ஆற்றங்கரையே... அழகிய மணலே...!| Dinamalar

ஆற்றங்கரையே... அழகிய மணலே...!

Added : நவ 22, 2014 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
ஆற்றங்கரையே... அழகிய மணலே...!

நாம் வாழும் இந்த பூமியின் மகத்தான வரங்களுள் ஒன்று, மணல். இயற்கை வழங்கிய இந்த அருங்கொடை, கொள்ளையர்களின் தனி உடைமையாக மாறி, சொத்துக்களை அள்ளிக் குவிக்கும் பண்டமாக உருப்பெற்றுள்ளது.

'என்னைக் கொன்று என் மண்ணில் புதைப்பாய், என் மண்ணைக் கொண்டு போய் எங்கே புதைப்பாய்?' என்பார் ஈழத்துக் கவிஞர் காசியானந்தன். ஆனால், அந்த மண்ணையும் கொள்ளையடித்து கொண்டிருக்கின்றனர். அண்டை மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகளில் தமிழக ஆற்று மணல் நாள்தோறும் சென்று கொண்டிருக்கிறது. ஆனால், 'யார் வீட்டு எழவோ, பாய் போட்டு அழவோ' என்ற மனநிலையில், மொத்தத் தமிழகமும் நீண்ட தூக்கத்தில் உள்ளது. ஆங்காங்கு எழும் போர்க்குரலும், மக்களின் பேராதரவு இன்மையால், ஈனக்குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.


தவிச்ச வாய்க்கு தண்ணீரில்லை!

நீர்நிலைகளைச் சூறையா(ட)டிவிட்டு, குடங்களை தூக்கிக் கொண்டு தெருத்தெருவாய் அலைந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் 'தவிச்ச வாய்க்கு' இன்னமும் தண்ணீர் கிடைத்தபாடில்லை. மரங்களை வெட்டிச் சாய்க்கும் மரக் கொள்ளையர்களை சபித்துக் கொண்டு, தேக்குக் கட்டிலில் படுத்து, வீட்டுக் கூரை மீது குருவிகளுக்குக்கூடு கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆற்று மணலை அள்ளிக் கொண்டு போவதை, கை கட்டி, வாய் பொத்தி இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டே, வீடு கட்ட மணலுக்காக ஆளாய்ப் பறக்கிறோம். மலைகளை மொட்டையடித்து, பாளம் பாளமாய் வெட்டியெடுக்கும் 'மலை முழுங்கி' மகாதேவர்களை எண்ணி, நம் வீட்டுத் தரைக்கு கிரானைட் கோலம் போட்டுக் கொண்டே 'அய்யோ, மலை போச்சே, மலை போச்சே' என்று 'வட போச்சே' ரேஞ்சுக்கு அழுது புலம்புகிறோம்.


வள ஆதார ஆக்கிரமிப்புகள் :


மரங்களை இழந்து, மரங்கள் பெருகி வளர்ந்த மலைகளை இழந்து, அங்கிருந்து பாய்ந்தோடி வந்த ஆறுகளை இழந்து, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் உருண்டு, திரண்டு, பெருகிக் கிடந்த மணலை இழந்து, மொத்தத்தில் மனிதத் தன்மையை இழந்து விட்டோம். நம் முன்னே நடக்கும் அத்துமீறல்கள், கொடுஞ்செயல்கள், வளஆதார ஆக்கிரமிப்புகளை எதிர்த்துப் பேசக்கூட திராணியின்றி வாழாவிருக்கிறோம்.ஓட்டுக்குக் காசு கேட்கும் உரிமை, அத்துமீறி நம் ஆற்று மணலை அள்ளுபவனிடம் அடங்கிப்போவது ஏனோ? கேள்விகள் கேட்கத் துணிந்து நின்று, எதிர்க்க முனைந்தால், மலைகள் இனி மேலும் மண்ணாகுமா...? அல்லது மணல்தான் எங்கோ ஓரிடத்தில் மலையாகுமா?


அன்னையின் மடி :


மணல், நிலத்தின் அடையாளம். வாழ்வியல் பண்பாடு. இவற்றையெல்லாம் தாண்டி உயிரின இருப்பிற்கான கருப்பொருள். பூவுலகின் சொர்க்கம், முதலில் அன்னையின் மடி, அடுத்ததாக ஆற்று மணல். அதில் உருண்டு, புரண்டு விளையாடி மகிழ்ந்தவர்களுக்குத் தெரியும், அதற்கு ஈடான பஞ்சு மெத்தை உலகில் கிடையாது என்பது. ஈரம் பிதுங்கிய வெண் மணல் துகள், அடடா.., இன்றைய தலைமுறை தொலைத்து விட்ட மகிழ்ச்சி. மண்ணைக் குவித்து வீடு என்ன... மாளிகையும், அரண்மனைகளும் கட்டி மகிழ்ந்து, களிக்கூத்தாடிய அன்றைய சிறுவர் கூட்டங்களெல்லாம், இன்றைக்கு 'அது ஒரு மணல் காலம்' என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டே, நகர நரக வாழ்க்கைக்குள் சிறைப்பட்டுக் கிடக்கிறது. அவர்களுக்கும் மூத்தவர்கள் மங்கிய நினைவுகளில், மணலில் காதலித்த அல்லது மணலைக் காதலித்த தங்களின் கதைகளைப் பேரன், பேத்திகளெல்லாம், கேட்கமாட்டார்களா என்று ஏங்கிப் போய், முதியோர் இல்லங்களுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்.


முடிவிற்கு வந்த கலாசாரம் :

புனிதமான ஆறுகளில் நீராடச் செல்லும்போதெல்லாம், அங்கிருந்து ஒரு கைப்பிடி மணலை அள்ளி, மஞ்சள் துணியில் முடிந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, போற்றி வணங்கிய நம் கலாசாரத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது, இன்று நம் கண் முன்னே அரங்கேறும் மணல் கொள்ளையல்லவா...? ஆறுகளின் புனிதம் கெட்டதும், நீர்நிலை அசுத்தத்திற்கு முதல் சுழி இட்டதும் மணற் கொள்ளையின் தொடக்கமன்றோ...?ஆயிரம் காலத்துப் பயிராய் விளங்கும் மணல், ஒரு கன அடி உருவாக நூறு ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. இவற்றிற்கெல்லாம் அடிப்படைக் காரணம், நம் தட்பவெப்ப சூழலில் நிகழும் ஆறு பருவ காலங்களே. முன்பனி, பின்பனி, முதுவேனில், இளவேனில், கார், கூதிர் காலங்களில் நிகழும் புவியியல் வேறுபாடுகளின் காரணமாக பாறைகளில் ஏற்படும் மாற்றங்களே மணல் எனும் தங்கத்தை, இயற்கை நமக்கு வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. மழைநீரின் வேகத்தால் பாறைகள் உடைக்கப்பட்டு, சிறுசிறு கற்களாக உடைந்து, அவற்றிலிருந்து மணல் துகள் உருவாகும் இந்த மாறுபாடு, ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் தொடர்ந்து நிகழும் இயற்கையின் மாற்றமில்லா நிகழ்ச்சி நிரல். தண்ணீரைத் தேக்க இன்று அணை கட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இயற்கையே உருவாக்கிய அற்புதமான நீர்த்தேக்கம்தான் மணற்படுகைகள்.தமிழகத்திலுள்ள நீர்த்தேக்கங்களில்10 அடியிலிருந்து 20 அடி வரை வண்டல் மண் தேங்கிக் கிடக்கிறது. இதனால் அவற்றின் முழுக் கொள்திறன் படிப்படியாகக் குறைந்து வருகிறது. சத்து நிறைந்த இவ்வண்டல் மண்ணை, விளைநிலங்களுக்காக எடுப்பதற்கு அரசு இதுவரை திட்டமிடவில்லை. எடுக்கக்கூடாத ஆற்று மணலை ஒப்பந்தம் செய்து சுரண்டிக் கொண்டு இருக்கிறது.


ஆயிரம் ஆண்டுகள் :


'பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ' என்று வெள்ளையனை எதிர்த்துப் பாடினான் பாரதி. ஆனால் நம்மை நாமே ஆளுகின்ற இன்றைய சூழ்நிலையிலும்கூட பாரதியின் கவிதை வரிகள், இப்போதும் நமக்குப் பொருந்துகிறதே. கொள்ளையர்கள் சுரண்டிய மணலைத் தமிழக ஆறுகள் திரும்ப பெறுவதற்கு, இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். இருக்கின்ற வளத்தையாவது காப்பாற்றிக் கொள்ள நாம் ஒவ்வொருவரும் இனியேனும் வெகுண்டெழ வேண்டும்.
--ரா.சிவக்குமார்,
எழுத்தாளர்,
மதுரை. 99948 27177.
rrsiva@yahoo.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-செப்-201516:50:02 IST Report Abuse
JeevaKiran முதலில் அரசியல் செல்வாக்கை ஒழிக்கணும். போலீஸ் என்ன செய்கிறது? பாவம் ஏழை எளிய மக்களைத்தான் மிரட்டுகிறது. முதலில் போலீஸ் துறையை சரிசெய்யணும். அரசியல் கொட்டத்தை அடக்கணும். பிறகு பாருங்கள் இயற்கை வளங்கள் எப்படி ஜொலிக்கிறதென்று.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
22-நவ-201417:46:57 IST Report Abuse
Natarajan Ramanathan அண்டை மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான லாரிகளில் தமிழக ஆற்று மணல் நாள்தோறும் சென்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் மற்ற எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு மணல் கொள்ளை அடிக்க அரசு அனுமதிக்காது.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
22-நவ-201415:20:02 IST Report Abuse
P. SIV GOWRI -ரா.சிவக்குமார், ஜி உங்க அருமையான பதிவை பார்த்து மனம் நெகிழ்கிறது. தமிழக ஆறுகள் திரும்ப பெறுவதற்கு, இன்னும் ஆயிரம் ஆண்டு காலம் காத்திருக்க வேண்டும். உங்க ஆதங்கம் புரிகிறது. vote போட மட்டுமே உரிமை உள்ள நமக்கு வேறு என்ன செய்ய முடியும்.
Rate this:
Share this comment
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
22-நவ-201421:09:55 IST Report Abuse
fire agniputhranஒரு சில நதிகள் பெயர் சொல்லும் அளவிற்கு தான் இருக்கின்றன. அரசியல்வாதிகள் கூட்டு சேர்ந்து இந்த கொள்ளையில் பங்கு கொண்டுள்ளனர். ஒரு சில நல்ல மனிதர்களும் அரசியல்வாதிகளாக இருப்பதை நினைத்து பெருமை கொள்ள வேண்டி உள்ளது. திரு.நல்ல கண்ணு போன்ற சில தலைவர்கள் தாமிரபரணியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு தங்களை வருத்திகொண்ட போதும் பொது மக்கள் அவருக்கு துணை நிற்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை....
Rate this:
Share this comment
fire agniputhran - jakarta,இந்தோனேசியா
22-நவ-201421:13:00 IST Report Abuse
fire agniputhranவெட்க கேடு .ஆளும் கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு ..........பேசிய கட்சிகள் எதிர்கட்சியான உடன் .........காட்சி மாறி கொள்ளையில் ஈடுபடுவது வேதனையிலும் வேதனை. இதற்க்கு உச்ச நீதி மன்றம் தலையிட வேண்டுமா என்ன?...
Rate this:
Share this comment
Cancel
Thailam Govindarasu - Manama,பஹ்ரைன்
22-நவ-201415:18:52 IST Report Abuse
Thailam Govindarasu என்னோவோ எழுத மனம் விரும்புகிறது, ஆனால் ஒன்றுமே எழுத முடியாமல் துடிக்கின்றது. உன்னால் முடியும் என்கிறது மனது, எல்லாம் என்னால் நடக்கிறது என்கிறது ஆன்மிகம். என்னுள்ளே போராடுவதா அல்லது என் வெளியே போராடுவதா. உள்ளே போராடினால் ஓரிடம், ஒருவனிடம். வெளியே யாரிடம், எவர் எவரிடம்... உன்னை மாற்று,உனது அருகில் உள்ளவன் மாறுவான் அதனால் ஒரு ஊரு மாறும், ஊரு மாறினால் நாடு மாறும்,நாடு மாறினால் தேசம் மாறும் தேசம் மாறினால் உலகம் மாறும் இதுதான் குழம்பிய என்மனதில் கிடைத்த விடை...
Rate this:
Share this comment
Cancel
Swathi Shri - Chennai,இந்தியா
22-நவ-201414:21:41 IST Report Abuse
Swathi Shri ஆற்று மணலில் வீடு கட்டி விளையாடியவர்களுக்கு மட்டுமே தெரியும் மணலின் அற்புதமும்,மகத்துவமும். அவரவர் சம்பாதித்த சொத்துக்களைப் பாதுகாக்கும் அக்கறையில் மணல் துகள் அளவிலும் , இயற்கை அன்னையின் சொத்துக்களைக் காப்பாற்றுவதில் இல்லை ... சிந்தனை செய்யுங்கள் மானுடப் பதர்களே.....
Rate this:
Share this comment
Cancel
Palanichamy - Theni,இந்தியா
22-நவ-201413:14:26 IST Report Abuse
Palanichamy அரசியல்வாதிகளின் ஆதரவோடும் அரசு அதிகாரிகளின் துணையோடும் மணல் கொள்ளை லாரி லாரியாக அண்டை மாநிலங்களுக்கு மணல் கொள்ளைகாரர்கள் வருங்கால தலைமுறையினருக்கு கேடு விளைவிக்கும் வகையில் பாதகம் செய்கிறார்கள். இதை தடுக்கவேண்டியது அரசும், தேசப்பற்றுள்ள அரசியல்வாதிகளும்தான்.
Rate this:
Share this comment
Cancel
Yathavan Nambi Puthuvai Velou - Paris,பிரான்ஸ்
22-நவ-201409:22:44 IST Report Abuse
Yathavan Nambi Puthuvai Velou அன்று: 'பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ' என்று வெள்ளையனை எதிர்த்துப் பாடினான் பாரதி. இன்று ரா.சிவக்குமார், சிகப்பு அணுக்களை தட்டி எழுப்பும் சிகப்பு சிந்தனை உள்ள சிறந்த விழிப்புணர்வுக் கட்டுரையை "மணல் கொள்ளை" அடிக்கும் 'மலை முழுங்கி' மகாதேவர்களை நமக்கு வெளிச்சம் போட்டு காண்பித்து இருக்கிறார். நாளை: மக்கள் இயற்கையோடு ஒன்றி வாழ இயற்கை செல்வங்கள் இனி இருக்குமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை