நிலத்தடி நீரை சேமிக்கலாம் வாங்க!| Dinamalar

நிலத்தடி நீரை சேமிக்கலாம் வாங்க!

Added : மே 26, 2015
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நிலத்தடி நீரை சேமிக்கலாம் வாங்க!

கிராமங்களில் 15 வருடங்களுக்கு முன்புவரை தண்ணீர் தேவையென்றால் கிணற்றில் இறைக்கப்படும். அதிலும், ஒவ்வொரு ஊரிலும் நல்ல தண்ணிக் கிணறு-உப்புத்தண்ணி கிணறு என இரண்டு வகை கிணறுகள் இருக்கும். வீட்டிற்கு வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து வைத்தால், "நல்ல தண்ணி பானையிலதான மொண்டு வந்த...?" என்று கேட்டு ஐயம் தீர்த்த பின்பே தண்ணீரை குடிக்கக் கொடுப்பார்கள்.
இப்போது அந்த கேள்வியெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. ஒரு ஃபோன் செய்தால்போதும் மினரல் வாட்டர் கம்பெனியிலியிலிருந்து தண்ணீர் கேன்கள் வீடுதேடி வந்து விடுகின்றன. இது நாகரீக வளர்ச்சியையோ அல்லது பொருளாதார வளர்ச்சியையோ குறிப்பதாக இல்லை, இது நிலத்தடிநீர் இல்லாமல் போனதையும் உப்பாகிப் போனதயுமே காட்டுகிறது.
முன்பு நகரமானாலும் கிராமமானாலும் வீட்டிற்கு பின்புறத்தில் கேணி அமைந்திருக்கும். இப்போதோ புதுவீடு கட்டப்படும்போது ஒரு போர்வெல் போடப்படுகிறது. அதுவும் குடிநீருக்காக என்று நினைத்தாலே பயமாக உள்ளது. பாத்திரங்கள் கழுவுவது, துணி துவைப்பது போன்ற பிற தேவைகளுக்காக மட்டுமே அந்த தண்ணீர்! ஆனால் எழுநூறு அடி துளைபோட்ட பின்னும் அந்த போர்வெல்லில் தண்ணீர் வருகிறதா, வெறும் காற்று மட்டுமே வருகிறதா என்பது அவரவர் அதிர்ஷ்டத்தைப் பொறுத்ததே!

எப்படி வந்தது இந்நிலை?!
தண்ணீர் ஆவியாகி, மேகமாகி, பின் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற அறிவியலை நாம் ஆறாம் வகுப்பு பாடத்திலேயே படித்து விட்டோம். ஆனால், "நிற்க அதற்குத் தக" என்ற வள்ளுவரின் வாக்கை மறந்து, படித்ததை செயல்படுத்த தவறிவிடுகிறோம். மழையாகப் பொழியும் தண்ணீரை நாம் நமது நிலத்தடியில் சேமித்து வைக்க ஊடகமாக இருந்த மண் தரைகளையெல்லாம் சிமெண்ட் ரோடுகளாகவும் தார்ச்சாலைகளாகவும் மாற்றிவிட்டோம். தரையில் விழும் தண்ணீர் நிலத்தடிக்குச் செல்ல வழியில்லாமல், நேராக பள்ளத்தை நோக்கி ஓடிவிடுகிறது. நாம் பயன்படுத்தும் டாய்லெட் கழிவு நீரும் துணிதுவைத்த நீரும் மட்டுமே நிலத்தடிக்குச் செல்கிறது. இதனால் நமது நிலத்தடி நீர் குறைவதோடு, நிலத்தடி நீரின் உப்பளவு அதிகமாகி குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போனது.
நமது நிலத்தடி நீர்மட்டம் என்பது வங்கியில் இருக்கும் பண இருப்பைப் போலத்தான். அதில் நாம் போட்டு வைத்தால்தான் திரும்ப எடுத்து செலவு செய்ய முடியும். நிலத்தடி நீர் சேகாரமாவதற்கான வழிகளையெல்லாம் நாம் மூடிவிட்டு, இயற்கையை குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?!

இதற்கு தீர்வுஎன்ன?
நமது வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும். மழை நீரானது வீணாகி ஓடி சாக்கடையில் கலந்து விடாமல், வீட்டோரத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் சேரும்படி செய்தால், நமது நிலத்தடி நீர் மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீரின் உப்பளவு கணிசமாகக் குறையும்.
மழைநீர் பலநாட்களுக்குக் கெடாமல் இருக்குமென்பதால் குடிப்பதற்கும் பிற உபயோகங்களுக்கும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் சத்குரு அவர்களால் துவங்கப்பட்ட ஈஷா பசுமைக்கரங்கள் திட்டமானது, தமிழமெங்கும் நர்சரிகளை உருவாக்கி மரக்கன்றுகளை குறைவான விலையில் விநியோகித்து வருகிறது. ஆனால் என்னதான் மரக்கன்றுகள் உருவாக்க ஆர்வமும் தேவையான இடமும் இருந்தாலும் நிலத்தடி நீர் இல்லாததால் பல இடங்களில் நர்சரிகள் உருவாவது சிரமமாகவே உள்ளது. நமது வீட்டின் நலனும் நாட்டின் நலனும் நம் நிலத்தடி நீர் மட்டம் உயர்வதிலேயே உள்ளது. மழைநீர் சேகரிப்பே இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.

ஈஷா பசுமைக்கரங்கள்திட்டம்
தமிழகத்தில் மொத்தம் 37 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள். புங்கன், வாகை, தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X