மதுவை விட்டு விலகினாலும் மதுவிலக்கே!| Dinamalar

மதுவை விட்டு விலகினாலும் மதுவிலக்கே!

Added : மே 07, 2015 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
மதுவை விட்டு விலகினாலும் மதுவிலக்கே!

இதோ அடுத்த நிதியாண்டின் அரசு மதுபான விற்பனை இலக்கு ரூ.29627 கோடியாக நிர்ணயித்தாகி விட்டது. ஆக டாஸ்மாக் விற்பனை தொடங்கப்பட்ட 2003- 2004ம் நிதியாண்டில் ரூ.3639 கோடியாக இருந்த மது விற்பனை வேதனையான ஒரு சாதனையை படைக்கவுள்ளது.மதுவிற்பனையுடன் மது நுகர்வோர்களின் எண்ணிக்கையும் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இவ்வேளையில் மதுவிலக்கினைப் பற்றி அரசுக்கு இடித்துரைப்பது நன்றே என்றாலும் முதலில் மதுவை விட்டு விலகியிருக்க இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.


திரும்பி பார்ப்போம்:

பல நூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லத் தேவையில்லை. 1990களில் நடந்த ஏதேனும் ஒரு திருமணத்தை உங்கள் கண்முன் நிறுத்திக் கொள்ளுங்கள். மாப்பிள்ளை தேடலில் களமிறங்கும் பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்கும் முதல் கேள்வி "மாப்பிள்ளை குடிப்பாரா?” என்பதுதான். அதுபோல பெரும்பாலான பெண் வீட்டார்கள் சில விஷயங்களில் தங்களது சொந்தக்காரர்களின் வாயை அடைக்க "மாப்பிள்ளை கொஞ்சம் வசதி குறைந்தவர்தான் என்றாலும், அவருக்கு குடிபழக்கம் இல்லையாம். இது போதாதா?” என்று கூறுவதை பார்க்க முடிந்தது. குடி பழக்கம் அற்றவர்களுக்கு அவ்வளவு மரியாதை இருந்ததோடு குடி பழக்கம் கொடியதாகக் கருதப்பட்டது. திருமண நாட்களில் சொந்தக்காரர்களில் ஒருவர் மது அருந்திவிட்டு வந்தாலும் அவர்கள் மற்றவர்களின் பழிச்சொல்லுக்கு ஆளாவார்கள்.


இப்போது எப்படி:

இப்பொழுது சமகாலத்தில் நடந்தேறும் ஒரு திருமணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். யாராவது குடித்துவிட்டு வந்து கல்யாண வீட்டில் கலகத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என்ற பயம் இருந்த நிலை மாறி "மாப்ள பசங்களுக்கு பார்ட்டி வைக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு நீயும் குடிச்சிடாதடா, விடிஞ்சா உனக்கு கல்யாணம்” என்று மாப்பிள்ளைக்கே அறிவுரை கூறும் காலத்தில் வாழ்கிறோம் நாம். திருமண வீட்டில் மது அருந்தாமல் வலம் வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். சொந்தக்காரன், பந்தல்காரன், சமையல்காரன் என்று ஆரம்பித்து நெருங்கிய நண்பர்கள் வரை மது வாங்கி கொடுத்தால் தான் திருமண வேலைகள் நடக்கும் என்ற நிலை உள்ளது. கல்யாண மாப்பிள்ளை தனது நண்பர்களுக்கு தயார் செய்து கொடுத்திருக்கும் அறையானது திருமணம் நடைபெறும் அதே மண்டபத்திலேயே இருந்தாலும் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாத அளவிற்கு முழு போதையில் முடங்கிக்கிடக்கும் நண்பர்களை பார்க்க முடிகிறது.


எத்தனை காரணங்கள்:

"உழைத்த களைப்பை போக்குவதற்கு குடிக்கிறேன்” "கவலையை மறக்க குடிக்கிறேன்” "எப்போவாது விழாக்காலங்களில் மட்டும்தான் குடிக்கிறேன்” "அட இது பீர்தான். குடித்தால் உடல் பருமனாகும்” இப்படி மதுவின் கோரப்பிடிக்குள் சிக்கிக்கொள்ள ஒருவனுக்கு எத்தனை எத்தனை காரணங்கள். படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய மாணவர்கள் நடுரோட்டில் போதையில் தள்ளாடும் நிகழ்வுகளை பார்க்க நேரிடும்போது அடுத்த தலைமுறையின் ஆணிவேரும் மது ஊற்றி கருக்கப்படுவதாக மனம் பதறுகிறது. மது பாட்டிலில் மதுவின் தீமையை விளக்கும் படம், சினிமாவில் மதுவிற்கு எதிரான வாசகங்களையும் இடம் பெறச்செய்து தனது கடமையை முடித்துக்கொண்ட கையோடு அடுத்த வருட டாஸ்மாக் விற்பனை இலக்கை நிர்ணயிக்க சென்றுவிட்டது அரசு. மதுவிலக்கின் அவசியத்தை உணர்ந்த சிலர் அவ்வப்போது போராட்டம் நடத்திவரும் வேளையில் அறிவு ஜீவிகள் சிலர் சங்க காலத்திலேயே தமிழர்களிடையே மது அருந்தும் பழக்கம் இருந்தது எனவும் சங்க இலக்கியங்களில் மதுவைப் பற்றிய குறிப்புகள் இருந்ததாகவும் கூறி வருகின்றனர். அதாவது மதுவிலக்கு சாத்தியமற்ற ஒன்று என்பது அவர்களின் மறைமுக கருத்து. சங்ககாலத்தில் உள்ளது போன்றா இன்றைய நிலை உள்ளது? அதனை அந்த அறிவு ஜீவிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுவோம்.


திரைப்படங்களின் தீமை:

சமீபத்தில் ஒரு திரைப்படத்தின் டிரைலர் காட்சி மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் சகோதரர்கள் இருவர் மது அருந்த தயாராகின்றனர். அப்போது அவர்களின் தாய் தன் மகனிடம் அவருக்கும் ஒரு டம்ளரில் மது கேட்கிறாள். டிரைலர் அத்துடன் முடிகிறது. ஒரு நாளில் பலமுறை அந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிறது. இதைவிட ஒரு மோசமான காட்சியை தமிழ் சினிமா நமக்கு அளித்திட முடியாது. அந்த திரைப்படத்தின் டிரைலரில் காட்டப்படாத முழுமையான காட்சி என்னவெனில் அந்த தாய் தனது கணவனுக்காக அந்த மதுவினை கேட்டிருப்பாள். அதாவது டிரைலரில் சகோதரர்களின் குடிகார தந்தைக்காக மது கேட்பதைவிட, தாய் தனக்கே கேட்பதாக வைத்தால் மக்களிடையே விளம்பரப்படுத்த முடியும் என்று அந்த திரைப்பட குழுவினர் தீர்மானித்திருக்கின்றனர். இதுவெறும் காமெடி காட்சிதானே என்று கருதக் கூடாது. இத்தகைய காட்சிகள் பார்ப்பவரிடம் எத்தகைய மனநிலையை உருவாக்கும் என்பதனை ஒரு மனோதத்துவ நிபுணரை கேட்டால் விளக்குவார். இது போன்ற காட்சிகளை வைத்துதான் காமெடி செய்தாக வேண்டும் என்ற நிலையில் தமிழ் சினிமா இருக்கிறதென்றால் அதைவிட வெட்கக்கேடான விஷயம் வேறொன்றுமில்லை. (சினிமாவை சினிமாவாக பாருங்கள் என்று யாரோ சொல்வது காதில் விழுகிறது). ஆனால் சினிமாவை பார்க்கும் பிஞ்சு மனங்களுக்கு முதலில் கெட்ட விஷயங்கள்தான் மனதினில் பதியும். புகை பழக்கம் உள்ளவர்களில் 52.2 சதவீதம் பேர் தாங்கள் சினிமாவைப் பார்த்துதான் அதனை கற்றுக்கொண்டதாக ஒரு ஆய்வில் ஒப்புக்கொண்டுள்ளனர்.


மரபியல் பாதிப்புகள்:

குடிப்பழக்கம் ஒருவரின் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி இறுதியில் இறப்பு வரைக்கும் கொண்டு செல்கிறது. அது உடலாலும் மனதாலும் வலுவிழக்கச் செய்வதோடு மரபியல் ரீதியாகவும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. ஒரு தலைமுறையினரின் மரபணு பாதிப்புகள் அடுத்தடுத்த தலைமுறையினரையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பது அறிவியல் உண்மை. தயவுசெய்து உங்களது பாவ மூடைகளை எதிர்கால சந்ததியினர்களின் முதுகினில் ஏற்றாதீர்கள். மதுவிலக்கு அமலாக சிலகாலம் ஆகலாம். முதலில் மதுவினை விட்டு நீங்கள் விலகியிருங்கள். அதற்குப் பெயரும் மதுவிலக்கு தான்.

- தினகரன் ராஜாமணி, எழுத்தாளர், திருநெல்வேலி 097388 19444

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
07-மே-201504:07:00 IST Report Abuse
Anandan யாரு கேட்க போறா இந்த கருத்த்தை. அரசாங்கமே மது விற்கிறது அதுவும் இலக்கு நிர்ணயித்து. இதை ஆரம்பித்து வைத்த ஜெ வாழ்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை