3வது மாதத்தில் விவாகரத்து கேட்ட கணவருக்கு ஐகோர்ட் அட்வைஸ்| Dinamalar

3வது மாதத்தில் விவாகரத்து கேட்ட கணவருக்கு ஐகோர்ட் அட்வைஸ்

Advertisement

பெங்களூரு : திருமணமான மூன்றே மாதங்களில், தம்பதிகளுக்குள் ஒத்துப்போகவில்லை என்று கூறி, விவாகரத்து கேட்ட கணவருக்கு, அறிவுரை கூறிய கர்நாடக உயர் நீதிமன்றம், விவாகரத்து வழங்க மறுத்தது.
கருத்து வேறுபாடு : தும்கூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிஷ், கீதா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோருக்கு, கடந்த 2009ல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த 12 நாட்களிலேயே, கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால், கீதா பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார். அவரை மீண்டும் அழைத்துவர, கணவர் முயற்சிக்கவில்லை. மாறாக, 3 மாதங்களுக்கு பின்னர், விவாகரத்து கேட்டு, குடும்ப நல நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.மனுவில், தங்களுக்கு திருமணமாகி, மூன்றே நாளில் தனிக்குடித்தனம் செல்ல வேண்டுமென்று, மனைவி பிடிவாதம் பிடித்தார்; என் பெற்றோருடன், தேவையின்றி சண்டை போட்டார். எங்கள் மீது போலீசாரிடம் பொய்யான புகார் செய்துள்ளார். எனவே, அவருடன் என்னால் வாழ முடியாது என, குறிப்பிட்டிருந்தார். ஆனால், கணவரின் குற்றச்சாட்டை, கீதா மறுத்துள்ளார். கணவர் வீட்டார், 5 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரும்படி தொந்தரவு செய்து தாக்கினர். இதுகுறித்து போலீசாரிடம், எந்த புகாரும் செய்யவில்லை. கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். அவருக்கு அறிவுரை கூறும்படி, போலீசாரிடம் முறையிட்டேன். இதையடுத்து, அவர்கள், என் கணவரை அழைத்து அறிவுரை கூறினர். 15 நாட்களில், அழைத்து செல்வதாக போலீசாரிடம் கணவர் கூறினார்.
கால அவகாசம் : ஆனால், அவ்வாறு செய்யவில்லை. எனக்கு, தற்போது 36 வயது. கணவருக்கு 42 வயது. இது விவகாரத்து பெற, உகந்த வயதல்ல என்றார். இவரது வாதத்தை ஏற்று கொண்ட குடும்பநல நீதிமன்றம், விவகாரத்து வழங்க மறுத்தது. இதை எதிர்த்து கிரிஷ், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. எந்த பெண்ணாக இருந்தாலும், தன் பிறந்த வீட்டை விட்டு விட்டு, கணவர் வீட்டுக்கு வரும் போது, அங்குள்ள சூழ்நிலைக்கு தகுந்தவாறு, மாற்றி கொள்ள சிறிது அவகாசம் தேவைப்படும். ஆரம்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள, இத்தகைய கால அவகாசம் அவசியம். வெறும், 12 நாட்களில், கணவர் வீட்டாருடன் ஒன்றிப்போவது சாத்தியமில்லை. இவ்வழக்கில் கணவர் கிரிஷ், மனைவி கீதாவுக்கு புதிய சூழ்நிலையில் ஒன்றி போக வாய்ப்பளிக்கவில்லை. பிறந்த வீட்டுக்கு சென்ற மனைவியை அழைத்து வர முயற்சிக்கவில்லை. ஆனால், கீதாவோ, கணவர் வீட்டுக்கு செல்ல, ஆர்வமாக உள்ளார். இதற்கான, முயற்சிகளும் செய்துள்ளார் என்பது, அவர் கிரிஷூக்கு அனுப்பிய செய்திகளின் மூலம் உறுதியாகிறது.
ஓராண்டு... : அது மட்டுமல்ல, திருமணமாகி, வெறும் மூன்றே மாதத்தில் விவகாரத்து கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமணமாகி ஓராண்டு ஒன்றாக வசித்த பின்னரே, விவாகரத்துக்காக மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளது. எனவே, இந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வழக்கில், குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான். இவ்வாறு, உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement