காலப்போக்கில் மறைந்து வரும் ராயக்கோட்டை ரகசியம்; வரலாற்று ஆர்வலர்கள் கவலை| Dinamalar

தமிழ்நாடு

காலப்போக்கில் மறைந்து வரும் ராயக்கோட்டை ரகசியம்; வரலாற்று ஆர்வலர்கள் கவலை

Added : ஆக 09, 2014

ஓசூர் : ராயக்கோட்டை மாவட்ட ரகசியம், காலப்போக்கில் மறைந்து வருவதாக, வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, வரலாற்று ஆர்வலர்கள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட, ராயக்கோட்டை பகுதிக்கு மற்றொரு பெயர் பாராமஹால் ஆகும். ராயக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு, ஜெகதேவி, ராயக்கோட்டை, நாகமலை, மத்தூர், மல்லப்பாடி, தட்டக்கல், கிருஷ்ணகிரி, மகாராஜகடை, சுகனகிரி, வீரபத்திர துர்க்கம், போளுதிம்மராயதுர்க்கம், காவிரிபட்டணம் ஆகிய, 12 பகுதிகளில் கோட்டைகள் கட்டி, அரசாட்சி செய்தவர் ஜெகதேவராயர் ஆவார். இயற்கையான குகை அமைப்பும், பரந்து விரிந்த மலைக்கோட்டையும் கொண்ட ராயக்கோட்டையில் இருந்து, ஆறு பாராமஹால் பகுதியை கட்டுப்படுத்த முடிந்ததால், 15ம் நூற்றாண்டு முதல்,19ம் நூற்றாண்டு வரை, ராயக்கோட்டை தலைமையிடமாக செயல்பட்டது. ஜெகதேவராயர், முஸ்தபாகான், மராட்டியர்கள், கஸ்பீர்கான், ஆலம்கீர், நவாப் அப்துல்நபி, அப்துல் முகமது கான், அப்துல் மூசுப் கான், அப்துல் முசாத்கான், பீனா விசாஜி பந்த், ஐதர் அலி, மைசூர் உடையார்கள், திப்பு சுல்தான் ஆகியோர், ராயக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு, பாராமஹால் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.
கடந்த, 1782ம் ஆண்டு, மேஜர் கவுடியின் தலைமையில், திப்பு சுல்தான் மீது பீரங்கி சண்டைகளை நடத்திய ஆங்கிலேயர், ராயக்கோட்டையை தங்கள் வசப்படுத்தினர். அதையடுத்து, மலைக்கோட்டையை அழிக்காமல், ஏழாவது மதராஸ் பட்டாலியனை, பாதுகாப்பு படையாக கோட்டையில் அமர்த்தினர். ராயக்கோட்டை ஆங்கிலேய ராணுவ தலைமையிடமாக, 1861ம் ஆண்டு வரை இருந்து, பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக ராயக்கோட்டை இருந்ததால், ராயக்கோட்டையை ஒரு மாவட்டமாகவும், சேலத்தை மற்றொரு மாவட்டமாகவும் பிரித்தனர்.இரு மாவட்டத்திற்கும், கலெக்டராக கேட்டன் ரிப் பொறுப்பேற்றார். ராயக்கோட்டைக்கு மட்டும் கிரகாம் என்பவர் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டார். ராயக்கோட்டை தாலுகாவின் தாசில்தார் அப்போஜிராவ், சிராசுதார் வாசுதேவராவ், ராணுவ படை கர்னல் ஷேசய்யா, ஆகியோர் மூலம் ராயக்கோட்டை மாவட்டம் கம்பீரமாக செயல்பட்டு வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்த பின், ராயக்கோட்டை மாவட்டத்தை ஒன்றாக இணைத்து, சேலம் மாகாணமாக மாற்றப்பட்டது. பின்னர், 1965 ம் ஆண்டு தர்மபுரி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 2004ம் ஆண்டு கிருஷ்ணகிரி தனி மாவட்டம் ஆனது. ஆனால், கம்பீரமாக செயல்பட்டு வந்த ராயக்கோட்டை மாவட்டம் தற்போது, ஊராட்சியாக மாறி விட்டது. காலசுழற்சி காரணமாக, ராயக்கோட்டை ரகசியம் படிப்படியாக அழிந்து வருகிறது. மேலும், கோட்டைகள் மற்றும் ஜெகதேவராயர் கட்டிய பாதுகாப்பு அறைகள் சரியாக பராமரிக்கப்படாததால், சமூக விரோத கூடாரமாக மாறியதுடன், அழிவை சந்தித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X