பூஜையறை போல வீடுகளில் நீர்த்தேக்க அறை| Dinamalar

பூஜையறை போல வீடுகளில் நீர்த்தேக்க அறை

Added : ஜன 23, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பூஜையறை போல வீடுகளில் நீர்த்தேக்க அறை

தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் இரண்டு தீவிரமான நெருக்கடிகள்... நன்னீராதாரமும், மின்சாரமும் தான்.வேளாண் உற்பத்தியும், தொழில்களும், மக்களின் அன்றாட வாழ்வும் இந்த இரண்டு தேவைகளைச் சுற்றி சுழல்கின்றன.
இந்த இரண்டு வளங்களின் பற்றாக்குறை காரணமாக நமது இயல்பு வாழ்க்கையும் மாநில அரசியலும் நெருக்கடிக்கு உள்ளாகின்றன.தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும், எதிர்காலமாகவும் அமைபவை திணை நிலமும், மொழியும் தான். திணை நிலம் அதன் நீர் பெறும் வகையின் மூலம் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் நன்னீராதாரங்களில் சங்கமிக்கின்றன. வடக்கே பாலாறு தொடங்கி தெற்கே குழித்துறையாறு வரை அத்தனை ஆறுகளும் கடலோடு கலந்து கரைக்கடலில் மீன்வள உற்பத்திக்கு பங்களிக்கின்றன.கண்மாய் சார்ந்த விவசாயம் அன்றெல்லாம் இந்நிலப்பரப்புகளில் கால்வாய், கழிமுகம், கண்மாய்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய முன்னோர் பயிரிடுவதற்கு அணையை நம்பியிருக்கவில்லை. கண்மாய் சார்ந்த விவசாயம் தான் அன்றைய தமிழ் மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தது. அண்டை மாநிலமான ஆந்திராவில் நெல்லுாருக்கு வடக்கே துவங்கி பழவேற்காடு ஏரியை இணைத்தவாறு புதுச்சேரிக்கு வடக்கே ஒஸ்த்தேரி வரை கடலுக்கு இணையாக கடற்கரையில் ஓடுகிறது பக்கிங்ஹாம் கால்வாய்.
வரலாற்றுச் சிறப்பு மிகுந்த இக்கால்வாய் வணிகத்துக்கும் விவசாயத்துக்கும் துணைநிற்பதுடன் வடதமிழக கடலோர மீனவர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. தென்தமிழக விளிம்பில் தென்கேரளத்தில் இருந்து நீளும் அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாயை கன்னியாகுமரி வரை அமைக்கும் திட்டம் மண்டைக்காட்டுடன் நின்று போய்விட்டது.௧௯௫௬ல் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பின் போது தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்ட பிறகு, குளச்சல் -தேங்காய்ப்பட்டினம் பகுதியில் இக்கால்வாய் துார்ந்து போனது.கடலோர நிலங்கள் தமிழகக் கடலோர நிலங்கள் முழுவதும் ஒருகாலத்தில் வனங்களால் நிறைந்திருந்தன. புலிகளும், மான்களும் இவ்வனங்களில் உலவின.கடலோடு இணைந்திருந்த உவர்நீர்ப் பரப்புகளில் உப்புநீர் முதலைகள் காணப்பட்டன. புகார் எனும் காவிரிப்பூம்பட்டினத் துறைமுகத்தில் கப்பலில் ஏற்றுவதற்காக குவிக்கப்பட்டிருக்கும் சரக்குகளின் மீது வரையாடுகள் நின்று கொண்டிருந்ததாக ஒரு பதிவு, பட்டினப்பாலையில் வருகிறது. வரையாடுகள் வனங்களில் வாழ்பவை. துறைமுகத்தைச் சூழ்ந்து வனங்கள் இருந்ததை இக்குறிப்பு உறுதி செய்கிறது.
இன்று தமிழகக் கடலோர வனங்களின் எச்சங்களாக கிண்டி, வேதாரண்யம் காடுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன. கிள்ளை, பிச்சாவரம், ராமநாதபுரம் கடலோர அலையாத்திக் காடுகள் மட்டுமே உவர்நீர்ப் பசுமைப் பரப்பாக எஞ்சியுள்ளன. நம் கடலோர வனங்களின் பெரும்பகுதியைச் சூறையாடிவிட்டனர். மீந்து நின்ற வனங்கள் கடலோர நன்னீராதாரங்களின் சிதைவினால் அழிந்துபோயின. தமிழர்களின் பார்வைக் கோளாறால் நேர்ந்த பெரும் சேதம் இது.இன்று ஆற்றுப்படுகைகளின் வயிற்றைக் கிழித்துப் போடுகிறது மணல் கொள்ளைக் கும்பல். வடிநிலங்களிலும் நெய்தல் நிலங்களிலும் நன்னீராதாரங்கள் சிதைவுற்றுப் போவதற்கு மணல் கொள்ளையே காரணம்.அன்றைய நாளில் கண்மாய்களும், ஏரிகளும் பருவமழைக் காலத்தில் மறுகால் பாய்ந்து அண்டை நீர்நிலைகளில் நிரம்புவதற்கான வழித்தடங்கள் ஏராளம் இருந்தன. நில ஆக்கிரமிப்புகளாலும் கண்மூடித்தனமாக கட்டுமானங்களாலும் இந்த இயற்கையான தடங்கள் ஊடறுக்கப்பட்டு விட்டன. நிலமானது நீரை சுயமேலாண்மை செய்து வந்த இயல்பான வழிமுறைகள் தடைபட்டதால், மழைவெள்ளம் தங்கிச் செல்ல வழியின்றி தவிக்கிறது.
நீர் நிலை இணைப்பு :கண்மாய், ஏரி, குளங்களைப் போர்க்கால அடிப்படையில் மீட்டெடுத்து உருவாக்கம் செய்வதோடு நமது நன்னீர் சிக்கல்கள் தீர்ந்துவிடாது. அறுபட்ட இணைப்புகளை சரிசெய்ய வேண்டும். பருவமழை வெள்ளம் பயணித்து வந்த மரபான தடங்களை மீட்டெடுத்து நீர்நிலைகளை இணைக்க வேண்டும்.கங்கை காவிரி இணைப்பு என்பது தொலைதுாரக் கனவு. ஆனால், வடதமிழகக் கடலோரத்தின் பக்கிங்ஹாம் கால்வாயையும் தென்தமிழக கடலோரத்தின் அனந்த விக்டோரிய மார்த்தாண்ட வர்மா கால்வாயையும் இணைப்பது செயலளவில் சாத்தியம். கடற்கரைக்கு நெருக்கமாக நன்னீர்க் கால்வாய் அமைவது லாபமானது மட்டுமல்ல உப்புநீர் உள்ளேற்றத்தையும் தவிர்க்கலாம்.
ஆறுகள் வீணாய் கடலில் கலப்பதில்லை. மீன்வளம் செழிக்கத் தேவையான உயிர்ச்சத்துக்களை கடலுக்கு கொணர்வது ஆறுகள் தான். இறால் போன்ற ஏராளமான மீனினங்கள் குஞ்சு பொரித்து வளருமிடம் கழிமுகங்கள். மழைநீர், நிலத்தை நனைத்து கடலை அடைந்தால் தான் நீர்சுழற்சி முழுமை பெறும். தமிழ்ச் சமூகத்தின் மருதம், நெய்தல் திணை சார்ந்த வாழ்வை மீட்டெடுக்க நீர்வள மேலாண்மை தான் இப்போதைய தேவை.
கடுமையான நன்னீர்ப் பற்றாக்குறையை சந்திக்கும் இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொரு வீடும் நீர்வள மேலாண்மையில் பங்கேற்க வேண்டும்; பூஜையறை போல வீடுகளில் நீர்தேக்க அறை அமைக்க வேண்டும் என்பது கட்டுப்பாடு. தமிழகத்தின் ஒட்டுமொத்த நீர்வளங்களை மேலாண்மை செய்யும் பொறுப்பை மாநில அரசின் தலையில் சுமத்துவது முறையல்ல. பொதுமக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து நீர்வளம் பேண வேண்டும்.-முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின்எழுத்தாளர், கடல் ஆய்வாளர்vareeth59@gmail.com

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-செப்-201515:59:42 IST Report Abuse
JeevaKiran இதில் யோசிக்க வேண்டியது மக்கள் இல்லை. அரசுதான். கொள்ளை அடிக்கும் அவர்களுடைய அல்லக்கைகளும்தான்.
Rate this:
Share this comment
Cancel
Raja (Thravida Veriyan) - Chennai,இந்தியா
24-ஜன-201500:54:59 IST Report Abuse
Raja (Thravida Veriyan) அருமையான சிந்தனை...ஓட்டுக்கு காசு வாங்க அலையும் நம் மக்கள் இதை பற்றி யோகிக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
23-ஜன-201516:19:41 IST Report Abuse
Sampath Kumar அந்த காலத்தில் கோவிலை கட்டிய கையேடு குளத்தையும் கட்டினான் தமிழன். நீரின் அவசியத்தை தமிழன் உணர்ந்த போல வேறு எந்த சமூகமும் உணரவில்லை அதனால்தான் நீர் இன்றி அமையாது உலகு என்று உலகத்திற்கு உணர்த்தி உள்ளான். ஆனால் இன்றைய தமிழன் ??? தண்ணீயில் முழ்கி உள்ளான்
Rate this:
Share this comment
Cancel
selvaraj ambalam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஜன-201512:06:47 IST Report Abuse
selvaraj ambalam கட்டுரை ஆசிரியருக்கு முதல் வணக்கம்.வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.தமிழ் மக்களே,இக்கட்டுரையின் உண்மையை புரிந்துகொண்டு,நம்மால் முடிந்தவரை,நல்லதை செய்வோம்.நல்லது நடக்கும்.நம்புவோம்.
Rate this:
Share this comment
Cancel
Raja Thirunavukkarasu - Bangalore,இந்தியா
23-ஜன-201509:39:06 IST Report Abuse
Raja Thirunavukkarasu நிதர்சனமான உண்மை கட்டுரை. மக்கள்தான் தெளிவு பெற வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
23-ஜன-201508:39:10 IST Report Abuse
R.BALAMURUGESAN ...நல்ல கட்டுரை... நீர்வள மேலாண்மை மிகவும் முக்கியமானது என்று நன்றாக உணர்த்தும் கட்டுரை...
Rate this:
Share this comment
Cancel
Sankar - Madurai,இந்தியா
23-ஜன-201507:48:50 IST Report Abuse
Sankar மிக மிக முக்கியமான ஒரு பிரச்சனை பற்றிய, மிக உபயோகமான சிந்தனை. அனைவரும் சிறிதாவது கவனத்தில் கொள்ள வேண்டும். வீடு கட்டுவதற்காக, மேம்பாட்டுத்திட்டங்களுக்காக என்று மணலை அள்ளிக்கொண்டே இருந்தால், சில ஆண்டுகள் கழித்து ஆறுகள் இருக்காது, தண்ணீர் இருக்காது. மாறாக சாகாடைகளும் நோய்களும்தான் இருக்கும். வீடு இருந்தாலும் வாழ்விடம் இருக்காது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை