வேதங்களில் பாயும் சரஸ்வதி| Dinamalar

வேதங்களில் பாயும் சரஸ்வதி

Updated : நவ 27, 2014 | Added : நவ 27, 2014 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
வேதங்களில் பாயும் சரஸ்வதி

ரிக் வேதத்தில் நாற்பத்தைந்து ஸ்லோகங்கள் சரஸ்வதியின் புகழைப் பாடுகின்றன; அவருடைய பெயர் 72 தடவைகள் சொல்லப்படுகின்றன. மூன்று ஸ்லோகங்கள் முழுவதும் சரஸ்வதிக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலும் இலா, பாராதி என்ற இரு தேவியருடன் சேர்ந்தே சரஸ்வதி வணங்கப்படுகிறார். சரஸ்வதி நதியின் நீர் 'மாபெரும் வெள்ளக்காடு' என்று புகழப்படுகிறது. சிறந்ததில் அதி சிறந்தது, நதிகளிலேயே அதிவேகமாகப் பாயக்கூடியது, 'பிரமாண்டமாகவே படைக்கப்பட்டது'என்றெல்லாம் சொல்லப்படுகிறது. 'எல்லையில்லாத, தடையின்றிப் பாய்ந்து செல்லும், அதி வேகமாகப் பாயும்' அந்த நதி, 'கம்பீரத்திலும் பலத்திலும் ஈடுஇணையற்றது', 'காதைப் பிளக்கும் சப்தத்துடன் பாய்ந்து வரும்.' சரஸ்வதி நதி மற்ற நதிகளுக்குத் தாயைப்போன்றவள் (சிந்து மாதா). வேத காலத்திலிருந்த குலங்களில் குறைந்தபட்சம் 'புரு' வம்சத்தினர் இதன் இருகரைகளிலும் இருந்த புல்வெளிகளில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.சமஸ்கிருத மொழிப்புலவர்கள் 'சரஸ்வதி' என்ற வார்த்தைக்கு 'குளங்களின் சங்கிலித் தொடர்', 'ஏரிகள் (சரஸ்) நிறைந்தது' என்று பொருள் கொள்கிறார்கள். அதன் அடிப்படையில் அந்த நதி தொடக்கத்தில் எப்படி இருந்திருக்க வேண்டுமென பல்வேறு தீர்மானங்களை முன்வைக்கிறார்கள்; ஆனால், 'சரஸ்' என்ற வார்த்தைக்கு நீர் அல்லது நீரோட்டம் ('சர' என்ற வேர்ச்சொல் பாய்தல் என்றபொருளைத் தருகிறது) என்று பொருள். 'அவள் பாயும் கணங்கள் கொண்ட நீராலானவள்'என்று ஸ்ரீஅரவிந்தர் சொல்வதைப்போல் நதியின் பெயரை இப்படியும் சொல்லலாம்.இந்த இரு விளக்கங்களுமே நியாயமானவையே. ஆகவே, பெயரின் அடிப்படையில் மட்டுமே சரஸ்வதிக்கு பவுதிக உருவம் தருவது சரியாக இருக்காது. (இந்த இரு விளக்கங்களும் சரியாகக்கூட இருக்கலாம். மிகவும் சம தளமான ஒரு பகுதியில் ஓடும் நதி வளைவான ஒரு படுகையில் பாய்ந்து பிறகு அதை விட்டு விலகிச் செல்லும்போது இடையிலுள்ள அந்த நீர்நிலை 'க்' வடிவ ஏரிபோலக் காட்சியளிக்கும். வலிமையும் வேகமும் நிறைந்ததாக இருந்த காரணத்தாலேயே சரஸ்வதி நமக்கு 'ஊக்கம்', 'உத்வேகம்' ஆகியவற்றுக்கெல்லாம் குறியீட்டு அடையாளமாக வேதங்களில் வர்ணிக்கப்படுகிறாள். 'சந்தோஷமான உண்மைகளைத் தூண்டுபவள்' அதோடு, 'சிந்தனை வெள்ளம் பெருக்கெடுக்கச் செய்பவள், அனைத்து எண்ணங்களையும் பிரகாசிக்கச் செய்பவள்'என்று புகழப்படுகிறாள். 'அனைத்துத் தாய்களிலும் அவளே சிறந்தவள்', 'அனைத்து நதிகளிலும் அவளே சிறந்தவள்' 'அனைத்து தெய்வங்களிலும் அவளே உயர்ந்தவள்'என்றெல்லாம் சரஸ்வதி வர்ணிக்கப்படுகிறாள். கங்கையில் ஆரம்பித்து காவிரிவரை இந்தக் காலகட்டத்தில் இருந்துதான் நதியானது தெய்வமாக்கப்படுவது ஆரம்பிக்கிறது. சில நூற்றாண்டுகள் கழித்து, குறிப்பாகச் சொல்வதானால், யஜூர் வேதத்தில், வாக்கின் (சமஸ்கிருதத்தில் 'வச' அல்லது 'வாக்') தெய்வமாக சரஸ்வதி ஆக்கப்படுகிறார்.
சிந்து நதியையோ ராவி நதியையோ விட்டுவிட்டு சரஸ்வதி நதியை 'வாக்தேவி'யாகத் தேர்ந்தெடுத்தது ஏன் என்று சில ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் எழுந்தது. சிலர் இதற்கு எளிய காரணம் ஒன்றைச் சொல்கிறார்கள். அதாவது, 'கள கள' என்ற ஓசையுடன் பாய்ந்தோடிய இந்த நதியின் கரையில்தான் ரிக் வேத கால ரிஷிகளின் ஆசிரமங்கள் இருந்தன: ரிக் வேதத்தில் கவித்துவமாகச் சொல்லப்பட்டிருக்கும் நதியின் சப்தம் கூடிய சீக்கிரமே குறியீட்டுத்தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதனாலேயே அவர்கள் சரஸ்வதி நதியை 'வாக் தேவி'யாகத் தேர்ந்தெடுத்தனர் என்பது ஒரு சாராரின் அபிப்பிராயம்.வேறுசிலர் ஆரம்பகாலம் முதலே சரஸ்வதி நதி 'ஸ்லோகங்களை உருவாக்க உத்வேகம் தருபவள்' என்று வர்ணிக்கப்பட்டு வந்தாள். ஆகவே, அவளை வாக்குக்கு தேவி என்றழைப்பது இயல்பானதுதான் என்கின்றனர். இந்தக் கோணத்தை வளர்த்தெடுத்துச் செல்லும் கனடா நாட்டைச் சேர்ந்த காத்தரீன் லுட்விக் என்ற இந்தியவியலாளர் சமீபத்தில் சரஸ்வதி தேவியை 'அறிவின் நதி சார் தெய்வம்' என்று வருணித்து ஓர் அற்புதமான ஆய்வு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். சரஸ்வதி தேவி மனித மனத்தினுள்ளில் எழும் உத்வேகம் மிகுந்த எண்ணங்களுடன் (சமஸ்கிருதத்தில் 'தி') நிலையான தொடர்புடையவள் என்கிறார். ஒருவருடைய பேச்சும் உத்வேகமுமே, அறிவு, கல்வி ஆகியவற்றின் வாகனமாகும்.
அப்படியாக, நதியின் உருமாற்றம் முழுமையடைந்தது. வாக்தேவியாக இருந்த சரஸ்வதி நாளடைவில் வேதங்களின் தாயாகவும் பிரம்மாவின் மனைவியாகவும் (சில நேரங்களில் மகளாகவும்) ஆனாள். நுண்கலைகளையும் தன்னுடன் இணைத்துக்கொண்டாள். புத்த, சமண மத வழிபாடுகளிலும் சரஸ்வதி இடம்பெற்றாள். சமணர்கள் சரஸ்வதியை பதினாறு வித்யா தேவியரின் அல்லது அறிவுத் தெய்வங்களின் தலைவியாகக் கொண்டாடினார்கள். 'ஞான பஞ்சமி' என்ற ஒரு சிறப்பு சமண விழா சரஸ்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.இந்த நதித் தெய்வம் தன் இந்தியக் கரைகளை உடைத்துக்கொண்டு பாய்ந்து சீனா, ஜப்பான் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் வணங்கப்படுகிறது (மியான்மாரில் 'துயாததி' என்ற பெயரிலும் ஜப்பானில் 'பென்டென்' அல்லது 'பென்ஸைட்டன்' என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறாள்).
ரிக் வேதத்திலிருந்து மேலும் சில விஷயங்களையும் நாம் தெரிந்துகொள்ளமுடியும்: 'ஏழு சகோதரிகள் கொண்டவள்' அல்லது 'ஏழு சகோதரிகளில் ஒருத்தி'என்று சரஸ்வதி சொல்லப்படுகிறாள். அது முழுவதுமே குறியீட்டு வாக்கியமாக இல்லாமல் இருக்கும்பட்சத்தில், சரஸ்வதிக்கு ஏழு அல்லது அதற்கும் மேற்பட்ட கிளை நதிகள் இருந்தன என்று எடுத்துக்கொள்ளலாம்; வேறொரு ஸ்லோகத்தில் சரஸ்வதி 'ஏழாவது'என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. மற்றொரு ஸ்லோகத்தில் இது 'த்ருஷத்வதி' என்ற வேறொரு நதியுடன் இணைத்துப் பேசப்பட்டிருக்கிறது. 'அதன் சக்திவாய்ந்த அலைகள் மலைத் தொடர்களை ஊடுருவிப் பாய்ந்து செல்கின்றன'என்ற வரியிலிருந்து சரஸ்வதி நதி மலைகளில் உற்பத்தியானதென்பது தெரியவருகிறது. 'தங்கு தடையின்றி' பாய்வதோடு 'மலையிலிருந்து கடல் வரை அதி தூய்மையுடன் பாய்ந்து செல்கிறது'(கிரிபயா ய சமுத்ராத்) என்றும் சொல்லியிருப்பது இதை மேலும் உறுதி செய்கிறது. இந்த ஸ்லோகத்தை மனத்தில் வைத்துத்தான் ஸி.எஃப்.ஒல்தாம் 'சரஸ்வதி நதி கடலை நோக்கிப் பாய்ந்து செல்வது பற்றி வேதத்தில் சொல்லப்பட்டிருப்பவை' என்று சொல்லியிருக்கிறார்.சரஸ்வதி நதியைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டதைவிடக் கூடுதலாகப் பிற மூன்று வேதங்களில் (யஜூர், ஸாம, அதர்வண வேதங்களில்) ஒன்றும் சொல்லப்படவில்லை. யஜூர் வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் சரஸ்வதி நதிக்கு ஐந்து கிளை நதிகள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிக் வேதத்தில் 'ஏழு சகோதரிகள்' என்று சொல்லப்பட்டதன் பிரதிபலிப்பு.எனினும், அடுத்தகட்ட வேத படைப்புகளான 'பிரமாணங்கள்'* தோன்றுவதற்கு முன்பாக வேறு ஏதோ ஒரு முக்கிய சம்பவம் நடந்திருக்க வேண்டும். அந்தப் புராதனப் படைப்புகள் சிலவற்றுள் சரஸ்வதி நதி 'விநாசனம்' என்ற இடத்தில் மறைந்தது என்று சொல்லப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். விநாசனம் என்றால் மறைவு அல்லது இழப்பு என்று அர்த்தம்: அதாவது, முன்பு 'தங்கு தடையின்றி' கடல் வரை ஓடிக் கொண்டிருந்த சரஸ்வதி நதி இப்போது அப்படி இல்லை.சில பிரமாணங்கள் சரஸ்வதி நதி 'ப்லாக்ஷப்ராஸ்ரவனா'என்ற இடத்தில் உற்பத்தியானதாகக் குறிப்பிடுகின்றன. அங்கு ஒரு மிகப் பெரிய ஆலமரம் (ப்லாக்ஷா) இருந்ததால் அந்தப் பெயர் வந்தது. ஷிவாலிக் மலைப்பிரதேசத்துக்கு அருகில் இந்த இடம் இருந்ததாக மகாபாரதம் தெளிவாகக் கூறுகிறது. இந்த உற்பத்தி ஸ்தானத்திலிருந்து சரஸ்வதி மண்ணில் மறைந்து போன இடம் 44 'ஆஷ்வினா'களுக்கு அப்பாலிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. (அதாவது, குதிரையில் 44 நாட்கள் பயணம் செய்யும் தொலைவு). இங்கு ஒரு பிரச்னை எழுகிறது. ஒரு நாளைக்கு நாற்பது கி.மீட்டர் தூரம் கடந்து சென்றாலும்கூட இந்த இரு இடங்களுக்குமிடையே உள்ள தூரம் ஷிவாலிக் மலைத் தொடரிலிருந்து அரபிக்கடல் வரையுள்ள தூரத்தைவிட அதிகமாக இருக்கும்! இங்கு சொல்லப்பட்டிருக்கும் தொலைவு கற்பனையானதே. அதை அப்படியே எடுத்துக்கொள்ளக்கூடாது என்று பஞ்சவிம்சப் பிராம்மணம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது. ஏனென்றால், அது 'பூமிக்கும் சொர்க்கத்துக்கும் இடையிலான தொலைவு அது'என்றும் சொல்கிறது.=========சரஸ்வதி : ஒரு நதியின் மறைவுமிஷல் தனினோதமிழில் : வை. கிருஷ்ணமூர்த்திகிழக்கு பதிப்பகம்பக்கம் 416 விலை ரூ.300இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-635-3.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க: 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kundalakesi - VANCOUVER,கனடா
28-நவ-201412:19:24 IST Report Abuse
kundalakesi திரு லோகேஷ் போன்றோருக்காக சிறு தகவல் , இந்தியா நாற்புறமும் கடல் சூழ்ந்த நிலையில், வடதிசை நோக்கி நகர்வால் ( இப்போதும்) ஆசியாவின் துணைக்கண்டமாக மாறி, கடலாயிர்ந்த இடத்தை இமயமலையாக முட்டி எழுப்பி ( இன்னும்) , வரிசையாக் ஆரவல்லி, விந்த்ய , இமய என மலை வரிசைகளை எழுப்பி, அவற்றின் நீர்ப்பெருக்கினால் தோன்றிய நதிகளில் இமயத்திநின்று சிந்து, சரஸ்வதி, கங்கை, பிரம்ம புத்திர என பனிச்ச்சடையிநின்ரும் வழிந்தோடின. பிரிதேர்ப்பட்ட நிலக் குலுங்கலால், தென்னிந்தியா மேலைபுரம் உயர்ந்து கீழ் திசை தாழ்ந்து கோதாவரி, கிருஷ்ணா , காவிரி தோன்றின. இந்த குலுங்கல் இப்போது ராஜஸ்தான் பாலை நிலமாயிருக்கே, அந்த பசுமை பூமியில் பாய்ந்த சரஸ்வதியை உயர்த்தி, சட்லெஜில் ( பழம் பெயர் சுதுத்ரி ) சங்கமிக்க வைத்தது.
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
27-நவ-201417:19:12 IST Report Abuse
CHANDRA GUPTHAN அருமையான ஆராய்ச்சி கருத்துக்கள். பாராட்ட வார்த்தை இல்லை. இப்போது சரஸ்வதி நிலத்தில் மட்டுமல்ல, மக்களின் மனத்திலிருந்தும் மறைந்துவிட்டாள். கல்வி வியாபாரம் ஆகிவிட்டது. கற்கும் கல்வியும் கூட சம்பாதிக்கத்தானே தவிர வாழ்கைக்கு உதவாதது. ஞான சரஸ்வதியின் அருள் உலகமெங்கும் பொங்கி பெருகிட வேண்டும். உலகமெங்கும் சுபிக்ஷமாக இருக்க வாக்தேவியின் (வேதம்) ஒலித்திட வேண்டும். குழந்தைகள் ஞான செல்வங்களாக வளர வேதமாதா அருள்புரிய வேண்டுகிறேன். லோகா சமஸ்தா சுகிநோபவந்து .
Rate this:
Share this comment
Cancel
Lokesh Raju - chennai,இந்தியா
27-நவ-201412:57:49 IST Report Abuse
Lokesh Raju நல்ல ஒரு ஆராய்ச்சி செய்தி... பாராட்டுக்கள் ..... அனால் நதி எப்படி காணமல் போனது பற்றி வருத்தமாகவும் , எதிரபாகவும் உள்ளது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X