முழுமை பெறாத பாதாள சாக்கடை திட்டம்| Dinamalar

முழுமை பெறாத பாதாள சாக்கடை திட்டம்

Added : ஆக 19, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

(தமிழகத்தின் பல்வேறு புகுதிகளிலும் மக்கள் பல்வேறு பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இவற்றில் பல பிரச்னைகள் அரசின் கவனத்திற்கே செல்லாத நிலை காணப்படுகிறது. குடிநீர், கழிவு நீர், சாலை வசதி, கட்டட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் என்று அனைத்து துறைகளிலும் குறைகள் களையப்படாமல் உள்ளன. சிலமுக்கிய பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்ட சென்று அவற்றிற்கு தீர்வு காணும் ஒரு முயற்சியே இந்த பகுதி.)


இறங்காத வேதாளமும் நிறைவேறாத 'பாதாளமும்

' மதுரை மாநகராட்சியில் இன்னும் முழுமை பெறாத பாதாளச் சாக்கடை திட்டத்தால் வீதிகளில் பாய்ந்த கழிவுநீர் வீடுகளுக்குள் பாயும் சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் அநேகமாக பேரூராட்சி, ஊராட்சிகளில் தான் பாதாளச் சாக்கடை திட்டம் அறிமுகப்படுத்தபடவில்லை. பிற உள்ளாட்சி அமைப்புகளில் இத்திட்டத்தை நிறைவேற்றி, கூடுதல் திட்டங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர்.தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரம் என்ற பெருமை கொண்ட மதுரையில் இதுநாள் வரை பாதாளச் சாக்கடை திட்டம் முழுமை பெறவில்லை. கடந்த ஆட்சியில் மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டத்தில் மதுரையில் பாதாளச் சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மழைநீர் வடிகால் திட்டம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது.


மத்திய, மாநில அரசுகளின் நிதி கிடைத்த நிலையில் மாநகராட்சியின் பங்களிப்புத் தொகை இல்லாமல் திட்டம் 'நட்டாற்றில்' நின்றது. ஜெ., முதல்வராக பொறுப்பேற்ற பின் பாதியில் நிற்கும் மூன்று திட்டங்களையும் நிறைவேற்ற ரூ.250 கோடி ஒதுக்கினார்.மதுரையின் தேவைக்கு முன்னுரிமை அளித்து சிந்தித்திருந்தால் பாதாளச் சாக்கடை திட்டத்தை தான் அதிகாரிகள் தேர்வு செய்திருக்க வேண்டும். மாறாக மழைநீர் வடிகால் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்தனர். சரி, அதாவது உருப்படியாய் நிறைவேறியதா என்றால் இல்லை. ஆங்காங்கே அரைகுறையாக பணி நின்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகள் தரும் 'மேம்போக்கு' பதில்களே அதற்கு சாட்சி.மழைநீர் வடிகாலும் நிறைவேறவில்லை, பாதாளச் சாக்கடை திட்டமும் காணவில்லை. வீதிகளில் பாய்ந்து கொண்டிருந்த சாக்கடை, தற்போது வீடுகளில் பாயத்தொடங்கிவிட்டது. கேட்டால் மழைகாலம் என்கிறார்கள். மழைநீர் வடிகால் திட்டத்தின் லட்சணம் இது தானா?


கால்வாயில் வடிந்து செல்ல வேண்டிய மழைநீர் வீடுகளில் பாய்கிறது, வீதிகளில் தேங்குகிறது. பல வார்டுகளில் இன்னும் பாதாளச் சாக்கடை இணைப்பே வழங்கவில்லை. இதில் கொடுமை என்னவென்றால் இணைப்பே இல்லாத போது வரி வசூலில் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் வசூலிக்கின்றனர்.மதுரையில் குடிநீரில் சாக்கடை கலக்கும் பிரச்னைக்கு முக்கிய காரணம் பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படாததே. இருப்பது போதாதென விரிவாக்கத்தில் இணைந்த 28 வார்டுகளுக்கு இனிமேல் தான் பாதாளச் சாக்கடை பற்றி சிந்திக்கவே வேண்டும்.விரிவாக்கத்திற்கு முந்தைய 72 வார்டுகளுக்கு எப்போது பாதாளச் சாக்கடை திட்டம் நிறைவேறும் என்ற கேள்விக்கு இதுவரை விடையில்லை. பிறகு எப்படி விரிவாக்க பகுதிக்கு கிடைக்கும். பாதாளச் சாக்கடை பணிக்காக ரோடுகளை நொறுக்கினர். ரோடும் வரவில்லை, பாதாளச் சாக்கடை திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.மரத்திலிருந்து இறங்காத வேதாளம் கதை போல, மதுரைக்கு பாதாளச் சாக்கடை திட்டமும் கிடைக்கவில்லை. தமிழக அரசு முன்வந்து தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.


சதவீதங்கள் 'வேஸ்ட்' ; மாநகராட்சியில் முதன்முறையாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க., நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக இருப்பது பாதாளச் சாக்கடை திட்டம். வரக்கூடிய புகாரில் பெரும்பாலானவை சாக்கடை தொடர்பானவை தான். கவுன்சிலர்களுக்கு எதிராக மக்கள் வைக்கும் புகார்களும் சாக்கடை தொடர்பானவை தான். ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் கவுன்சிலர்கள் புலம்பும் போதெல்லாம் '60 சதவீதம் முடிந்துவிட்டது, 90 சதவீதம் முடிந்துவிட்டது' என அதிகாரிகள் கணக்கு காட்டுகிறார்களே தவிர, பணியில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதிகாரிகளின் இந்த சதவீத கணக்கு ஒட்டுமொத்தத்திற்கு 'வேஸ்ட்'. கடந்த கூட்டத்தில் 90 சதவீதம் பாதாளச் சாக்கடை பணிகள் நிறைவடைந்துள்ளதாக நகர் பொறியாளர் மதுரம் கூறினார். இணைப்பே பல இடங்களில் வழங்கப்படாத போது 90 சதவீதம் என்பது என்ன அடிப்படையிலோ?


கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம்:

ஆலந்தூரில், கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால், தொற்று நோய் பரவும் அச்சம் நிலவுகிறது.


ஆலந்தூர் மண்டலம், 161வது வார்டு, ஆதம்பாக்கம், டி.என்.ஜி.ஓ., காலனி, முருகன் நகர், ஜீவன் நகர் மற்றும் மேற்கு கரிகாலன் சாலை ஆகிய பகுதிகளில், கடந்த ஒரு வாரமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது.சோப்பு போட்டு குளித்தபிறகும், உடம்பில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பகுதிவாசிகள் தெரிவித்தனர். மேலும், தொற்று நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர்.


இது குறித்து, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில், '161, 162ம் வார்டுகளில், பெரும்பாலான வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் வடிகாலில் கலக்கிறது. மேற்குகரிகாலன் தெருவில் மழைநீர் கால்வாயை ஆக்கிமித்து கட்டடம் கட்டி உள்ளதால், அந்த பகுதியில் கழிவுநீர் தேக்கம் ஏற்பட்டு குடிநீருடன் கலக்கிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை கூறி விட்டோம்'என்றனர்.பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு:

குறிச்சி : கோவை, குறிச்சி பிரிவு அருகேயுள்ள என்.பி., இட்டேரி ஆத்துப்புறம்போக்கில், பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.


ஆத்துப்பாலத்தை அடுத்த குறிச்சி பிரிவு, என். பி., இட்டேரி பகுதியில், நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இங்கு வசிப்போரில், ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர், பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்கி, விற்பனை செய்கின்றனர். இதில், மின் மற்றும் கேபிள் ஒயர்களும் அடங்கும்.இம்மின் மற்றும் கேபிள் ஒயர்களை எரித்து, அதிலுள்ள 'காப்பர்' கம்பிகளை தனியாக பிரித்தெடுத்து, அதிக விலைக்கு விற்கின்றனர். இதற்காக, இவர்கள் இப்பகுதியின் கடைசியிலுள்ள ஆத்துப்புறம்போக்கு, காலியிடத்தை பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு வசிப்போருக்கு, மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன; சுற்றுச்சூழல் பாதிப்பும் உண்டாகிறது.


அதுபோல நேற்றும் சிலர் கேபிள்களை எரித்ததால், அப்பகுதியில் கரும்புகை பரவியது. இதுகுறித்து, அங்கு வசிப்போர் போத்தனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். மேலும்,'அப்பகுதியில் கழிவுகளை எரித்தால், வழக்கு பதிவு செய்யப்படும்' என, எச்சரிக்கை விடுத்தனர்.குண்டும், குழியுமாய் போன ரோடுகள்:

குண்டும், குழியுமாகவும், நடக்கக்கூட லயக்கற்ற ரோட்டால், வாகனங்கள், ஆடி, அசைந்தும், சாய்ந்தபடியும் பயணிக்கின்றன. இதுகுறித்து, ஈரோடு, பூந்துறை ரோடு, டெலிஃபோன் நகர் பகுதியினர் கூறியதாவது:


பூந்துறை ரோடு, டெலிஃபோன் நகரில், பாதாள சாக்கடை திட்டத்துக்காக, ரோட்டை தோண்டி, அதை சரி வர மூடாமல் சென்றனர். கடந்த பல மாதங்களுக்கு முன், முடிக்கப்பட்ட இப்பணியில், அனைத்து இடங்களிலும் ரோட்டை முறையாக சமன் செய்யாமல், பள்ளம், மேடாக உள்ளது. பாதாள சாக்கடைக்கான இணைப்பு சிமென்ட் மேடுகள் உயரமாக போட்டுள்ளதால், அதில் வாகனங்கள் செல்ல முடிவதில்லை. இதனால், எந்நேரமும், டூவீலர் உட்பட அனைத்து வாகனங்களில் செல்வோரும், விபத்துக்களை சந்திக்கும் நிலையே நீடிக்கிறது. குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, அதன் ஒருபுறம் படுத்தவாறு செல்கிறது. பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள், இப்பாதையை கடக்க முடியாமல் திணறுகிறது.


மேலும், விநாயகர் தெரு, மூன்றாவது வீதியிலும், தண்ணீர் திறக்கும் வால்வுகள், இரண்டு அடி பள்ளத்தில் உள்ளது. சிமென்ட் தொட்டி போல, பூமிக்குள் கட்டப்பட்டுள்ள இந்த பள்ளம் திறந்து கிடப்பதால், நடந்து செல்பவர்கள், டூவீலரில் பயணிப்பவர்கள் குழிக்குள் சிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, குழந்தைகள், இக்குழிக்குள் விழுந்துவிடும் அச்சம் உள்ளது. இப்பகுதிக்கு, குடிநீர் கூட சரிவர கிடைப்பதில்லை, என, புகார் தெரிவித்தனர். வாரம் ஒரு முறை கிடைக்கும் குடிநீரும், ஒரு மணி நேரம், குறைந்த அளவிலேயே வருவதால், மக்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால், இப்பகுதியில், வசிப்போர், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் கேனை, 25 ரூபாய்க்கு வாங்கி தான், சமையல் செய்கின்றனர், என்றனர். இதுகுறித்து, 46வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரமூர்த்தி கூறியதாவது: பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்தும், வரும் செப்டம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதத்துக்குள், ரோடுகள் அனைத்தும் சீர்செய்யப்பட்டு விடும். 46, 47வது வார்டுக்காக, ரோடுகள் அமைக்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைந்து, ரோடுகள் அமைக்கப்படும், என்றார்.பாதுகாப்பற்ற ஆழ்துளை கிணறு:

தாரமங்கலம் அருகே, பாதுகாப்பற்ற நிலையில் அமைந்திருக்கும் ஆழ்துளை கிணற்றால், குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.


தாரமங்கலம் யூனியன், தெசவிளக்கு கிராமம் கொத்தான் வளவில், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக, 20 ஆண்டுகளுக்கு முன், ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, கைப்பம்பாக இயங்கி வந்தது. ஐந்து ஆண்டுக்கு முன்பு, ஆழ்துளை கிணற்றின் அருகே, சின்டெக்ஸ் தொட்டி அமைத்து, பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. மூன்று ஆண்டுகளாக, ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் இல்லாததால், தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளது.


ஆழ்துளை கிணற்றில் நீர் எடுப்பதற்கான, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, அதில் இருந்த இரும்பு குழாய்கள் காணாமல் போனது. ஆழ்துளை கிணற்றின் மேல்பகுதி, மூடி வைக்கப்படாமல் திறந்த வெளியில் இருப்பதால், ஆழ்துளை கிணற்றின் அருகே குடியிருப்பவர்களின் குழந்தைகள் மட்டுமன்றி, ரோட்டில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளும், திறந்த வெளியில் உள்ள ஆழ்துளை கிணற்றை, வேடிக்கை பார்த்தபடி செல்கின்றனர்.இதனால்,குழந்தைகள் ஆழ்துளை கிணற்றில் விழும் அபாயம் உள்ளது. குழந்தைகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும், ஆழ்துளை கிணற்றை மூடி பாதுகாக்க, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அடிப்படை வசதியின்றி வியாபாரிகள் அவதி

: அனுப்பர்பாளையம் வாரச்சந்தையில், அடிப்படை வசதிகளின்றி வியாபாரிகள் அவதிப்படுகின்றனர்.


திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம் அங்கேரிபாளையம் ரோட்டில், மாநகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை உள்ளது. ஞாயிறுதோறும் செயல்படும் இந்த வாரச்சந்தைக்கு, திருப்பூர், அவிநாசி, சேவூர், பெருமாநல்லூர், குன்னத்தூர், கோபி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பாத்திரம், காய்கறி, மளிகை பொருட்கள், துணி வகைகள், பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், தண்ணீர் பந்தல், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், ஸ்ரீநகர், பிச்சம்பாளையம், பிச்சம்பாளையம் புதூர், போயம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.


வியாபாரிகள் கூறும்போது, "சந்தையில், பொருட் கள் வைத்து விற்பனை செய்ய, மேடை இல்லை; மேற்கூரை வசதியும் கிடையாது. சாக்கு பைகளையே கூரையாக அமைத்துள்ளோம். மழை நேரத்தில் வியாபாரம் செய்ய முடியாத நிலை உள்ளது. மண் தரையாக உள்ளதால், மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக உள்ளது. மழைநீர் தேங்குவதால், பொருட்களும் வீணாகின்றன. கழிப்பறையில், கூடுதல் கட்டணம் வசூல் செய்கின்றனர். கடைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம், போதிய வசதி செய்துதரவில்லை. மழைக்காலமாக இருப்பதால், மேற்கூரை மற்றும் சிமெண்ட் தளம் அமைத்து தர வேண்டும்,' என்றனர்.


மண்டல தலைவர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ""மேற்கூரை மற்றும் சிமெண்ட் தளம் அமைக்க, திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு,அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X