நம்மைச் சுற்றி நான்காயிரம் சொர்க்கபுரிகள்!| Dinamalar

நம்மைச் சுற்றி நான்காயிரம் சொர்க்கபுரிகள்!

Added : மார் 30, 2015 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நம்மைச் சுற்றி நான்காயிரம் சொர்க்கபுரிகள்!

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என்ற இனிமையான குரல் நம்மைப் பயண நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறதே! கடந்து செல் கிறோம் பலஊர்களின் பழைய நினைவுகளோடு. ஒவ்வொரு பயணமும் தியானத்தைப் போல் மனநிறைவினைத் தருகிறதே. ஊரோடு கலந்து, ஊனோடு கலந்து, நம்மோடு கலந்துபோன பயணங்களுக்கு முடிவேது? ரயில், பஸ் பயணங்கள், படகுப் பயணங்கள், விமானப் பயணங்கள், இருசக்கர வாகனப் பயணங்கள், சைக்கிள் பயணங்கள், மாட்டுவண்டி, குதிரை வண்டிப் பயணங்கள், நடைபயணங்கள் என எத்த னையோ பயணங்கள் தினமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. உயிரில் கலந்து உணர்வில் கரையும் பயணங்கள் இனிமையானவை.திண்ணைகள் தின்ற தெருக்கள், அளிக்கம்பிகள் இல்லாக் கதவுகள், தன்னைத்தானே பூட்டிக்கொண்டு சொந்தச் சிறையில்இருக்கும் விந்தைமனிதர்கள், நீர்மோர்தராத சாவடிகள், சிமென்ட் கடைகளாகிவிட்ட சத்திரங்கள், இவற்றுக்கு மத்தியில் கொப்புளங்களோடு பயணப்படுகின்றன நம் பாதங்கள். தேசாந்திரியாக அலையத்தொடங்கிவிட்டவனுக்கு எல்லைகள்கூடத் தொல்லைகள்தான். பயணப்படும்போது நாம் பக்குவமடைகிறோம். வரலாறு படிக்கிறோம், பண்பாடுஅறிகிறோம், மக்கள் மனதை வாசிக்கிறோம். கம்புபற்றி மேல் எழும் வெற்றிலைக்கொடியாய் பயணப்பொழுதுகளில்அன்பு பற்றி வளர்கிறது மனிதமும் புனிதமாய்.


ஆன்மாவின் சயனங்கள்:

ஒரு சுவாரசியமான முடிவை நோக்கி நகர்த்திச் செல்லும் இனிய பயணமே வாழ்க்கை. ரணப்படும் இதயமும் குணப்படும், பயணப்படும் அழகான கணங்களில். கக்கத்தில் துக்கத்தை வைத்துக்கொண்டு துயரத்தின் பக்கத்தில் நின்றுகொண்டிருக்கும் நமக்குப் பயணங்கள் ஆறுதலையும் தேறுதலையும் தருகின்றன. பயணங்கள் ஆன்மாவின்ஆனந்தசயனங்கள். இடம் மாறும்போது தடுமாறும் மனமும் தடம் மாறும். பயண நேரங்களில் பலப்படுகிறது நம் இதயமும் இதமாக. கொடைக்கானல் மலையின் மூலிகை சுவாசம், மூணாறு மலையின் தேயிலை வாசம், குற்றாலச்சாரல், தேடிவரும் தேனித் தென்றல், கடலலை கால்வருடும் திருச்செந்தூர் கடற்பரப்பு, மணப்பாடு மணல்குன்று, வான் முட்டும்தூண் தட்டும் திருமலை நாயக்கர் மகால்,கடல் அலைகள் நடுவே தவமிருக்கும் விவேகானந்தர் பாறை, ஓங்கி உயர்ந்து நிற்கும் திருவள்ளுவர் உயிர்ச்சிற்பம், இயற்கையை ஊட்டி வளர்க்கும் ஊட்டி குளிர்மலை, கடல் மீது பாலத்தில் பயணிக்கும் ராமேஸ்வரத்தீவு, பொதிகைமலையிலிருந்து பொங்கிப் பாயும் பாணதீர்த்தப் பேரருவி என்று நம்மைச் சுற்றிநாலாயிரம் சொர்க்கபுரிகள்..ரசிக்க மனமின்றி இயற்கையைப் புசிக்க தினமின்றி கட்டடச்சிறைகளுக்குள் நாம் கைதியாய் கழிக்கிறோம். சுடப்பட்ட ரொட்டியாய் நாம் தனிமைத்தீயில் தகிக்கிறோம். யார்தவறு?


விந்தை விநாடிகள் வீண்:

அழுகியபூக்களின் அழகியலை அர்த்தமில்லாமல் எழுதிக் கொண்டிருக்கும் கவிஞன் போல் பலநேரங்களில்நாம் வீணடிக்கிறோம் நம் விந்தைவிநாடிகளை. நதி பார்க்கா நாள் வீண், ஆறு பார்க்கா ஆயுள் வீண், மலை பார்க்கா மானுடம் வீண். வனம் பார்க்கா தினம் வீண். இப்படி நமக்கருகேஇருந்தும் நம்மால் கண்டுகொள்ளப்படாத இடங்கள் ஒன்றா இரண்டா! நினைத்துப் பார்க்கிறயாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கும். செலவு என்ற தமிழ்ச்சொல் செல்லுதலைக்குறித்தது. தமிழில் ஆற்றுப்படை இலக்கிய வகைமை, பயணப்படுதலை முன்நிறுத்தியே அமைந்தது. சீனப்பயணி யுவான் சுவாங் இந்திய மண்ணில் கால்பதித்து ஒவ்வொரு இடமாகத் தரிசித்து எழுதிய குறிப்புகள் சாதாரணமானவையா? காஷ்மீரத்திலும்,நாளந்தாவிலும், காஞ்சியிலும் அவர் காலாற நடந்து எழுதிய குறிப்புக்களைவாசிக்கும்போது நம் மனம் மகிழ்வலைகளில் தவழ்கிறதே! ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக்கடல்வழிப் பாதையைக் கண்டறிந்த வாஸ்கோடகாமாவின் பயணம் உலகின் பார்வையைத் திரும்பவைத்த பயணமாயிற்றே! தூங்கிக்கொண்டிருக்கிற இரவு நேரப்பயணப் பொழுதிலும் சாலையில் நின்று கண்ணாடிக்கு வெளியே நின்று தட்டிஎழுப்பி கோவில்பட்டி கடலை மிட்டாய் விற்கும் அந்த மனிதரை, ஓடுகிற பஸ்சில் சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சு விற்கும் அந்த மனிதரை வீட்டிற்குள்ளிருந்தால் எப்படிச்சந்திப்பது? கொடைரோட்டில் குவிந்து கிடக்கிற கனிகளின் இன்சுவையை எப்படிப் பெறுவது? நாம் நாடுகடந்தும் கண்டம் கடந்தும் பயணப்பட வேண்டியதில்லை, நம்மைச்சுற்றி இருக்கும் சொர்க்கபுரிகளை நோக்கி நாம் என்றாவது ஆர்வத்தோடு பயணித்திருக்கிறோமா! சமணப் படுகைகள் நிறைந்த சமணமலை மதுரைக்கு அருகில் இருப்பதை நாம் அறிந்துள்ளோமா! சன்னலோர இருக்கைக்குச் சண்டையிடுகிற பள்ளிப்பிள்ளைகள் மாதிரிஇன்னலோர இருக்கையில் இடம்போடப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறோம். சிட்டுக்குருவிகள் விடுதலையாகிப் பறக்கின்றனவே; அந்தச் செப்படி வித்தையை அவை எப்படிக் கற்றன? சிந்திக்கத் தெரியா சிட்டுக் குருவிகள்? அலைவதில் அவைகளுக்கு அலாதிப் பிரியம்.


வெற்றுலா அல்ல:

சுற்றுலா வெற்றுலா அல்ல. அது செலவின் பக்கங்களில் வரவு வைக்கப்பட வேண்டிய நெருக்கடியான நிகழ்வுமன்று. அருவி பார்க்கும்போது நிறையவே நிரம்பி வழியுங்கள். கடல் மணலில் கவலைகளைக் கொட்டிவிட்டு உற்சாகமாய் நடைபயிலுங்கள். வனம் பார்க்கும்போது செடியாகுங்கள். பயணப்படுங்கள் பலப்படும் வாழ்வு. பயணப்படுங்கள் பக்குவமடைவீர்கள், பயணப்படுங்கள் விசாலப்படும் மனது. புதிது புதிதாய் நண்பர்களைப் பெறுவீர்கள்; அப்போது ரயில் நெரிசலும் பஸ் கூட்டமும் மகிழ்ச்சியே. பின்னால் ஓடுகிற மின்கம்பங்கள்,அவ்வப்போது இடைப்படும் பழவியாபாரிகள், யாவற்றையும் உன்னிப்பாய்கவனியுங்கள்..பயணத்தின் சூட்சுமம் புரியும். அந்தந்த வினாடிகளில் வசிக்கப் பழகுங்கள்,எதற்கெடுத்தாலும் எரிச்சலடைய நாமொன்றும் எரிமலைமேல் வசிக்கவில்லை. சீவச்சீவக் கூர்மையாகிற பென்சில்மாதிரி பயணம் போகப்போகக் கூர்மையாகிறோம். ஆகவே கனிவான மனிதர்களாக, இனிப் பயணப்படுவோம் பக்கத்து ஊர்களுக்காவது!

- முனைவர் சௌந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி. 9952140275

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KRK - Kumbakonam,இந்தியா
31-மார்-201522:14:05 IST Report Abuse
KRK "செலவு என்ற தமிழ்ச்சொல் செல்லுதலைக்குறித்தது" - அடடா எவ்வளவு பரவசமா இருக்கு இதை படிக்கும்போது. அதே நேரத்தில் குற்ற உணர்ச்சியும் மேலோங்குது நாம் இதை எல்லாம் இன்னும் அனுபவிக்கலியே என்று. தள்ளிபோட்டது போரும், சேமிப்பில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு செலவு நோக்கி செயலாற்றுவோம்.
Rate this:
Share this comment
Cancel
raja - tenkasi  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-201520:23:54 IST Report Abuse
raja எனது தமிழ் ஆசிரியர் மகாதேவன் அவர்களின் இந்த கட்டுரையை படிக்கும் போது அவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்திய இனிமையான நினைவுகள்தான் வருகிறது மனதில்
Rate this:
Share this comment
Cancel
basskar srinivasan - chennai,இந்தியா
31-மார்-201518:28:42 IST Report Abuse
basskar srinivasan படித்ததில் பிடித்தது....இனிய பயணங்கள் தொடர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
31-மார்-201517:08:19 IST Report Abuse
P. SIV GOWRI பயணிகளின் கனிவான கவனத்திற்கு. நிஜமாவே என் ( கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை )பிறந்த ஊருக்கு போய் வந்த மாதரி உள்ளது. சுத்தமான காற்று, சுத்தமான தண்ணி, கோவில்கள், எல்லோரயும் அண்ணா, அக்கா என்று அழைப்பது மாட்டு கொட்டகை, வீட்டின் முன் ரோடு, ஆறு, பின்புறம் குளம், மலை, பசுமையான மரங்கள், இதை எல்லாம் விட்டு 30 வருட காலம் ஆகி விட்டது. அதுவம் கொஞ்ச தொலைவில் உலக்கை அருவி என்று ஒன்று உள்ளது. பார்க்க வேண்டிய அருவி. இன்னும் நிறைய இடங்கள் உள்ளது. இப்போ நினைவுகள் மட்டுமே உள்ளது. இதை இங்கு பகிர்ந்து கொண்டது இதமாக உள்ளது. நன்றி
Rate this:
Share this comment
Cancel
s. subramanian - vallanadu,இந்தியா
31-மார்-201508:43:06 IST Report Abuse
s. subramanian கட்டுரை வடிவில் நல்ல கவிதை... நெல்லை மண்ணிற்கே உள்ள கவி வாசம்..இல்லாத ஒன்றிற்காக அலைவதை விட்டுவிட்டு இருக்கின்ற எல்லாத்தையும் இழுக்கும் இந்த கட்டுரை கொஞ்சமல்ல ரொம்பவே யோசிக்க வைக்குது... தினமலருக்கு ஒரு வேண்டுகோள்... இதை கவிதை வடிவில் முனைவரே வாசித்து உங்கள் பகுதியில் வெளியிட்டால் இன்னும் மனசு கரைந்து அழும்.. நன்றி..
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
31-மார்-201503:41:50 IST Report Abuse
JAIRAJ மலை சூழ்ந்த கிராமத்தில், தூரத்து அருவியும், அருகாமையில் ஆற்றங்கரை ஜீவ நதியும், பட்சிகளின் குரல் ஜாலங்களும், சாணி கலந்து தெளித்த அழகிய கோலத்துடன் கூடிய மண் தெருவும், பெரிய திண்ணைகளுடன்,இருபுறமும் வரிசை கட்டி நிற்கும் வீடுகளும். சில மாப்பிளை திண்ணைகளும், மரத்தூண்களின் அருகில், நீர் நிரப்பிய சொம்புகளும், அருகாமை வாய்க்கால்களும்,அடர்ந்த மரங்களும் அதனால் உண்டான குளிர்ச்சியும், அப்பபா...............எண்ணிப் பார்த்து மகிழும் மகிழ்ச்சி கலந்த வாழ்கை. போலி வாழ்கை இல்லை. ஏமாற்றுதல் இல்லை.எல்லாமே சுகம் தான். ஊரைவிட்டு மேல்படிப்புக்கு வேறு ஊருக்குச் செல்லும் பொழுதும் அங்கும், திரும்பி வருகையில் இங்கும் , ஜல் ஜல் என ஒலிக்கும் சலங்கையிநூடே பக்க வாட்டில் தெரியும் வயல்களும் மரங்களும், தூரத்து மலைகளும் இனிமையோ இனிமை. பிரஷர் என்றால் என்னவென்று தெரியாது. சுகர் என்றால் அது வியாதியுடன் சம்பந்தப் பட்டது என்று தெரியாது. இறப்பென்றால் அது மூத்தவர்களுக்குத் தான் சொந்தம் என்று நினைத்த காலம். புது விதமான சத்தத்துடன் நீராவியை வெளியேற்றி ஜதி யுடன் கூவிப் பறப்பட்டு செல்லும் அந்த புகை வண்டி................. இன்று இவையெல்லாம் காணாமல் போன வசந்தங்கள். தேடினாலும் கிடைக்காத பொக்கிஷம். எந்நிலையிலும் எந்த ஊருக்குச் சென்றாலும், எந்நிலையிலும் நேர்மையுடன் பிழைத்து முன்னேறலாம் என்ற விதி, காலத்தால் அழிந்து போனது. இந்நாளில், எங்கு, எப்படிச் சென்றாலும், " நீ யார் ? எங்கிருந்து வருகிறாய் ? ( பலவிதமான )கார்டு இருக்கிறதா ? என்ற கேள்விகள்.சோதனை மேல் சோதனை. அதையும் மீறி, ஆர்வத்துடன் ரசித்துப் பார்த்தால், " எதையோ தேட்டைபோட பார்பதாக நினைத்து ", சந்தேகக் கண்களுடன் கேள்விகள். .............. எந்நிலையிலும் ரசிக்கத் தெரிந்தவன் ரசிக்கத் தான் செய்வான். ஆனால், காலமாற்றத்தால் அழிந்துபோய், இன்று சிதிலங்களாகத் தான் இருக்கின்றன...................சத்தத்துடன் கடக்கும் வாகனங்கள் ஊடே இனிமையாகப் பாய்ந்த அந்த பியானோ இசை இன்னும் காதில் ஒலிக்கத்தான் செய்கிறது. அந்த வீட்டில் இரவு எட்டு மணிக்கு பியானோ வாசித்தால் பத்து மணிக்கு மேல் தான் முடியும். ரசிப்பவர்கள் அகன்ற ரோட்டில் நின்று கேட்டுப் போவார்கள். மாடியிலிருந்து வரும் இசை சுமார் 160 அடி தூரத்திற்கு மேல் கணீரென்று காதில் ஒலிக்கும். அண்டை வீட்டுக் காரர்கள் யாரும் குறை சொல்லி புகார் கொடுத்த் தில்லை. ரோட்டில் தனியாக நின்று முடியும் வரை ரசித்தால் கூட, யாரோ நோட்டம் விடுகிறான் என்று எண்ணியதில்லை. இன்று எங்குமே எதுவுமே இல்லை. எல்லாமே ஒசைகள்தான். இருந்தாலும் விடுவதில்லை. தேடிப்பிடித்து இயற்கையை ரசிப்பதுடன் நல்ல இலவச இசையை யும் கேட்கிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்று பியானோ இசை கேட்டு ரசித்தவர்கள் உண்டு. அது வேறு எங்கும் இல்லை. மயிலையில் அமிர்தாஞ்சனம் கம்பனிக்கு நேராக உள்ள வீட்டின் மாடியிலிருந்து தான். இன்று ஆக்க்ரமிப்புகளால் வீட்டின் அழகே கெட்டுவிட்டது. இசை நின்று விட்டது. இருந்தாலும், அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம் நின்று பார்த்துவிட்டுத் தான் செல்வேன். இதே போன்று, ராமேஸ்வரத்தில், வெளி பிராகாரத்தில், சுமார் 45 வருடங்களுக்கு முன் இலவசமாக ( ஒரு தனி நபர் தூணின் அருகில் அமர்ந்து வாசித்துக் கொண்டு இருப்பார்.) நான் கேட்ட அந்த இனிமையான புல்லாங்குழல் இசை இன்றும் காதில் ஒலிக்கிறது. பார்த்த இயற்கை காட்சிகள்,பட்சி ஜாலங்கள் மன ஓட்டத்தில் படங்களாக எனக்கு மட்டும் கேட்கும் இசையுடன் தெரிகிறது. இழந்தவைகளை பெறமுடியுமா.....................? ரசிப்பதற்கு என்னைப் போன்றவர்கள் நிறைய இருக்கிறார்கள்.ஆனால், ரசித்தவை ......? இளமையிலிருந்தே ரசிப்புத் தன்மை இருந்தால் தான் ரசிக்க முடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை