இளைஞர்களின் இதயவீரன் பகத்சிங்| Dinamalar

இளைஞர்களின் இதயவீரன் பகத்சிங்

Added : மார் 23, 2015 | கருத்துகள் (9)
Advertisement
 இளைஞர்களின் இதயவீரன் பகத்சிங்

தியாகம், சேவை, அன்பு, கருணை, தேசபக்தி, பொதுநலம், அடக்கம், அர்ப்பணிப்பு, ஆகியவை ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், வீட்டின் நன்மைக்கும் இன்றியமையாத பண்புகள். வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடுவதில் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் பாமர மக்களிடமும், வாழ்க்கையை வணிக நோக்கில் அணுகி கொண்டிருப்பவர்களிடமும் மேற்சொன்ன சில தனிமனித பண்புகள் இன்று மறைந்து கொண்டிருக்கிறது.
காரணம் ஒவ்வொரு வீட்டிலும், பள்ளிகளிலும் இருந்த நமது நாட்டின் தியாகச் சுடர்களின் படங்களும், அவர்கள் நமக்குவிட்டுச் சென்ற பாடங்களும் மறைந்துவிட்டன. மெல்ல மறைந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் வரலாற்று பக்கங்களில் அழிக்க முடியாத தடமாக மாவீரன் பகத்சிங்கி-ன் வாழ்க்கை நிலைபெற்றிருக்கிறது.
தியாக குடும்பம்:இந்திய விடுதலைக்காக ஒரு குடும்பமே சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் நாட்களை கழித்தது என்பது பகத்சிங்கின் குடும்பத்துக்கே பொருந்தும். பாட்டனார், தந்தை, சித்தப்பா மூவருமே சுதந்திர போராட்ட வீரர்கள்.
1907 செப்.,27-ல் பகத்சிங் பிறந்தபோது சிறையில் இருந்தார் தந்தை கஹன்சிங். 'இந்தியா இந்தியருக்கு' என்று முதலில் முழங்கிய சுவாமி தயானந்த சரஸ்வதியின் வழிகாட்டுதலில் துவக்கப்பட்ட தயானந்த ஆங்கிலோ வேத பள்ளியில் படித்தார். பள்ளிப் பாடங்களை விட சமூக நிகழ்வுகளே அவரது உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.விடுதலைப் போரில் வீரச்சிறுவன்தனது 14ம் வயதில் நெஞ்சுறுதியுடன் தேசவிடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்ட பகத்சிங், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலேய அரசு வழங்கிய பள்ளிப் பாடபுத்தகங்களை கொளுத்தினார். விடுதலைப் போரில் முழுமையாக பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஆழமாக இந்நிகழ்வு பகத்சிங்கின் மனதில் பதிந்தது. ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தியவுடன், காந்திய வழி போராட்டத்தில் நம்பிக்கையிழந்த பகத்சிங் இளம் புரட்சியாளர் இயக்கத்தில் இணைந்தார்.
அவரது வேகத்தை கண்ட பெற்றோர், திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் அது தனக்கு தடையாக இருக்கும் எனக்கருதி மறுத்தார். நண்பர் சுகதேவ் மற்றும் யஷபாங் உடன் இணைந்து 'நவஜவான் பாரத சபா'வை 1926-ல் துவக்கினார்.போராட்ட இளைஞன்1919ல் சட்டத்தின் செயல்பாடுகளை ஆராய சைமன் கமிஷன் (வெள்ளையர் கமிஷன்) 1928-ல் இந்தியா வந்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் அறப்போராட்டங்கள் நடந்தன. லாகூர் ரயில் நிலையம் அருகே 'பஞ்சாப் சிங்கம்' லாலா லஜபதிராய் தலைமையில் ஊர்வலம் நடந்தது. காவல் கண்காணிப்பாளர் ஸ்காட் உத்தரவுபடி தடியடி நடந்தது. இதில் காயமுற்ற லஜபதிராய் மரணமடைந்தார். இதற்கு பதிலடி கொடுக்க தயாரானது பகத்சிங்-கின் இளம் புரட்சிப்படை. ஆனால் காவல் நிலைய வாசலில் பகத்சிங்கி-ன் நண்பர்கள், துணை கண்காணிப்பாளர் சாண்டர்சை சுட்டுக் கொன்றனர்.
இதற்காக பகத்சிங்-கின் படை வருத்தம் தெரிவித்தது. எனினும் கைதிலிருந்து தப்பித்து நாட்டு விடுதலைக்காக இன்னும் போராட நினைத்த பகத்சிங், தான் சார்ந்த புனித மதத்தின் கோட்பாடுகளையும் மீறி மொட்டையடித்து மறைமுக வேள்வியை தொடர்ந்தார்.பாதுகாப்பு, தொழில் தகராறு மசோதாக்களுக்கு எதிராக தமது குரலை ஒலிக்கச் செய்ய பார்லிமென்ட் மீது குண்டுகள் வீச உறுதியாக இருந்தது பகத்சிங்-கின் புரட்சிகர இயக்கமான இந்துஸ்தான் சோஷயலிஸ்ட். யாருக்கும் காயம், பலி ஏற்படக்கூடாது என்பதில் பகத்சிங் உறுதியாக இருந்தார்.
ஏனெனில் பகத்சிங் தீவிரவாதி அல்ல. ஒரு புரட்சியாளர். திட்டமிட்டபடி 1929 ஆக.,8ல் பகத்சிங்கும், பட்டுகேஷ்வர்தத்தும் பார்லிமென்ட் நுழைவாயிலில் வெடிகுண்டு வீசிவிட்டு “இன்குலாப் ஜின்தாபாத்” என்று முழங்கிவிட்டு சென்றனர். முன்னதாக “செவிடர்களை கேட்க செய்யவேண்டுமானால் பலத்த சத்தம் அவசியமாகிறது” என்ற வாசகங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ்களை வீசினர்.
அசாதாரண வீரன்:பார்லிமென்ட் தாக்குதல், லாகூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட பகத்சிங் “உங்கள் வெள்ளையர் நீதிமன்ற தீர்ப்பின்படி நாங்கள், உங்கள் அரசின் மீது போர் தொடுத்துள்ளோம். ஆகவே நாங்கள் போர் குற்றவாளிகள். ஒரு போர் குற்றவாளியைப் போலவே எங்களை நடத்த வேண்டும். உங்கள் ராணுவத்தின் துப்பாக்கியால் சுட்டே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். ஆகையால் நீதிமன்ற தீர்ப்பின்படியே நீங்கள் நடக்க வேண்டும்” என்றுக்கூறி, கோடானகோடி இந்திய இளைஞர்களின் நெஞ்சரத்தை ஆங்கிலேயருக்கு புரியவைத்த அசாதாரண வீரன்.
“புரட்சி என்பது மனிதசமுதாயத்தில் பிரிக்க முடியாத அங்கம், சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை. அதை யாரும் தடுக்கமுடியாது” என்று சிறைக் கம்பிகளுக்குபின் நின்று வெள்ளையர்களுக்கு பாடம் நடத்தியவர் பகத்சிங்.
கடைசி நிமிடங்கள்:சிறையில் பகத்சிங்-கை தோழர்கள் இறுதியாக சந்தித்தபோது, 'தோழனே, நீ மரணத்தை நெருங்கிவிட்டாய். இதற்காக நீ கவலைப்படவில்லையே? எனக்கேட்க, 'நாட்டு விடுதலைப் போராட்டத்தில் முதலடி எடுத்துவைத்த போதே என் உயிரை நம் தாய்நாட்டுக்கு தந்து விட்டேன். நாங்கள் விதைத்த (இன்குலாப் ஜின்தாபாத்) முழக்கம் நாடு முழுவதும் இன்று கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களிலிருந்து உணர்வாய் உயிராய் எழுவதை இந்த சிறையிலிருந்து என்னால் கேட்க முடிகிறது” என்றார் பகத்சிங்.
தனது தம்பி குல்வீர்க்குமாருக்கு 1931-ல் எழுதிய கடைசி கடிதத்தில், “நாளை காலை மெழுகுவர்த்தியின் ஒளி மங்குவது போல் நானும் காலை ஒளியில் கரைந்து போவேன். ஆனால் நம் குறிக்கோள் என்றும் நிலைத்திருக்கும். இன்று மறைந்து நாளை மீண்டும் பிறப்போம். நம் இந்தியத் தாய்களின் வயிற்றில் எண்ணற்ற இந்நாட்டின் வீரர்கள் வடிவில்” என்று குறிப்பிட்டு, மறுநாள் (மார்ச் 23) துாக்கு மேடை நோக்கி வீரநடைபோட்டு 24 வயதில் இந்த தேசத்திற்காக உயிரைக் கொடுத்து இளைஞர்களின் இதயங்களை வென்ற வீரனாய் மறைந்தார் பகத்சிங். அவர் மறைந்த இந்நாளில் நமது தேசத்தின் தியாகச் சுடர்களை திரும்பிப் பார்ப்போம். அவர்களின் கால்தடங்களையும், நினைவுகளையும் சுமந்து நிற்கும் வரலாற்றை வாசிப்போம். தாய்நாட்டை நேசிப்போம்.- முனைவர் சி. செல்லப்பாண்டியன்உதவி பேராசிரியர், வரலாற்றுத் துறைதேவாங்கர் கலைக்கல்லுாரிஅருப்புக்கோட்டை.78108 41550

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
23-மார்-201523:19:14 IST Report Abuse
N.Purushothaman பகத் சிங் மறையவில்லை....இன்று பல கோடி பகத் சிங்குகளாக நாட்டில் உள்ளதற்கு அவரின் உன்னதமான எழுச்சியான போராட்டமே காரணம்.. ..
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur ,மலேஷியா
23-மார்-201523:17:13 IST Report Abuse
N.Purushothaman பகத் சிங்கின் நெஞ்சுரம் போற்றுதலுக்குரியது....ஜெய் ஹிந்த்...
Rate this:
Share this comment
Cancel
krishna - madurai,இந்தியா
23-மார்-201522:10:19 IST Report Abuse
krishna ஒரு சின்ன சந்தேகம்... சந்திர சேகர் ஆசாத், உத்தம்சிங், வாஞ்சிநாதன், காட்டு ராஜா இன்னும் பல பேர்.... பகத்சிங் அளவுக்கு புகழ் பெறவில்லையே ஏன்.. அனைவருமே சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்கள் தான். அதிலும் சந்திரசேகர் பகத்சிங்கின் குரு என்று போற்றபடுபவர். இன்னும் பலருடைய பெயர் கூட நமக்கு தெரியவில்லை ஏன்? ஏன் இந்த ஏற்ற தாழ்வு? பெரும்பாலோனோர் இளைஞர்கள் தான். தங்கள் வாழ்வில் சிறிதளவு கூட சந்தோசத்தை கண்டிராதவர்கள். அப்படி இருக்கையில் சுதந்திர போராட்ட வீரர்கள் புகழ் பாடுவதில் எதற்கு அரசியல்... யோசிப்பீர்...
Rate this:
Share this comment
Cancel
Sankar A - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-201513:21:45 IST Report Abuse
Sankar A தேச பக்தி, தேச முன்னேற்றத்திற்காக படு பாடல், ஊழலற்ற தேசம் இவை அனைத்தும் நம் மாவீரன் பகத்சிங்க்ஹ்க்கு செலுத்தும் அஞ்சலி / மரியாதை. அவர் வாழ வேண்டிய மீதி வாழ்க்கையைத்தான் நம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
23-மார்-201510:16:17 IST Report Abuse
P. SIV GOWRI முனைவர் சி. செல்லப்பாண்டியன் ஜி அருமையான பதிவு. 24 வயதில் இந்த தேசத்திற்காக உயிரைக் கொடுத்து இளைஞர்களின் இதயங்களை வென்ற வீரனாய் மறைந்தார் மா வீரன் பகத்சிங்.வாழ்க அவரது புகழ்.. தினமலருக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
23-மார்-201508:57:04 IST Report Abuse
Swaminathan Nath “புரட்சி என்பது மனிதசமுதாயத்தில் பிரிக்க முடியாத அங்கம், சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமக்களின் பிறப்புரிமை. அதை யாரும் தடுக்கமுடியாது” என்று சிறைக் கம்பிகளுக்குபின் நின்று வெள்ளையர்களுக்கு பாடம் நடத்தியவர் நமது பகத் சிங் ///வாழ்க அவரது புகழ்.
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
23-மார்-201508:42:17 IST Report Abuse
s. subramanian வேற வணக்கம். இன்னும் மறையாத மறைக்கப்படக்கூடாத மறுக்கப்படாத நிஜம். அவரின் மீதி வாழ்கையையே நம் இன்று சுகமாய் அனுபவத்துக்கொண்டிருக்கிறோம். ... இப்படிப்பட்ட வரலாற்றை தள்ளிவிட்டு சமச்சீர்கல்வி என்ற பெயரில் கனிமொழி வைரமுத்து கவிதையையும் பெரியார் பிரிவினை கட்டுக்கதைகைளையும் படித்தால் இளைய தலைமுறை எங்கே நாட்டுப்பற்றோடு வளர்வார்கள் என்பதை பெரியவர்கள் புரிவார்களா,... ஆனாலும், நன்றி தினமலருக்கு, , முனைவர். திரு. செல்லப்பாண்டியன் அவர்களுக்கு.
Rate this:
Share this comment
Cancel
Citizen_India - Woodlands,சிங்கப்பூர்
23-மார்-201507:07:17 IST Report Abuse
Citizen_India முனைவர் சி. செல்லப்பாண்டியன் அவர்களே, உங்கள் கட்டுரை மிகவும் அருமை, உண்மை நிலை என்னவென்றால் இன்றைய மக்களின் மனதில் நீங்கள் எதிர்பார்க்கும் தியாகம், சேவை, அன்பு, கருணை, தேசபக்தி, பொதுநலம், அடக்கம், அர்ப்பணிப்பு இவை இருக்கும் என நம்பிக்கை இல்லை. இதற்க்கு காரணங்கள் 1) முற்றிலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் கற்பிக்கப்படும் கல்வி முறை. 2) முற்றிலும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள். 3) பிள்ளைகளுக்கு சமுதாய பார்வையை, தியாகம், சேவை, அன்பு, கருணை, தேசபக்தி, பொதுநலம், அடக்கம், அர்ப்பணிப்பு போன்றவற்றை கற்பிக்க தவறிய பெற்றோர்கள் & ஆசிரியர்கள்.
Rate this:
Share this comment
Cancel
arulstephen - male,மாலத்தீவு
23-மார்-201507:04:45 IST Report Abuse
arulstephen ஜைஹிந்த் சார், நானும் பகத்சிங்கின் மிகப்பெரிய ரசிகன். எனது வண்டியில் புகைப்படமே அவருடையதுதான் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை