கொண்டாடுவோம்... நம் வீட்டு ரோஜாக்களையும், ராஜாக்களையும்! இன்று குழந்தைகள் தினம்| Dinamalar

கொண்டாடுவோம்... நம் வீட்டு ரோஜாக்களையும், ராஜாக்களையும்! இன்று குழந்தைகள் தினம்

Added : நவ 13, 2014 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கொண்டாடுவோம்... நம் வீட்டு ரோஜாக்களையும், ராஜாக்களையும்! இன்று குழந்தைகள் தினம்

அலுவலகத்தில் ஆயிரம் பேரைக்கூடச் சமாளித்து விடுவேன், வீட்டிலுள்ள ஒரு குழந்தையை என்னால் சமாளிக்க முடியவில்லை. ஞாயிற்றுக்கிழமையாகி விட்டால் வீடு ரெண்டு படும், எங்கள்பாடு திண்டாட்டம் தான் என்று சொல்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.மிகக்கடினமான நியூட்டன் விதியையும், ஐன்ஸ்டீனின் அணுவெடிப்புக் கோட்பாட்டினையும் எளிமையாய் புரிந்து கொள்ளும் நாம், இன்னும் புரிந்துகொள்ளாமல் இருப்பது நம் குழந்தைகளின் மனத்தைத்தான். அவர்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? பொன்னையா? பொருளையா? வைரத்தையா? தங்கக் கடைகளிலும் அவர்கள் விரும்புவது வண்ண பலூன்களையும் மீன் தொட்டிகளில் இங்குமங்கும் நீந்தும் மீன்களையும்தானே. பொருளைத்தேடிப் பொருளில்லாமல் ஓடும் நாம், எவ்வளவு நேரம் நம் வீட்டு ரோஜாக்களோடும் குட்டி ராஜாக்களோடும் பேசி மகிழ்ந்து, கலகலப்பாய் கதைகள் சொல்லி, அவர்களை முதுகில் சுமந்து, உப்புமூட்டை தூக்கிக் கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறோம். இயந்திரங்களைப் போல்நாம் பதினைந்தாண்டுகள் ஓடியாடிக் களைக்கும்போது அவர்கள் நம் தோளுக்குமேல் வளர்ந்து நம்மைவிட்டு அப்பால் நகர்ந்துபோகிறார்கள் வெகுதொலைவில்.


குழந்தைகள் உலகை புரிந்துகொள்ளுங்கள்:

நீங்கள் பார்த்துப் பார்த்துப் புதிதாய் கட்டிய வீட்டின் சுவர்களில் இம்மி இடம்கூட விடாமல் உங்கள் குழந்தை அழகழகாய் உங்களை ஓவியமாய் வரைந்து தள்ளியிருக்கிறதா! ரவிவர்மா, வான்கோ, லியனார்டோ டாவின்சி, பிக்காசா உங்கள் குழந்தையின் விரல்களில் புகுந்துவிட்டார்கள் எனப் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு உயர்வானதாகப் படும் யாவும் குழந்தைகளுக்கும் உயர்வானதாய் படவேண்டும் என்ற அவசியம் இல்லை. சீர்காழி குளக்கரையில் நீராடச்சென்ற தந்தை சிவபாத இருதயரைக் காணாமல் அழுத, மூன்று வயது சம்பந்தர் உமையன்னையின் ஞானப்பாலைப் பருகி ஆயிரமாயிரம் தேவாரப் பாடல்களைப் பாடிய திருஞானசம்பந்தராக மாறினாரே! உங்கள் வீட்டிலும் சம்பந்தர்கள் திருஞானசம்பந்தர்களாய் மாறக் காத்துக்கொண்டிருக்கலாம்.


ஊக்கப்படுத்துங்கள்:

உங்களால் முடியாமல் போனவற்றை நிறைவேற்றும் 'ரோபோக்கள்' இல்லை உங்கள் குழந்தைகள். அவர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்துங்கள். அவர்களுக்கு விருப்பமானவற்றைச் செய்ய அனுமதியுங்கள். பக்கத்துவீட்டுக் குழந்தைகளுடன் எந்தநேரமும் ஒப்பிட்டு, அவர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்காதீர்கள். இசை, இலக்கியம், ஓவியம் என்று பலதுறைகளை அறிமுகப்படுத்தி வசந்தத்தின் வாசல்களை திறந்துவிடுங்கள். ஒன்பது வயதில் தந்தையை இழந்து துயரத்தால்வாடி, தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு, அதில் கிடைத்த வருமானத்தில் இசைபயின்று, இசைதாகத்தால் இளையராஜாவின் இசைக்குழுவில் இசைக்கலைஞராய் பணியாற்றி, விளம்பரப் படங்களுக்குச் சிறிது சிறிதாய் இசையமைத்து உலகின் ஒப்பற்ற இரு ஆஸ்கார்விருதுகளை வென்றும்கூட "எல்லாப்புகழும் இறைவனுக்கே” என்று அடக்கமாகச் சொன்ன ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்வியல் உணர்த்தும் உண்மை... குழந்தைப்பருவத்தில் மனம் நாடுவதில் தொடர்ந்து பயிற்சியெடுத்தால் சீக்கிரமாய் சிகரம் தொடலாம் என்பதுதானே.


நண்பர்களாகப் பழகுங்கள்:

உங்கள் குழந்தையை சாதனையாளராக்க குழந்தைப் பருவத்திலிருந்தே அதற்கான விதையை மனதிலே விதைக்க வேண்டும். அவர்களோடு பலமணிநேரம் கழிக்கவேண்டும்; வாழ்வின் பேரின்பத்தைப் உணர்த்தவேண்டும். சாதனையாளர்கள் ஒரேநாள் உருவாவதில்லை, பசி நோக்காமல், கண் துஞ்சாமல், நினைத்த லட்சியம் ஈடேறும் வரை அவர்கள் கடுமையாய் உழைத்தார்கள் என்று உழைப்பால் உயர்ந்த மனிதர்களின் வாழ்கையைக் குட்டிக் குட்டி கதைகளாய் மனதில் புரிய வையுங்கள். சத்திரபதி சிவாஜியை, ஜீஜாபாய் என்கிற அவரது தாய் வளர்த்தது இப்படித்தான். சிவாஜி குழந்தையாய் இருந்தபோதே அவர் ராமாயண, மகாபாரதக்கதைகளைக் கூறி ராஜநீதியைச்சொல்லி வளர்த்ததால் பின்னாளில் அவர் ஈடுயிணையற்ற மாமன்னராய் வெற்றிக்கொடி நாட்ட முடிந்தது. வீட்டிற்குள் அடைத்து வளர்க்காமல் அஞ்ச வேண்டியதற்கு மட்டும் அஞ்சப் பழக்குங்கள்.


வாழ்க்கையைப் புரியவையுங்கள்:

வாழ்க்கை ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது, எதைஇழந்தாலும் ஒழுக்கத்தையும் உயர்பண்புகளையும் ஒருபோதும் இழக்கக்கூடாது. பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகமனிதர்களை மதிக்கும் உயர்ந்த மனிதமனதிற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு எளிமையாய் புரியவையுங்கள். பள்ளிநாட்களில் சாதாரண மாணவராய் திகழ்ந்த மகாத்மா காந்தி லண்டன் வரை சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றாரென்றால் காரணம் அவர் தாய் புத்லிபாய் அன்பைப்பொழிந்து அவரை உயர்மதிப்பீடுகளுடன் வளர்த்ததுதான்.


இவற்றைப் பின்பற்றலாமே:

குழந்தைகள் உலகம் அன்புமயமானது; அவர்கள் மலரை விடமெல்லிய மனம் படைத்தவர்கள்; அவர்களை அடிப்பதையோ துன்புறுத்துவதையோ ஒருபோதும் செய்யாதீர்கள். ஓடிவிளையாட வேண்டிய வயதில் வீட்டுக்குள் அடைத்து வைப்பதையோ அல்லது அளவுக்கதிகமாகப் பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதையோ தவிர்த்துவிடுங்கள். பெரியவர்கள் மீதும் தேசத்தின் மீதும் பற்றுக்கொள்ளச் சிறுவயது முதலே வலியுறுத்துங்கள். வீட்டின் பொருளாதார நிலையை உணர்த்தி வளருங்கள். குடும்ப உறவுகளின் உன்னதத்தைச் சொல்லி வளருங்கள். குழந்தைகளின் படைப்பாற்றலை, கற்பனைத்திறனை ஊக்கப்படுத்துங்கள். சுயமாகக் கற்றுக்கொள்ள நல்லநூல்கள் வாசிக்கப்பழக்குங்கள். குழந்தைகளிடம் பெற்றோராய் நடந்துகொள்ளாமல் நண்பர்களாய் பழகுங்கள்... உங்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியே அவர்கள் செய்யப்போகும் தவறுகளின் தொடக்கப்புள்ளி என உணருங்கள். அவர்களின் சிறுவெற்றிகளைக் கொண்டாடுங்கள். குழந்தைகள் முன் நல்ல சொற்களையே பயன்படுத்துங்கள். அவர்களின் கற்றலைச் சுகமான, ஆனந்தமயமான அனுபவமாக்குங்கள். நாளிதழ் வாசிக்கப் பழக்குங்கள். தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வீடியோகேம்களிலும் மூழ்கிக்கிடக்கும் குழந்தைகளை மீட்டுக் குட்டிக் கதைகள் சொல்லி வெளியே கொண்டுவாருங்கள். 'செய்வன திருந்தச் செய்' என்று கற்றுத்தாருங்கள். இறைவனின் இனிய வரம் குழந்தைகள் என்பதை மறவாமல் கண்மணிகளாய் அவர்களைக் காப்போம். கொண்டாடுவோம் நம் வீட்டு ரோஜாக்களையும், ராஜாக்களையும்!

- முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி திருநெல்வேலி mahabarathi1974@gmail.com, 9952140275

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tiruvannamalai KULASEKARAN - Melbourne-Australia.  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201414:04:34 IST Report Abuse
Tiruvannamalai KULASEKARAN இக்காலக்குழந்தைகள் நூற்றுக்கு நூறு மதி்ப்பெண் பெற்று படிக்கின்றன. ஆனால் படிப்பு தவிர ,பிற சாதாரண, வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகள் கூட தெரியாமல் உள்ளன.
Rate this:
Share this comment
Cancel
Shruti Devi - cbe,இந்தியா
14-நவ-201413:12:33 IST Report Abuse
Shruti Devi பெற்றோர்களுக்கான அருமையான பாடம்,ரொம்பவே நல்லா இருக்கு இந்த கட்டுரை. குழந்தைகள் தி்ன வாழ்த்துகள்.... என் குழந்தைக்கும் இன்று பிறந்த நாள் .......
Rate this:
Share this comment
Cancel
BABU - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201412:37:58 IST Report Abuse
BABU குழந்தைகள் தி்ன வாழ்த்துகள்
Rate this:
Share this comment
Cancel
Sami - Tirupur,இந்தியா
14-நவ-201406:21:46 IST Report Abuse
Sami நல்ல பதிவு, படித்து புரிந்து கடைபிடிக்க அவரசர உலகத்தில் புத்தகங்களை மனனம் செய்து பெருமைபெற்ற மக்களால் முடியுமா என்பது ஒரு கேள்விக்குறிதான்.
Rate this:
Share this comment
Cancel
Tiruvannamalai KULASEKARAN - Melbourne-Australia.  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201404:23:09 IST Report Abuse
Tiruvannamalai KULASEKARAN முனைவர் சௌந்தர மகாதேவன் கட்டுரை அருமையாய் உள்ளது. இதைவிட அற்புதமாக கட்டுரை என்னாலும் எழுத முடியும். ஆனால் அதன்படி நடப்பதுதான் சிரமம். சொல்வது எளிது அதன்படி செய்தல் அரிது. நமது இந்தி்ய சமுதாய சூழலில் குழந்தைகளின் உளவியல்படி பெரியவர்கள் நடப்பது மிகவும் சிரமமான செயலே, இருப்பினும் முயற்சிப்போம்......... குழந்தைகள் தி்ன வாழ்த்தி்னை குதூகலமாய் தெரிவித்துக்கொள்கிறேன்...... கடந்த ஓராண்டாக ஆசுதி்ரேலிய குழந்தைகளின் சுதந்தி்ரமான வளர்ப்புமுறையை பார்த்து மகிழ்ந்தேன்... நாளை மறுநாள் முதல் இந்தி்யாவில் வசிக்க வருகிறேன், நமது நாட்டின் சுற்றுச்சூழலும் மாறும் என்ற நமபிக்கையுடன்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
14-நவ-201404:09:18 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ரொம்பவே நல்லா இருக்கு இந்த கட்டுரை. மேல நாடுகளில் தங்கள் குழந்தைகள் கிறுக்கும் என்பதால் சுவர்களில் வெள்ளை பேப்பர்கள் ஒட்டிடுவா. குட்டீசும் இஷ்டத்துக்கு கிறுக்கும். அவர்கள் பெரியவா ஆரச்ச கிறுக்கல்களை கேமறாலே படம் எடுத்துண்டு ஒட்டிய காகிதத்தை பிச்சுடுவா. இது நல்லமுறை தான். நம்ம நாட்டுலே இன்னம் பலருக்கு வசதியே இல்லே வாடகைக்கு இருப்போரோ சிறு ப்ளாட்களில் வசிப்போருமே அதிகம் .பெரிய பங்களா லே கூட பார்க்க முடியாது. நம்ம காலம் விட இப்போ பல பெற்றோர்கள் நெறையவே சுதந்திரம் தராக என்பதும் உண்மை அன்று நெறைய பிள்ளைகளுக்கு இதிலே ஒருவரா பிறந்தோம் .பிறகு நாம் நமக்கிருவர் போதும் என்று நினைத்தோம் இன்று ஒரே குழ்ந்தை தான் .அதுக்கு செல்லம் கொடுத்து கேடுப்போரும் இருக்கா ரொம்பவே ஸ்ட்ரிக்டா வளப்போரும் இருக்கா.ஆனால் 75%குழந்தைக ரொம்பவே செல்பிஷ்ஷா இருக்குங்க என்பதும் உண்மையாகவே இருக்கு . சிலர் தம் பசங்க சகஜமா பழகி பிரெஞ்ட்லியாவும் வளரணும்னு விரும்புறாங்க
Rate this:
Share this comment
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
14-நவ-201403:10:47 IST Report Abuse
Anantharaman பெற்றோர்களுக்கான அருமையான பாடம்......இக்கட்டுரை படி குழந்தைகள் வளர்ந்தார்கள் என்றால் அக்குழந்தை வாழ்வில் ஒரு உன்னத மனிதனாக வருவது உறுதி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை