மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம்| Dinamalar

தமிழ்நாடு

மன்னர் அரியணை ஏறிய 1,000 ஆண்டு விழா கல்லூரி மாணவர்களின் தீபச்சுடர் ஓட்டம்

Added : ஜூலை 26, 2014 | கருத்துகள் (3)

தஞ்சாவூர்: தஞ்சையில் மாமன்னர் முதலாவது ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய, ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற தீபச்சுடர் ஓட்டம் நடைபெற்றது.உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை (பெருவுடையார் என்ற பிரகதீஸ்வரர்) கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன். இவரும் தந்தை வழியை பின்பற்றி, அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில், தஞ்சை பெரியகோவிலுக்கு இணையாக, பிரம்மாண்ட கோவிலை (பெருவுடையார் என்ற பிரகதீஸ்வரர்) கட்டினார்.இந்த கோவில் தற்போது, உலக பாரம்பரிய சின்னமாக திகழ்கிறது. மாமன்னர் ராஜேந்திரசோழனின் பெருமையை பறைசாற்றும் விதமாக, அவர் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டுவிழா, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக்குழுமம் சார்பில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஆண்டுவிழாவை முன்னிட்டு, கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோவிலை சுற்றி, ஆயிரம் மெஹா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான தீபச்சுடர், தஞ்சை பெரியகோவிலில் இருந்து, கங்கை கொண்ட சோழபுரத்துக்கு, நேற்று காலை தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்பட்டது.தீபச்சுடரை பின்தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் ஆயிரம்பேர் இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். தீபச் சுடர் மற்றும் இருசக்கர வாகன பேரணியை, தஞ்சை பெரியகோவில் முன், மாவட்ட கலெக்டர் சுப்பையன் துவக்கிவைத்தார். எழுத்தாளர் பாலகுமாரன், இன்டாக் அமைப்பின் கௌரவச் செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். தீபச்சுடர் மேல வீதி, வடக்கு வீதி, கரந்தை, பள்ளியக்ரஹாரம் வழியாக, கங்கை கொண்ட சோழபுரத்தில் விழா நடைபெறும் இடத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X