பாதை மாறிய பழமொழிகள்...| Dinamalar

பாதை மாறிய பழமொழிகள்...

Added : டிச 13, 2014 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பாதை மாறிய பழமொழிகள்...

பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில், பண்பாட்டில் உருவான அனுபவங்களை, கருத்துக்களை, எண்ணங்களை நறுக்கு தெறித்தாற் போல நாலு வார்த்தைகளில் சொல்லியவை பழமொழிகள்.

சமூகத்தின் அனுபவ பிழிவாக திகழ்ந்த இப்பழமொழிகள், ஒரு கால கட்டத்திலிருந்து, இன்னொரு கால கட்ட மக்களுக்கு செவி வழி இலக்கியங்களாகவே பரிமாறப்பட்டிருக்கிறது. அப்போது சில சொற்கள் திரிந்தோ, உருமாறியோ, வேறு பொருள் தருமாறு புரிந்தோ, பாதை மாறி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன. சைவர்கள், சமணர்களை வாதத்திற்கு அழைத்து தோல்வியுறச்செய்து, எண்ணாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றிய செய்தியை எட்டாயிரம் சமணர்கள் என்று தவறாக பொருள் கொண்டவர்களே அதிகம். விழுப்புரம் அருகே உள்ள "எண்ணாயிரம்” என்ற ஊரை சேர்ந்த சமணர்களை கழுவில் ஏற்றப்பட்டதே உண்மை நிகழ்வு. இலங்கை வேந்தன் ராவணன் பத்து கலைகளில் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கியதால், அவனை 'பத்து கலை ராவணன்' என்று அழைத்திருக்கிறார்கள். அது திரிந்து பத்து தலை ராவணனாக மாறியிருக்கிறது.


பழமொழியின் திரிபு :

"வக்கத்தவன் வாத்தியார் வேலைக்கு போ, ''போக்கத்தவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழி கூட"வாக்கு கற்றவன் வாத்தியார் வேலைக்கு போ, போக்கு கற்றவன் போலீஸ் வேலைக்கு போ” என்ற பழமொழியின் திரிபே ஆகும்.
"சோழியன் குடுமி சும்மாடு ஆகாது” என்ற பழமொழி உருமாறி "சோழியன் குடுமி சும்மா ஆடாது” என்று மாறி போயிருக்கிறது. "சும்மாடு” என்பது தலையில் சுமை தாங்க பயன்படும் பொருள்.புதிதாக வந்த மருமகள் வீட்டிற்குரிய மாமியாரை வீட்டை விட்டு வெளியேற்றும் செயலுக்கும், அதற்கு இணையான நிகழ்வுகளுக்கும் எடுத்தாளப்படும் பழமொழியே, "ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியதாம்” என்பதாகும்.

இதில் பிடாரி என்பது பெண் தெய்வத்தை குறிக்கிறது. லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்கு ஊரின் நடுவே கோயில் அமைக்கப்பட்டு, கொற்றவையும், காளிக்கும் ஊரின் எல்லையில் கோயில் அமைக்கப்பட்டன. அந்த நிகழ்வை குறிக்க உருவான பழமொழியே இது.
மகாபாரத போரின்போது, குந்தியிடம் கர்ணன் கூறும் "ஆறிலும் சாவு நூறிலும் சாவு” என்ற வாசகம் பின்னர் பொருள் புதைந்து மாறிப்போயிருக்கிறது. ஐந்து சகோதரர்களோடு ஆறாவதாக கர்ணன் சேர்ந்தாலும் போரில் சாவு உறுதி. துரியோதனன் கூட்டத்தார் நூறு பேரோடு இருந்தாலும் சாவு உறுதி என்பதே உண்மை பொருள்.

புழக்கத்தில் பழமொழிகள் :

"ஆயிரம் வேரைக் கொண்டவன் அரை வைத்தியன்” -பின்னாளில் "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்” என்றும் "ஆயிரம் முறை போய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று சொன்னதை "ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் செய்” என்று பொருள் இன்றளவும் நம்மிடையே புழக்கத்தில் இருக்கிறது.

"கண்டதை கற்பவன் பண்டிதன் ஆவான்” என்ற தொடரில் கண்டதை கற்கும் ஒருவன் எப்படி வல்லுனன் ஆக முடியும்? கண்ணால் மட்டுமே கண்ட ஒரு செயலை, அல்லது கலையை கற்று கொள்பவன் பண்டிதன் ஆகி விடுவான் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

"களவும் கவறும் மற” அல்லது "களவும் கத்தும் மற” என்ற தொடரே, "களவும் கற்றுமற” என முரண்பட்டு நிற்கிறது. களவாகிய திருட்டை செய்து பின் மறந்து விட வேண்டும் என்ற பொருளிலேயே இன்று வரை நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். 'கத்து' என்ற சொல் 'பொய்' 'சூது' 'கயமை' போன்ற பொருளை குறிக்கிறது. களவாகிய திருட்டையும், கயமையாகிய பொய் சூதையும் மறந்து விட வேண்டும் என்பற்கான பழமொழியே இது.


தாயும் பிள்ளையும் :

"சேல் (விழி) அகட்டும் (அலைபாயவிடும்) பெண்ணை நம்பாதே”தான் "சேலை கட்டும் பெண்ணை நம்பாதே” என்றாகி போனது.
"தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்” என்ற பழமொழி கூட 'தாய்' என்பது வாழையையும் 'பிள்ளை' என்பது தென்னையையும் குறித்து எழுந்ததாகும். வாழை மரத்துக்கு எட்டடி இடைவெளியும், தென்னை மரத்துக்கு பதினாறடி இடைவெளியும் வேண்டும் (அதன் வேர் நீளும் அளவு) என்பதையே இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.
"விருந்தும் மருந்தும் மூன்று நாள்” என்ற தொடர் கூட விருந்து படைக்க திங்கள், புதன், வெள்ளி என்ற மூன்று நாட்களையும், மருந்து உட்கொள்ள ஞாயிறு, செவ்வாய், வியாழன் என்ற மூன்று நாட்களையும் நம் முன்னோர் பயன்படுத்தியதை குறித்து வந்தது. சனிக்கிழமையை "சனி நீராடு” என்று கூறி எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு உகந்த நாளாக கொண்டனர்

'பாத்திரமறிந்து பிச்சையிடு” என்ற பழமொழியும் தவறாகவே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. "பாத்திறம் (பா+திறம்) அறிந்து பிச்சையிடு” என்று தான் இருந்திருக்கிறது. புலவர்களும், பாணர்களும், அரசர்களை, வள்ளல்களை புகழ்ந்து பாடி பொருளுதவி (பிச்சை) பெற்று வாழ்க்கை நடத்தி வந்த சூழலில் அவர்களின் "பா”த்திறம் (பாட்டுத்திறன்) அறிந்து அதற்கேற்றாற்போல் பொருளுதவி செய்திட வலியுறுத்தி வந்ததே இப்பழமொழி.

அகத்தின் அழகு :

"நல்ல மாட்டுக்கு ஒரு சுவடுதான்” -'சூடு' என்று திரிந்து போனது. மாட்டின் அடிச்சுவட்டை வைத்தே அதன் வலிமை, உடல்நலத்தை கணித்ததை இப்பழமொழி உணர்த்தியது. "அகத்தின் அழகு” முகத்தில் தெரியும்” என்ற முதுமொழியை கூட நாம் மேலோட்டமாகவே அணுகி வருகிறோம். இப்பழமொழி தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கும் பொருள்கள் ஏராளம்.நம் அகத்தினுள் இருக்கும் நுரையீரல், இருதயம், மண்ணீரல், கல்லீரல்,
சிறுநீரகம் என்ற ஐந்து உறுப்புகளும் சீராக இயங்கினால் தான் நம் உடல் நலமாக இருக்கும். அந்த ஐந்து உறுப்புகளின் இயக்கத்தை அறிந்து கொள்ள, இன்றைய அறிவியல் உலகில் கருவிகள் வந்து விட்டாலும், நம் முன்னோர்களுக்கு நமது 'முகமே' கருவியாக பயன்பட்டிருக்கிறது.
நுரையீரலுக்கு மூக்கு, இருதயத்திற்கு 'நாக்கு', மண்ணீரலுக்கு உதடு, கல்லீரலுக்கு கண், சிறுநீரகத்துக்கு காது என்று நமது ஐந்து ராஜ உறுப்புகளுக்கும் முகத்தில் உள்ள இந்த ஐந்து உறுப்புகளோடு தொடர்பு இருப்பதை அறிந்து, அதன் நிலையறிந்து சிகிச்சை அளித்தனர். இப்படி நம் முகத்தில் தெரியும் அழகை கண்டு, இனி நாம் நம் உடல் நலத்தை காத்து கொள்வோம்.நம் முன்னோர்களின் பொக்கிஷங்களான பழமொழிகளை சரியான பாதைகளில் பயணிக்க செய்வோம்.
கவிஞர் தமிழ்மதி நாகராசன்,
முதுகலை தமிழாசிரியர்,
ராமநாதன் செட்டியார்
மேல்நிலை பள்ளி, புதுவயல்.
83445 50111.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
20-டிச-201413:04:20 IST Report Abuse
LAX அருமையான பயனுள்ள பதிவு.. - நன்றி கவிஞர் தமிழ்மதி நாகராசன் & தினமலர்..
Rate this:
Share this comment
Cancel
Ilakkuvanar Thiruvalluvan - chennai,இந்தியா
14-டிச-201404:17:40 IST Report Abuse
Ilakkuvanar Thiruvalluvan பொதுவாக நன்றாக எழுதியிருந்தாலும் தவறாகப் புரிந்து கொண்டும் பழமொழிகள் விளக்கங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. சூடடித்தல் என்பது நெல்லிலிருந்து நெல்மணிகளை அடிக்கும் செயலாகும். ஒரு முறை சூடடிக்கும்பொழுது ஏறத்தாழ 95% நெல்மணி உதிர்ந்து விடும். நல்ல மாடாக இருப்பின் இதற்கு ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. இல்லையேல் திருமபத்திரும்பச் சூடடிக்க வேண்டும். நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்பதுபோல் நல்ல திறமையுடையவன் ஒரே முயற்சியிலேயே வேலையை முடித்து விடுவான். இதைக்குறிப்பதுவே நல்ல மாட்டிற்கு ஒரு சூடு என்னும் பழமொழி. பாத்திரமறிந்து பிச்சையிடு என்பதில் தகுதியுள்ளவர்க்கு உதவ வேண்டும் என்ற கருத்து உள்ளது. நமக்குள்ள உதவும எண்ணத்தினாலோ இரக்கத்தினாலோ யாருக்கும் உதவக்கூடாது. " உதவி வரைத்தன்று உதவி, உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து "என்னும் தெய்வப்புலவர் திருக்குறளைப் பின்பற்றி உதவி தேவைப்படுபவருக்கே உதவ வேண்டும். பழந்தமிழ் மக்கள் புலவர்களை அவர் என்பதுபோல் மதிப்பாகவும் மன்னர்களை அவன் என ஒருமையிலும் குறித்தனர். அத்தகையோர் புலமையை மதிப்பதைப் பிச்சயைிடுவதாகக் கருதுவரோ? எனவே தந்துள்ள விளக்கம் தவறு.
Rate this:
Share this comment
Cancel
edakkanattan - edaikazhinadu,இந்தியா
13-டிச-201423:37:19 IST Report Abuse
edakkanattan பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பயன் உள்ள தொகுப்பு
Rate this:
Share this comment
Cancel
Yuvi - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
13-டிச-201414:28:37 IST Report Abuse
Yuvi இனி நம்மை யாரவது, திரிந்த பழமொழிகளை வைத்து திட்டினால், அப்புறம் இருக்கு அவங்களுக்கு. தமிழ்மதி நாகராசன் அவர்களுக்கும், தினமலருக்கும் நன்றி.
Rate this:
Share this comment
Cancel
Palanichamy - Theni,இந்தியா
13-டிச-201411:02:49 IST Report Abuse
Palanichamy கவிஞர் தமிழ்மதி நாகராசன் அவர்களுக்கு கோடானுகோடி நன்றியும், வாழ்த்துக்களும் சொல்ல கடமைப்பட்டுள்ளோம். இளைய சமுதயத்தினரரின் ஐயத்தை போக்கிய பெருமையும், உண்மை பொருளையும் அறியசெய்த உங்களுக்கு பல்லாண்டுகாலம் வாழ்ந்து தமிழுக்கும், தமிழ் சமுதயதிர்ற்கும் தொண்டாற்றிட இறைவனிடம் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரும்படி வேண்டிகொள்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
srini - chennai,இந்தியா
13-டிச-201410:29:37 IST Report Abuse
srini சஷ்டியில் இருந்தால் அக பையில் வரும் என்பது சட்டியில் இருந்தால் அக பையில் வரும் என்று மாறிவிட்டது. சஷ்டி திதி அன்று விரதம் இருந்தால் கரு உண்டாகும் என்று அர்த்தம்.
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
13-டிச-201412:46:37 IST Report Abuse
P. SIV GOWRIஉண்மை. குழந்தை இல்லாதவர்கள் சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்...
Rate this:
Share this comment
P. SIV GOWRI - Chennai,இந்தியா
13-டிச-201412:48:14 IST Report Abuse
P. SIV GOWRIகவிஞர் தமிழ்மதி நாகராசன் அவர்களே அருமையான பதிவுக்கு நன்றி...
Rate this:
Share this comment
Cancel
rajaram raghupathi - YANBU,சவுதி அரேபியா
13-டிச-201410:00:39 IST Report Abuse
rajaram raghupathi அருமையான தொகுப்பு. ""நாயை கண்டால் கல்லை காணோம், கல்லை கண்டால் நாயை காணோம்"-என்ற பழமொழி கூட நாயகனை கண்டால் கல்லை காணோம்,கல்லை கண்டால் நாயகனை காணோம்" என்ற பழமொழியின் திரிபே ஆகும். கல்லை கண்டால் கல்லுக் குறிய நாயகனை காணோம், நாயகனை கண்டால் கல்லை காணோம் என்பதே உண்மை பொருள். ,
Rate this:
Share this comment
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
13-டிச-201409:22:07 IST Report Abuse
Amal Anandan அருமையான தொகுப்பு. நிறைவான பணி
Rate this:
Share this comment
Cancel
Solai selvam Periyasamy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
13-டிச-201405:37:26 IST Report Abuse
Solai selvam Periyasamy மிக அருமையான தொகுப்பை வெளியிட்ட தினமலருக்கும் , திறம்பட தொகுத்த முதுகலை தமிழாசிரியர், திரு. கவிஞர் தமிழ்மதி நாகராசன்அவர்களுக்கும் மிக்க நன்றி. இது போல நமது தாய்மொழியை வளர்க்ககூடிய ஆற்றல் பெற்றவர்களை கண்டறிந்து வெளிக்கொணர வேண்டுகிறோம்..
Rate this:
Share this comment
Cancel
Muthalvan - Chennai,யூ.எஸ்.ஏ
13-டிச-201404:07:39 IST Report Abuse
Muthalvan ஆழ்ந்த கருத்துக்கள் நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை