தேடலில் கிடைத்த மகான் ரமணர்: முனைவர்.க.ராமச்சந்திரன்| Dinamalar

தேடலில் கிடைத்த மகான் ரமணர்: முனைவர்.க.ராமச்சந்திரன்

Updated : டிச 30, 2014 | Added : டிச 30, 2014 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
தேடலில் கிடைத்த மகான் ரமணர்: முனைவர்.க.ராமச்சந்திரன்

திருச்சுழி ஒரு சிவபூமி, புண்ணிய பூமியாக போற்றப்பட்டு சேர, சோழ, பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்ட இடம். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற தலங்கள் பதினான்கு. இதில் திருச்சுழி பன்னிரண்டாவது இடத்தை வகிக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகப் பெருமான், குமரகுருபர், பரஞ்சோதியார். ராமலிங்க அடிகளார் போன்ற அருளாளர்களால் பாடப்பெற்ற திருத்தலம்.இந்த திருத்தலத்தில் தான் மகான் ரமண மகரிஷி 1879 டிசம்பர் 30ம் தேதி பிறந்தார். வினோபாவே பூமிதான இயக்க பாதயாத்திரையின்போது வழி விலகிப் பல கி.மீ., நடந்து இவ்வூருக்கு வந்து, மகரிஷியை பெற்றெடுத்து உலகிற்குத்தந்த இந்த சிற்றுார் மக்களுக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் ஆசி வழங்கினார். இப்படி அருளாளர்களால் போற்றப்படும் மகரிஷி ரமணரின் ஞான வாழ்க்கை எப்படி உதயமானது என்பதை அறிய ஆவல்தானே. இதோ அவரது ஞானமார்க்கத்தில் சில வழித்தடங்களை உங்கள் விழிகளுக்கு விருந்தளிக்கிறேன்.


பிறப்பும், படிப்பும் :

திருச்சுழியில் செல்வாக்கும் சொல்வாக்கும் பெற்றவர் ஸ்ரீமான் சுந்தரம் அய்யர். கிராம வழக்கறிஞர்களுள் ஒருவர். அவரது வாழ்க்கைத் துணைவி அழகம்மையார். திருச்சுழி பூமிநாதர் திருவருளால் சுந்தரம் அய்யருக்கு முதலில் ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நாகசாமி என்று திருநாமம் சூட்டினர். நாகசாமி பிறந்த இரண்டு ஆண்டுகளில் அழகம்மையார் மீண்டும் கருவுற்றார். அந்த இரண்டாவது குழந்தைதான் ரமண மகரிஷி. திருவாதிரையில் உதித்த அந்த குழந்தைக்கு வேங்கடராமன் என்னும் நாமத்தை சூட்டி மகிழ்ந்தனர். ஐந்து வயதானதும் அங்குள்ள சேதுபதி துவக்கபள்ளியில் சேர்க்கப்பட்டார். நான்காம் வகுப்பு வரை அங்கு படித்தார். அப்போது அவருக்கு கல்வியில் அதிக நாட்டமில்லை. விளையாட்டிலேயே அதிக ஆர்வம் இருந்தது.பின்னர் திண்டுக்கல்லிலும், மதுரையிலும் அவரது படிப்பு தொடர்ந்தது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருமந்திரம் செய்யுட்களில் மனம் பறிகொடுத்தார்.


தனக்குள்ளே ஒரு தேடல்

வாழ்க்கை தேடல்களால் ஆனது. ஒவ்வொரு தேடலிலும் ஏதோ ஒன்று ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது. சிறுவன் வேங்கடராமனின் வாழ்க்கையிலும் ஒரு தேடல். அந்தத் தேடல் விசித்திரமானது, வியப்பானது. ஆம் மரணம் குறித்த தேடல்.1885ல் தந்தையாரின் மரணம். அங்கு நிலவிய சோகச் சூழல் மனதை கசிந்துருகச் செய்தது. தாயாரின் அழுகைக்கோலம், உறவினர்களின் புலம்பல் வீட்டில் நடந்து முடிந்த மதச் சடங்குகள். இப்படி ஒவ்வொன்றையும் பார்க்கிறார்.மனிதன் ஏன் பிறக்கிறான்? அவனுக்கு ஏன் மரணம்? மரணம் என்றால் என்ன? நான் யார்? எங்கிருந்து வந்தேன்? இறுதியில் எங்கே செல்லப் போகிறேன்? இப்படியான கேள்விகள் அவரது மனதில் அலைகளாய் எழும்பிகொண்டே இருந்தன.ஒரு நாள் வெளியூரிலிருந்து வந்த ஒருவர் அருணாசலத்திலிருந்து வருகிறேன் என்கிறார். அருணாசலமா! எங்கிருக்கிறது? என்று ஆவலோடு கேட்கிறார்.திருவண்ணாமலை என்னும் திவ்விய ஷேத்திரம்தான் அருணாசலம். பிறக்க முக்தி தருவது திருவாரூர். இறக்க முக்தி தருவது காசி. வசிக்க முக்தி தருவது காஞ்சி. நினைக்க முக்தி தருவது திருவண்ணாமலை.தீர்த்தம், மூர்த்தி, தலம் மூன்றும்
பெற்ற திருத்தலம் திருவண்ணாமலை என்று பெருமையைச் சொல்லிக் கொண்டே வந்தார்.

வேங்கடராமனின் மனம் சிவபெருமானின் மீது வேட்கை கொண்டது. மனசெல்லாம் சிவபெருமான் மீது லயித்துப் போயிருந்த வேளையில் சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் கைகளில் கிடைத்தது. அதன்பக்கங்களைப் புரட்ட புரட்ட வாழ்க்கை புரட்டப்படுகிறது. நல்ல புத்தகத்தின் அடையாளம் அதுதானே.அறுபத்து மூன்று நாயன்மார்களைப்போல சித்தத்தை சிவன் மேல் செலுத்தி ஞானியாக மாறவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணம்
அவருக்குள் ஒரு தேடலைத் தந்தது.


அருணாசலரிடம் அடைக்கலம் :

தேடலுக்கான பயணத்தை தொடங்கினார். திருவண்ணாமலை என்னுப் திருத்தலத்தை அடைக்கலமாய் வந்தடைந்தார். அந்தத் தேடல்தான் இந்தத் திருத்தலத்தில் மகான் ஸ்ரீரமண மகரிஷியாக அகிலம் அறியச் செய்தது. அந்தத் தேடல் எது என்கிறீர்களா? வேறொன்றுமில்லை நான் யார்? தேடல்தான். ஒருநாள் மகான் ரமணர் ஆசிரமத்தில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு சீடர் அவரைப் பார்ப்பதற்காக வந்தார். இருவரும் உரையாடுகிறார்கள். அந்த உரையாடல்.
சீடர்: நீங்கள் கடவுளைப் பார்திருக்கிறீர்களா?
ரமணர்: அதை ஏன் அறிய விரும்புகிறீர்கள்?
சீடர்: நீங்கள் கடவுளைப் பார்த்திருந்தால் நானும் அவரைக்காண தங்களிடம் உதவியை வேண்டுகிறேன்.
ரமணர்: நான் கடவுளைக் காண விரும்புகிறேன் என்கிறீர்கள்; முதலில் நீங்கள் யார்?
சீடர்: என் பெயர் தேவதத்த சர்மா
ரமணர்: இது உங்கள் பெயர்? நீங்கள் யார்?
சீடர்: நான் சர்மா என்று முன்னரே சொல்லிவிட்டேன். நான் ஒர் அந்தணர்.
ரமணர்: அது உங்கள் வேலை. நீங்கள் யார்?
சீடர்: நான் யார் என்று என்னால் சொல்ல இயலவில்லை.
ரமணர்: நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியாத போது கடவுளை எவ்வாறு தெரிந்து கொள்வீர்கள்? கடவுளை அறிய வேண்டுமானால் முதலில் நீங்கள் யார் என்று அறிய வேண்டும் என்றார். ஒரே ஒரு ஒற்றைக் கேள்வி எத்தனை கேள்விகளையும் பதில்களையும் எழுப்பியிருக்கின்றது பார்த்தீர்களா? ஆம்! இந்த நான் யார் என்ற ஒற்றைக் கேள்விதான் அவருக்கு ஞானத்தின் திறவு கோலைத்திறந்து வைத்தது. மகான் ரமணர் கற்றுத்தருகின்ற பாடங்களில் ஒன்றுதான் நான் யார்? என்ற கேள்வி. நான் யார்? எனக்குள் என்ன இருக்கிறது?என்பதைத் தெரிந்து கொண்டால் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும்வசப்படும்.


ரமணரின் உபதேச மொழிகள்

:ரமணருடன் பல சீடர்கள் நெருக்கமாக இருந்தனர். அவர்களுள் ஒருவர் கணபதி முனிவர். அவரிடம் தவம் என்பதைப்பற்றிய அர்த்தத்தை விளக்கியுள்ளார். நான், நான் என்பது எங்கிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே ஒடுங்கும். அதுவே தவம். ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால் அந்த மந்திரத்தொனி எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஒடுங்குகிறது. அதுதான் உண்மையான தவம் என்று ரத்தினச் சுருக்கமாய் எடுத்துரைத்தார்.''மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பது. வெளியே பிற குணங்களால் வருவதன்று.குரு கட்டாயம் தேவை. மன விகாரங்களாகிய இருண்ட வனாந்தரத்திலிருந்து மனிதனை விடுவிக்க குரு ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும் என்று உபநிஷங்கள் உணர்த்துகின்றன. உங்களை உங்களுக்குள் தேடுங்கள் என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் யாரும் அவ்வாறு செய்வதில்லை. தன்னைவிட உயர்ந்த சக்தியை உணரும்போதுதான் 'தான்' என்ற அகந்தை சரணடைகிறது. ஒருவன் உழைக்க வேண்டி இருக்கிற வரைக்கும் தன்னையறியும் முயற்சியையும் கைவிட்டுவிடக்கூடாது''.
இப்படி மகான் ரமண மகரிஷியின் வாழ்வோடு இணைந்த அவரது வாழ்வின் ஒவ்வொரு பதிவுகளும் நல்வழிப்படுத்தும் பக்கங்கள். மகானின் அருள் மொழிகளை நாளும் படிப்போம். மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம்.
-முனைவர்.க.ராமச்சந்திரன்
பாலையம்பட்டி
9942417103

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
edupatta naai - pattinam,இந்தியா
30-டிச-201419:45:06 IST Report Abuse
edupatta naai தனக்குள் ரமிப்பவன் ரமணன். தனக்குள் ஆழ்ந்து, தன்னில் தன்னைத் தேடி இன்புற்று, தன்போல் மற்றெல்லாரையும் மாற்றுபவன் ரமணன். நாமும் நம்மில் ரமிப்போம்,வாருங்கள். ரம்மியமான 2015 ற்கான வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-டிச-201415:31:25 IST Report Abuse
Endrum Indian "Who are You" This is the Highest Hindu Philosophy. நான் மனிதன், எஞ்சினியர்.......................... இந்த அறிமுகத்துக்குப்பின் நான் யார் என்ற தேடலில் விளையும் போது தான் நாம் நம்மை அறிய முற்படிகிறோம். இந்த தேடல் வலி காண்பிப்பது ஸ்ரீமத் பகவத்கீதை, இதை பெரியவர்களின் வாயிலாக (அவர்கள் வாழ்வின் experience சேர்த்துச் சொல்வார்கள்) மன ஈடுப்பாட்டுடன் கேட்டால் (படித்தால் அந்த அளவுக்கு நமக்கு flash வருவதில்லை) அந்த தேடலின் திசை நன்றாகத்தெரிந்து நம் வழியை நாம் தேர்ந்தேடுப்போம் ஸ்ரீ ரமணமஹரிஷியைப்போல். www.pravachanam.com ல் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் பல உபன்யாசங்களை. உங்கள் ஆத்மாவோடு உங்களுக்கு நேரடி தொடர்பு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
30-டிச-201413:34:37 IST Report Abuse
Swaminathan Nath நான் யார் என்று யோசித்தால், உலகில் பல பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும், மனித குலம் வேறுபாடு பார்க்காமல் அன்புடன் எல்லோரும் இருக்க வேண்டும் 2015 நல்லபடியாக பிறகும் என நம்புவோம். //தீவிரவாதம் ஒழிந்து சகோதரத்துவம் மலரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Prakash Raghunathan - Bangalore,இந்தியா
30-டிச-201413:31:02 IST Report Abuse
Prakash Raghunathan இன்று ரமணர் ஜெயந்தி எல்லோரும் துன்பம் இல்லாமல் வாழ பகவான் ரமணரை பிரார்த்தனை செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
30-டிச-201413:13:03 IST Report Abuse
paavapattajanam மக்கள் பொருளை மட்டும் தேடாமல் - நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு பொருளாக வேண்டும் - அப்போது தான் நாம் வாழ்வதில் பொருள் இருக்கும் - நாம் நம் என்ற வட்டத்தை பெரிதாக்கி - உலகத்தை அதில் சுருக்கினால் - அன்பு எங்கும் மேலோங்கும் - ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
30-டிச-201409:05:31 IST Report Abuse
N.Purushothaman ரமண மகரிஷி ஒரு தவ புதல்வர்....
Rate this:
Share this comment
Cancel
Pattabiraman - Sinagapore,சிங்கப்பூர்
30-டிச-201405:56:44 IST Report Abuse
Pattabiraman வெரி குட் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை