தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துங்கள்: 'பாரதி விருது' பெற்ற பேராசிரியர் வலியுறுத்தல்| Dinamalar

தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்துங்கள்: 'பாரதி விருது' பெற்ற பேராசிரியர் வலியுறுத்தல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: "தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும்” என, தொல்லியல் ஆய்வாளர் சுப்பராயலு, வலியுறுத்தி பேசினார்.

ஈரோட்டில், மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடந்த பாரதி விழாவில், 'பாரதி விருது' பெற்ற, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் சுப்பராயலு பேசியதாவது: எனக்கு பாரதி விருது வழங்கி சிறப்பித்த நாணயவியல் ஆய்வாளரும், தினமலர் ஆசிரியருமான முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்திக்கு கடமைப்பட்டுள்ளேன். இருவருக்கும் துறை சார்ந்து பல ஆண்டுகளாக நட்பு உண்டு. இந்தியாவில், தமிழகத்துக்கு நாணயவியலில் குறிப்பிட்ட சிறப்பிடம் வாங்கி கொடுத்த பெருமை, இவருக்கு உண்டு.


சங்ககால நாணயங்களின் ஆதாரத்தை ஊக்கமாக கொண்டு, புதிய நாணயவியல் நூல்களை எழுதி உள்ளார். நாணயவியலில் அவரது உழைப்பு பாராட்டுக்கு உரியது. தமிழகத்தில் தரமான நூல்கள் விற்பனை குறைவு. கேரளாவில் விற்பனை அதிகம். தமிழகத்தில் வாசகர்கள் வளரவில்லை. வாசிக்கும் எண்ணம் வளராததே, இதற்கு காரணம். தொல்பொருட்களை ஆய்வு செய்ய தமிழகத்தில், பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்கள் இல்லை. உயர் கல்வி ஆராய்ச்சி செய்ய முறையான நிறுவனம் இல்லை. தமிழ் பல்கலைக்கழகம் இன்று வாழ்வா? சாவா? என்ற நிலையில் உள்ளது. தமிழ் மாநாடு நடத்தும் அரசுகள், தமிழ் ஆராய்ச்சி குறித்து ஏனோ, தானோ என்றே இருக்கிறது. கல்வி சீர்திருத்தம் செய்தால் தான், ஆராய்ச்சி வளரும். அரசை மட்டும் குறை கூறி பயன் இல்லை. மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நாணயவியல் ஆராய்ச்சியில், தனி மனிதராக இரா.கிருஷ்ணமூர்த்தி செயல்பட்டுள்ளார். ஐராவதம் மகாதேவன், பிராமி எழுத்துக்களை கண்டுபிடித்து, தனிமனிதராக எழுத்துக்களின் வளர்ச்சி பற்றி ஆய்வு செய்துள்ளார். இதற்கு தொல்லியல் துறையில் ஆட்கள் இல்லாததே காரணம். முன்பு, தொல்லியல் துறையில், சிறப்பாக பணிகள் நடந்தது. தற்போது, புதிதாக பலர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு, போதிய பயிற்சி வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு வழிகாட்டி செல்ல வேண்டும். தொல்பொருட்கள் அழிந்தால், மீண்டும் கொண்டு வர இயலாது. 'நகர்புறமயமாக்கம்' என்ற பெயரில், பழங்கால பொருட்கள் பலவும் அழிந்து வருகிறது. வாய்க்கால்களில் கான்கிரீட் என்ற பெயரில், பொதுப்பணித்துறையினர் உருமாற்றி வருகின்றனர். இதனால், வாய்க்கால், கட்டிடம் போன்றவற்றின் தன்மை மாறுகிறது.

பாரம்பரியங்களை மக்கள் பாதுகாக்க வேண்டும். இதனை அரசு செய்யும் என்று எதிர்பார்க்க கூடாது. விளை நிலங்களை கூட மக்கள் மாற்ற நினைக்கின்றனர். அப்போது கிடைக்கும் அரிய பொருட்கள் குறித்து தெரியாமல், குவித்து வைக்கின்றனர். நாளடைவில் மறைந்து போகிறது. பல ஊர்களில் தொல்பொருட்களை கொண்டு வந்து வைக்க, அருங்காட்சியகமே இல்லை. வியட்நாம் நாட்டுக்கு வருவோரை, முன்னதாக அருங்காட்சியகத்துக்கு அழைத்து சென்று, அரிய பொருட்களை காட்டித்தன், நாட்டின் பெருமையை விளக்குகின்றனர். அதுபோன்ற நிலை வர வேண்டும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை ஊக்கப்படுத்த வேண்டும், என்றார்.

விழாவில், கவிஞர் ச.து.சு.யோகியார் உருவப்படத்தை திறந்து வைத்து, பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியன் பேசுகையில், "சேர, சோழ நாணயங்களை கண்டறிந்து, தமிழ் எழுத்து ஆராய்ச்சியில், புரட்சியை ஏற்படுத்தியவர் தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தி. தமிழுடன், தமிழர் வரலாறு குறித்த ஒரு தெளிவையும், அவர் தந்துள்ளார். கொடுமணல் உட்பட பல இடங்களில், தமிழர்களின் தொன்மை நிலை நாட்டியவர் பேராசிரியர் சுப்பராயலு. வரலாற்றில் இருண்ட பக்கங்கள் மிக அதிகம். அவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வருவது மிக அவசியம்,” என்றார்.

அறிமுக உரையில், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் பேசியதாவது: கடந்த, 16 ஆண்டுகளாக மக்கள் சிந்தனை பேரவை சார்பில், பாரதி விழா நடத்தி, தமிழ் அறிஞர்களை கவுரவித்து வருகிறோம். அரசு சார்பில் வழங்கப்படும் விருதுக்காக, 'விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கவும்' என விளம்பரம் செய்து, விருது வழங்குகின்றனர். ஆனால், நாங்கள், சிறந்த அறிஞர்களை கொண்டு, பாரதி விருது பெற தகுதியான அறிஞரை கண்டறிந்து, தாங்கள் விருதை பெற வேண்டும் என அவரிடம் வலியுறுத்தி, அழைத்து வந்து வழங்குகிறோம். இங்கு விருது பெற்றவர்களும், விருது வழங்குபவர்களும், தமிழுக்காக, தமிழர்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்களாக உள்ளதால், இவ்விழாவை பாரதி பெயரால், வரலாற்று சிறப்பு மிக்கதாக நடத்த முடிகிறது, என்றார். கவிஞர் புலமைபித்தன் பேசுகையில், ''பிரபாகரன் என்னுடன் இருந்ததாக, இங்குள்ளவர்கள் கூறினர். இதை நான் என் வாழ்வின் பெருமையாக கருதுகிறேன். தமிழை காக்கவும், தமிழ் அழியாமல் காக்கவும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்,'' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.