கை கால் முளைத்த கவிதைகள்!| Dinamalar

கை கால் முளைத்த கவிதைகள்!

Added : ஏப் 04, 2015 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
கை கால் முளைத்த கவிதைகள்!

பொருளாதாரத் தேடல் சார்ந்த ஓட்டத்தில் குழந்தைகளோடு நேரம் ஒதுக்க நமக்கு முடியவில்லை. நமக்கு வயதாகும் போது நம்மோடு ஒதுக்குவதற்கு அவர்களுக்கு நேரமில்லை. அன்பு என்பது ஓர் அழகான கொடுக்கல் வாங்கல்தான். கொடுத்தால்தானே பெறமுடியும்!தாகூர் கீதாஞ்சலிக்காக நோபல் பரிசு பெற்ற காலத்தில், ஜப்பான் சென்றிருந்த போது ஒரு பாராட்டு விழாவினை அங்கு வாழும் இந்தியர்கள் நடத்தினர். நிகழ்ச்சியின் போது, குழந்தை ஒன்று ஓடி விளையாடிக் கொண்டிருந்தது. இதனை நிகழ்ச்சிக்கு இடையூறாகக் கருதிய ஏற்பாட்டாளர்கள், அக்குழந்தையின் பெற்றோர், அதனை அரங்கிற்கு வெளியே எடுத்துச் செல்லுமாறு அறிவித்தனர். அப்போது தாகூர் சொன்னார், "வேண்டாம் அந்தக் குழந்தையை அப்படியே விளையாட விடுங்கள். ஏனென்றால், அக்குழந்தையை விட அழகான ஒரு கவிதையை நான் எழுதியதில்லை!” ஆமாம் ... குழந்தை ஒரு கைகால் முளைத்த கவிதை. கவிதையில் அழகியல் இருந்தால்தான் ரசிக்க முடியும். ஆனால் குழந்தையை ரசிக்க அதுகூடத் தேவையில்லை. தெருவில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. ஒருவன் சொன்னான், "உலகிலேயே அழகான குழந்தை இந்தக் குழந்தைதான்!” பார்த்தால்.... கருப்பாய் பரட்டைத் தலையுடன் அக்குழந்தை காட்சியளித்தது. எப்படி? என்று கேட்டதற்கு, "அது என் குழந்தை” என்றான். கருப்பாக இருக்கின்ற காரணத்தினால் பெற்றவர்கள் வெறுக்காத போது, மற்றவர்கள் வெறுப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது!


குழந்தை வளர்ப்பு:

குழந்தையைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ஆனால் குழந்தை வளர்ப்பு இன்று பாரமாக அல்லவா போய்விட்டது! "குழந்தைகள் வீடுகளுக்குக் கட்டப்பட்ட சதங்கைகள்” என்றார் கவிஞர் இக்பால். அந்த சதங்கைகளின் ஒலியை, முடக்கிப்போடும் விலங்குகளின் ஒலியாக்கியது யார்? நாம் இயல்பாக குழந்தைகளை வளர்ப்பதில்லை. நம் எதிர்பார்ப்புகளையும் ஆசைகளையும் அவர்கள் மீது திணிக்கிறோம். இதில் காணாமல் போவது குழந்தைகளின் இயல்பான வளர்நிலை தான். கவிஞர் பழனிபாரதியின் 'செடிமகள்' என்ற கவிதை இப்பிரச்னையை யதார்த்தமாகச் சித்தரிக்கிறது. "பூச்செடி வளர்க்க முடியாத எங்கள் சிறிய வீட்டில் வளர்ந்து கொண்டிருக்கிறாள் லாவண்யா.


அவள் சிரிப்பை முழம்போட்டு முடிந்து போவாள் பூக்காரம்மாள்


அவள் மழலையில் கனிந்து நிற்பாள் பழக்காரம்மாள்.


எங்களோடு நண்பர்களோடு எதிர்வீட்டுத் தென்னை அணில்களோடு ஜன்னல் குருவிகளோடு


மதியம் இரண்டு மணி காக்கைகளோடு


பழகிப் பழகிப் பூக்கிறது அப்பூச்செடி!


செடியை வளர்ப்பது சுலபமாக இருக்கிறது...


பூக்களைப் பத்திரப்படுத்துவதுதான்


எப்படி என்று தெரியவில்லை?”

நாமும் குழந்தைகளை வளர்க்கிறோம். குழந்தைகளின் மனமலர்ச்சியைப் பத்திரப்படுத்தினோமா? 'இல்லை' என்றால் பிற்காலத்தில் நம் மனங்களை மகிழ்விப்பவர்களாக அவர்கள் இருப்பார்கள் என்று எப்படி சொல்ல முடியும்?


கொஞ்சி உறவாடும் வாய்ப்பு:

இப்பாடலைப் பாடியது ஒரு சாதாரணப் புலவன் அல்ல, நாடாண்ட மன்னன் பாண்டியன் அறிவுடை நம்பி. அந்தப்புரத்திற்குள் தான் நுழையும்போது, உடல் முழுக்க உணவைச் சிதறி விளையாடிக் கொண்டிருந்த தனது குழந்தை, தன்னைக் கண்டதும் 'அப்பா தூக்கு' என்ற தட்டு தடுமாறி எழுந்து, இருகைகளையும் நீட்டிக் கொண்டு தன்னை நோக்கி நடந்து வரும் காட்சிதரும் மகிழ்ச்சிதான், வாழ்நாளில் தான் பெற்ற உயர் மகிழ்ச்சி என்று பாடுகிறான் என்றால், தாய்க்கு ஆண் குழந்தைகள் மீதும், தகப்பனுக்கு பெண் குழந்தைகள் மீதும் அதிக பிரியம் இருப்பது இயல்பு. இது அவர்களின் உறவாடல்களில் வெளிப்படுவதைக் காணலாம். பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தகப்பன்மார்கள், பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும்போதே கொஞ்சி தீர்த்து விடவேண்டும். பருவம் அடைந்து விட்டால் தொடக்கூட முடியாது. இப்படி பெற்ற மகளைக் கொஞ்சி உறவாடும் வாய்ப்பை, தனக்கு விதிக்கப்பட்ட தேசிய வாழ்க்கையால் இழந்த நமது முதல் பிரதமர் நேரு, வாழ்ந்த காலம் எல்லாம் தேசத்துக் குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டாடியதன் மூலம் தனது ஏக்கத்தைத் தணித்துக் கொண்டார் எனலாம். மனித வாழ்க்கையைப் பரிபூரணப் படுத்துவது மக்கட்பேறு. வாழ்வின் உன்னத மகிழ்ச்சியை, மயக்கம் தரும் அந்த மக்கட்பேறு மட்டுமே தரமுடியும்.

இது புறநானூற்றுப் புலவன் ஒருவனின் தீர்ப்பு. அந்த புறநானூற்று பாடலின் பொருள் இது தான்... நிறைய சொத்துடன் பலரோடு உண்ணும் பெரும் செல்வந்தரானாலும், தத்தித் தத்தி நடந்து, சிறிய கையை நீட்டி, நெய் இட்டுப் பிசைந்த சோற்றினை உடல் முழுக்க தேய்த்தும் இறைத்தும் விளையாடும் குழந்தைகளைப் பெற்றவர்களே வாழ்வின் பயனைப் பெற்றவர்களாவர். இப்பேற்றினைத் தவிர வாழ்நாளில் ஒருவர் பெறும் பயன் வேறில்லை. நாம் என்ன மாமன்னனை விடவா பெரும் பொறுப்பு உடையவர்கள்? குழந்தைகளோடு உறவாட நேரமில்லை என்று சொல்லலாமா?


குழந்தைகளாக இருங்கள்:

"குழந்தைகளோடு இருக்கும் போது, நீங்களும் குழந்தைகளாக இருங்கள்” என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. நம்மில் பலர் குழந்தைகளோடு இருக்கும் போது, பதவி அல்லது தொழிலுக்குரிய தோரணையுடன் தான் இருக்கிறோம். ஆனால் குழந்தைகளோ, தன்னோடு உறவாடுபவர்களை தன்னைப் போலவே பாவிக்கும் என்பது இயல்பு.

அறிஞர் டால்ஸ்டாய் ஒரு பூங்காவில் அமர்ந்து நூல் ஒன்றினை வாசித்துக் கொண்டுடிருந்தார். அங்கு ஓடி வந்த சிறுமி, "என்னோடு பந்து விளையாட வர்றியா”? என்று கேட்க, "ஓ... விளையாடலாமே” என்று டால்ஸ்டாயும் இசைகிறார். அச்சிறுமி தூக்கி எறியும் பந்தினை, வயதான தள்ளாடும் நிலையிலும் ஓடி ஓடி எடுத்து அச்சிறுமியிடம் வீசுகிறார். டால்ஸ்டாயுடன் மகிழ்ச்சியோடு விளையாடிய அச்சிறுமி, "என் அம்மா தேடுவாங்க, நான் வர்றேன்” என்று புறப்படுகிறாள். அப்போது டால்ஸ்டாய், "நீ யாருடன் விளையாடினாய் என்று உன் அம்மா கேட்டால், டால்ஸ்டாயுடன் விளையாடினேன் என்று சொல்” என்று தன் பெருமைபடக் கூறினார். உடனே அச்சிறுமி, "அப்போ நீயும் உங்க அம்மாகிட்ட போய் மேரியுடன் விளையாடினேன் என்று சொல்” எனக் கூறிவிட்டு ஓடிவிட்டாள். குழந்தைகள் எல்லோரையும் தன்னைப் போலவே பாவிக்கும். அதனால்தான் தன்நிலைக்கு எல்லோரையும் கொண்டு வரும் மந்திரம் அதனிடம் இருக்கிறது. நாமும் அப்படி மாறிவிட்டால் மென்மையான உணர்வுகளால் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

- முனைவர். மு. அப்துல் சமது, தமிழ்ப்பேராசிரியர், ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி, உத்தமபாளையம், 9364266001 ab.samad@yahoo.co.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ahmed ullah - லால்பேட்டை,இந்தியா
04-ஏப்-201522:53:29 IST Report Abuse
Ahmed ullah அழகான ஆழமான பதிவு. பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ibnusalih - Thaif.ksa.,சவுதி அரேபியா
04-ஏப்-201521:25:37 IST Report Abuse
Ibnusalih மக்கட்செல்வத்தை விட ஒரு சிறந்த செல்வம் ஒன்றும் இல்லை என்பதை பேராசிரியர் அவர்கள் மிகவும் அழகாக சொல்லியுள்ளார்கள் . நமது குழந்தை செல்வத்தை பேர் சொல்லும்படி நாம் ஆக்கி , கொஞ்சி மகிழ்வோம் .
Rate this:
Share this comment
Cancel
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
04-ஏப்-201521:04:24 IST Report Abuse
ஏடு கொண்டலு சபாஷ். அருமையான கட்டுரை. 'கொஞ்சி உறவாடும் வாய்ப்பு' என்ற பகுதியில் உள்ள இரண்டு பத்திகளும் வரிசை மாறியுள்ளன. இரண்டாம் பத்தி முதலில் வரவேண்டும். நேருவைப் பற்றிச் சொல்வதைத்தான் ஏற்க மனம் ஒப்பவில்லை. அவர் கொஞ்சிக் கொண்டாடி, தன் ஏக்கத்தைத் தீர்த்துக் கொண்டதெல்லாம் குழந்தைகளா, குமரிகளா?
Rate this:
Share this comment
Cancel
vikeelan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
04-ஏப்-201514:33:55 IST Report Abuse
vikeelan Well written Sir
Rate this:
Share this comment
Cancel
T.R. Harihara Sudhan - Bangalore,இந்தியா
04-ஏப்-201510:05:05 IST Report Abuse
T.R. Harihara Sudhan அய்யா முனைவர் திரு. அப்துல் சமது அவர்களுக்கு... உங்களிடம் நான் மாணக்கனாக படித்தமைக்கு மிகவும் மிகவும் பெருமை அடைகிறேன். 1996- 1997 - II nd Year B.Sc (Computer Science). நீங்கள் எங்களுக்கு ஒரு போட்டி வைத்தீர்கள் மகாகவி பாரதி பாட்டு "அக்கினி குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டினில் பொந்தினில் வைத்தேன்"... இதில் பாரதி யாரை பற்றி சொல்லுகிறார் என்று... அதற்க்கு நான் அண்ணல் காந்தி யை பற்றி பாரதி பாடியது என்று சொன்னேன்... நீங்கள் என்னை மிகவும் பாராட்டினீர்கள். நீங்கள் மேலும் மேலும் இதுபோல எங்களுக்கு நீதி போதனை செய்ய வேண்டும்... நான் உங்கள் பதிவுகளை எதிர்பார்கிறேன் (தினமலர் பதிவில்)... நீங்கள் நீடுழி வாழ்க... தி.ரா. ஹரிஹர சுதன், Sr.Soft.Eng. MPS Limited, Bangalore.
Rate this:
Share this comment
Cancel
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. - Vilathikulam Pudur,இந்தியா
04-ஏப்-201509:26:57 IST Report Abuse
Dr.R.Raveenthiranaath Nehru Ph.D. சிறப்பான பதிவு. உலகில் மகிழ்ச்சி தரும் ஒன்று உண்டு என்றால், அது இறைவனுக்கு நிகரான குழந்தைகளுடன் நம்மை இணைத்து அவர்களோடு நமது நேரத்தை செலவழிப்பது தான். குழந்தைகள் தான் உலகிற்கு வரம். நான் எனது மாணவர்களையும் எனது குழந்தைகளாகவே நினைப்பேன் . வெளிநாட்டு பல்கலை கழக பேராசிரிய பனியின் போது எனது மாணவி என்னிடம் வந்து Doctor can you please tell me the word for father in your language ? என்று கேட்ட போது , அப்பா என்று சொன்னதும் " I wish to call you as appa. " என்று கேட்டதும் நான் அடைந்த சந்தோசம் அளவிட முடியாதது . மாணவர்களையும் ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளாக நினைத்தால், அதன் மூலம் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. நாம் அனைவருமே கடவுளின் குழந்தைகள் தான் என்ற மனப்பக்குவம் வந்து, அனைவரும் ஒன்றாய் இணைந்து மகிழ்ச்சியாய் இருப்போம்.
Rate this:
Share this comment
Cancel
KRK - Kumbakonam,இந்தியா
04-ஏப்-201503:48:07 IST Report Abuse
KRK எப்படிப்பட்ட குழந்தைகளிடமும் எளிதில் நண்பனாக மாற தெரிந்த எனக்கு, அவர்கள் உலகுக்கு போக தெரிந்த எனக்கு, என் வயதொத்த நபர்களிடம் நட்புகொள்ள தெரியவில்லை, அப்படியே கொண்டாலும் அது எளிதில் தீர்ந்துபோய் விடுகிறது. இந்த கட்டுரை என் உலகிலிருந்து எழுதப்பட்டுள்ளது, வாசிக்கும்போதே கண்கள் பனிக்கிறது. பேராசிரியருக்கு நன்றிகள் பல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை