இனிய காண்க... வெற்றி கொள்க...!பா. நாகலட்சுமி| Dinamalar

இனிய காண்க... வெற்றி கொள்க...!பா. நாகலட்சுமி

Added : ஜன 02, 2015 | கருத்துகள் (4)
Advertisement
இனிய காண்க... வெற்றி கொள்க...!பா. நாகலட்சுமி

ஓர் ஊர்... அங்கு ஒரு தெரு; அத்தெருவில் ஒரு வீட்டில் உயிரிழப்பு; மற்றொரு வீட்டில் திருமண நிகழ்வு. முதலாவது அவலத்தின் பிழிவு. இரண்டாவது இன்ப நிகழ்வு.

துன்பத்தையும், இன்பத்தையும் கொடுப்பவன் இறைவன் அல்லவா. இக்காட்சி கண்ட புறநானூற்றுப் புலவர் பக்குடுக்கை நன்கணியார் பரிதவிக்கிறார். 'படைத்தோன் மன்றஅப் பண்பிலாளன்' என படைத்தவனை வசைபாடுகிறார். 'இன்னா தம்ம இவ்வுலகம்' என மனம் வருந்துகிறார். நம்பிக்கை வறட்சியை ஏற்படுத்துவது போன்று பாடலடி தோன்றினாலும் அடுத்த அடியிலேயே மின்னலென நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சி விடுகின்றார் புலவர். 'இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே' என்பது அந்த அடி. நாம் நல்லன ஆற்றி வாழ்வில் உயர்வதற்கும் பிறர் வாழ்வை உயர்த்துவதற்கும் முதற்படி இவ்வுலகில் உள்ள நல்லதை இனியதைப் பார்க்கப் பழகுவதே ஆகும். இவ்வுலகம் கொடியதாக இருந்தாலும் 'இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே' என்ற நெறியை பின்பற்ற வேண்டும்.


நேர்வளச் சிந்தனை:

வாழ்க்கையில் இருவகை நோக்குகள் உண்டு. எதிலும் நன்மையை நோக்கும் 'பாசிட்டிவ்' மனப்பான்மை என்ற நேர்வளச் சிந்தனை. எதிலும் தீமை நோக்கும் எதிர்மறை சிந்தனை இரண்டாவது நோக்கு. 'இனிய காண்க' என்ற கோட்பாடு நேர்வளச் சிந்தனையின் வெளிப்பாடு. அக வாழ்க்கையாயினும் புறவாழ்க்கையாயினும் மனித உறவுகளை சீரான முறையில் ஒருவன் பேணிக்காக்க வேண்டும். உறவுகள் சீர்பட முக்கிய தேவை இனியவை காணும் பண்பாகும். குடும்ப வாழ்க்கையில் தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து ஒருவருக்கொருவர் பரிந்து ஒருவர் தோளில் ஒருவர் ஆதரவாய் சரிந்து மனம் கனிந்து வாழும் உன்னத இல்லறம் என்னாயிற்று. அந்த நல்லறம் எங்கே போயிற்று. திருமண தினத்தன்றே விவாகரத்தும் ஆகிவிடும் இன்றைய அவலம் நெஞ்சை சுடுகிறது.


இதற்கெல்லாம் காரணம் என்ன?

தம்பதியர் ஒருவர் மற்றவரிடம் உள்ள இனிமைகளை நல்லவைகளை நோக்காது குறைகளை மட்டுமே நோக்குவதாகும். புறவாழ்க்கையிலும் நாம் பிறரிடம் உள்ள நல்ல இயல்புகளை மட்டுமே காணப் பழகவேண்டும். 'வெற்றியின் ரகசியம்' என்ற நூலில் காணப்படும் ஒரு செய்தி இக்கருத்திற்கு எடுத்துக்காட்டாக அமைகிறது. உலகப்புகழ்பெற்ற ராக்பெல்லரின் எண்ணெய் நிறுவனத் தலைமை அதிகாரிகளுள் ஒருவர் செய்த தவறால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மற்றொரு உரிமையாளர் பெட்போர்ட், ராக்பெல்லரின் அறைக்குள் நுழைந்தார். அந்த மூத்த அதிகாரியைப் பற்றி ராக்பெல்லர் பொரிந்து தள்ளுவார் என நினைத்தார். 'நஷ்டத்தை கேள்விப்பட்டீர்களா?' என கேட்டார் பெட்போர்ட். 'ஆம் அவரை அழைக்கும் முன் அவரைப் பற்றிய சிறுகுறிப்பை எழுதிக் கொள்வது நல்லது என எழுதியுள்ளேன்' என்று கூறி போர்டிடம் கொடுத்தார் ராக்பெல்லர். அதிகாரியின் சாதனை, திறமை, நிறுவனத்திற்கு ஈட்டிக் கொடுத்த லாபம் அதில் எழுதப்பட்டிருந்தன. 'அன்றிலிருந்து என்னுடைய அதிகாரிகள் ஏதாவது தவறு செய்தால் உடனே கூப்பிட்டு திட்டுவதை நிறுத்தி விட்டேன். பேச அழைக்கும் முன் அவரைப் பற்றிய நல்லவை என்னவோ அதை குறித்துக் கொள்வேன். இதனால் அனாவசியமாக எரிந்துவிழும் பழக்கம் என்னிடமிருந்து ஓடிவிட்டது' என்கிறார் பெட்போர்ட். ராக்பெல்லரின் 'இனிய காணும் பண்பு' பெட்போர்டிடமும் வந்துவிட்டது.இன்னாததையும் இனிமையாக்கும்:

அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம்லிங்கனை பாராளுமன்றத்தில் பலரும் பாராட்டி பேசினர். அதைப் பொறுக்காத ஒருவர் அவரை அவமானப்படுத்தும் விதத்தில் 'மிஸ்டர் லிங்கன், உங்கள் அப்பா தைத்துக் கொடுத்த ஷூ இன்னும் என் காலில் உள்ளது' என்றார்.'நண்பரே என் தந்தை சிறந்த தொழிலாளி என்பது இதன் மூலம் தெரிகிறது. இப்போது ஷூ கிழிந்து போனாலும் என்னிடும் கொடுங்கள். எனக்கு ஷூ தைக்கவும் தெரியும்; நாடாளவும் தெரியும்' என்றார்.தம்மை சிறுமைப்படுத்தும் நோக்குடன் எதிராளி பேசிய பேச்சையே தனக்கு உரிய பாராட்டு பத்திரமாக மாற்றிய லிங்கன் இன்னாததை இனிமை ஆக்கினார். துன்பங்களும் கஷ்டங்களும் வருகின்ற போதும் இனியவற்றைப் பார்க்கும் பழக்கம் நம்மிடம் வரவேண்டும்.


ஆசிரியர், பெற்றோர்களுக்கு:


எல்லாக் குழந்தைகளிடத்தும் திறமைகள் ஒன்றோ, பலவோ இருக்கும். உள்ளே ஒளிந்திருக்கும் திறமையை நோக்க வேண்டுமே தவிர, அவனிடம் இல்லாத திறமையை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தக்கூடாது. வளரும் பயிர்களை முளையிலேயே கிள்ளிவிடக்கூடாது. பெற்றோர்களும் இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும். பிறரிடம் அன்பு காட்டினால் அவரது தீமைகள் கூட நல்லனவாகத் தோன்றும். ஒருவர் மீது தீராக்கோபம் கொண்டால் அவரிடம் உள்ள நன்மைகள் கூட தீமையாகத் தோன்றும். பாகுபாடின்றி அன்பு செலுத்தப்பழகினால் கண்களின் பார்வை கருணைப் பார்வையாக மாறும்; உலகில் உள்ள இனியதை, உயர்ந்ததை, நல்லதை மட்டும் பார்க்கும்.

- பா. நாகலட்சுமி,
தமிழ்ப் பேராசிரியை (ஓய்வு),
விருதுநகர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X