சிறிய காசிலிருந்து பெரிய தகவலைக் கொடுத்துள்ளார்! : முனைவர் இரா.நாகசாமி பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறிய காசிலிருந்து பெரிய தகவலைக் கொடுத்துள்ளார்! : முனைவர் இரா.நாகசாமி பாராட்டு

Added : ஆக 26, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சிறிய காசிலிருந்து பெரிய தகவலைக் கொடுத்துள்ளார்! : முனைவர் இரா.நாகசாமி பாராட்டு

சென்னை: ''நூல் ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி, தனக்குக் கிடைத்த சான்றுடன் கூடிய தகவல்களை, மிக அழகாக எடுத்து, இவ்வளவு பெரிய வரலாற்றை கொடுத்துள்ளதை பாராட்ட வேண்டும். சிறிய காசில் எவ்வளவு பெரிய தகவல் உள்ளது என்பதை, அவர் கூறியுள்ளார்,'' என, தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் முனைவர் இரா.நாகசாமி பேசினார்.
'தினமலர்' ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதிய, 'செழிய, செழியன் நாணயங்கள்' நூலை வெளியிட்டு, முனைவர் நாகசாமி பேசியதாவது: இந்தப் புத்தகம் சிறப்பு மிக்கது என்றால், தவறாக ஆகிவிடும். காரணம், அவர் எழுதியுள்ள அத்தனை புத்தகங்களும் சிறப்பான புத்தகங்கள்; எனவே, இதை மட்டும் சிறப்பானது என்று கூறுவது தவறு.கொற்கைக்கும் எனக்கும் தொடர்பு உண்டு. அந்த ஊர் பழமையான ஊர் என்று, கால்டுவெல் ஏற்கனவே தெரிவித்துள்ளார். கொற்கையில் முதலில் அகழ்வு ஆராய்ச்சி செய்தபோது, நாங்கள் தங்கியிருந்தது, ஒரே ஒரு அறை கொண்ட பஞ்சாயத்து அலுவலகம். அகழ்வாய்வில், சில பண்டைய ஓடுகள் கிடைத்தன. நாங்கள் தங்கியிருந்த அறைக்கு எதிரில், குழி போட்ட போது, ஒரு பெரிய செங்கல் கிடைத்தது. அந்த இடத்தை அதிகமாக தோண்டிய போது, தண்ணீர் ஊற்றாக அடித்தது. அந்த இடத்தில் தண்ணீர் முழுதும் நிரம்பியதால், அங்கிருந்த படிமங்களை, ஆய்வு செய்ய முடியவில்லை. தொடர்ந்து தோண்டிய போது, கரி கிடைத்தது.அந்தக் கரி, தண்ணீரில் ஊறியிருந்த நிலையில், காலத்தை கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதை டாடா ஆய்வு மையத்திற்கு அனுப்பியபோது, கி.மு., 8ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரிய வந்தது. அதன் பின், எழுத்து பொறிக்கப்பட்ட, பானை சில்லு கிடைத்தது. ஆனால், அது நீரில் நன்கு ஊறியிருந்ததால், அது, 8ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதை ஏற்க முடியவில்லை. அதன் பின், ஆய்வை முடித்து, அங்கிருந்து சென்றோம்.கொற்கையில் வரலாற்றுச் சின்னம் இல்லாவிட்டாலும், சுற்று வட்டார பள்ளி மாணவர்களுக்கு, கொற்கையின் வரலாற்றை எடுத்துச் சொல்ல, 'கியூரேட்டர்' ஒருவரை நியமித்தோம்.இந்த நூலில் கொற்கைக்கு முதலிடம் கொடுத்து, கொற்கை வரலாற்றுக்கு எவ்வளவு சிறப்பை கொடுத்துள்ளது என்பதைக் கூறி, அங்கிருந்து கிடைத்த காசுகள், தாமிரபரணியில் கிடைத்த காசுகளை கொண்டு, நாங்கள் செய்ய முடியாமல் போனதை, மிக அழகாக அற்புதமாக செய்திருக்கிறார் என்பதால், பாராட்டாமல் என்ன செய்ய முடியும்!இந்த புத்தகத்தில், நல்ல அழகான காகிதம், இதில், காசுகளை கட்டம் போட்டு காட்டி, அதன் கீழ், அதில் உள்ள வரிவடிவங்களை போட்டு, அதன் மேல் உள்ள பூ எந்த வடிவம் என்பதை கூறி, படத்தில் என்ன இருக்கிறது, எழுத்துக்கள் என்னவாக இருக்கலாம் என்பதை எடுத்துக் காட்டிஉள்ளார். காசை அதன் அளவிற்கே போடாமல், ஒன்றரை மடங்கு, இரண்டு மடங்கு பெரிதாக போட்டிருக்கிறோம் என்ற அளவை குறிப்பிட்டு, அறிவியல் நுட்ப தகவல்களையும் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.மேலை நாட்டாராக இருந்தாலும், கீழை நாட்டாராக இருந்தாலும், ஒவ்வொரு காசாக, ஒன்றரை மடங்கு, ஒரு மடங்கு பெரியதாக அழகாக எடுத்து காட்டிஇருப்பது, நாணயங்கள் தொடர்பான, அறிவியல் பகுப்பாய்வு ஆக அமைந்துள்ளது. இதில், செப்புக்காசுகள் அதிகமாக உள்ளன. செப்புக் காசுகள், வெள்ளி மற்றும் வெள்ளீய காசுகள், வெண்கல காசுகள் இடம் பெற்று உள்ளன. இதில், மூன்று வகையான, செழி, செழிய, செழியன் என்ற பெயரிடப்பட்டுள்ள காசுகள் இடம் பெற்றுள்ளன. வரலாற்றுச் செய்திகளை மிக அழகாக எடுத்து, இவ்வளவு பெரிய வரலாற்றை கொடுத்துள்ளதை பாராட்ட வேண்டும். காசுகளில் உள்ள தகவல்களை, சங்க இலக்கியத்தில் இருந்து ஒவ்வொரு அரசரையும் அழகாக எடுத்துக் காட்டி, தாமிரபரணி குறித்த கருத்து வேறுபாடுகள் குறித்து, மேலை, கீழை நாட்டார் என்ன கூறியிருக்கின்றனர் என்பதை எடுத்துக் கூறிஉள்ளார். அதோடு கூட, அண்மையில் கிடைத்த, பானை ஓடுகளை சொல்வதுடன், கொற்கை குறித்த, 'சேட்டிலைட்' படத்தை போட்டு, தாமிரபரணி முதலில் எப்படி இருந்தது, தற்போது தெற்கே செல்கிற தாமிரபரணி எப்படி உள்ளது என்பது குறித்த, புதிய படத்தையும் போட்டு ள்ளார். சின்ன காசு கூட, கையில் கிடைத்தால், எவ்வளவு பெரிய தகவல்களை தர முடியும் என்பதை கூறியுள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X