சுத்தம் 'நூறு' போடும்: இன்று உலக சுகாதார தினம்| Dinamalar

சுத்தம் 'நூறு' போடும்: இன்று உலக சுகாதார தினம்

Added : ஏப் 07, 2015 | கருத்துகள் (1)
Advertisement
சுத்தம் 'நூறு' போடும்: இன்று உலக சுகாதார தினம்

1950 ம் ஆண்டு முதல் ஏப். 7 ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. இயற்கை முறை வேளாண்மை, சுத்தமாக சமைப்பது, முழுமையாக சமைப்பது, உணவு கெட்டுப்போகாமல் சரியான வெப்பநிலையில் பாதுகாப்பது, சுத்தமான நீரை பயன்படுத்துவதே இந்தாண்டு நோக்கம்.நமது உடலின் பெரிய உறுப்பான தோல் தான் பல்வேறு நுண்கிருமிகளின் வளர்ச்சிக்கும், நோய் தொற்றுக்கும் காரணமாகிறது. நமது தோலில் ஒரு சதுர சென்டிமீட்டரில் இயற்கையாகவே 3200 நுண்கிருமிகள் வாழ்கின்றன. தோலில் அமிலத்தன்மை உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சை, ஈஸ்ட், வைரஸ் கிருமிகள் எளிதில் வளர்கின்றன. எனவே தினமும் குளிப்பதும், கை, கால்களை சோப்பு போட்டு சுத்தம் செய்வதும் அவசியம். சாதாரண நிலையிலேயே விரல் இடுக்குகளில் 14 வகையான பூஞ்சை கிருமிகள், தொப்புளில் வீரியமிக்க 4வகை பாக்டீரியாக்கள், பல்துலக்கும் பிரஷில் 100க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. விரலில் உள்ள நுண்கிருமிகள் உணவு பரிமாறுதல் மற்றும் கைகுலுக்குவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது.


மருந்திற்கு கட்டுப்படாத கிருமிகள்:

தலைசீவும் சீப்பில் 3400, கழிப்பறை தொட்டியில் 2700, சாப்பிட்டு கழுவாத தட்டில் 2100, பாத்திரம் கழுவும் தொட்டியில் 12ஆயிரம், காலணியின் வெளிப்புறம் 4 லட்சத்து 20 ஆயிரம், உட்புறம் 2500 கிருமிகள் உள்ளன. 'டச் ஸ்கிரீன்' மொபைல் போனில் 10க்கும் மேற்பட்ட பாக்டீரியா காலனிகள் காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் கீபோர்டு, டாக்டர்களின் ஸ்டெதஸ்கோப்பில், மருந்துகளுக்கு கட்டுப்படாத சூப்பர் கிருமிகள் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளைக்கு 600 முதல் 700 கிராம் திடக்குப்பை கழிவுகளை உண்டாக்குகிறோம். இதில் 300 கிராமிற்கு மேற்பட்ட கழிவுகள், எளிதில் அழுகக்கூடிய, நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடியன. அளவோடு சமைத்து அளவோடு சாப்பிட்டால் வீட்டு குப்பையை குறைக்கலாம். சுற்றுப்புறத்திலும் குப்பை பெருகுவதை தடுக்கலாம். உணவுக்கழிவுகள், காய்கறி, கிழங்கு, மாமிச கழிவுகள் ஒன்றாக குப்பைக்கு செல்லும் போது, தரையில் கொட்டிய ஐந்து நொடிகளில் நுண்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பாக்டீரியாக்களால் தாக்கப்பட்டு அமிலங்களாகவும், ஈஸ்ட்களால் தாக்கப்பட்டு ஆல்கஹாலாக மாற்றப்பட்டு மண்ணோடு மட்குகின்றன. இடைப்பட்ட காலத்தில் குப்பையில் உள்ள கிருமிகள் ஈ, நாய், பன்றி, பறவைகள் மூலம் பல இடங்களுக்கு பரவுகின்றன. குப்பைகளை கையாள்பவர்கள் மூலம் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களில் கிருமிகள் பரப்பப்படுகின்றன.


வயிறு உபாதைகள்:

வீட்டிற்குள் வெளிச்சமின்றி அமைந்துள்ள கழிப்பறைகள், மலம் கழித்தபின் சோப்பு போட்டு கையை கழுவாத நிலையில் மலக்கழிவுகளின் மூலம் மஞ்சள் காமாலை மற்றும் புழுத்தொற்று ஏற்படுகின்றன. காய்கறி, உணவுக் கழிவுகளை 12 மணி நேரத்திற்கு மேல் வீட்டில் வைத்தால் அதிலிருந்து பாக்டீரியா பரவி, வயிறு சார்ந்த உபாதைகள் வரும். சமைத்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் எனில், பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம். மீண்டும் வெளியில் எடுத்து அரைமணிநேரம் கழித்து முழுமையாக சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். கெட்டுப்போன உணவு, பழைய இறைச்சி மற்றும் அழுகிய பழங்களை பிரிட்ஜில் ஒன்றாக வைத்தால் நல்ல உணவுகளிலும் கிருமிகள் வளரும். மூடப்படாத தோசைமாவு, பால், மிச்சம் வைத்த உணவுகள் விரைவில் கெட்டுப்போய் பாதிப்பை ஏற்படுத்தும். கெட்டுப் போன உணவை சாப்பிட்ட ஒன்று முதல் ஆறு மணி நேரத்திற்குள் வயிற்றுவலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சிலநேரங்களில் மூன்று நாட்கள் கழித்து கூட இப்பிரச்னை ஏற்படலாம். சுகாதாரமற்ற கைகளால் உணவு சமைத்து பரிமாறுவதால், சாப்பிடுபவர்களின் வயிற்றில் தட்டை மற்றும் உருண்டை புழுக்கள் உண்டாகின்றன.


தேடிவரும் நோய்கள்:

தெருவோர திறந்தநிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களால் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. இந்தியாவில் பெரிய நகரங்களில் வசிப்பவர்களில் குறைந்தது 7 சதவீதம் பேர் சுகாதாரமற்ற சாலையோர உணவுகளை சாப்பிடுவதால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடையில் பார்சல் வாங்கும்போது பாலித்தீன் கவரை வாயால் ஊதியும், எச்சில் தொட்டும் சாம்பார், சட்னி ஊற்றப்படுவதால் காலரா, மஞ்சள்காமாலை, காசநோய், கக்குவான், டைபாய்டு, அமீபியாசிஸ் நம்மைத் தேடி வருகின்றன. சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் தெற்கு மற்றும் கிழக்காசியாவில் ஏழு லட்சம் குழந்தைகள் இறந்து போவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நமது உடல், உண்ணும் உணவு மற்றும் சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தால் தான் நிலம், நீர், காற்று மாசடையாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறமுடியும். இதைத் தான் நம் முன்னோர்கள் சுத்தம் சோறு போடும் என்றனர். உண்ணும் உணவில் சுகாதாரத்தை பின்பற்றினால் ஆரோக்கியத்திற்கு நூறு மதிப்பெண் கிடைக்கும்.

- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், சித்த மருத்துவர், மதுரை 98421 67567.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X