ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே! ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே! ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன்

Added : பிப் 21, 2015 | கருத்துகள் (1)
Advertisement
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே! ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன்

சென்னை மாநகரின் வடபகுதியில் அமைந்துள்ள திருவொற்றியூர் திருக்கோவில், வழிபாட்டுச் சிறப்புடையதும், வரலாற்று சிறப்புடையதுமான திருக்கோவிலாக விளங்குகிறது. இத்திருக்கோவிலில் இறைவன் ஆதிபுரீசுவரர், புற்றிடங்கொண்டார், படம்பக்கநாதர், எழுத்தறி யும் பெருமான், தியாகேசர் என்றெல்லாம் அழைக்கப்பட்டும், இறைவி திரிபுரசுந்தரி, வடிவுடையம்மை என்று அழைக்கப்பட்டும் சிறப்பாகப் போற்றி வழிபடப் பெறுவதைக் காணலாம். இவ்வூர் ஆதிபுரி, ஒற்றி யூர், சொர்ணபுரி, நாராயணபுரி, வேதபுரி, சிவபுரி என்றெல்லாம் பல்வேறு பெயர்களில் சிறப்பித்து அழைக்கப்படுகிறது.


மூவர் போற்றிய திருத்தலம்:

தொண்டை நாட்டில் அமைந்துள்ள பாடல் பெற்ற, 32 தலங்களில், 20வது திருத்தலமாக திருவொற்றியூர் விளங்குகிறது. மிகச் சிறப்பான தலம். நினைத்தாலே முக்தி அளிக்கும் சிறப்புடையது. மூவர் போற்றிய திருத்தலம். ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவரும் இத்தலத்தைப் போற்றி அருளியுள்ளனர். 'ஊனம் இல்லி உறையும் இடம் ஒற்றியூரே, ஒற்றியூரை வழிபட விண்புனை மேலுலகம் விருப்பெய்துவர் வீடு எளிதே' (3ம் திருமுறை) என, ஞானசம்பந்தர் போற்றுவதைக் காணலாம். 'ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே, ஒற்றியூர் பாதம் ஏத்தப்பறையும் நம்பாவமே, ஒற்றியூர் அடையும் உள்ளத்து அவர்வினை அல்குமே, திருவொற்றியூர் உரையினாற் பொலிந்தார் உயர்ந்தார்களே' என்று இத்தலத்தின் பெருமைகளை (5ம் திருமுறை), நாவுக்கரசர் எடுத்துக் கூறுகிறார். திருவொற்றியூர் கோவிலுடன் சுந்தரமூர்த்தி நாயனார் கொண்டிருந்த தொடர்பு சுவையானது. ஞாயிறு என்ற திருத்தலத்தில் அவதரித்த சங்கிலி நாச்சியார், திருவொற்றியூரில் மகிழ மரத்தினடியில் சுந்தரரைத் திருமணம் செய்து கொண்டார். பங்குனி மாதம், இதற்கான விழா நடைபெற்றதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. தற்போது, மாசி மகம் அன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி, 'மகிழடி சேவை' என்று சிறப்பாக அனைவராலும் போற்றி வணங்கப்படுகிறது. இக்கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திரப்பெருவிழாவில், மகிழ மரத்தின் அடியில் படம்பக்க நாயகர் எழுந்தருளிஇருந்தார். அப்போது, இறைவன் திருமுன் ஆளுடை நம்பி ஸ்ரீபுராணம் படிக்கப்பட்டதாக இரண்டாம் ராஜாதிராஜ சோழன் (கி.பி., 1172-86) கல்வெட்டு கூறுகிறது. ஆளுடை நம்பி என்பது சுந்தரரைக் குறிக்கும். அவரது வரலாற்றைக் கூறும் புராணம் ஆளுடை நம்பி ஸ்ரீபுராணம் எனப்பட்டது. இக்கோவில்களில், மகிழ மரம் அருகில் உள்ள சுந்தரர் மண்டபத்தில் திருமணங்கள் இன்றும் நடைபெற்று வருகின்றன. அருணகிரி நாதர், தம் திருப்புகழில் இத்தலத்தைப் போற்றியுள்ளார். வாழ்க்கையின் நிலையாமையை உபதேசித்த பட்டினத்தடிகள் முக்தி பெற்ற தலமாக திருவொற்றியூர் விளங்குகிறது. அவர் சமாதி கோவில் திருப்பணி செய்யப்பட்டு, சமீபத்தில், கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆடிமாதம் உத்திராட நட்சத்திரத்தில் குருபூஜை நடைபெறுகிறது. சைவ சமயம் போற்றும் நாயன்மார்களில் கலிய நாயனார் தான் வறுமையால் துன்பப்பட்டபோதும், தன் உடலை வருத்தி விளக்கேற்ற முனைந்தார். திருக்கோவிலில் விளக்கேற்றி வழிபாடு செய்து, இறையருள் பெற்ற கலிய நாயனார் அவதரித்த தலம் இதுவே!


வடிவுடையம்மன்:

இத்திருக்கோவிலில் எழுந்தருளி அருள்புரியும் அம்பாள் வடிவுடையம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. திருவொற்றியூர் அருகில் உள்ள மேலூர் திருவுடை அம்மன் இச்சா சக்தியாகவும், திருமுல்லைவாயிலில் அருள்புரியும் கொடியுடை அம்மன் கிரியா சக்தியாகவும் விளங்குகின்றனர். இம்மூவரையும் ஒரே நாளில் வழிபடுவது சிறப்பாக விளங்குகிறது. சங்கீத மும்மூர்த்திகளில் தியாகராஜரும், முத்துசாமி தீட்சிதரும் அம்பாளைப் போற்றி கீர்த்தனைகள் பாடியுள்ளனர். இத்தலத்தின் மீது மிகுந்த பக்தி கொண்டவர் வள்ளலார். அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றியுள்ளார். மேலும், இறைவன் மீது எழுத்தறியும் பெருமான் மாலை, தியாகராஜப்பெருமான் நடனக்காட்சி பற்றியும் பாடல்கள் இயற்றிய பெருமை உடையது இத்தலம். இன்று, திருவொற்றியூர் வடிவுடைஅம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.


கவுலீசர் என்ற லகுளீசர்:

திருக்கோவிலின் தெற்குச் சுற்றில், கவுலீசர் எனப்படும் சிவபெருமானின் அரிய திருமேனி வழிபாட்டில் உள்ளது. லகுளீசர் என, இவர் கருதப்படுகிறார். ஜடாமகுடம் அணிந்து, காதுகளில் உருத்திராக்க குண்டலங்கள் அணிந்த நிலையில், நான்கு கரங்களில், கீழ் வலதுகரம் போதிக்கும் நிலையில், காட்சி தருகிறார். மேற்கரங்களில் சூலமும், கபாலமும் தாங்கி, பத்மாசனத்தில் காட்சி தருகிறார். திருவொற்றியூர் காளாமுக சைவர்களின் இருப்பிடமாகத் திகழ்ந்து உள்ளது. மேலும் இக்கோவில்களில், 'சோம சித்தாந்தம்' விரிவுரையாக நிகழ்த்தப்பட்டது என்பதை, ராஜாதிராஜன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கவுலீசர் எழுந்தருளியுள்ள சன்னிதி, வீரராஜேந்திரன் காலத்தில், படம்பக்க நாயக்கதேவர் என்ற அதிகாரி யால் கட்டப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது.

(கட்டுரையாளர் தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்)

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Kumar - coimbatore,இந்தியா
23-பிப்-201510:37:41 IST Report Abuse
Ramesh Kumar சிவ சிவ ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை