வெள்ளாடு வளர்க்க "டிப்ஸ்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெள்ளாடு வளர்க்க "டிப்ஸ்'

Added : மார் 28, 2015

பல்லடம்: பல்லடம் மற்றும் சுல்தான்பேட்டை பகுதிகளில், விவசாயத்துக்கு அடுத்ததாக, கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. இதில், வெள்ளாடு வளர்ப்பு முக்கியமானது. வெள்ளாட்டு இனங்களில் கன்னியாடு, கொடியாடு, சேலம் கறுப்பு, தலைச்சேரி, பார்பாரி, ஜமுனாபாரி, போயர் என பல வகைகள் உள்ளன. சந்தையில் வெள்ளாடு இறைச்சியின் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அதை வளர்ப்பதில் கால்நடை வளர் ப்போர் ஆர்வம் காட்டுகின்றனர். வெள்ளாடு வளர்ப்பு முறை குறித்து, பல்லடம் கால்நடை டாக்டர்கள் கூறியதாவது: வெள்ளாடு வளர்ப்பை அரசு ஊக்குவித்து வருவதால், இதன் மூலம் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து வருகிறது. முறையாக பராமரித்து இனவிருத்தி செய்தால், வெள்ளாடு வளர்ப்பவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆடுகளை 8 முதல் 10 மணி நேரம் மேய்ச்சலுக்கு விட வேண்டும். அதன்பின், கொட்டகையில் தீவனம் அளித்து பராமரிக்க வேண்டும். பரண், சல்லடை கொட்டகை அமைத்து பராமரித்தால், ஆடுகளுக்கு நோய்த்தொற்று வராது. வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனம், உலர்தீவனம் மற்றும் அடர்தீவனம் அளிக்கலாம். ஆடுகளுக்கு பசுந்தழை நாளொன்றுக்கு 3 கிலோ; உலர்தீவனம் நாளொன்றுக்கு 400 கிராம்; கலப்பு தீவனம் 100 கிராம் போன்ற விகிதத்தில் அளிக்கலாம். பசுந்தீவனமாக வேலி மசால், முயல் மசால், சவுண்டல், கொடுக்காப் புளி, வேம்பு, மரவள்ளி, மா, பலா, கருவேல் உள்ளிட்டவைகள்; உலர் தீவனமாக சோளத்தட்டு, கம்பு தட்டு, வைக்கோல், கடலைக்கொடி போன்றவை; கலப்பு தீவனமாக கடலை, எள் புண்ணாக்கு, கோதுமை தவிடு, தாது உப்பு, சாதாரண உப்பு போன்றவற்றை சரிவிகிதத்தில் அளித்தால், குட்டிகள் ஆரோக்கியமாகவும், அதிக எடையுடனும் வளரும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X