நாடு... கால்நடைகளை நாடு...: இன்று உலக கால்நடை மருத்துவ தினம்| Dinamalar

நாடு... கால்நடைகளை நாடு...: இன்று உலக கால்நடை மருத்துவ தினம்

Updated : ஏப் 25, 2015 | Added : ஏப் 24, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
நாடு... கால்நடைகளை நாடு...: இன்று உலக கால்நடை மருத்துவ தினம்

உலக கால்நடை மருத்துவ சங்கம், 2000ம் ஆண்டு முதல் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையை உலக கால்நடை மருத்துவ தினமாக அறிவித்தது.இந்த ஆண்டு நுண்மநோய் பரப்பிகள் (வெக்டா) மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய்களை முன்னிலைப்படுத்தி, விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் ஆய்வுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கால்நடை வளம் ஒரு நாட்டின் செல்வம். மன்னர்கள் வெற்றி பெற்றதன் அடையாளமாக அந்நாட்டின் பசுக்களை தங்கள் நாட்டிற்கு கொண்டு வந்ததாக வரலாறு கூறுகிறது. இந்தியாவில் கலப்பின பசுக்களை உருவாக்கி, பால் உற்பத்தியில் வெண்மை புரட்சியை உருவாக்கியதுதான் கால்நடை மருத்துவம். இன்று உலக நாடுகளின் பால் உற்பத்தியில் இந்தியா 140 மில்லியன் டன் உற்பத்தியை கடந்து முதலிடம் வகிக்கிறது.


முதல் மருத்துவமனை:

அதர்வண வேதம் கால்நடை மருத்துவம் குறித்து தெரிவிக்கிறது. சந்திரகுப்த மவுரியர் காலத்தில் குதிரைப்படையில் உள்ள குதிரைகளுக்கு சிகிச்சையளிக்க முதல் கால்நடை மருத்துவமனை நிறுவப்பட்டது. 1862ல் கால்நடை மருத்துவப்பள்ளியும், 1882ல் முதல் கல்லூரி லாகூரிலும் துவங்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் 38 கால்நடை மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தற்போது மேய்ச்சல் மற்றும் விளைநிலங்களின் பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. எனவே விவசாயிகள் தங்கள் ஆடு, மாடுகளுக்கு பசுத்தீவனம் அளிக்க சிரமப்படுகின்றனர். அரசு வழங்கும் கோ நான்கு பசுந்தீவனங்களை நடவு செய்து, 3 முதல் 5 ஆண்டுகளுக்கு அறுவடை செய்து மாடுகளுக்கு வழங்கலாம். கால்ஏக்கரில் இந்த புல் நடவு செய்தால் 5 மாடுகளுக்கு தீவனம் அளிக்கலாம். கோழி சிகிச்சையில் கால்நடை மருத்துவர்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். இன்று உலகை பயமுறுத்தும் பறவைக்காய்ச்சல் போன்றவை மனிதர்களை தாக்காமல் இருக்கும் வழிமுறைகள் குறித்து உற்பத்தியாளர்களுக்கு பயிற்றுவித்தன் மூலம் நோய் தொற்று தவிர்க்கப்படுகிறது.

கோழித்தீவன தரத்தில் பல நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சத்துக்களை சேர்த்து தீவனத்தின் தரத்தை உயர்த்தியதால் இன்று 35 நாட்களில் 2 கிலோ எடை கறிக்கோழிகளை உருவாக்க முடிகிறது. இன்று உலக கறிக்கோழி இறைச்சி உற்பத்தியில் உலகில் 4வது இடத்தில் இந்தியா உள்ளது. முட்டை உற்பத்தியில் 5வது இடத்தில் உள்ளது. மேலும், மாடுகளுக்கு சினைப் பரிசோதனை செய்ய, மனிதர்களை பரிசோதனை செய்வது போல் நவீன அல்ட்ரா சோனிக் ஸ்கேன் கருவிகள் அனைத்து மருத்துவ மனைகளிலும் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் மாடுகளின் இறப்பு, நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


பரவும் தொற்று நோய்:

இன்று மனிதர்களை தாக்கும் தொற்று நோய்களில் 75 சதவீதம் விலங்குகளின் மூலம் பரவுகிறது. பிளேக், பறவைக்காய்ச்சல், ரேபிஸ் போன்றவற்றை கால்நடை மருத்துவர்கள் கட்டுப்படுத்துவதால் நோய்தொற்று ஏற்படாமல் மனிதனை பாதுகாக்கிறது. மனிதர்கள் தங்களுக்கு என்ன பிரச்னை என்று மருத்துவர்களிடம் தெரிவித்து சிகிச்சை பெறுகின்றனர். ஆனால், விலங்குகளால் தங்கள் உடல் உபாதைகளை மருத்துவர்களிடம் தெரிவிக்க முடியாது. எனவே நோய் அறிகுறிகள் மூலம் அவைகளை கண்டறிந்து கால்நடை நலம் காக்கும் கால்நடை மருத்துவ பணி போற்றுதலுக்கு உரியது.


போலி மருத்துவர்கள்:

கால்நடை மருத்துவர்களும் கிராமங்கள் அருகிலேயே தங்கி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் போலி மருத்துவர்களை ஒழிக்க முடியும். மேலும் விவசாயிகளின் வீடுகளுக்கே சென்று கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சையளிக்கும் நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும். கால்நடை மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துகளுக்கு உற்பத்தி வரி மற்றும் விற்பனை வரிகளை நீக்க வேண்டும். மலிவு விலை தீவனங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். மாவட்டத்திற்கு ஒரு கூட்டுறவு சங்க ஒருங்கிணைப்பு முறையில் தீவன உற்பத்தி ஆலையை அரசே தொடங்கி தீவன உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் கால்நடை உற்பத்தியும், அதன்மூலம் பயன்களும் நமக்கு தொடர்ச்சியாக கிடைக்கும். கால்நடை மருத்துவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து படித்தவர்கள் இன்று திருச்சி, தஞ்சாவூர் கலெக்டர்களாக உள்ளனர். மாநில சுகாதார துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணனும் கால்நடை மருத்துவம் பயின்றவர்தான். இதுபோல் 600க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவர்கள் இந்திய ஆட்சிப்பணியிலும், காவல்துறையிலும் உயர் பதவியில் உள்ளனர். மனிதனுக்குரிய மருத்துவம் மட்டும் சிறந்தது அல்ல; கால்நடை மருத்துவமும் சிறந்தது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும். கால்நடைகளை காக்க வேண்டும்.

- டாக்டர் மணிவண்ணன், கால்நடை மருத்துவர், தேனி. 99942 94254

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை