிவி காட்சிகள்தான் பாதுகாப்புப் படையினரின் மரணங்களுக்கு, காயங்களுக்கு சாத்தியமாக அமைந்தது என்று இந்த மேல் முறையீடு மனுவில் முடிவெடுப்பது சாத்தியமில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சிகள் காட்டப்பட்ட விதம் பாதுகாப்புப் படைப்பணிகளைக் கஷ்டமாக்கியதுடன், அபாயங்களையும் அவர்களுக்கு உருவாக்கியது என்பது சந்தேகத்துக் கிடமில்லாத உண்மை.
இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் டிவி சேனல்களில் செயல்பாடுகளுக்கு பேச்சுரிமை, வெளிப்பாடு உரிமைகளை மேற்கோள் காட்டி நியாயப்படுத்த முயல்வது ஏற்றுக் கொள்ள முடியாத வாதம். எல்லா உரிமைகளையும் போலவே அரசியல் சட்டத்தின் 19வது பிரிவுப்படி வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. அரசியல் சட்டத்தின் 21வது பிரிவின் கீழ் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுவதையும், தேசீய பாதுகாப்பப் படையின் நலத்தை மறந்து அபாயத்துக்குள்ளாக்குவதையும் பேச்சுரிமை மற்றும் வெளிப்பாடு உரிமை என்ற பெயரால் நியாயப்படுத்த முயற்சிப்பதையும் ஒருபோதும் ஏற்க முடியாது.
இந்தக் காட்சிகளை எல்லாம், பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுச் சதித்திட்டம் முறியடிக்கப்பட்ட பின்னரும் ஒளிபரப்பப்பட்டிருக்கலாம். அப்படிச் செய்தால் இந்த டிவி நிகழ்ச்சியில் ஒரு த்ரில் மற்றும் மதிப்பீடுகள் கிடைத்திருக்காது. ஆனால் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களை நேரடியாக ஒளிபரப்பியதன் மூலம் இந்தியத் தொலைக்காட்சிகள் நாட்டு நலனை, சமூக நலனை முக்கியமாகக் கருதவில்லை. நாட்டின் பாதுகாப்பைப் புறக்கணித்து அவர்களது வர்த்தக லாபங்களை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Ramesh - goa,இந்தியா
04-ஜூலை-201414:54:50 IST Report Abuse
K.Ramesh தினமலரில் வந்துள்ள 30 கட்டுரைகள் மிகவும் அருமை. நமது நாட்டின் மேல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலை கண் முன் கொண்டு வந்துள்ளது. இதில் உயிர் நீத்த பொது மக்கள், போலீஸ், பாதுகாப்பு படை வீரர்கழுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். மறுபடி ஒரு கோர சம்பவம் இது போல் நடக்க வேண்டாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X