விலை நிலங்களாகும் விளை நிலங்கள்| Dinamalar

விலை நிலங்களாகும் விளை நிலங்கள்

Added : டிச 16, 2014 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
விலை  நிலங்களாகும் விளை நிலங்கள்

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வர்'
என்பதற்கு ஏற்ப தமிழகம் விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விவசாய நாடு. பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமே நிலத்தையும் நிலம் சார்ந்த தொழில்களையும் நம்பி இருந்தது. ஆனால் இன்று மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

உழவன் சேற்றில் கால் வைத்தால்தான் மற்றவர்கள் சோற்றில் கைவைக்க முடியும் என்ற நிலை தலைகீழாக உள்ளது. உழவன் சேற்றில் கால்வைக்க தயாராக இல்லை. அப்படியே தயாராக இருந்தாலும் சேறு இல்லை. மழையை நம்பித்தான் விவசாயம். மழை இல்லையேல் ஏது விவசாயம். 30 ஆண்டுக்கு முன் உழவன் கணக்கு தப்பியதில்லை. ஆடிப்பட்டம் தேடி விதைத்தான். அறுவடை நன்றாக பெற்றான். இன்றோ பட்டமும் மாறிவிட்டது அவனது பட்டாக்களும் மாறி விட்டது. பருவம் மாறி விளை நிலமும் பாழ்பட்டு விட்டது. விவசாயம் பருவகாலத்தின் சூதாட்டமாகி விட்டது. ஆறு, கண்மாய், கிணறு பாசனங்களை பயன்படுத்தி முன்னோர் முப்போகம் விளைவித்தனர். ஆனால் இன்றோ மழையின்றி ஆறுகள் வறண்டு, கண்மாய்கள் காய்ந்து போயின. கிணறுகள் நீர்பசையே இன்றி ஒருபோகம் விளைவிக்க திண்டாடுகின்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

விளைச்சலில் நஷ்டம் :

'உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது' என்பது நிதர்ச்சனமான உண்மை. ஒரு விளைச்சலில் ஏற்படும் நஷ்டத்தை வேறு ஒரு விளைச்சலில் ஈடுகட்டி வாழ்க்கை நடத்தினர். ஆனால் இன்று ஒருபோகம் விளைய வைப்பதே பெரும் திண்டாட்டமாக உள்ளது. பருவகாலம் உழவனுக்கு தோழனாக தோள் கொடுத்தால்தான் உழவு தொழில் நடைபெறும். இன்று பருவகாலம் உழவனுக்கு தோழனாக இல்லாமல் உழவனை காவு கொடுக்கிறது.எனவேதான் உழவன் தன் விளை நிலங்களை விலைக்கு விற்றுவிட்டு வேறு வேலை தேடி சென்று விட்டான். இதுவே தமிழ் நாட்டின் நிலை.உதாரணமாக விருதுநகர் மாவட்டத்தின் மொத்த விவசாய பரப்பு 1,37,000 எக்டேர். விவசாயத்தை நம்பி இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை 1,37,521. போதிய மழை இல்லாததால் பயிர்சாகுபடி பரப்பளவு ஆண்டிற்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. இம்மாவட்டத்தில் 2008--09ல் நெல்சாகுபடி பரப்பு 32496.65 எக்டேர். 2012--13ல், 22,973.45 எக்டேரில் மட்டும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இப்படி பல்வேறு பயிர்களின் சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது.விளை நிலங்களின் அளவு குறைய காரணம் போதிய மழையின்மை. மழை, ஆண்டிற்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. இம் மாவட்டத்தின் சராசரி மழையளவு 811.70 மி.மீ. இந்த மழையளவு குறைந்து 2013ல் 546.16 மி.மீ., ஆனது. இந்த ஆண்டும் இம்மாவட்டத்தில் போதிய மழை இல்லை. இங்குள்ள 8 அணைக்கட்டுகளும் பல ஆண்டுகளாக வறண்டே இருந்தது. எனவே இம் மாவட்டத்தில் அதிக விளை நிலங்கள் விலை நிலங்களாக மாறி வருகின்றன. பொன் விளையும் பூமியை கூறு போட்டு புண்ணாக்கி கொண்டிருக்கிறோம்.


காரணம் என்ன :

மழைகுறைவிற்கு காரணம் பருவகால மாற்றம், புவி வெப்பமயமாதல், மரம் வெட்டுதல், பிளாஸ்டிக் பயன்பாடு என பல காரணங்கள். இவை அனைத்திற்கும் காரணம் இயற்கையை பாதுகாக்காமை. இயற்கை மனிதனுக்கு பல அரிய செல்வங்களை கொடுத்துள்ளது. ஆனால் நாம் அவற்றை முறையாக பயன்படுத்துவது இல்லை. இயற்கையை மனிதன் வஞ்சிக்கும் பொழுது இயற்கை மனிதனை தண்டிக்கிறது. நீர்நிலைகளை முறையாக பராமரிக்காததால் மழை பெய்யும் போது நீரை சேமிக்க முடியவில்லை. அனைத்து நீர் நிலைகளிலும் கருவேல மரங்கள் வளர்ந்து மிக ஆழத்திற்கு சென்று, இருக்கின்ற நிலத்தடி நீரையும் உறிஞ்சிக்கொள்கிறது. எனவே நமக்கு வறட்சியே மிஞ்சுகிறது. வறட்சியின் பிடியில் இருந்து மீட்க மக்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளோடு சேர்ந்து நீர்நிலைகளை மராமத்து செய்ய வேண்டும். கருவேல மரங்களை அகற்ற வேண்டும். அதிக மரங்களை நடவும், சமூக காடுகளை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு நீர் மேலாண்மையில் புதிய உத்திகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும். சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்க வேண்டும். தற்போதைய புதிய உத்தியான 'இணைய நீர் மேலாண்மையை' முறைப்படுத்தி விவசாய நுட்பத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.


இணைய நீர் மேலாண்மை :

'இணைய நீர் மேலாண்மை' என்பது நீர் ஆதாரத்தை பொறுத்து பயிர்களை விளைய வைப்பது. எல்லா பயிர்களுக்கும் ஒரே அளவு தண்ணீர் தேவைப்படாது. சில பயிர்களுக்கு தண்ணீர் குறைவாக பயன்படும். சில பயிர்களுக்கு அதிகளவு தண்ணீர் தேவைப்படும். எனவே இணைய நீர் மேலாண்மை மூலம் நீர்வளம் அதிகமாக உள்ள இடங்களில் நீர் அதிகம் தேவைப்படும் பயிர்களையும்; நீர் குறைவாக உள்ள இடங்களில் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை விளைவிக்க வேண்டும். இதன் மூலம் நாம் விவசாய நிலங்களை அதிகப்படுத்தி விலை நிலங்களாகும் விளைநிலங்களை தடுக்கலாம். அவ்வாறு செய்யாது விட்டால் நாம் ஏற்கனவே இழந்த (மறந்த) உணவு தானியங்களை போல சிறுதானியங்களை இழக்க வேண்டிவரும். சிறு மற்றும் குறு விவசாயிகள் விளை நிலங்களை விற்று விட்டு கூலித்தொழிலாளர்களாக மாறி உள்ளனர். பெரிய பண்ணை விவசாயிகள் மட்டுமே ஓரளவு விவசாயத்தில் தாக்குப்பிடித்து நிற்கின்றனர். இவர்கள் நிலைமையும் மாறுமுன் விவசாயிகளும், அரசும் சேர்ந்து தடுப்பு முயற்சிகளை எடுக்க வேண்டும்.
-- முனைவர் சு.கணேசன்
பொருளியல் துறை தலைவர்,
அய்ய நாடார் ஜானகி அம்மாள்
கல்லூரி, சிவகாசி.
98650 48554.
sugumariganesan@yahoo.co.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
21-டிச-201413:34:11 IST Report Abuse
g.s,rajan உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்று கூப்பாடு போட்டு கூறி குறிப்பிட்ட இனத்திற்கு நன்கொடையாக தானமாகக் கொடுத்த நிலத்தை ஒன்று கூட விடாமல் அபகரித்தவர்கள் அதை வாங்கிக்கொண்டு விட்டு தற்போது விவசாய விளை நிலங்களைக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு பிளாட் போட்டு கூறு போட்டு விற்கிறார்கள் .கேட்டால் விவசாயத் தொழில் நஷ்டம் என்கின்றனர் ,விளை நிலங்களை விலை நிலங்களாக மாற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது??? உங்களால் முடியவில்லை அவற்றை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுங்களேன் ,குத்தகைக்கு எடுத்த கோயில் நிலங்களையும் கட்சி பார பட்சம் இல்லாமல் "சுவாஹா" செய்து விட்டனர் நம் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியா சோத்துக்கு சிங்கி அடிக்கப்போகிறது ,பஞ்சமும் பட்டினியும் தலை விரித்து ஆடும் நாளும் வெகு விரைவில் வரத்தான் போகிறது இந்தியா ஒரு சொமாளியாவாகவோ இல்லை எத்தியோபியாவாகவோ மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை ,பசியைப்போக்க திருட்டுக்களும் கொலையும் அடிக்கடி நிகழும் இது நிதர்சனம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Share this comment
Cancel
Ambigapathi Ariyalur - banglore  ( Posted via: Dinamalar Android App )
20-டிச-201407:50:20 IST Report Abuse
Ambigapathi Ariyalur ஒரு விவசாயி இலவச மின்சாரம் வேண்டி மணு அளித்தால் எப்பொழுது கிடைக்கும் தெரியுமா குறைந்தது பத்து வருடம் வங்ஙியில் ஏன் விவசாயத்திற்கு கடன் தருவதில்லை மற்றும் ஒரு விவசாயி தன் பிள்ளைகள் எந்த ஒரு கல்வி பயின்றாலும் கண்டிப்பாக சிறு வயதிலிருந்தே விவசாயமும் கற்று தர வேண்டும் விவசாயத்தை ஊக்குவிற்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்
Rate this:
Share this comment
Cancel
babu - Nellai,இந்தியா
16-டிச-201412:00:26 IST Report Abuse
babu உங்கள் கட்டுரை உண்மை தான். நான் உங்களை கேட்கும் ஒரு சில கேள்விகள் மட்டும் ? 1) நீங்கள் விவசாயம் செய்ததுண்டா? 2) இப்பொழுது கட்டுரை சொல்லும் நீங்கள் உங்கள் இளம் வயதில் விவசாயிகளுக்கு செய்த உதவிகள் என்ன? 3) உங்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் அதாவது அரசு சாரதா ஆங்கில வழி பள்ளியில் சேர்த்து உள்ளீர்கள்.. அவர்களை படித்து முடித்தவுடன் விவசாயம் பார்க்க படிக்கச் சொல்வீர்களா அல்லது இன்ஜினியரிங் படிக்கச் சொல்வீர்களா..? மேலே உள்ள கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா......... முனைவர் அவர்களே. நாங்களும் கிராமத்தில் படித்து சென்னை வந்து கால் வலிக்க வெயிலில் அலைந்து ஒரு சிறு வேலையில் அதுவும் பிடிக்காத வேலையில் இருக்கின்றோம். எங்களுக்கும் கிராமத்தில் வந்து விவசாயம் பார்க்க ஆசை தான். ஆனால் அங்கு வந்து விவசாயம் பார்த்தால் எங்களை நீங்கள் எந்த கண்களோடு பார்ப்பீர்கள் சொல்லுங்கள்... படிச்சும் வேலைக்கு போக தெரியாதவன் என்று தானே சொல்வீர்கள்.......?
Rate this:
Share this comment
Anantharaman - Porur, Chennai,இந்தியா
17-டிச-201419:48:09 IST Report Abuse
Anantharamanபாபு அவர்களே நீங்கள் சொல்வது 100% உண்மை.....அதுக்காக இப்படி கேள்வி கேட்டு கொண்டிருக்காமல் நம் பிள்ளைகளை வேளாண்மை துறையில் (அக்ரி) மேற்படிப்பு படிக்கவைத்து இயற்கை விவசாயத்தையும் நவீனமாக எவ்வாறு செய்யலாம் ( குறைந்த தண்ணீர் இருந்தாலும் ) என்பதை அறிந்து இபோழுதே செயலில் இறங்கினால் நிச்சியம் வரும் காலத்திலாவது நம் தலைமுறை பயன்பெறும்.....நான் அதற்க்கான செயலில் இப்போதே இறங்கி விட்டேன்... இறைவன் தான் துணை நிற்க வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
M. Ashokkumar - Hyderabad,இந்தியா
16-டிச-201411:29:09 IST Report Abuse
M. Ashokkumar மிகவும் தரமான மதிப்பு மிக்க கருத்துக்கள். பொதுமக்கள் ஆகிய நம்மால் முடிந்தது ஒன்றும் இல்லை என்று கை கழுவாமல் காய்கறி ,பழம், மளிகை ஆகியவற்றை பிளாஸ்டிக் பைகளில் வாங்காமல் தவிர்த்தாலே சுற்று புற சூழல் மேம்படும். தயவு செய்து கடை பிடியுங்கள். வருங்கால சந்ததியினருக்கு நீங்கள் இழைக்கும் பெரிய கொடுமை பிளாஸ்டிக் பைகள்.
Rate this:
Share this comment
Cancel
kalanagam - kanyakumari,இந்தியா
16-டிச-201408:01:06 IST Report Abuse
kalanagam நிறைய விளை நிலங்கள் மலடாக்கி விலை நிலங்களாக மாற அந்த அந்த பகுதி பஞ்சாயத்து தலைவர்கள்தான் முக்கிய காரணம்.மனை வரைபடம் ஒப்புதல் குடுப்பதில் இருந்து இது தொடர்கிறது.அவர்களுக்கு எது விளை நிலம் எது விலை நிலம் என்று நன்றாக தெரியும்.அதற்க்கு தகுந்த மாதிரி நிலம் விற்பவர்களிடம் இருந்து 15 முதல் 25 சதவீதம் வரை பணத்தை பெற்று விட்டு அதை வீட்டு நிலமாக ஒப்புதல் கொடுத்து விடுகின்றார்கள்.பின்பு சொத்து பதிவு,அங்கேயும் இந்த கதிதான்.எல்லோருக்கும் எல்லாம் தெரியும்.தெரிந்தும் பணம் கிடைத்தால் போதும் என்று அதை பதிவு செய்ய அனுமதிக்கிறார்கள்.அடிமட்டம் திருந்தினால்தான் மேல்மட்டம் திருந்தும்.இனி வருங்கால சந்ததிகளுக்கு நெல்,உளுந்து,பயறு வகைகள் கீரைகள் எல்லாம் தாவரவியல் பூங்காவில் வைத்துதான் காட்ட முடியும்.கிராமங்களின் வயல்வெளிகள் எல்லாம் இப்பொது வீட்டுமனைகளாய் ஆகி நல்ல காற்றோட்டம் இல்லாமலும்,நிலத்தடி நீர் பற்றாக்குறை ஆகிகொண்டிருக்கின்றன.புற்றீசல் போல் முளைக்கும் மருத்துவமனைகள்,ஆஸ்ரமங்கள்,மற்றும் கல்லூரிகள்,பணக்காரர்கள் ஓய்வு எடுக்கும் ஓய்வு விடுதிகள் எல்லாம் மலை அடிவாரங்களையும்,வயல்வெளிகளையும் ஆக்கிரமித்து கொள்கின்றன.இனி வரும் காலங்களில் நல்ல காற்றையும் விலை குடுத்துதான் வாங்கவேண்டிவருமோ?இப்போ இயற்கையாக உற்பத்தி செய்த உணவு பொருட்கள் உண்ணாததாலும்,உடல் உழைப்பு இல்லாததாலும் இப்போ உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மருந்து மாத்ரைகளை உண்டு வாழ்கிறார்கள்.வயல்வெளி சுருங்க,சுருங்க மனிதன் ஆரோக்கியமும் குறைகின்றது.இனி வாழ்க்கை 40 நாளில் வளரும் வளர்ப்பு கோழிகள் மாதரித்தான் இருக்குமோ?
Rate this:
Share this comment
Cancel
Rajarajan - Thanjavur,இந்தியா
16-டிச-201405:45:23 IST Report Abuse
Rajarajan MLA / MP / அமைச்சர்கள் தான் இதற்கு பொறுப்பு. பதவி வாங்க தெரிந்தவர்களுக்கு, பிரச்சினைகளை தீர்க்க தெரியாதா ??
Rate this:
Share this comment
arumugam. m - TIRUNELVELI ALANGULAM,இந்தியா
20-டிச-201411:23:25 IST Report Abuse
arumugam. mராஜராஜன் சார், பாராளு மன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பண்ணதுக்காக வாழ்கின்றனர் ஒட்டு கேட்கும் போது மட்டும் மக்களை பார்க்கின்றன பின்னர் மக்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. முதலில் அவர்களுக்கு விவசாயம் என்றால் என்ன என்பது தெரியாத பொது அவர்களை சொல்லி பயன் ஏதும் இல்லை ... நாம் நல்லா இருக்க வேண்டும் நம் சந்ததி நல்லா இருக்க வேண்டும் என்றால் நாம் தான் விவசாயம் பண்ணவேண்டும்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை