எங்கே போகிறோம் நாம்...?| Dinamalar

எங்கே போகிறோம் நாம்...?

Added : நவ 16, 2014 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
எங்கே போகிறோம் நாம்...?

காலையில் நடைப்பயிற்சிக்காக நான் புறப்படும் போதெல்லாம் பால்காரர் எதிரில் வருவார். என் வீட்டு கதவில் ஒரு துணிப்பையை தொங்கவிட்டிருக்கிறோம். அதில் பால் பாக்கெட்டுகளை போட்டுவிட்டு போவார். அவரைப் பார்த்தபடியே நடையை தொடங்கிய என்னுள் பல சிந்தனைகள்! குறிப்பாக நடைப்பயிற்சி தொடங்கும் முன் வந்திருந்த நாளிதழில், 'பால் ஊழல் செய்த அந்த மனிதரில் மாணிக்கத்துக்கு ஜாமின் மறுப்பு' என்கிற செய்தி... அது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது! கூடவே பல செய்திகள்... அதில் நுாற்றுக்கு தொன்னுாறு நல்லவை அல்ல.

விளையாட்டில் சில வெற்றிகள்; செவ்வாய்கிரகத்தில் 'மங்கள்யான்' வெற்றிகரமாய் செயல்பட்டு வருகிறது... போன்ற சில நல்ல செய்திகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் 'வழிப்பறி, சங்கிலிப்பறிப்பு, அங்கே ஊழல், இங்கே லஞ்சம், வெள்ள சேதம், திருட்டு, வெட்டு, கொலை, கடை அடைப்பு, கிளர்ச்சி, போராட்டம்...' இவைகளே பிரதான செய்திகள்.தொன்னுாறு சதவிகித மோசத்தை, இந்த பத்து சதவிகித நல்ல செய்திகள் ஈடுசெய்வதை எண்ணும் போது வியப்பாக இருக்கும்.


சமூகத்தின் பொறுமை:


வியப்பு இதில் மட்டுமல்ல... நம் சமூகத்தின் பொறுமையின் மீதும் தான்! ஒரு விசித்திரமான சமூகமாகவே நம் சமூகம் காட்சி தருகிறது. எந்த ஒரு பாதிப்பும் தனிப்பட்ட முறையில் காலில் முள் தைப்பது போலவே இல்லை. சுற்றி என்ன நடந்தாலும் கண்டு கொள்வதென்பது நம்மிடம் கிடையவே கிடையாதோ? அதற்கு சாட்சி பால் ஊழல்!ஒரு மனிதன், இந்த சமூகத்தை கிறுக்கனாக எண்ணி ஆண்டுக்கணக்கில் அள்ளி சுருட்டியிருக்கிறார். சத்தியமாக தனி ஒருவன் துணிவோடு ஆண்டுக்கணக்கில் அள்ளிச்சுருட்ட முடியாது. நிச்சயம் ஒரு பெரிய 'நெட்ஒர்க்' இருந்தே தீரவேண்டும். ஆக, ஒரு கூட்டமே பல்லாண்டு ஏமாற்றி வந்திருக்கிறது.பதிலுக்கு நாம் நம் எதிர்ப்பை, விழிப்பை எந்த வகையில் காண்பித்தோம்? ஒரு நாள் நாம் இந்த பாலை தீண்ட மறுத்தாலே போதுமே... ஆடிப்போயிருப்பார்களே...?


நாம் ஏமாந்தோம் :

இந்த பாலிடம் மட்டுமா நாம் ஏமாந்திருக்கிறோம்? நம்மை ஏமாற்றாதவர்கள் யார்? தெரியாத்தனமாக ஒரு கோவிலுக்கு சாமி கும்பிடப் போனேன். கார் பார்க்கிங்கிலேயே தொடங்கிவிட்டது அடாவடி. அது பூஜைத்தட்டு, பூத்தட்டு... என்று நீண்டது. எல்லா இடத்திலும் அநியாய விலை.கேட்டால் 'ஒரு டீ குடிக்க பத்து ரூவா சார்; இதுக்கு போய் சொல்ல வந்துட்டீங்க...' என்கிற காட்டமான பதில்! தின்பண்டங்களில் எல்லாம் யானையும், குதிரையும் புகுந்துவிட்டிருக்கின்றன. ஐந்துரூபாய் பெறாத பொருளுக்கு இருபது, இருபத்தைந்து என்று விலை. அதையும் வாங்கிச்சாப்பிடுபவர் இருப்பதால், என் போன்றோர் அதை மறுப்பதும், தவிர்ப்பதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.ஒரு 'பெப்பர் மின்ட்'! இது இல்லாவிட்டால் வாழ முடியாது என்பதெல்லாம் கிடையவே கிடையாது. இதை ஒரு பிரபல நடிகர் ஒருவர் பாட்டு பாடி விளம்பரப்படுத்துகிறார். சிறுவயதில் சீரகமிட்டாய், இஞ்சிமுரப்பா என்று வாங்கித் தின்போம். இன்று இந்த பெப்பர்மின்ட், நுாடுல்ஸ், சிப்ஸ் இதெல்லாம் தான் தின்பண்டங்கள்! இதைத் தின்றால் உடல்நலம் எப்படி எல்லாம் கெடும் என்பதை சொல்லாத உடல்நல ஆலோசகர்கள் இல்லை. ஆனாலும் இது தான் மார்க்கெட்டில் சக்கைபோடு போடுகிறது.விலை பத்து ரூபாயில் இருந்து ஆரம்பம்! உண்மையில் நல்ல நேர்மையான லாபத்துக்கு விற்றாலே ஐந்து ரூபாய் தேறாது. அதற்கு தான் இந்த விலை. வாங்கி வாங்கித் தின்கிறது என் சமூகம்.


மவுன குருவாய் நாம் :

ஒரு பிச்சைக்காரன் கை நீட்டினால் 'அட்வைஸ்' செய்யத் தொடங்கி விடுகிறோம். 'போப்பா... போய் உழைச்சுப் பிழைக்கிற வழியப்பாரு' என்று..! அதே ஒரு பாட்டி பழம் விற்றால் அந்த பாட்டியிடம் 'போட்டுக் கொடு...' என்று நாலணாவுக்கும் எட்டணாவுக்கும் ஒரு லாவணியே நடத்துகிறோம் (என்ன ஒரு வீரம்?) ஆனால் இங்கோ மவுன குருவாய் கேட்டதைக் கொடுத்துவிட்டு போய்க் கொண்டே இருக்கிறோம்.மனது வெறுத்துப் போய் 'டிவி' பார்க்கும் போது தான் மிகவே ஏமாற்றங்களுக்கு இழுக்கப்படுகிறோம் என்று தோன்றுகிறது.எந்த ஒரு டிடர்ஜென்டாவது விளம்பரத்தில் காட்டுவது போல் வெளுத்ததுண்டா? யாராவது சொல்வார்களா? புத்தம் புது சட்டையை தேய்த்தால் தான் ஒரு வேளை அந்த வெண்மையோ? நமக்கு தான் அந்த உண்மை தெரியவில்லையோ?அடுத்து இந்த 'பாடிஸ்பிரே' விளம்பரங்கள்... பெண்கள் இதை போட்டுக் கொண்ட ஆண்களை நோக்கி ஒலிம்பிக்கில் ஓடுவது போல் ஓடுகிறார்கள். எத்தனை மிகை?கேட்டால் இதற்கும் ஒரு வியாக்யானம், நமக்கு கிடைக்கக்கூடும். நம் சக மனிதர்களே 'இதை எல்லாம் ஜாலியா எடுத்துக்கிட்டு விட்டுவிடணும் சார். சீரியசாக்ககூடாது, என்பர். வாஸ்தவம் தானே?விழிப்புணர்வு இல்லை: சீரியசானால் தான் 'அகராதி' என்னும் முத்திரை விழுந்திடுமே...? கேட்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. எது எதற்கெல்லாமோ ஒன்று கூடுகிறோம். கைகோர்த்து கோஷம் போடுகிறோம். ஒரு சமயம், இலங்கை பிரச்னைக்கு; ஒரு சமயம், நம் ஊர் அரசியல் தலைவர் கைதுக்கு; ஒரு சமயம், மொழிக்கு... இதெல்லாம் நமக்கு அன்றாடம் பாதிப்பில்லாத தொலைவில் உள்ள பாதிப்புகள்!அன்றாடம் பாதிப்புகளுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இது போன்ற விஷயங்களுக்கு எதிர்ப்பு கூட காட்ட வேண்டாம். இதை எல்லாம் நம்பக்கூடாது என்கிற ஒரு சராசரி விழிப்பு கூடவா இல்லாது போகவேண்டும்?ஒரே ஒரு விஷயத்துக்காக நாம் காலரை துாக்கி விட்டுக் கொள்ளலாம். ஒரு வகையில் நாம் எல்லோருமே வள்ளல்கள்! தனியாக புண்ணியத்துக்கென்று யாரும் 'டொனேஷன்' தரவே தேவையில்லை. நாம் வாங்கும் பல பொருட்களில் அநியாயமாக நாம் கொடுக்கும் தொகையோ


'டொனேஷன்' மாதிரி தான்!

ஒருவேளை 'இது கேட்டால் தராது சமூகம், எனவே எடுத்து கொள்ள வேண்டியது தான்' என்று தீர்மானித்து விட்டார்களோ? அப்படி எடுத்துக் கொள்பவர்கள், இல்லாதவர்களாக இருந்தால் கூட பரவாயில்லை...ஆனால் அப்படி இல்லையே... கொள்ளையர்களாக அல்லவா உள்ளனர். எப்படி இருந்தால் என்ன? நம்மை எல்லாம் வள்ளல்களாக்கி உலவ விட்டிருக்கிறார்களே... அதற்காக மகிழ்வோம்.
- இந்திரா சவுந்தரராஜன்,
எழுத்தாளர் மதுரை.
indirasoundarrajan@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
18-நவ-201401:56:32 IST Report Abuse
மதுரை விருமாண்டி "எப்படி இருந்தால் என்ன? நம்மை எல்லாம் வள்ளல்களாக்கி உலவ விட்டிருக்கிறார்களே.." நாம இருக்கிற நெலைமைக்கு பேரு வள்ளல் இல்லை சாரே.. அதுக்கு பேரு இளிச்ச வாயன்.. அதுக்கெல்லாமா நீர் சந்தோஷப்படுவீர்..
Rate this:
Share this comment
Cancel
தமிழன் - சென்னை,இந்தியா
17-நவ-201423:58:43 IST Report Abuse
தமிழன் இது முதலாளித்துவத்தில் இருந்தே தொடங்குகிறது. பணம் படைத்தவர்கள் ஏகபோகமாக வாழும் போது அனைவரும் அவர்களை எட்டிப் பிடிக்க, எந்த வகையிலும் பணம் சம்பாதிக்க தயாராக உள்ளனர். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கோயிலைச் சுற்றி இருக்கும் பலர் நம்மை (இணையத்தில் கருத்து சொல்வோர்) விட வசதி குறைந்தவர்களாக இருக்கலாம். மூலப் பொருளின் விலையை விட பல மடங்கு அதிகம் விற்றாலும், மாக்களின் வாங்கும் திறனுக்கும், மன நிலைக்கும் ஏற்பவே விலை நிர்ணயம் செய்யப் படுகிறது. இதில் மாற்றம் என்றால் எவ்வாறு செய்யலாம்? கடவுள் வீட்டிலும் தான் இருக்கிறார் என்று வீட்டிலேயே சாமி கும்பிட்டு விடலாம். இல்லை, வீட்டிலிருந்தே தட்டு எடுத்துச் செல்லலாம். அர்ச்சனை செய்தால் இறைவன் செவி கொடுப்பான் என்றில்லை, ஏழைக்கும் தான் துணை இருப்பான். தூர நின்றே வணங்கி விடலாம். இது போலவே, காலம் எவ்வாறு மாறினாலும், நாமும் அதற்கு ஏற்ப நம் எளிமையை அதிகரித்துக் கொண்டே சென்றால் எல்லாம் நன்மையே.
Rate this:
Share this comment
Cancel
mohan - chennai,இந்தியா
17-நவ-201422:33:19 IST Report Abuse
mohan சார் நீங்க லட்சம் மனிதர்களில் ஒருவர்...நீங்க சொல்வது எல்லாம் சரி... இந்த சமுதாயம், யார் இந்த கிறுக்கன் என்னமோ ஒல்ருறான் என்றுதான் கேட்கும்....நான் பலமுறை எழுதிவிட்டேன், கல்வியில் இருந்து, செல் போன் இல் இருந்து, சுற்று சூழல் இல் இருந்து, நீர் வள மேலாண்மை இல் இருந்து எல்லாமே மாற்றம் கொண்டு வரவேண்டும்.... ஜப்பான், ஜெர்மன், போன்ற நாடுகளில், 60 வருடங்களுக்கு முன்னே பள்ளிகளில் நல்ல பாடத்திட்டத்தை தேர்ந்தெடுத்தனர்... இங்கே... ஒரு சிலரின் சுய நலனுக்காக கல்வியில் இன்னும் மாற்றம் கொண்டுவரவில்லை... இதை என்னென்னு சொல்லுவது...அதுவும்...இப்பொழுதுள்ள சமசீர் கல்வி... அவனவன் மார்க்கை அள்ளுறான்....எதுக்காக...இந்த வருடம் IIT தேர்வில் CBSE படித்தவன் 14000 பேருக்கு மேல் பாஸ் செய்துள்ளான்... சமசீர் படித்தவன் 64 பேர் பாஸ் செய்துள்ளான்...இதெல்லாம் யாருக்கும் தெரிய வில்லையா.. நாடு முழுவதும் அரசு , தனியார் பள்ளிகளில் ஒரே உலகளாவிய பாட திட்டமாக இருக்கவேண்டும்.. நாடு முழுவதும், உலகத்தரம் வாய்ந்த கல்வியை 60, 70 வருடங்களுக்கு முன் அமுல் படுத்தி இருக்க வேண்டும்...தாய் மொழி, ஆங்கிலம், ஹிந்தி, ஆகியவை இல்லாமல், தமிழ் நாடு மானவரக்ளின் எதிர்காலம் இரு தலைமுறைகளாக பாதிக்க பட்டுள்ளது... கேரளா வில் உள்ள மாணவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர், வட நாட்டில் வேலை செய்கின்றனர் என்றால், ஆங்கிலமும், இந்தியும், உதவி புரிகிறது... நாட்டின் கேற்கு தொடர்ச்சி மலைகளில் வீணாகும் நீரை நாட்டின் கிழக்கு பகுதிக்கு திருப்பி நாடு முழுவதும் 80% புங்கன் மரம் மற்றும் 20 % பல்வேறு மரங்கள் நட்டிருக்க வேண்டும்... இதெல்லாம் தெரிந்து இருக்கும் அளவுக்கு இந்தியாவில் மனிதர்கள் இல்லை... அதுவும்... டிவி நாடகம், என்றால் பாருங்கள், டிவி கிரிகெட் என்றால் பாருங்கள், அவனவன் ஆபிசுக்கு லீவு போட்டு டிவி பார்ப்பான்... இங்கே நாடு ஒரு பக்கம் , நாம் எங்கே போகிறோம் என்று தட்டு தடுமாறி, இலவசங்களாலும், வரன்முறை இல்லாத அரைகுறை டிவி நிகல்சிகளாலும் இளைய சமுதாயமே பாழ்பட்டு கொண்டு இர்ருகின்றது... இதை பற்றி யாராவது, ஏதாவது பேசுகிறார்களா... இந்த பெண்கள் ஆ ஊ என்றால் மாதர் சங்கம் போராட்டம் நடத்துகின்றனர்... டிவி இல் வரும் நிகழ்சிகளை கட்டுபடுத்த போராட்டம் நடத்த சொல்லலாமே...அப்படி கட்டுபடுத்தினால், இந்த 8,9 ஆண்டுகளாக நடந்து வரும் பாலியியல் குற்றங்கள் குறையும்... இன்னும் நிறைய இருக்கு சார்.. யார் என்னத்த சொல்ல... திரு ஜட்சு கட்ஜு சொன்னது போல் மக்கள் இருக்கும் போது... நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது... நன்றாக வாழ நினைப்பவர்கள், நிறைய சொல்லலாம் என்ன பயனன்... பாவம் எடிடருக்கு படித்து பார்க்க நேரம் இருக்காது... என்ன செய்ய...
Rate this:
Share this comment
krishna - london,யுனைடெட் கிங்டம்
18-நவ-201402:06:01 IST Report Abuse
krishnaநன்றாக சொன்னீர் வாழ்த்துகள்...
Rate this:
Share this comment
Cancel
raja - Kanchipuram,இந்தியா
17-நவ-201421:19:18 IST Report Abuse
raja அருமை அருமை ஆனால் மக்கள் ....
Rate this:
Share this comment
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
17-நவ-201417:47:00 IST Report Abuse
paavapattajanam சார் இந்திரா சௌந்தரராஜன் அவர்களே, நானும் உங்களை போல நாளும் போராடும் ஒரு கஷ்டஜீவி - ஆயிரம் எருமை மாடுகளுக்கு நடுவே போராடுகிறேன் - சென்னை சின்னமலையில் திருடர்கள் தான் வாழமுடியும் - வாழ்கிறார்கள் என்னுடன் சேர்த்து - போலீஸ் காரர்கள் அல்ப காபிக்காக கொஞ்சம் நேர வேலை செய்துவிட்டு அடையாறு ஆனந்தபவனில் பிச்சை எடுப்பதை பார்கிறேன் - சிக்னல் போடாமல் வயதானவர்களும் குழந்தைகளும் சாலை கடக்கும்போது உயிரை கையில் பிடித்து கடப்பதை காணும்போது குறைந்தது - நான்கு அரசியல் தலைவர்களையாவது மக்கள் விரட்டி விரட்டி அடிக்கும் காலம் வர வேண்டும் என தோன்றுகிறது - மக்களுக்கு ரோஷம் வர வேண்டும் - அரசியல் வாதிகள் மக்களை முட்டாளாக்கி இன்பம் காணுகிறார்கள் - சினிமாகாரன் - அதை காண்பித்து - நல்லதை காண்பிக்க மறுக்கிறான் - வன்முறை இல்லாத சினிமா இல்லை - தெருபோறுக்கி முள்ளை மாரிதான் ஹீரோக்கள் எடுக்கும் பாத்திரங்கள் - நாந்தான் பாலா மாதிரி தங்க மீன்கள் மொழி போன்ற படங்களை காண ஆட்கள் இல்லை - எல்லோரும் திருடர்களை மாறிவிட்டார்கள் - இன்னொருவன் காலில் மிதிப்பது கூட தெரியாத உணராத காட்டுமிராண்டிகளாகிவிட்டார்கள் பெரும்பாலனவர்கள் - பக்கத்தில் நடப்பது நாளைக்கு நமக்கு நடக்கலாம் - நானும் தீவிரவாதியாகி தீயவர்களை மட்டும் ஒழிக்க பாடுபட ஆசைபடுகிறேன் - அக்க்ரமத்தை அழிக்க கடவுள் வருவாரா - அவரும் லஞ்சம் கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் வேறு - பாசம் இல்லை - அம்மா அப்பா அண்ணன் தம்பி எல்லாம் பழயபடங்களில் மட்டுமே பாதுக்காக்கபடுகின்றன - யர்ருக்கும் அன்பும் இல்லை - எல்லாம் ஒரு வேஷம் - எங்கே போகிறோம் - ரூபாய் 1000 திருடினால் விரலை வெட்டுங்கள் - கோடி ருபாய் சுருட்டினால் ஒரு மாதம் தண்ணி கூட கொடுக்காமல் சிறையில் அடைக்கவேண்டும் - சாகட்டும் நாய்கள் - அரசியல் நாய்கள் கோடி கோடியாய் அடிக்கும் கொள்ளைகளை அந்நியன் படத்தில் வருவதுபோல் ஒரு அம்பி வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - சாவதற்கு நான் ரெடி - வாழ்க இந்தியா - பாரத மாதாவை கற்பழிக்கும் தீயர்களை கொல்ல நாம் தயாராக வேண்டும் - அது தான் இனி வரும் காலங்கள் - தீபாவளியாக கொண்டாட வேண்டும் ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
niec99 - chennai,இந்தியா
17-நவ-201416:14:23 IST Report Abuse
niec99 நான் சொல்ல நினைத்த கருத்துக்களை நீங்கள் பதித்துள்ளீர்கள் மிக்க நன்றி
Rate this:
Share this comment
Cancel
Soorya - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
17-நவ-201415:42:46 IST Report Abuse
Soorya சமூகத்தின் பொறுமை, டோனசன், சகிப்புத்தன்மை- இவையெல்லாம் மக்களின் மௌனத்திற்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்றால். உங்களுடைய கணக்கு தவறு. 1964க்கு முன் நீதி, நேர்மை, பொது சொத்து, மக்களுக்கு சேவை போன்றவையெல்லாம் இருந்தது. பின்னர் நல்ல ஒரு மாற்றம் என்று பொது மக்களை நம்பவைத்து, பொறுப்பிற்கு வந்தபின், யாரவது பொது இடங்களில் நடக்கும் தீமைகளை பற்றி கேட்டால் அவர்களை துன்புறுத்துவது, அவர்களுடைய குடும்பத்தை குலைப்பது போன்ற நிலைமையினால், அன்றிலிருந்தே, பொதுமக்கள் சமுகனலத்தில் அக்கரைகொள்வதில் இருந்து விலகியே இருக்கின்றனர். சாதாறனமனிதனுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு ஜனநாயகமாக உள்ளது இந்தியா. இதுதான் இன்றைய நிலைமை.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
17-நவ-201414:30:27 IST Report Abuse
Nallavan Nallavan திருந்தனும் -ன்னு தோணுது .... இதெல்லாம் சரி செய்யணும் -ன்னு தோணுது .... ஆனா பூனைக்கு யாரு மணி கட்டுறது ???? அமானுஷ்யத் தொடர்கள் எழுதி வந்தவருக்கு, திடீரென்று சமூக அக்கறை பிறந்த மாதிரி எனக்கும் ஒரு நாள் பிறக்கும் .... இல்லையா திரு. இ.சௌந்திரராஜன் ????
Rate this:
Share this comment
Cancel
Kathiresasn Sornavel - Mumbai,இந்தியா
17-நவ-201414:30:22 IST Report Abuse
Kathiresasn Sornavel அராஜகம் தான் காரணம். சட்டசபை செயலாளர் நீக்கப்பட்டது... இரண்டு தினங்களுக்கு முன்னர் ஏரியில் ஆகிரமிப்பு பத்தி புகார் செய்தவர் கொலை செய்யபட்டார். ..... இப்படி என்றால் யாருக்கு தான் துணிவு வரும்....? மீறி ஏதாவது பண்ணினால் அரசாங்கம் அல்லது பொதுமக்கள் நமக்கு ஆதரவு தருவார்களா....? கண்டிப்பாக இல்லை .... அரசியல் ஊழலை ஒழித்தால், எல்லாமே திருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
17-நவ-201413:38:26 IST Report Abuse
Snake Babu நல்ல சிந்தனை, நன்றி அய்யா...... நல்ல சிந்தனை என்பதை விட நம்மவர்களின் பெரும் புலம்பல், இயலாமை என்றே கூறலாம்............. ஏமாற்றுவது தெரிகிறது. ஒன்றும் செய்ய முடிய வில்லை. மற்றபடி தனி மனித போராட்டம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறோம். ஆரம்பத்தில் பாவம் என்று இருந்தது. இப்போதும் இருக்கிறது, ஆனால் நவீன வாழ்க்கை சட்டம், ரூல்ஸ், பாலிசி, வியாபார உத்தி என புது புது பெயர்களை அதுவும் கோர்போரடே லெவெலில் வைத்து கொண்டு பாவத்தின் மீது திரை பெரிதாக போர்த்த பட்டுள்ளது. பல வியாக்யானங்கள் அவன் செய்கிறான். நாம் ஏன் செய்ய கூடாது. அவன் நால்லாதானே இருக்கிறான் என கூறிக்கொண்டே தவறுகள் தொடர்கின்றன. ஒன்று மட்டும் நிச்சயம் விதைத்ததை தான் அறுவடை செய்ய முடியும். நல்ல வழியில் வந்த செல்வம் தான் நிலைக்கும். கண் கூடாக வே பார்க்கலாம். தினமும் மாத்திரை போடுவது, மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ மனையில் அட்மிட் ஆவது. அப்படி இல்லை என்றால் மன அமைதி இல்லாமல் இருபத்து. இப்படி பல இருக்கிறது. இதை கவனிப்பது இல்லை ஏனென்றால் இதுவும் சகஜம் என்ற நிலைக்கு தள்ள பட்டுள்ளோம். ஒரு பக்கம் வரவது ஒரு பக்கம் வினாகி கொண்டிருக்கும். சரி விடுங்க...சகஜ நிலைக்கு வந்து விடலாம் . நல்ல கட்டுரை, இந்திரா சவுந்தரராஜன்க்கும் நன்றி தினமலருக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை