Uratha sindanai | மீண்டு(ம்) வருமா?| Dinamalar

மீண்டு(ம்) வருமா?

Added : செப் 20, 2014 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மீண்டு(ம்) வருமா?

நாட்டில் அன்றாடம் நிகழும் பலவிதமான சம்பவங்கள், நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு மாறாக, நம்பிக்கையை குலைக்கும் வண்ணமாகவே நடந்து கொண்டிருக்கின்றன.அவ்வாறு நம்பிக்கையைக் குலைக்கும் நிகழ்வுகளில், மிக மிக முக்கியமானது, அயல்நாடுகளில் குறிப்பாக, சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, கறுப்புப் பணம்.

நம் நாட்டில் சம்பாதித்து, அந்த சம்பாத்தியத்திற்கு முறையாக கணக்குக் காட்டி வருமான வரி கட்டாமல், அரசை டபாய்த்து, திருட்டுத்தனமாக அப்பணத்தை அயல்நாடுகளில், வட்டியே இன்றி, டிபாசிட் செய்துள்ளனர். அந்த டிபாசிட் தொகைக்கும் ஆண்டுதோறும் லாக்கர் கட்டணம் மாதிரி, ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகக் கட்டிக் கொண்டிருக்கும் தொகை ஏறக்குறைய, இரண்டு லட்சம் கோடி ரூபாய் என, சில ஆண்டுகளுக்கு முன் ஒரு புள்ளி விவரம் தெரிவித்தது.
அந்த, இரண்டு லட்சம் கோடி ரூபாய் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வந்தால், நாட்டின் மொத்த அயல்நாட்டுக் கடன்களையும், பைசல் செய்து விடலாம். வரியே இல்லாமல், பல ஆண்டுகளுக்கு பட்ஜெட் தயாரிக்கலாம். நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் வீதம் பங்கு பிரித்துக் கொடுக்க முடியும் என்பது போன்ற, பல கதைகள் கூறப்பட்டன.கடந்த, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பா.ஜ., கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் முக்கியமானது, 'வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டு, மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவோம்' என்பது.இது என்னடா வம்பாப் போச்சு. அந்த கறுப்புப் பணம் குறித்து எதுவும் கூறாமல், 'கம்'மென்று இருந்தால், மக்கள் பா.ஜ., கட்சிக்கு ஓட்டுப் போட்டு விட்டால், நம் கதை கந்தலாகி விடுமே என்று யோசித்த காங்கிரஸ் கட்சியும் 'ஆம்... ஆட்சிக்கு வந்தால், நாங்கள் முதல் வேலையாக செய்ய இருப்பது, வெளிநாட்டில் முடக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வருவது தான்' என்று, 'கயிறு' திரித்தது.

மக்களும், 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் வாக்குறுதியை விட, காங்கிரசின் வாக்குறுதியையே நம்பித் தொலைத்தனர். அவ்வாறு நம்பித் தொலைத்ததற்கு முக்கிய காரணம், நாட்டுக்கு விடுதலை வாங்கித் கொடுத்த கட்சி என்பது தவிர, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த அனுபவசாலிகள். அவர்களால் முடியும் என்று நம்பி ஆட்சியில் அமர வைத்தனர்.தேர்தலின் போது, கொடுத்த கறுப்பு பண மீட்பு குறித்து, 2014 வரை காங்கிரஸ் துரும்பைக் கூட கிள்ளி போடாதது, மக்களை யோசிக்க வைத்தது.உச்ச நீதிமன்றமே நேரடியாகத் தலையிட்டு, காங்கிரஸ் அரசை கடுமையாக கண்டித்த போதும், அவர்கள் கவலையே படவில்லை. உச்ச நீதிமன்றத்துக்கும் சேர்த்து அல்வா கொடுத்து கொண்டிருந்தனர்.ஸ்பெக்ட்ரம் ஊழல் துவங்கி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வரை, நாளும் ஒரு ஊழல் புறப்பட்டு, நாட்டு மக்களை பீதியடைய வைக்க, இதற்கு மேலும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்துவதும், தனக்குத் தானே குழி வெட்டி, அதில் தானே அமர்ந்து, தானே மண்ணையும் அள்ளி அள்ளிப் போட்டுக் கொள்வதும் ஒன்று என்று உணர்ந்த மக்கள், 2014 தேர்தலில், காங்கிரசை முற்றிலுமாகப் புறக்கணித்து, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத நிலையை உருவாக்கினர்.

அப்போதாவது அக்கட்சிக்கு புத்தி வந்ததா என்றால், இல்லை என்பது தான் நிதர்சனம்.'எதிர்க்கட்சி பதவி கொடு கொடு' என்று பதவி வெறி கொண்டு அலைந்து, தங்கள் சுயரூபத்தை வெளிக்காட்டி கொண்டிருக்கின்றனர்.தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில், வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர, பா.ஜ., அரசு முயற்சியைத் துவக்கியது. உச்ச நீதிமன்றமும் வழி காட்டியது.வெளிநாட்டு வங்கிகளும், அங்கு முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பட்டியலை தர தயாரானது.வெளிநாடுகளில், குறிப்பாக சுவிஸ் வங்கிகளில், இன்றைய நிலவரப்படி, முதலீடு செய்யப்பட்டுள்ள இந்தியர்களின் முதலீட்டுத் தொகை, 14 ஆயிரம் கோடி ரூபாய் தான் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இரண்டு லட்சம் கோடிகள் என்றிருந்த முதலீடு வெறும், 14 ஆயிரம் கோடிகள் ஆனது எப்படி? 1.86 லட்சம் கோடிகள் எப்படி மாயமானது? எங்கே சென்று மறைந்தது?யாருக்காவது தெரியுமா?

நம் நாட்டிலேயே வங்கிகளில் வீட்டுக்குத் தெரியாமல், கணக்கு வைத்திருப்போர் உண்டு. தாங்கள் சாகாவரம் பெற்ற, சிரஞ்சீவிகள் என்ற நினைப்பில், அந்த கணக்குகளுக்கு நாமினேஷன் (வாரிசு) கூட யார் என்று குறிப்பிட்டு இருக்க மாட்டார்கள்.இவர்கள் காலமாகி விட்டால், வங்கியில் உள்ள முதலீட்டுத் தொகை, கேட்பார், மேய்ப்பார் இன்றி அப்படியே உறங்கிக் கொண்டிருக்கும். அதாவது வங்கிக்கும், இவர் காலமாகிவிட்ட தகவல் தெரியாது. மனைவி மக்களுக்கும், இவருக்கு வங்கியில் உள்ள முதலீடு குறித்து தெரியாது.சுவிஸ் வங்கி, இன்றைய தேதியில், எங்கள் நாட்டு வங்கிக் கணக்கில் உள்ள இந்தியர்களின் முதலீடு, 14 ஆயிரம் கோடி என்று குறிப்பிட்டிருப்பது, இதுபோன்ற, 'அன்க்ெளய்ம்டு டிபாசிட்'களாகக் கூட இருக்க வாய்ப்பு உண்டு தானே?வெளிநாடுகளில் இருந்து திருப்பி எடுத்து வரப்பட்ட, அந்த, 1.86 லட்சம் கோடிகள், முறைகேடாக இந்தியாவில் முதலீடு செய்யப்பட்டு உள்ளனவா?யாருக்குத் தெரியும்?இந்தியர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படும் தொகைகள் மீண்டு(ம்), இந்தியாவுக்கு முறைப்படி திரும்பும் என்ற நம்பிக்கை அற்றுப் போய் விட்டது.
வேறு என்ன சொல்ல?
இ-மெயில்: dmrcni@dinamalar.in

- எஸ்.ராமசுப்ரமணியன்--
எழுத்தாளர் - சிந்தனையாளர்

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
01-அக்-201409:56:53 IST Report Abuse
Rajarajan வேலை நிரந்தரம், கேள்வி கேட்க ஆள் இல்லை, தவறு செய்தால் ஜாதி சங்கங்கள் ஆதரவு, காலத்திற்கேற்ற திறமை மற்றும் கல்வி தகுதியை வளர்க்காமை, ஆதிகாலத்து SSLC படித்தால் போதும், இவர்களுக்கு மேலாளர் வரை பதவி உயர்வு என்றால், அந்த நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களின் திறமை மற்றும் கடமை உணர்ச்சி எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை சொல்லி தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. இதெல்லாம் சுதந்திர இந்தியாவின், கேவலமான எச்சங்கள், அதாவது அரசாங்க நிறுவனங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
30-செப்-201410:53:39 IST Report Abuse
Manian தகுதி இல்லாமல் வேலையாட்களை வங்கிகளில் பணிக்கு அமர்த்துவதாலேயே அவர்கள் திமிருடன் இருக்கிறார்கள். அடிபட்டால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள். பயம் ஒன்று மட்டுமே இவர்களை கட்டுப்படுத்த முடியும். அந்த நாள் வந்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் திரு ஜெயராஜ் போன்றவர்கள் வங்கிகளில் சமூக சேவை செய்யலாமே. இதை நான் வாழ் நாள் முழுவதும் செய்து கொண்டிருக்கிறேன். நீங்களும் வெறும் வாய் வார்த்தைகளை அள்ளி வீசாமல் ஏதேனும் உருப்படியாக செய்யுங்கள். அலட்சியம் செய்யும் நபர்களை பற்றி எல்லோரிடமும் சொல்லுங்கள். ஒருவேளை சிலராவது திருந்துவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
21-செப்-201407:39:53 IST Report Abuse
JAIRAJ அன்புள்ள் எழுத்தாளர் சிந்தனையாளரே...................வணக்கம் அய்யா வணக்கம். முதலில் நம் உள்நாட்டு வங்கி பற்றி சிலவகைகள் ....................வங்கியில் கனன்க்குத் துவங்கும் பொழுதே, அவர்கள் இப்பொழுதெல்லாம் ஏக கெடுபிடிகள் செய்கிறார்கள். மேலும், வங்கியில் ( எந்த பதவியில் இருந்தாலும் )வேலை செய்பவர்களில் சிலபேர்களின் ( BODY LANGUAGE ) அங்க அசைவுகள், பேச்சு முறைகள், எதிராளிகளின் கோபத்தை தூண்டுவதாகவே அமைகின்றன. கல்வி அறிவு பெறாத சிலர் வங்கிக் கணக்குத் துவக்க வந்தால், எல்லா அலங்காரங்களும் முடிந்து, அவர்களிடம் அந்த விண்ணப்ப படிவத்தை கொடுக்கும் பொழுதே அவர்கள் நாமினி பற்றி எதுவும் செல்வதில்லை. அப்படியே கேட்டாலும், "அது அப்புறமா பாத்துக்கலாம்" என்று சொல்வது ஏன் என்று தெரிவதில்லை. ( நான் ஒரு கணக்கு விஷயமாக தொடர்பு கொண்டபொழுது, என்னிடமும் இதையே சொன்னார்கள். நான் காரணம் கேட்டதற்கு, பதில் தெரியாமல் விழித்தது தான் பதில். நான் தொடர்ந்து வற்புறுத்தி, நாமினேஷன் வகைகளை சரியான வகையில் பூர்த்தி செய்து, அதை உடனே பதிவுசெய்து, அவர்களில் முத்திரையுடன் பெற்று வந்தேன். இது அவர்களாகவே செய்யவேண்டியது. ஆனால் செய்வது இல்லை. யாருக்கும் விவரம் செல்வதில்லை.) அடுத்ததாக, யாராவது ஒரு நபர், தனியாகவோ அல்லது சேர்ந்தோ FIXED DEPOSIT முறையில், பணம் செலுத்துகையில்,காசோலையாகவோ அல்லது பணமாகவோ செலுத்தும் பொழுது உடனே அதற்குண்டான ரசீது தரப் படுவதில்லை. சுமார் ஒருமணிநேரம் காத்திருந்தாலும் தருவதில்லை. 'நாளைக்கு வந்து ரசீது வாங்கிக் கொள்ளுங்கள் என்று, சொல்கிறார்கள். சரி என்று ஒப்புக் கொண்டாலும், பணம் வாங்கிக் கொண்டதற்கான எந்த விதமான அத்தாட்சியும் கொடுப்பதில்லை. பணம் கொடுப்பவர் தனியாகவோ அல்லது கூட்டாகவோ பணம் கொடுத்து, ரசீது வாங்காமல் செல்லும் பொழுது, ஏதாவது ஒரு நிலையில், அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், கொடுத்த பணத்தை திரும்பிப் பெறுவது சாத்தியம் இல்லையே............ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டால் பதில் இல்லை. ரசீது கேட்டாலும் கொடுப்பதில்லை. இவர்கள் இப்படி சோம்பலுடன் மறுப்பதால் தான் வாகுவாதம் உண்டாகிறது. என்னைப் பொறுத்தவரை நான் எனக்கும் பாதுகாத்துக் கொண்டு , அதை மற்றவர்களுக்கும் ( தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் ) எடுத்துச் சொல்லி விழிப்புணர்வை உண்டாக்குகிறேன். நீங்கள் சொல்லியபடி சிலர் ( தெரிந்தோ தெரியாமலோ ) தங்கள் பெயரை மட்டுமே கணக்கில் கொள்வார்கள். அதை இணைப்பாக செய்ய மாட்டர்கள். சில படித்த முட்டாள்களும் இதை செய்கிறார்கள். ( மற்றவர்கள் பணத்தை எடுத்துக் கொண்டுவிடுவார்கள் என்ற பயம்தான். ) அடுத்து, நீங்கள் சொல்லியபடி அந்த மாயமான் 1,86,000 கோடிகளின் மாய வலை அவர்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். எல்லோரும் நல்லவரே என்பது போல், எல்லோரும் தி......................................களே .................எதோ ஒரு நல்ல நம்பிக்கையில், புதிய வரவின் கையில் பொறுப்பைக் கொடுத்திருக்கிறோம். இதுவும் வாய் வீரன் என்றகதை என்றால்............" பழைய குருடி கதவைத்திறடி " என்று, சொல்லவேண்டியதுதான். நானும் நீங்களும் தான் புலம்ப வேண்டும். ஊழல்களை மறைக்க, செய்த ஊழலின் தண்டனையிலிருந்து தப்ப, புதிய மசால் வகைகள் தயாராக உள்ளநிலையில், புதிய மசாலில், இந்த புனிதமும் சேர்ந்து கொண்டால், ஆப்பு வைக்க வேண்டியதுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X