நகைச்சுவையும், நையாண்டியும்... : இன்று கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்| Dinamalar

நகைச்சுவையும், நையாண்டியும்... : இன்று கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்

Added : நவ 09, 2014 | கருத்துகள் (5)
Advertisement
நகைச்சுவையும், நையாண்டியும்... :  இன்று கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்

தமிழ் கூறு நல்லுலகிற்கு திருச்சி தந்த பெருங்கொடை கி.ஆ.பெ.விசுவநாதம் (1899--1994). 'முத்தமிழ்க் காவலர்' என தமிழக மக்களால் போற்றப்படும் ஆளுமைக்குச் சொந்தக்காரர். 'ஆயிரம்பிறை கண்டவர்' என்றாற் போல்

இம்மண்ணுலகில் 95 ஆண்டு காலம் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டிய கொள்கைச் சான்றோர் கி.ஆ.பெ.நகைச்சுவை பற்றி கி.ஆ.பெ.விசுவநாதத்திற்கு தனிப்பட்ட கருத்து இருந்தது. அவரது பார்வையில் நகைச்சுவை வேறு; நையாண்டி வேறு. நகைச்சுவை செல்லுகின்ற பாதையில் ஒரு நுாலிழை தவறினாலும் நையாண்டியாகக் காட்சியளித்து விடும். நகைச்சுவை, அறிஞர்களை மகிழ்விக்கும்; நையாண்டி, மற்றவர்களை மகிழ்விக்கும். 'ஒருவன் கூறியது நகைச்சுவையா, நையாண்டியா?' என்பதை அறிய விரும்பினால், 'அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தவர்கள் அறிஞர்களா, மற்றவர்களா?' என்பதைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.


நடையும் உடையும் :

'எது நகைச்சுவை?' என்பதற்கு உதாரணமாகக் கி.ஆ.பெ.விசுவநாதத்தின் 'நடையும் உடையும்' என்னும் தலைப்பில் அமைந்த குட்டிக் கதையை பார்ப்போம். “தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப் பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்.அங்கே, கடற்கரையில் ஒரு பையன் அலையை நோக்கி வேகமாக ஓடுவதும், தண்ணீரைக் கண்டதும் பின்வாங்குவதும், பிறகு அலையிலேயே காலை வைத்துக் கொண்டு விளையாடுவதுமாக இருந்தான். அப்பொழுது ஒரு பெரிய அலை வந்தது.அதைக் கண்ட குடியானவன் பயந்து போய், அப்பையனின் கூட வந்தவரைப் பார்த்து, 'சிறுபையன் சுட்டித்தனமாக விளையாடினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே, அவனை அழைத்து உங்கள் அருகில் வைத்துக் கொள்ளுங்கள்' என்றான்.

அது கேட்ட அந்த ஆள் சிரித்து, 'அது பையன் அல்ல, பெண்' என்றார். 'அப்படியா? நீங்கள்தான் அப்பெண்ணின் தந்தையா?' என்று கேட்டான் குடியானவன். அவர், 'இல்லையில்லை நான் அந்தப் பெண்ணுக்குத் தந்தையல்ல, தாய்' என்று சொன்னவுடன் குடியானவனின் வியப்புக்கு எல்லையே இல்லை.பெண்ணாக ஆணும், ஆணாகப் பெண்ணும் வேற்றுமை தெரியாத அளவுக்கு நடை, உடை, பழக்கங்களை மாற்றி நடந்துகொள்கின்றனர்.இதுபோன்ற 90 சுவையான கதைகளைத் தொகுத்து தனி ஒரு நுாலாகவே வெளியிட்டுள்ளார் கி.ஆ.பெ. இக்கதைகளுக்கு அவர் தந்திருக்கும் தலைப்பு 'அறிவுக் கதைகள்'.


'சிறப்பு ழகரம் ':

தமிழ் எழுத்துக்களில் 'ழ' என்னும் எழுத்து தமிழுக்குச் சிறப்புத் தருவது. எந்த மொழியிலும் இதுபோன்ற எழுத்து கிடையாது. அதனால் புலவர்கள் இதனை 'சிறப்பு ழகரம்' என்றே கூறுவர். இந்தச் சிறப்பு 'ழ' ஒலி சிலரால் சரியாக உச்சரிக்கப்படுவதில்லை. திருச்சிக்குத் தெற்கே சிலர் 'ழ'வை 'ள' ஆக உச்சரிப்பர் (எ-டு: வாழைப்பழம் -- வாளப்பளம்). திருச்சிக்குக் கிழக்கே, தஞ்சை மாவட்டத்தில் சிலர் 'ழ'வை 'ஷ' ஆக உச்சரிப்பர் (எ-டு: மார்கழித் திருவிழா -- மார்கஷித் திருவிழா). சென்னை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ஸ' ஆக்கிப் பேசுவர் (எ-டு: இழுத்துக் கொண்டு- - இஸ்த்துக்குனு). திருச்சிக்கு மேற்கே, கோவை போன்ற இடங்களில் சிலர் 'ழ'வை 'ய' ஆக ஒலிப்பர் (வாழைப்பழம்- வாயப் பயம்).தமிழுக்கு உள்ள இந்தச்சிறப்பு 'ழ'கரம், தமிழ் மக்களிடத்துப் படுகிற பாட்டைக் கி.ஆ.பெ.விசுவநாதம் தமக்கே உரிய பாணியில் சுவையாக எடுத்துக்-காட்டியுள்ளார்.“நான் ஒரு தடவை கோவைக்குச் சென்ற போது கடைத் தெருவில் வாழைப் பழத்தை விற்கும் ஒருவன், 'வாயப் பயம்' என்றே கூறி விற்றுக் கொண்டிருந்தான்.என்னிடம் வந்து, தட்டை இறக்கி வைத்து, 'வாயப் பயம் வேணுங்களா?' என்றான். எனக்கு வியப்பு ஒரு புறம்; கோபம் ஒரு புறம். 'நீ எந்த ஊர் அப்பா?' என்றேன்.

அவன், 'கியக்கங்கே' என்றான்.
நான், '(கிழக்கு) கியக்கேயிருந்து இங்கே எதுக்கு வந்தீங்க?' என்றேன்.அவன், 'புயக்க வந்தேங்க' (புயக்க - பிழைக்க) என்றான்.
'கியக்கேயிருந்து புயக்க வந்தேன்' என்றதும் எனக்குக் கோபம் அதிகமாகியது.
'ஏம்பா, தமிழை இப்படிக் கொலை பண்ணுகிறீர்கள்?' என்று அதட்டிக் கேட்டேன்.
அவன் இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டுக் கொண்டே, 'அது எங்க வயக்கங்க' என்றான்.
நான் உடனே அவனை விட்டு எழுந்தே போய்விட்டேன்”.
இங்ஙனம் மெல்லிய பூங்காற்றாய், கி.ஆ.பெ.வின் எழுத்திலும் பேச்சிலும் நகைச்சுவைத் தென்றல் வீசி நின்ற தருணங்கள் நிரம்ப உண்டு.


கல்லாமையின் இழிவு :

சான்றோர்கள் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை கி.ஆ.பெ.விசுவநாதம் தம் நுால்களில் பதிவு செய்துள்ளார்.

ஒரு சுவையான நிகழ்ச்சிக் குறிப்பு இதோ:“கவிராஜர் ஜெகவீர பாண்டியனார் பெரும் புலவர். கட்டபொம்மன் மரபிலே வந்தவர். ஒரு நாள் மதுரையில் கி.ஆ.பெ.அவருடன் பேசிக் கொண்டிருந்த சமயத்தில், சிற்றுாரில் இருந்து கவிராஜரைப் பார்க்க ஒருவர் வந்தாராம். அவரைக் கண்டதும் ஜெகவீர பாண்டியர் கி.ஆ.பெ.விசுவநாதத்துடன் பேசுவதை நிறுத்திவிட்டு, 'வாருங்கள், அமருங்கள், என்ன செய்தி?' என்று கேட்டாராம்.அதற்கு அவர், 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்!' என்றாராம். 'பார்த்தாயிற்றே; பின் என்ன செய்தி?' என்று மறுபடியும் கேட்டாராம். வந்தவர் அதற்கும் திரும்பத் திரும்ப, 'ஒன்றுமில்லை, தங்களைப் பார்க்க வந்தேன்' என்றே சொன்னாராம். கவிராஜர் சிறிது யோசித்து - சற்றுப் பேசி அனுப்ப எண்ணி, 'தங்களுக்குக் குழந்தை உண்டா?' என்று கேட்டாராம். 'இருக்கிறான், ஒரே பையன்' என்றாராம் வந்தவர். 'என்ன படித்திருக்கிறான்?' என்று கவிராஜர் கேட்க, வந்தவர் 'எங்கே படித்தான், ஒன்றும் படிக்கவில்லை' என்று சொல்ல, கவிராஜர், 'என்ன செய்கிறான்?' என்று கேட்க, அவர் 'வீட்டிலே இரண்டு எருமைகள் மேய்த்துக் கொண்டிருக்கிறான்' என்று சொன்னாராம்.உடனே கவிராஜர் எழுந்து, அவரை எழச் செய்து, தட்டிக் கொடுத்து, வெளிவாயிற்படி வரை அழைத்துக் கொண்டு போய் நின்று, “இனி யாராவது 'உங்களுக்கு எத்தனை எருமைகள்?' என்று கேட்டால், 'இரண்டு என்று சொல்ல வேண்டாம். மூன்று எருமைகள் உண்டு என்று சொல்லுங்கள்' என்று சொல்லி அவரை வழியனுப்பி வைத்தாராம்”.இந்நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டிவிட்டு, “கல்லாமையின் இழிவைக் கவிஞர் உணர்த்தியது - காலம் பல கடந்தும் என் உள்ளத்தை விட்டு அகலவில்லை” என கி.ஆ.பெ.விசுவநாதம் கூறியிருக்கிறார்.


செவ்விய தமிழரின் பண்புகள்:


செவ்விய தமிழரின் பண்புகளாகப் பன்னிரண்டை அகர முதல் ஒளகாரம் வரையிலான பன்னிரண்டு உயிரெழுத்துக்களைக் கொண்டு கி.ஆ.பெ. புலப்படுத்தி இருக்கும் அழகே அழகு.
அறத்தின் வழி நிற்றல்
ஆண்மையில் உயர்தல்
இன்பத்தில் திளைத்தல்
ஈதலிற் சிறத்தல்
உள்ளத்தில் தெளியராதல்
ஊக்கத்தில் தளராதிருத்தல்
எவரையும் தமராய்க் கொள்ளல்
ஏற்றத்தாழ்வின்றி வாழ்தல்
ஐயந்திரிபறப் பேசுதல்
ஒழுக்கத்தைக் காத்தல்
ஓரஞ்சாராது நிற்றல்
ஒளவியந்தன்னை அகற்றல்
செவ்விய தமிழரின் பண்பு !


பேச்செல்லாம் நகைச்சுவை :


சிலர் நகைச்சுவையுடன் பேசுவர்; ஆனால், பேசிய பின் நினைத்துப் பார்த்தால் ஒன்றும் இராது; தேறாது. ஆனால், பொருட்செறிவுடனும் நகைச்சுவையுடனும் பேசுவது கி.ஆ.பெ.விசுவநாதத்தின் தனிச்சிறப்பு. ஒருமுறை கி.ஆ.பெ.விசுவநாதம் திருமண விருந்தில் கலந்து கொண்டு வெளியே வரும்போது ஒருவர், “ஐயா, வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளுங்கள்” என்றாராம். “எனக்கு வேண்டாம். வயதானவர்கள் யாராவது பின்னால் வருவார்கள், அவர்களுக்குக் கொடுங்கள்” என்று சொன்னாராம். அப்போது அவரது வயது என்ன தெரியுமா?' எண்பதைத் தாண்டி இருந்தது.
-பேராசிரியர் இரா.மோகன்,
எழுத்தாளர், பேச்சாளர்
94434 58286
(கட்டுரையாளர் -
தமிழக அரசின்
கி.ஆ.பெ.விசுவநாதம்
விருதாளர்)

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X